எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

தினமணி சிவசங்கரி விருது விழா.

தினமணி சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கு (எனக்கு  ஆறுதல் பரிசு பெற்றமைக்காக) சென்னை மியூசிக் அகாடமியில் நீதிபதி திரு. வெ ராமசுப்ரமண்யன் அவர்கள் பரிசு வழங்கினார்கள்.

நமது கவிதைத் தோழி கோதை -- ஆல் இந்தியா ரேடியோவில் பணிபுரியும் ஜோதி லெக்ஷ்மி  - இந்நிகழ்வை அழகாகத் தொகுத்து வழங்கினார்.


இப்போட்டிக்காக வந்த 1000 சொச்சம் சிறுகதைகளையும் தினமணிக்கதிரின் எடிட்டர் பாவை சந்திரன் படித்து அதன் பின் தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ளார். அசரவைத்த விஷயம் இது !

தினமணி ஆசிரியர் திரு வைத்யநாதன் உடல்நலக் குறைவால் ஆஸ்பத்ரியில் அனுமதிக்கப்பட்ட தனது தாயும் இக்கதைகளைக் கேட்டு நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்ததாகச் சொன்னார்.

சிவசங்கரி தான் பெற்றது போல் மற்றவர்க்கும் சிறப்பளிக்க எண்ணி இவ்விருதை ஏற்பாடு செய்தது நெகிழத்தக்கது. தனது ஐம்பதாவது வயதில் பல்வேறு மொழி சார்ந்த 17 சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர்களைப் பேட்டி எடுத்து ஆவணப்படுத்தியதாக திரு மாலன் பகிர்ந்தார். மேலும் அறுபதாவது வயதில் அறுபது எழுத்தாளர்களின் படைப்புகளைத் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டு வந்ததாகவும், இப்போது எழுபத்தி ஐந்தாவது வயதில் ஒரு லட்சம் பரிசு அறிவித்துப் புதிய எழுத்தாளர்களை இனம் கண்டு இலக்கிய உலகுக்கு அளித்தது குறித்தும் பாராட்டினார்.

பல்வேறு கதைகள் குறித்தும் திரு. மாலன் திறம்பட நயம்பட உரைத்தார். தலித் எழுத்துக்களுக்காக தினமணியில் அவர் இருந்தபோது ஒரு தனி இதழே கொண்டு வந்ததாகக் கூறினார்.

எழுத்தாளர்திரு. சா. கந்தசாமி பேசும்போது பத்ரிக்கைகளுக்கு ஏற்றாற்போல எழுதவேண்டி இருப்பதை கோடிட்டுக் காட்டினார். அழிந்துவரும் மொழிகள் குறித்தான அவரது கவலை சிந்தித்தற்குரியது. இது போல் போட்டிகள் அழிவிலிருந்து  அம்மொழியை மீட்டு  உயிர்ப்பிப்பதாகத் தோன்றுகிறது.

திருமதி சிவசங்கரி பேசும்போது இப்போட்டியைத் தொடர்ந்து வருடா வருடம் நடத்த எண்ணமுள்ளது என்றும் மேலும் தினமணியின் துணையுடன் நாவல் போட்டி ஒன்றும் அறிவிக்க உள்ளதாகச் சொன்னார். வாழையடி வாழையாக தன்னை வளர்த்த இலக்கிய உலகுக்கு இன்னும் பல கன்றுகளைப் புதுப்பித்த பெருமையும் புகழும் இவருக்கு நிச்சயம் உண்டு.

இவர் இன்னும் நூறாண்டுகள் கண்டு இம்மாதிரிப் பல சேவைகள் புரிய வேண்டும் என்பதே மாலனின் வேண்டுகோளாக இருந்தது. பெருமைக்காக எழுதாமல் மனநிறைவைத்தரும் விஷயத்தை எழுதினாலே அது புகழ்பெறும் எனவும் கூறினார்.

நீதிபதி அவர்கள் பேசும்போது கதைகள் படைக்கும் முறை புதுமையாக அக்காலத்திலேயே இருந்தது குறித்து விவரித்தார்.  கதைக்குள் கதை பற்றிய புதுமை பற்றியும், மேலும் அக்காலத்தில் ஒரு வழக்கே கதையில் ஒரு பதிவாக ஆவணமாக ஆனது குறித்தும் கூறினார். இவரது பேச்சு மிகச் செறிவாக இருந்தது. தமிழ் இலக்கிய உலகின் முக்கிய ஆளுமைகளைத் தொட்டு லேசாக விவரித்துச் சென்றார். பாரதியில் தொடங்கி  புதுமைப்பித்தனிலிருந்து சிவசங்கரி வரை அவர் விவரித்தது சுவாரசியம்.

விற்பனைப் பிரிவின் முதுநிலை மேலாளர் திருமதி லெக்ஷ்மி மேனன் நன்றியுரை நல்கினார். அழகான தமிழும், ஆங்கிலமும் கலந்த மணிப்பிரவாள மொழிநடையில் அவர் மிழற்றியது தேனமுது.

நண்பர்கள் சரவண கார்த்திகேயன், ஐஷ்வர்யர்ன், ஆதலையூர் சூரியகுமார், ஆகியோரும் எஸ்ஸார்சி, அழகிய சிங்கர் ஆகியோரும் வந்திருந்தார்கள். நமது மண்வாசத்தில் எழுதி வரும் திரு. ஜெயபாஸ்கரன் அவர்களையும் சந்தித்தேன்.

இந்தக் காலக் கட்டத்திலும்  தரமான இலக்கிய வாசிப்பாளர்கள் பெருகி வருவதை ஓரளவு உணர்ந்திருக்கிறேன்.  பத்ரிக்கைகளை வெற்றிகரமாக வெளிக்கொணர்வதே சவாலாக இருக்கும் பட்சத்தில் இம்மாதிரி இலக்கிய முயற்சிகளுக்குத்துணை நிற்கும் தினமணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மொத்தத்தில் மனநிறைவளித்த விருது.எழுத்தில் இன்னும் அதிக உயரங்களை எட்டவேண்டும் எனத் தோன்றவைத்தது. அன்பும் நன்றியும் தினமணி குழுமத்துக்கும் எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவர்களுக்கும். 

7 கருத்துகள்:

  1. சிவசங்கரி அவர்களுக்கும் தினமணிக்கும் பாராட்டுகள்.பரிசு பெற்ற உங்களுக்கு நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  3. பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. நன்றி உமா

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி ப்ரியசகி அம்மு

    நன்றி முத்துசாமி சகோ

    நன்றி ஆரூர் பாஸ்கர் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துகள் மா

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...