அறம் செய விரும்பு
ஆரண்யா என்னும் காட்டில் ஒரு செம்போத்துப் பறவை வசித்து வந்தது. காலையில் எழுந்ததும் அது சூரியக் குளியலாடும். அந்தப் பறவை வாழ்ந்து வந்த மரத்தின் கீழ் ஒரு வயதான ஆமை வந்து சேர்ந்தது. நாளும் பொழுதும் இந்தச் செம்போத்து ஆடிப்பாடித் தன்னுடைய உணவை வேட்டையாடி உண்ணும். ஆனால் இந்த ஆமையோ வயதான காரணத்தால் உணவு கிட்டாமல் நாளும் பொழுதும் வாடி வந்தது. உணவு கிட்டாமல் ஏக்கத்துடன் அது இந்தச் செம்போத்துப் பறவையைப் பார்த்துப் பெருமூச்சு விடும்.
இவை இருந்த மரத்துக்கு
ஒரு நாள் ஒரு கரிச்சான் வந்தது. அது செம்போத்தின் சல்லாபத்தையும், ஆமையின் ஹீன நிலையையும்
பார்த்தது. செம்போத்துப் பறவையிடம் கீழே இருக்கும் ஆமையைச் சுட்டிக் காட்டி அதற்கும்
தன் உணவில் ஒரு பகுதியை வழங்குமாறு அறிவுறுத்தியது.
அப்போதுதான் வயதான
அந்த ஆமையைப் பார்த்த செம்போதும் மனம் இளகியது. அன்றிலிருந்து தினம் தனக்குக் கிடைக்கும்
தானியங்கள், புழுக்கள், பூச்சிகளை ஆமைக்கும் பகிர்ந்து கொடுத்து உண்டு வாழ்ந்து வந்தது.
அதனால் மனநிறைவும் பெற்றது. கரிச்சானும் இவர்களை வாழ்த்திப் பறந்தது.
எனவே அறம் செய
விரும்பு. தன்னிடம் இருப்பதைப் பிறர்க்கும் பகிர்ந்து கொடுத்து உண்ணுதல் சிறப்பு.
இதையே இன்னொரு மாதிரியாக எளிமையாக எழுதிப் பார்த்தேன்.
அறம் செய விரும்பு
ஆரண்யா என்னும்
காட்டில் ஒரு மைனா வசித்து வந்துச்சு. காலையில் எழுந்ததும் அது பூச்சிகளைப் பிடிச்சு
உண்ணும். தானியங்களைக் கொத்தித் தின்னும்.
வேற யாரைப் பத்தியும் கண்டுக்காம வெகு சந்தோஷமாகத் தன்னோட உலகத்துல அது வாழ்ந்து வந்துச்சு.
ஒருநாள் அந்த மைனா
வாழ்ந்து வந்த மரத்தின் கீழ் வயசான ஆமை ஒண்ணு மெல்ல மெல்ல நகர்ந்து வந்து சேர்ந்துச்சு.
விடிஞ்சா ஏந்திரிச்சா இந்த மைனா ஆடிப்பாடித் தன்னுடைய உணவை வேட்டையாடி உண்ணும். ஆனால்
இந்த ஆமையோ வயசான காரணத்துனால எங்கேயும் போக முடியாம, உணவு கிடைக்காம வாடி மெலிஞ்சிக்கிட்டே
வந்துச்சு. ஏக்கத்தோட அது இந்த மைனாவோட ஆட்டபாட்டத்தைப் பார்த்துப் பார்த்துப் பெருமூச்சு
விடும்.
இவை இரண்டும் இருந்த
மரத்துக்கு ஒரு நாள் ஒரு கரிச்சான் குருவி வந்துச்சு. அது இந்த மைனாவோட அட்டகாசத்தையும்
ஆமையோட பரிதாப நிலையையும் பார்த்துச்சு. மைனாகிட்டக் கீழே இருக்கும் ஆமையைச் சுட்டிக்
காட்டி அதுக்கும் தன்னோட உணவில் ஒரு பகுதியை கொடுக்கச் சொல்லி அறிவுரை சொன்னுச்சு.
“ஏ மைனாவே உனக்கு
உணவு கிடைக்குது. நீ சந்தோஷமா இருக்கே. ஆனா இந்த ஆமையைப் பாரு. அதுக்கு எந்த உணவும்
இல்லை. நீ மட்டும் சுயநலத்தோட வயிறு முட்டத் தின்னுட்டு இருக்கே. அது பட்டினியாக் கிடக்குப்
பாரு. உனக்குக் கிடைக்கிறத அதுக்கும் பகிர்ந்து கொடுத்துச் சாப்பிடு. அதுதான் நியாயம்”
அப்போதுதான் வயதான
அந்த ஆமையைப் பார்த்த மைனாவுக்கு மனசு இளகுச்சு.
“நன்றி கரிச்சான்
அண்ணா. இனிமே நான் என்னோட உணவை அந்த ஆமைக்கும் பகிர்ந்து கொடுக்குறேன். இதுவரைக்கும்
சுயநலமா என்னை மட்டுமே நினைச்சிட்டு இருந்துட்டேன். இனி எல்லாருக்கும் கொடுத்துச் சாப்பிடுவேன்”
என்றது.
அன்னிலேருந்து
தினம் தனக்குக் கிடைக்கிற தானியங்கள், புழுக்கள், பூச்சிகளை ஆமைக்கும் பகிர்ந்து கொடுத்து
உண்டு வாழ்ந்து வந்துச்சு. அதனால் அந்த மைனாவுக்கு மனநிறைவு ஏற்பட்டுச்சு. கரிச்சான்
குருவியும் இவர்களை வாழ்த்திப் பறந்துச்சு.
எனவே அறம் செய விரும்பு. தன்னிடம் இருப்பதைப் பிறர்க்கும் பகிர்ந்து கொடுத்து உண்ணுதல் சிறப்பு
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!