எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 16 செப்டம்பர், 2022

சக்திக்குச் சக்தி தந்து சிலையானவர்கள்

 சக்திக்குச் சக்தி தந்து சிலையானவர்கள்


பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள். ஆனால் இங்கோ சில அசுரர்கள் பெண்ணால் தங்களை வெல்ல முடியாது எனக் கிள்ளுக்கீரையாக நினைத்தார்கள். அந்த ஐந்து அசுரர்களும் சாமானியப்பட்டவர்கள் அல்ல. அவர்களை வெற்றி கொண்ட பெண்ணும் சாமானியமானவள் அல்ல. ஆனால் அவள் மேலும் மேலும் சக்தி பெற மும்மூர்த்திகளில் இருந்து இந்தப் பூமியின் ஓரறிவு உயிரினம் வரை தங்கள் சக்தியைத் தந்து சிலையாக நின்றார்கள். அது என்ன கதை என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

முன்பொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என்ற இரு அசுர சகோதரர்கள் இருந்தார்கள். இவர்கள் தங்கள் நாட்டை ஆண்டு வந்த காலத்தில் இவர்களிடம் சண்டன், முண்டன், ரக்தபீஜன் ஆகியோர் படைத்தளபதிகளாகப் பணியாற்றி வந்தார்கள்.


தங்கள் பலத்தை மேலும் பெருக்கிக் கொள்ளவும் சாகாவரம் பெறவும் சிவனை நோக்கித் தவமிருந்தார்கள். தவமென்றால் நீர் கூட அருந்தாமல் காற்றை மட்டும் புசித்துக் கடுந்தவம். இவர்களின் தவநெருப்பு சிவனைச் சென்றடைய அவரோ இவர்கள் மேல் பரிவு கொண்டு தோன்றினார்.” சும்ப நிசும்பர்களே. உங்கள் பக்திக்கு மெச்சினேன். என்ன வரம் வேண்டும் கேளுங்கள் தருகிறேன்”

அத்தனை காலம் தவம் இருந்தாலும் முழுதும் இறைநெறிக்குத் திரும்பாத சும்ப நிசும்பர்களோ “ ஈசனே, எங்களுக்கு சாகாவரம் வேண்டும் “ எனக் கேட்க, இறைவனோ “ பூமியில் பிறப்பெடுத்த அனைவருக்கும் இறப்பு உண்டு. எனவே வேறு வரம் கேளுங்கள். சாகாவரத்துக்குப் பதிலாக யார் மூலம் இறப்பு நிகழ வேண்டும் என்று கேட்டால் அவ்வரம் தருகிறேன்” என்கிறார்.

பெண்களைக் கிள்ளுக்கீரையாக நினைக்கும் சும்பனும் நிசும்பனும் “அப்படியானால் எங்களுக்கு ஒரு பெண் மூலமாகவே இறப்பு நிகழ வேண்டும்” என்ற வரத்தைக் கோருகிறார்கள். ஈசனும்” தந்தேன்” என்று கூறி மறைகிறார்.

அவ்வளவுதான். ஆரம்பித்து விட்டது சும்ப நிசும்பர்களின் அட்டகாசம். கூடவே சண்டன், முண்டன், ரக்த பீஜர்களும் கலந்து கொள்ள கேட்கவேண்டுமா. பூலோகமே அல்லோலகல்லோலப் பட்டது. திரிபுவனமே பற்றி எரிந்தது. மும்மூர்த்திகளாலும் அவர்களைத் தடுக்க இயலவில்லை. அனைவரும் ஈசனிடமும் அம்மையிடமும் முறையிட்டனர்.

பெண்ணால் மட்டுமே இவர்களுக்கு அழிவு ஏற்படும் என்ற வரத்தைத் தான் கொடுத்ததாக ஈசன் கூற அனைவரும் ஈஸ்வரியைப் போற்றித் துதித்து அந்த அரக்கர்களை அழிக்கும்படி வேண்டினர். காக்கும் மாதாவாயிற்றே. அதனால் அவர்கள் கூறியதைக் கேட்கக் கேட்க அவளுக்கு ரௌத்திரம் பெருகியது.

அரக்கர்களை வதம் செய்யப் போர்க்கோலம் பூண்டாள். அன்னையே போர்க்கோலம் பூண்டால் அகிலமே அவள் பின் திரண்டிடாதா என்ன. அவளுக்குத் துணையாகத் தம் சக்தி அனைத்தையும் அனுப்ப முடிவு செய்தார்கள் அனைவரும். பிரம்மா விஷ்ணு சிவன் மூவரும் தமது அம்சமாக படைத்தலைவிகளை உருவாக்கிவிட்டுச் சிலையாய் நின்றார்கள்.

இவர்களைப் பார்த்துத் தேவர்கள், துறவிகள், மனிதர்கள் அனைவரும் தம் சக்தியைத் தந்துவிட்டுச் சிலையானார்கள். ஆறறிவு படைத்த மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகள், ஊர்வன, பறப்பன, மரம் புல் பூண்டு செடிகள் கூடத் தத்தம் சக்தியைத் தந்துவிட்டுச் சிலையாய் நின்றார்கள்.


அன்னை ஒரு அழகிய பெண்ணுரு எடுத்துக் கானகத்தின் நடுவில் ஒரு தர்பார் அமைத்துச் சிங்கவாகினியாக அமர்ந்திருந்தாள். அவளின் தெய்வீக அழகைப் பார்த்த சண்ட முண்டர்கள் தங்கள் அரசர்களை மணந்து கொள்ள அரண்மனைக்கு வரச் சொன்னார்கள்.” அழகிய பெண்ணே !. ஏன் கானகத்தில் அமர்ந்திருக்கிறாய். நீ இருக்க வேண்டிய இடம் எங்கள் அரசர்கள் அரண்மனை. அவர்களை மணந்தால் சீரும் சிறப்புமாக வாழலாம்” என்றார்கள்.  


அதற்குத் தேவி “ என்னை யார் போரிட்டு வெல்கிறார்களோ அவர்களையே மணப்பேன் என உறுதி மொழி எடுத்திருக்கிறேன். எனவே என்னைப் போரில் வெல்லுமாறு உன் மன்னர்களிடம் கூறு” என்றாள்.

உடனே சண்ட முண்டர்கள் தங்கள் அரசர்களிடம் இந்த அதிசயத்தகவலைச் சொன்னார்கள். அந்த அசுர அரசர்களோ கானகத்தில் பெண்ணா என ஆச்சரியப்பட்டுப் பார்க்க வந்தார்கள். அம்பிகையின் அழகில் மயங்கினார்கள். போர் செய்தால்தான் மணப்பேன். என்ற அவளின் உறுதியைக் கண்டு சிரித்தார்கள்.

“நீயோ இளம்பெண். உன்னால் எங்களை வெல்ல முடியாது. எனவே உன் கொள்கையை விட்டு விட்டு எங்கள் இருவரையும் மணந்துகொள்” என எள்ளலாகச் சிரித்தார்கள். ”

அம்பிகைக்கோ வந்ததே கோபம்.போர்க்கோலத்தில் தன் வாளுடனும் கேடயத்துடனும் வில் அம்புகளுடனும் எழுந்தாள். அவள் மெய்யாகவே போரிடப் போகிறாள் என்று உணர்ந்த சும்ப நிசும்பர்கள் அவளுடன் போரிடத் தொடங்கினர்.

பெண்தானே என நினைத்துப் போரை ஆரம்பித்த அவர்களுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. அவள் சாதாரணப் பெண் இல்லை என்று. போர் என்றால் போர் கடுமையான போர். முதலில் அவள் அந்த அசுரர் தலைவர்களின் படைத்தலைவர்களான ரக்தபீஜன், சண்டன், முண்டன் ஆகியோரை அழித்தாள். ஒன்பது தினங்கள் தொடர்ந்தது அந்தப் போர் பத்தாவது நாளான விஜயதசமியன்று அவள் சும்ப நிசும்பர்களையும் அழித்தாள்.

இப்படிப் பத்து நாளும் பகலில் சக்திக்குத் துணையாகத் தங்கள் சக்தியைக் கொடுத்துவிட்டுச் சிலையாக நின்றவர்களை வணங்கும் வண்ணம்தான் நவராத்திரியைக் கொண்டாடுகிறோம். அதனாலேயே அவர்களை ஒன்பது படிகளில் சிலையாக வடித்து அடுக்கி வைத்துத் தீப தூப ஆராதனை செய்து மகிழ்கிறோம் குழந்தைகளே.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...