எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 ஜூலை, 2018

விடாமுயற்சிக்கு ஒரு பகீரதன். தினமலர். சிறுவர்மலர் - 28.


விடாமுயற்சிக்கு ஒரு பகீரதன்.


ரு விஷயத்தைச் செய்யப் பகீரப் ப்ரயத்தனம் செய்தேன் என்பார்கள் அப்படி என்றால் என்ன ? பகீரதன் என்ற மாமன்னன் கங்கையை இப்பூமிக்குக் கொண்டுவர பலவிதமான தவம் தியானம் இவற்றை ஓராண்டு ஈராண்டல்ல பல்லாயிரம் ஆண்டுகள் இயற்றினார். அதைத்தான் பகீரதப் ப்ரயத்தனம் என்கிறார்கள். 

அது எதற்காக என்று பார்ப்போம் குழந்தைகளே.


யோத்தியை ஆண்ட இஷ்வாகு குல மன்னன் சகரர் என்பவருக்குக் குழந்தைகள் இல்லை. அவருக்கு சுமதி, கேசினி என்று இரு மனைவியர் இருந்தனர். அவர் இறைவனிடம் தவம் செய்ததால் சுமதிக்கு  60,000 குழந்தைகளும் கேசினிக்கு ஒரே ஒரு குழந்தையும் பிறந்தார்கள். கேசினியின் குழந்தையின் பெயர் திலீபன்.


சகரர் ஒரு முறை அசுவமேதயாகம் செய்தார். யாகம் செய்தபின் அசுவமேதயாகக் குதிரை உலகெலாம் வலம் வரும். அதை யாராவது பிடித்தாலோ அல்லது கட்டி வைத்தாலோ அரசரை எதிர்ப்பதற்கு சமம். அப்படி உலா சென்ற சகரரின் குதிரை காணாமல் போயிற்று. இதைத் தேடி சகரரின் 60,000 புதல்வர்களும் சென்றார்கள்.

ஒரு மலைப்பாங்கான இடத்தை அவர்கள் அடைந்தார்கள். அங்கே ஒரு குகை வாயிலின் முன் ஒரு முனிவர் தவம் செய்துகொண்டிருந்தார். அவர் பெயர் கபிலர். அந்தக் குகையை நெருங்கியபோது அங்கே இருந்த பச்சைப் புல்வெளிகளில் அவர்கள் தந்தை அனுப்பிய அசுவமேத யாகக் குதிரை மேய்ந்துகொண்டிருந்தது. முனிவர்தான் அக்குதிரையைப் பிடித்து வைத்துக் கொண்டார் என நினைத்து அவரிடம் வீண் சண்டைக்குப் போனார்கள் சகரரின் புத்திரர்கள். கோபமுற்ற முனிவர் பிடி சாபம் அளித்து அனைவரையும் பிடி சாம்பலாக்கினார்.

விபரம் தெரிந்து வருந்திய மன்னன் சகரர் தெய்வபதம் ஏக அவருக்கும் கேசினிக்கும் பிறந்த மகன் திலீபன் அரசு பதவிக்கு வந்தார். அவருக்குப் பின் அரசாட்சிக்கு வந்த திலீபனின் மகன் பகீரதன் மிகத் திறமையாக நாட்டை ஆண்டு வந்தார்.  

ரு சமயம் வசிஷ்டர் அயோத்திக்கு வருகை புரிந்தார். அவர்மூலம் தன் முன்னோர்கள் கபில முனிவரால் சாம்பலான கதை அறிந்தார் பகீரதன். அவர்கள் பிரம்மபதம் அடையவேண்டி பிரம்மனைக் குறித்துப் பத்தாயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். பகீரதனின் கடுந்தவத்துக்கு மகிழ்ந்த பிரம்மன் பகீரதன் முன் தோன்றினார்.

“ என்ன வரம் வேண்டும் பகீரதா “ என்று அவர் கருணையோடு வினவினர்.

“ என் முன்னோர்கள் நற்கதி அடையவேண்டும். அதற்கு அருள் புரிக ஸ்வாமி “ என்று வேண்டினார் பகீரதன்.

“தேவலோக நதியான கங்கையின் தீர்த்தம் பட்டால் உன் முன்னோர்கள் சாபவிமோசனம் அடைவார்கள். இதுதான் ஒரேவழி “ என்று கூறி மறைந்தார் பிரம்மா.

கங்கையை வேண்டி தவமியற்றத் தொடங்கினான் பகீரதன். அவனுடைய கொடுந்தவத்தில் மனமிரங்கிய கங்கையும் பூமி இறங்கச் சித்தமானாள். ஆனால் அவள் வரும் வேகம் அதிகமாக இருக்குமென்பதால் பூலோகம் தாங்காது என்றுரைத்து சிவனார் தன் சிரசில் அவளைத் தாங்கினால் இறங்குவதாக உறுதி அளிக்கிறாள்.

அடுத்து மூன்றாவதாக சிவனின் அனுமதி வேண்டித் தவமிருக்கிறான் பகீரதன். விடாக்கண்டன் கொடாக்கண்டன் என்பார்களே அவன் நீலகண்டனை வேண்டித் தவம் செய்ய மனம் கனிந்த சிவன் கங்கையைத் தலையில் தாங்குவதாக ஒப்புக் கொள்கிறார்.

அதோ ஆர்ப்பரிக்கும் வேகத்துடன் ஆகாயத்திலிருந்து சண்டமாருதம்போல் வேகமாக ஆர்ப்பாட்டமாக வருகிறாள் கங்கை. ஆனால் இதென்ன. சிவனின் ஜடாமுடியில் இறங்கியவுடன் அங்கேயே தங்கி சுற்றிச் சுற்றி வருகிறாளே. பூமிக்கு வரவே இல்லையே. மனம் வருந்துகிறான் பகீரதன்.

ஆணவமாகக் கீழிறங்கிய கங்கையின் வேகம் கண்டு சிவன்தான் அவளைத் தன் ஜடாமுடிகொண்டு கட்டி அங்கேயே சுற்றிவரும்படி செய்தார். ஆனால் பகீரதன் நான்காவது முறையாகவும் தவம் செய்ய ஆரம்பித்தான். சிவனை நோக்கிக் கடுந்தவம். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே. கங்கை வந்தும் தன் முன்னோர் உய்யவில்லையே என்ற ஏக்கம் பிடித்தாட்ட அவன் சிவனின் மனம் உருகும்வரை தவம் செய்துகொண்டிருந்தான்.

மனம் இறங்கிய காலகாலர் தன் பக்தன் பகீரதனுக்காக பூமியில் பகீரதனது முன்னோர்களின் அஸ்தி கரையுமட்டும் கங்கை இறங்கி ஓட அனுமதித்தார். அதோ பாய்ந்து வருகிறது பெருவெள்ளம். சுழித்துக் கொண்டோடும் அந்த வெள்ளத்தின் ஈரம் பட்டு சகரபுத்திரர்களின் அஸ்தி புனிதம் பெறுகிறது. அனைவரும் மோட்சம் ஏகுகிறார்கள்.

விடாமுயற்சியுடன் தவம் செய்து தான் நினைத்ததை எய்திய பகீரத மன்னன் போற்றுதலுக்குரியவன். அவனைப் போல நாமும் நம் குறிக்கொள்களுக்காக விடாமுயற்சியுடன் பாடுபட்டு உழைப்போமாக.

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 20. 7. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்.
டிஸ்கி :- வாரந்தோறும் வெளியாகும் இதிகாச புராணக்கதைகள் ஒவ்வொன்றும் சிறந்த நீதியைக் கூறுகிறது. மிக்க மகிழ்ச்சி என்று அரும்புகள் கடிதத்தில் குறிப்பிட்ட வாழைப்பந்தல் வாசகர் எ. கருணாகரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.  

3 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  2. அருமை அக்கா ,உங்கள் இலக்கிய பயணம் மேலும் சிறக்க வாழ்த்துகள்.!
    இறையாசி என்றும் உங்களுக்குண்டு..!

    பதிலளிநீக்கு
  3. நன்றி அஜய்.

    நன்றி ஜெயக்குமார் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...