இசை ஞானத்தில் சிறப்புற்ற ஒரு இசைவாணன் ஒருவன் கர்வமுற்று அலைந்தான். தன் இசைக்கு ஈடு இணை இவ்வுலகத்திலேயே இல்லை என்று ஆணவம் கொண்டு நாடு நாடாகச் சென்று இசைஞர்களைப் போட்டிக்கு அழைத்து அவமானப்படுத்தினான். ஆனால் ஒரு நாட்டில் விறகுவெட்டியின் கானத்தைக் கேட்டு வெட்கமடைந்து ஊரைவிட்டே ஓடினான். அந்த இசைவாணனைப் பற்றியும் அவனைத் தன் இன்னிசையால் விரட்டிய விறகுவெட்டியைப் பற்றியும் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
பாண்டிநாட்டில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு வரகுணபாண்டியன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். இசைவல்லுநர்கள், பாணர்கள், விறலியர், கலைஞர்கள் அனைவரையும் ஆதரித்து அவர்களின் திறமைக்கேற்பப் பொன்னும் பொருளும் பரிசிலாக வழங்குவான்.
வடநாட்டைச் சேர்ந்த இசைப்பாணர்கள் குழு ஒன்று ஒரு முறை மன்னனின் அவைக்கு வந்தது. அதன் தலைமை யாழ்பாணனின் பெயர் ஏமநாதன். அவன் தன்னுடைய இசைக்குழுவினருடன் ஒரு இன்னிசைக் கச்சேரியை நிகழ்த்தினான். அந்த இசையைக் கேட்ட சபை மட்டுமல்ல நாடே மயங்கியது. அவ்வளவு இனிமை. ஆனால் இனிமையாகப் பாடத்தெரிந்த அவனுக்கு இங்கிதமாகப் பேசத் தெரியவில்லை.
ஒவ்வொரு நாட்டிலும் அவன் பாடி முடித்ததும் அந்த நாட்டிலுள்ள இசைஞர்களைப் போட்டிக்கு அழைப்பான். அவனோடு போட்டிபோட்டுப் பாட முடியாமல் தோற்பவர்களை இனிப் பாடவே கூடாது என்று சொல்லி அவமானப்படுத்துவான். அதே போல் பாண்டிநாட்டிலும் வரகுணபாண்டியன் அவையில் தன்னோடு போட்டிக்கு வரும்படி சவால்விட்டான்.
“மன்னா. உன் அவையில் உள்ள பாடகர்கள் என்னோடு போட்டிக்கு வரவேண்டும். அவர்கள் தோற்றால் அவர்கள் பாடுவதையே நிறுத்திவிட வேண்டும். நான் தோற்றால் பாடுவதை நிறுத்திவிட்டு ஊரைவிட்டே போய்விடுகிறேன். சவால் விடுகிறேன். என்னோடு போட்டிக்கு வந்து பாட யார் தயார் ?” என்று மிருகம் போல் உறுமினான்.
அவன் இசையைக் கேட்டு மயங்கிய சபையினர் இந்தச் சவாலைக் கேட்டுப் பதுங்கினர். ஏனெனில் அவன் இன்னிசைக்கு முன் தோற்றுப்போய்விடுவோம் என்ற பயம். மன்னன் பார்த்தான் . யாருமே போட்டிக்கு வராவிட்டால் தன் நாட்டு மானம் மரியாதை என்னாவது. அதனால் அந்தச் சமயம் சோமசுந்தரக் கடவுளின் சன்னிதானத்தில் அவரைப் பாடல்களால் பாடிப் பரவித் தினம் தொழும் பாணபத்திரன் என்னும் பாணனை ஏமநாதனுடன் போட்டியில் கலந்துகொள்ளப் பணித்தான்.
சர்வமும் நடுங்கியது பாணபத்திரனுக்கு. கண்களில் நீர் கரைகாணாமல் பெருகியது. வேகமாக ஓடினான் சோமசுந்தரக் கடவுளின் சந்நிதிக்கு. “ இறைவனே. யான் என் செய்வேன். உன்னைப் பாடும் பாடலும் இசையும் தவிர ஏதும் அறியேன். என்னைக் காத்தருள்வாய் “ என்றபடி அங்கேயே மயங்கிவிழுந்தான்.
தம்மை நம்பி வந்த பாணபத்திரனைப் பார்த்த சோமசுந்தரனுக்குக் கருணை பெருகியது. அவனைக் காக்க முடிவெடுத்தார்.
“அம்மா விறகு வாங்கலையோ விறகு” என்று மதுரை நகரம் பூராவும் கூவிக்கொண்டே வந்தான் ஒரு விறகுவெட்டி. அரண்மனைப் பக்கம் வந்தவன் அங்கே அரசாங்க விருந்தாளிகளாக ஏமநாதனின் இசைக்குழுவினர் தங்கியிருந்த மாளிகையின் பக்கம் வந்து விறகுக் கட்டைப் போட்டுவிட்டு அமர்ந்தான்.
இரவு வந்ததும் நிலவு உதித்தது. ஆனால் அந்த விறகுவெட்டியோ இடத்தைக் காலிபண்ணாமல் அங்கேயே படுக்க யத்தனித்தான். கொட்டாவி விட்டபடி சூழ்ந்த இரவுப்பூச்சிகளை விரட்டியபடி சில பாடல்களை முணுமுணுக்கத் துவங்கினான்.
மெல்ல மெல்ல சுருதி ஏற்றி கமகங்களோடு அழகான பாடல் ஒன்றைப் பாட ஆரம்பித்தான் அந்த விறகுவெட்டி. அட.. அவன் பாடினால் உலகமே அசைந்தது. நிறுத்தினால் காற்றுகூட அசைவற்று நின்றது. அந்த சாமகானம் தேவகானம் போல ஒலித்து ஈரேழு உலகையும் கட்டியது. ஈரேழு உலகையே கட்டினால் அந்த விருந்தினர் மாளிகையில் இருந்த சாதாரண மனிதர்களாகிய ஏமநாதனையும் அவன் குழுவினரையும் கட்டாதா என்ன.
இசையைக் கேட்டு வியந்தான் ஏமநாதன். அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. யார் பாடுவது இந்த கந்தர்வகானம்?. தேவர்கள், கின்னரர்கள், கிம்புருடர்கள், விஞ்சையர்கள் யாரும் இன்னிசைக்கிறார்களா என்ன.? வெளியே வந்த ஏமநாதன் அங்கே ஒரு விறகுவெட்டி அமர்ந்து பாடிக் கொண்டிருப்பதைக் கண்டு மேலும் வியப்புற்றான்.
அந்த விறகுவெட்டியின் அருகில் சென்றான். “யாரப்பா நீ இந்த இருட்டில் அமர்ந்து பாடிக்கொண்டிருக்கிறாய் “
“ஐயா நான் இந்த ஊரில் விறகுவெட்டி விற்றுப் பிழைப்பு நடத்துறேனுங்க. எனக்கு பாடவெல்லாம் வராதுங்க. இந்த ஊரில் பாணப்பத்திரர்னு ஒருத்தர் தினம் சோமசுந்தரர் கோயில்ல பாடுவாருங்க. அவர் பாட்டை அப்போ அப்போ கேட்டிருக்கேன். அந்தக் கேள்வி ஞானத்துல பாடுறேனுங்க “ என்றான் விறகுவெட்டி..
‘என்னது பாணப்பத்திரர் பாடுவதைக் கேட்டே இவ்வளவு சிறப்பாகப் பாடுகிறானே. அப்போது அந்தப் பாணப்பத்திரர் இன்னும் எவ்வளவு சிறப்பாகப் பாடுவாரோ ‘ என்ற பயம் பீடித்தது ஏமநாதனுக்கு. அவனது இசைக்குழுவினரும் அவன் பின்னேயே வந்து அந்த விறகுவெட்டி சொன்னதை எல்லாம் கேட்டார்கள். அவர்களுக்கும் ஏமநாதன் மறுநாள் பாணப்பத்திரனோடு போட்டி போடுவது குறித்து தயக்கமும் ஐயமும் ஏற்பட்டது.
ஏமநாதன் தன் குழுவினருடன் கலந்து ஆலோசித்தான். மறுநாள் போட்டிக்குப் போய் தோற்றுவிட்டால் பாடவே முடியாது போய் அவமானத்துடன் ஊரைவிட்டு ஓட வேண்டியிருக்கும். இப்போதே இந்த நாட்டை விட்டு ஓடிவிட்டால் வேறு ஊர்களிலாவது போய் பாடிப் பிழைப்பை நடத்தி பரிசில் பெறலாம். இந்த எண்ணம் ஏற்பட்டதும் ஏமநாதனின் குழுவினர் தங்கள் மூட்டையைக் கட்டிக் கொண்டு இரவோடிரவாக நாட்டைவிட்டு வெளியேறினர்.
மறுநாள் பாணபத்திரர் அரண்மனைக்கு வந்தபோது அந்த இசைக்குழுவினர் ஊரைவிட்டு ஓடிய விவரம் தெரிந்தது. சோமசுந்தரக் கடவுள் சந்நிதியில் வந்து தன்னை இக்கட்டிலிருந்து காத்ததற்காக நன்றி கூறி விழுந்து வணங்கினார். தன்னை நம்பிய பாணபத்திரரைக் காப்பாற்றவே ஆணவம்பிடித்த ஏமநாதனை வென்றார் சோமசுந்தரர். எனவே ஆணவம் அழிக்கும் என்பதை உணர்வோம் குழந்தைகளே.
டிஸ்கி:- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 8 . 2. 2019 தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் அஷோக் & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.
டிஸ்கி:- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 8 . 2. 2019 தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் அஷோக் & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!