இந்தியாவின் நைட்டிங்கேல்,
பாரதீய கோகிலா என்றெல்லாம் புகழப்பட்டவர் யார் தெரியுமா. நம்ம கவிக்குயில் சரோஜினி
நாயுடு அவர்கள்தான். மிகுந்த தன்னம்பிக்கையும் தைரியமும் ஆளுமைத் தன்மையும் அழகும்
இனிமையும் மன உறுதியும் வாய்ந்த மகத்தான சக்திமிக்க பெண்மணி அவர். நம் நாட்டு விடுதலையில்
பெரும்பங்காற்றிய மாபெரும் பெண் சுதந்திரப் போராளி அவர். காந்தியடிகள் மேல் கொண்ட அபிமானத்தால்
காங்கிரஸில் சேர்ந்து நாட்டு விடுதலைக்குத் தன் உடல் பொருள் ஆவியை அர்ப்பணம் செய்தவர்.
வங்காள குலின்
ப்ராமணக் குடும்பத்தைச் சேர்ந்த அவர் பிறந்தது ஹைதராபாத். சாதிக்கட்டுப்பாடு அதிகம்
இருந்த அந்தக் காலத்திலேயே கோவிந்தராஜூலு நாயுடு என்ற மருத்துவரை சாதி மறுப்புத் திருமணம்
செய்து கொண்டவர். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உண்டு. 1879 பிப்ரவரி 13 இல் பிறந்த
சரோஜினி நாயுடு எழுபது ஆண்டுகள் வாழ்ந்து இந்திய விடுதலைவேள்வியில் பங்கேற்றவர். காந்தியடிகள்
மீது கொண்ட அபிமானத்தால் சுதந்திரப் போராட்டத்திலும் சத்யாக்ரகத்திலும் ஈடுபட்டவர்..
அதனால் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும், விடுதலை இந்தியாவின் உத்திரப் ப்ரதே
சகவர்னராகவும் ஆட்சி செய்தவர்.
தந்தை அகோர்நாத்
புரட்சிச் சிந்தனையாளர். ஹைதராபாத்தில் நிஜாம் கல்லூரி என்ற ஒரு கல்வி நிறுவனத்தை நடத்தி
வந்தார். அவரது தாய் பரதசுந்தரி தேவியும் கவி இயற்றுவதில் வல்லவர்.சரோஜினியோடு கூடப்பிறந்தவர்கள்
எண்மர். அவர்களில் ஒரு சகோதரரான வீரேந்திரநாத் புரட்சிக்காரர், இன்னொரு சகோதரரான ஹரீந்திரநாத்
கவிஞர். எனவே சரோஜினியின் ரத்தத்தில் கவிதையும் புரட்சியும் ஊறித்ததும்பியதில் ஆச்சர்யம்
இல்லை.
மெட்ராஸ் யூனிவர்சிட்டி,
கிங் கல்லூரி, கேம்ப்ரிட்ஜ், லண்டன் கிரிடன் கல்லூரிகளில் பயின்றவர் சரோஜினி. உருது
, தெலுங்கு, ஆங்கிலம், பாரசீகம், பெங்காலி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.
பன்னிரெண்டு வயதிலேயே
கவிதைகள் இயற்றியுள்ளார். முதல் கவிதைத் தொகுதி அவரது இருபத்தி ஆறாம் வயதில் வெளியானது.
கிட்டத்தட்ட ஐந்து கவிதைத் தொகுதிகள் ஆங்கிலத்தில் வெளியாகி உள்ளன. இந்திய மக்கள்,
நெசவாளிகள், விவசாயிகள் மீது இவர் கொண்ட பரிவு அளப்பரியது. குழந்தைகள், இயற்கை மீது
மட்டுமல்ல, தேசபக்திப் பாடல்களும் எழுதி உள்ளார்.
இவருக்கு 26 வயதாக
இருந்தபோது 1905 இல் வங்காளம் ஆங்கிலேய அரசால் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதனால் அவர்
அதை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது கோபாலகிருஷ்ண கோகலே விடுதலைப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபடுமாறு வேண்டிக்கொள்ள
சரோஜினி கவிதை எழுதுவதை எல்லாம் புறந்தள்ளி விட்டு விடுதலைப் போராட்டம், பெண்களின்
முன்னேற்றம், பெண் கல்வி, இந்து முஸ்லீம் ஒற்றுமை ஆகியவற்றுக்காகக் குரல் கொடுக்கத்
துவங்கினார்.
காங்கிரஸில் சேர்ந்ததும்
அவருக்கு தாகூர், ஜின்னா, அன்னிபெசண்ட், சி. பி, ராமசுவாமி ஐயர், காந்திஜி, நேருஜி
போன்ற தலைவர்களுடன் அறிமுகமும் நட்பும் ஏற்பட்டது. 1915 – 1918 ஆகிய காலகட்டங்களில்
இந்தியா முழுவதும் ஏன் ஐரோப்பா முழுவதுமே அவர் பெண்களின் எழுச்சிக்காகவும் சமூக நலனுக்காகவும்
தேச விடுதலைக்காகவும் காங்கிரஸின் சார்பில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ”மகளிர்
இந்திய சம்மேளனம் “ ( WOMEN’S INDIAN ASSOCIATION –WIA) அமைக்க உருவாகக் காரணமாக இருந்தார். அன்னிபெசண்ட்
அம்மையாருடன் சுயாட்சிக் கோரிக்கையுடன் லண்டனுக்கும் மகளிர் சம்மேளனம் சார்பில் ஓட்டளிக்கச்
சென்றுள்ளார்.
காந்தியடிகள் மேல்
மிகவும் அபிமானம் கொண்டிருந்த சரோஜினி அவருடன் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கும்
ஆங்கில அரசின் அராஜகப் போக்கை அவர் கண்டிக்கத் தவறவில்லை. காந்திஜியோடு இருந்த காலகட்டங்களில்
அவர் காந்திஜியின் எளிமையையும் அவரின் எளிய உணவு வகைகளையும் கண்டு “காந்தியை ஏழையாக்கவே
முடியாது “ என்று வியந்து கூறியுள்ளார். சரோஜினி மிகுந்த நகைச்சுவை உணர்வும் மிக்கவர்.
மிகப் ப்ரயேகமான அணிகலன்கள், பட்டு உடைகள் அணிவதில் அலாதி ஆர்வமுள்ள சரோஜினி நாயுடு
தேசப்பிதாவான காந்தியடிகளின் எளிமையைக் கண்டு கதர் ஆடைக்கு மாறினார். தன் தேவைகளையும்
குறைத்துத் தன்னை எளிமைப்படுத்திக் கொண்டார்.
1916 இல் சம்பரன்
இண்டிகோ பணியாளர்களுக்காகக் குரல் கொடுத்தார். 1919 ஜூலையில் இங்கிலாந்தின் ஹோம் ரூல்
லீக்கின் தூதராக செயல்பட்டார். 1919 இல் ரௌலட் சட்டத்தை அறிவித்தது ஆங்கில அரசு. அதன்படி
சுதந்திர விழிப்புணர்வு கொடுக்கும் ஆவணங்களை வைத்திருப்பது சட்டப்படிக் குற்றம். இதை
எதிர்த்து 1920 ஆகஸ்ட் 1 இல் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்திற்கு அழைப்பு விடுத்தார்.
அதில் முதலில் தைரியமாகத் தன்னை இணைத்துக் கொண்டவர் சரோஜினி நாயுடு.
1925 இல் கான்பூரில்
நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டை பல்வேறு பணிகளுக்கிடையிலும் திறம்பட நடத்தினார்.
இந்திய தேசிய காங்கிரஸுக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி அவர். அதன்
வெற்றியிலிருந்து தேசிய மகளிர் மாநாட்டை அவரே தலைவராக ஏற்று அடுத்துப் பல்லாண்டுகள்
நடத்தும்படிப் பொறுப்பு அமைந்தது. அதையும் சிறப்பாகச் செய்தார் மேலும் அதில் தொண்டு
செய்யும் பல மகளிர் தன்னார்வலர்களை உருவாக்கினார். 1929 இல் தென்னாப்பிரிக்காவில் கிழக்கு ஆப்பிரிக்க
இந்திய காங்கிரஸ் கூட்டத்தை நடத்தினார்.
காந்தியடிகளுடன்
இணைந்து நான்கு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார் சரோஜினி நாயுடு. அவை உப்புச் சத்யாக்கிரகம்,
ஒத்துழையாமை இயக்கம் , சட்ட மறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம். உப்புச்
சத்யாக்ரகப் போராட்டத்தில் ஈடுபட்டபோது காந்திஜியுடன் கைது செய்யப்பட்டுச் சிறையில்
அடைக்கப்பட்டார்.
சட்ட மறுப்பு இயக்கத்திலும்
ஈடுபட்டு, 1925 இல் சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையானார். 1930 ஜனவரி 26 இல் காங்கிரஸ்
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆட்சியிலிருந்து இந்தியாவின் விடுதலையைக் கோரியது. இதனால்
இவர் காந்தியுடன் திரும்பக் கைது செய்யப்பட்டுச் சிறையில் பல மாதங்கள் அடைக்கப்பட்டார்.
பின்னர் அவர் 1931, ஜனவரி 31 இல் காந்திஜியுடன் விடுதலையானார்.
1931 இல் காந்திஜியுடனும்
மதன் மோகன் மாளவியாவுடனும் இங்கிலாந்தில் இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்றார்.
பின்னரும் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுச்
சிறையில் அடைக்கப்பட்டனர். இருவருக்குமே அங்கே உடல்நிலை சீர்கெட்டது. தன் பெயரில் பழி
வராமலிருக்க ஆங்கில அரசு இவர்கள் இருவரையும் விடுவித்தது.
மறுபடியும் 1942
இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர்களின் தொடர்ந்த போராட்டத்தின் பயனாக ஒருவழியாக இந்தியா சுதந்திரம் அடைந்தது.
1947 இல் ஆசிய உறவுகள் மாநாட்டில் பங்கேற்றார். இவ்வாறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுச்
சிறை சென்றதால் இரும்பை ஒத்த மனமும் உடலும் கொண்ட சரோஜினியின் உடல் சீர்கேடு அடைந்தது.
இருந்தும் அவர் தன்னம்பிக்கையுடனும் மலர்ச்சியுடன் உடல் நிலையைப் பொருட்படுத்தாது செயல்பட்டார்.
1947 , ஆகஸ்ட்
15 இல் உத்திரப் ப்ரதேச ஆளுனராகப் பொறுப்பேற்றார். 1948 ஜனவரி 30 இல் தேசப்பிதாவான
காந்தியடிகள் இறப்பு நிகழ்ந்தது. 1949, மார்ச் 2 இல் காந்தியடிகளுடன் இந்திய விடுதலைக்குப்
பாடுபட்ட அந்த கவிக்குயில் மாரடைப்பால் தன் இறுதி மூச்சை நிறுத்தியது. அவரது இறுதிச்
சடங்குகள் கோமதி ஆற்றங்கரையில் நிகழ்த்தப்பட்டது. அவரது 135 ஆவது பிறந்தநாளை கூகுள்
கூட சிறப்பாகக் கொண்டாடியது.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!