குழந்தைகள் பலவிதம். சில குழந்தைகள் வளர வளர உலக ஞானம் பெறுவார்கள். ஆனால் சில குழந்தைகளோ கருவிலே திருவுடையவர்களாகப் பிறந்திருப்பார்கள். மேலும் எவ்வளவு திறமை இருந்தாலும் அகங்காரம்கொள்ளாமல் இவர்கள் தங்கள் பணிவன்பாலும் அடக்கத்தாலும் ஆசார்யர்களை மதித்து நடந்து பல்வேறு உயர்வுகளை எய்துவார்கள். அப்படிப்பட்ட புத்திசாலிக்குழந்தை ஒன்றைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
ஸ்ரீரங்கத்தில் கூரேசர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் ஸ்ரீரங்கன் மேல் மிகுந்த பக்தி கொண்டவர். இவர் மனைவி பெயர் ஆண்டாள் அம்மையார். ஆயிரக்காணக்கான அதிதிகளுக்குத் தினமும் அன்னமிட்டு வந்தவர்கள் இவர்கள். காலமாற்றத்தால் தினமும் உஞ்சவிருத்தி செய்தோ அல்லது கோயில் பிரசாதங்களைக் கொண்டோ எளிமையாக வாழ்ந்து வந்தார்கள் இத்தம்பதிகள்.
ஒரு நாள் உஞ்சவிருத்திக்குச் செல்லமுடியாமல் வெகுமழை பொழிந்தது. கணவன் மனைவி இருவரும் கொலைப்பட்டினி கிடந்தார்கள். தினமும் கோவிலுக்கு வந்து செல்லும் கூரேசர் மழை காரணமாக வராததால் அக்கோவிலின் அர்ச்சகர் பிரசாதங்களைக் கொண்டு வந்து வீட்டிற்கே கொடுத்துச் செல்கிறார். மகிழ்ந்த கூரத்தாழ்வார் அதிலிருந்து தனக்கு ஒரு கவளமும் தன் மனைவிக்கு ஒரு கவளமுமே பெற்றுக் கொள்கிறார்.
இந்நிலையில் கூரத்தாழ்வார், ஆண்டாள் தம்பதிக்கு இரு ஆண் குழந்தைகள் பிறக்கிறார்கள். பிறந்த பதினோராம் நாள் அன்று ஆசாரியரான ராமானுஜர் இவர்களுக்கு பராசரர், வேதவியாசர் என்று பெயர் சூட்டுகிறார். இவர்கள் இருவருமே இறையருள் பெற்றவர்கள். அன்பு, பண்பு, அடக்கம் ஆகியன போதிக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள். தந்தை தாயையும் குருவையும் மதித்து வளர்ந்தவர்கள்.
ராமானுஜரின் சீடரான எம்பார் என்பவர்தான் இவர்களுக்கு ஆசாரியர். அவரே இவர்களை நல்வழிப்படுத்தி உபதேசங்கள் அளித்துக் கல்வி புகட்டி வருகிறார். இவரிடம் கற்று வந்த பராசரர் ஆசிரியரே வியக்கும் வண்ணம் வடமொழியிலும் தமிழிலும் வெகு புலமை அடைகிறார். மிகச் சிறு வயதிலேயே பாசுரங்கள், நாலாயிரம் திவ்யப் ப்ரபந்தம் ஆகியவற்றுக்குக் குருவின் அருளுடன் தமிழில் முதலில் உரை எழுதியவர் இவரே. விஷ்ணு சகஸ்ரநாமத்துக்கும் உரை எழுதி இருக்கிறார். இது பகவத் குண தர்ப்பணம் என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் மிகக் கடினமாக இருந்த பாசுரங்களை தெளிவான அர்த்தத்தோடு எளிய மக்கள் புரிந்துகொள்ளவும் பின்பற்றவும் முடிந்தது. இவ்வளவு சிறப்பு இருந்தாலும் இவர் தம் ஆசார்யர்களைத் தெய்வமாக மதித்து வந்தார்.
இவரது குழந்தைப் பருவத்தில் ஸ்ரீரங்கத்துக்கு வித்வஜன கோலாகல பண்டிதன் என்பார் வந்திருந்தார். அவரை வாதில் வெல்ல முடியாது என்பதே பேச்சாக இருந்தது. அவர் யதிராஜ ராமானுஜருடன் வாதிடத் துணிந்திருந்தார். வீதியில் அவர் நடந்து வருவதை குழந்தை பராசரர் பார்க்கிறார்.
தம் குருவின் குருவையே வாதிற்கு அழைத்த அவரைப் பார்த்ததும் வேகமாகச் சென்று வீதியின் குறுக்கே அவர் எதிரில் மறிக்கிறார்.
“ஐயா வித்வஜ்ஜன கோலாகல பண்டிதரே . நமஸ்காரம். எங்கள் யதிராஜரான ராமானுஜருடன் வாதிடும் முன்பு என் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டுப் போங்கள் “ என்கிறார்.
மறித்துக் கேள்வி கேட்ட குழந்தையை அலட்சியமாகப் பார்கிறார் வித்வஜன கோலாகல பண்டிதர்.’ நான் எவ்வளவு பெரிய பண்டிதன். எவ்வளவோ பேரை வாதில் தோற்றோடச் செய்திருக்கிறேன். என் பெருமை தெரியாமல் என்னையே சமருக்கு அழைக்கிறானே இச்சிறுவன். இவனால் என்ன செய்துவிட முடியும். இவனையும் தோற்றோடச் செய்வேன். ஆனால் சிறுவனுடன் மோதுவது இழுக்கு ’ என அகங்காரமாக நினைக்கிறார்.
அதற்குள் அச்சிறுவன் வீதியில் இருந்து ஒரு கைப்பிடி மணலை எடுத்து அவர் முன் நீட்டி “ இதில் எவ்வளவு மணல் இருக்கிறது “ என்று கூறிவிட்டு அதன் பின் என் ஆச்சாரியருடன் பொருதப் போங்கள்” என்கிறான்.
திகைத்துப் போகிறார் வித்வஜன கோலாகல பண்டிதர். இப்படி ஒரு கேள்வியை அவர் எங்குமே எதிர்கொண்டதில்லை. துவைத அத்துவைதக் கருத்துக்களிலேயே தர்க்கம், வாதம் ஆகியன செய்து பழகியவருக்கு இக்கேள்விக்கு என்ன பதில் அளிப்பது என்று தெரியாமல் விழிக்கிறார். ”மணலை எண்ண முடியுமா. இதென்ன முட்டாள்தனமான கேள்வி “ என்று அச்சிறுவனை எள்ளுகிறார்.
பராசரனோ புன்னகை மாறா முகத்துடன் ’” என் கையில் இருப்பது ஒரு பிடி மணல் என்று கூடச் சொல்லத் தெரியாத நீங்கள் எங்கள் குரு யதிராஜ ராமானுஜருடன் வாதிடப் போகிறீர்களா “ என்று சொல்லிச் சிரிக்கிறான்.
பொட்டிலடித்தாற் போலிருக்கிறது அந்தப் பதில் அப்பண்டிதருக்கு. வியந்த அப்பண்டிதர் “நீதான் பராசரனா “ என ஆச்சர்யம் மேலிடக் கூறி அவருக்கே அடியார் ஆகிறார்.
அரங்கனின் தத்துப் பிள்ளையான பராசரர் அதன் பின் பல்வேறு நூல்கள் இயற்றிப் பல்வேறு உயர்வுகளை எய்தினார் என்றாலும் தன் ஆசாரியரான ராமானுஜரின் மற்றும் எம்பாரின் அடியொற்றியே நடந்தார்.. தனக்கும் தனது ஆசார்யர்களுக்கும் புகழ் தேடிக் கொடுத்தார். எவ்வளவு சிறப்பு இருந்தும் பெரியோரைப் பணிதலே தன் கடன் என நினைத்த பராசரர் வழி நடப்போம், சிறப்படைவோம். வாருங்கள் குழந்தைகளே.
டிஸ்கி:- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 22 . 2. 2019 தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் அஷோக் & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.
டிஸ்கி:- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 22 . 2. 2019 தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் அஷோக் & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!