எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 20 பிப்ரவரி, 2017

தேர்வு நேர கண் பாதுகாப்பு ஆலோசனை குறிப்புகள்.

தேர்வு நேர கண் பாதுகாப்பு ஆலோசனை குறிப்புகள்.

- அ போ இருங்கோவேள்,
மேலாளர் - பயனாளிகள் கல்வி மற்றும் ஆலோசனை,
சங்கர நேத்ராலயா, சென்னை 600 006.
இ-மெயில்: irungovel@gmail.com,

Inline image 1

து மாணவர்களுக்கு தேர்வு நேரம்.

பலரும் இரவும் பகலும் படித்துக் கொண்டே இருப்பீர்கள்.

பொதுவாக நாம் அனைவருமே நமது நடைமுறை வாழ்க்கைக்கு தேவையான 75 முதல் 80% செய்திகளை நமது கண்கள் மூலமாகவே தெரிந்து கொள்கிறோம். மேலும் கற்றல் என்னும் தொடர் நிகழ்வை 80% கண்கள் மூலமாகவே செயல்படுத்துகிறோம்.  

நமது தேர்வு வெற்றியியில் நமது கண்களுக்கு மிக முக்கியமான பங்கு இருக்கின்றது. எனவே உங்களுக்கு தேர்வுக்கால கண் பராமரிப்பு குறிப்புகளை கவனமாக கையாளுங்கள்.

1. முகத்தினை குறிப்பாக கண்களை அடிக்கடி குளிர்ந்த நல்ல நீரினால் கழுவுவது நல்லது.

2. தூக்கம் வரும் போது, தூக்கத்தினை தவிர்ப்பதற்காக கண்களை ஈரமாக்கிக்கொண்டு வலுக்கட்டாயமாக படிப்பது தவறு. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் சிறிது நேரம் கண்களை மூடி ஓய்வு எடுத்துக் கொள்வது அல்லது சிறிது நேரம் தூங்கி எழுந்திருப்பது நல்லது.

3. தூக்கத்தை தவிர்க்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி காஃபி மற்றும் டீ குடிப்பதும் தவறு. அது அதிக நேரம் உங்களை கழிவறையில் செலவழிக்க வைத்து விடலாம். குளுக்கோஸ் அல்லது ஏதேனும் பழ ரசங்கள் சாப்பிடுவது உங்களை மேலும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

4. படிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் ஓய்வு எடுக்கும் போது, ரிலாக்ஸ் செய்வதாக நினைத்துக் கொண்டு தொலைக்காட்சி முன்பு அமருவது, கண்களை மேலும் களைப்படையச் செய்யும். ஒரு குட்டி வாக்கிங் செல்லலாம். அல்லது கண்களை மூடி தியானம் செய்யலாம். தியானம் தெரியாது என்றால் பிடித்த சுலோகங்களை மனதிற்குள் சொல்லலாம், அதெல்லாம் தெரியாது என்றால் உங்களுக்கு பிடித்த பாடலை மனதிற்குள்ளே கண்களை மூடிக்கொண்டு உங்களுக்குள் பாடிக்கொண்டு ஓய்வு எடுக்கலாம்.
5. இரவு முழுவதும் விழித்திருந்து படிப்பது ஒரு மாபெரும் தவறு. அதிகாலையில்  எழுந்து படிப்பது மட்டுமே சரியான ஒன்று.

6. படித்தவற்றை கண்களை மூடிக்கொண்டு அசை போடுவது, கண்களுக்கு மட்டுமல்ல,  கருத்துக்கும் அதாவது நினைவு படுத்திக்கொள்வதற்கும் நல்லது.

7. பலர் நடந்து கொண்டே படிப்பார்கள். அது தவறு.

8. ஓடும் பேருந்தில் மற்றும் ரயிலில் படித்துக்கொண்டே செல்வதும் தவறு. இது பார்வை என்னும் புலன் நடைபெறும் முறையில் சிரமத்தினை ஏற்படுத்தும். அதாவது,*நமது கண்களுக்கும் படிக்கும் புத்தகத்திற்கும் உள்ள தூரத்தில்/இடைவெளியில் அடிக்கடி மாற்றம் ஏற்படும், எனவே ஒளிக்கதிர் செல்லும் பாதையில் (Optic Path) பேருந்து அல்லது ரயில் ஓட்டத்திற்கு ஏற்ப, அசைவுகளுக்கு ஏற்ப சிரமங்கள் ஏற்படும் எனவே கண்கள் களைப்படையக்கூடும். அது போன்ற நேரங்களில் படித்தவற்றை நினைவில் அசை போடுவது நல்ல செயலாக இருக்க முடியும்.

9. அப்பா அல்லது அம்மாவுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, படித்துக்கொண்டே செல்வது தவறு மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட.

10. பல மாணவர்கள் பாடங்களை கம்ப்யூட்டரில் அல்லது மொபைல் ஃபோனில் படிப்பார்கள். தேர்வுக்காலத்தில் அதுவும் தவறே. காரணம் கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் எனப்படும் பிரச்சினைக்கு இது வித்திடுகின்றது. சாஃப்ட் காப்பியாக இருக்கும் பாடங்களை படித்து விட்டு, ஒரு நோட்டில் குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு, அந்த குறிப்புகளை தேர்வுக்காலத்தில் படித்து தேர்வுக்கு தயாராவதுதான் புத்திசாலித்தனம். அப்படி கண்டிப்பாக படித்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் 20:20:20 ஃபார்முலாவை பயன்படுத்துவது சிறந்தது. அதாவது ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் 20 நொடிகள் இடைவெளி கொடுத்து, 20 அடி தூரத்தில் உள்ள பொருட்களை பார்ப்பதும், 20 முறைகளை கண்களை மூடி திறப்பதும் கண்களை கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் பாதிப்பிலிருந்து தடுக்கும்.

11. தேர்வு நெருங்கும் நேரத்தில் கீழ்க்கண்ட அறிகுறிகள் ஏதேனும் ஏற்பட்டால், அல்லது பெற்றோர்கள் தேர்வுக்கு தயாராகும் குழந்தைகளிடம் கவனித்தால் உடனடியாக கண் மருத்துவரின் ஆலோசனைக்கு அழைத்துச் செல்லவும். இவை பார்வை சார்ந்த கற்றலில் குறைபாட்டிற்கான முக்கியமான அறிகுறிகள் (Symptoms for Vision Related Learning Disorder)ஆகும்.

* எவ்வளவு தூரத்திலிருந்து பொருள்களை பார்த்தாலும் கலங்கலான பார்வையை உணர்வது.

* பொருட்கள் இரண்டாக தெரிவது.

* கண்கள் குறுக்குவாட்டில் அமைந்திருப்பது அல்லது ஒருசாய்ந்து இருப்பது போல அமைந்திருப்பது.

* குறித்த நேரத்தில் கொடுக்கப்பட்ட பகுதியை எழுதாமல் தாமதிப்பது.

* படித்தவற்றை மீண்டும் நினைவுபடுத்தி பார்ப்பதில் சிரமம்.

* சில வார்த்தைகளை விட்டு விடுவது அல்லது மீண்டும் மீண்டும் எழுதுவது.

* மேலும் சில நேரங்களில் ஒரே மாதிரியான வார்த்தைகளால் குழப்பம் ஏற்படுவது.

* உருவங்களையும், வடிவங்களையும், வரைபடங்களையும் நினைவுபடுத்திக்  கொள்வதில் சிரமம்.

* வயதிற்கேற்ற முதிர்ச்சி இல்லாமல் செயல்படுவது.

* படிக்கும் போதும் எழுதும் போதும் தலைவலி, வாந்தி மற்றும் மயக்கம் வருவது.

* கண்கள் உறுத்துதல் அல்லது எரிவது போன்று உணருதல்.

* நிறங்களை வேறுபடுத்தி காண்பிப்பதில் சிரமம்.


- இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கண் மருத்துவரின் ஆலோசனையை கேட்டு அதன் படி செயல்பட வேண்டும்.

12. தேர்வுக்காலத்தில் பட்டினி கிடப்பது தவறு. அதிகமாக சாப்பிடுவதும் தவறு. குப்பை உணவுகள் எனப்படும் ஜங்க் ஃபுட் களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அவை சோம்பேறித்தனத்தினை அதிகப்படுத்தும்.அது கண்ணுக்கும் கெடுதி.

13. உணவுப்பழக்கம் :

தேர்வுக்காலங்களில் கண் நலத்துக்கு சரியான உணவுப்பழக்கம் மிக மிக அவசியம் .

* வைட்டமின் ஏ: ஜெராஃப்தால்மியா எனப்படும் குழந்தைகளின் கண்கள் உலர்ந்து போகச் செய்யும் பிரச்னைக்கும் மாலைக் கண் நோய்க்கும் முக்கியமான காரணம் வைட்டமின் ஏ சத்துக்குறைபாடுதான். வைட்டமின் ஏ - பால், கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள்,பப்பாளி, முட்டை மற்றும் கேரட் போன்றவற்றில் தேவையான அளவு இருக்கிறது.

* வைட்டமின் பி : பார்வை நரம்பின் செயல் பாட்டிற்க்கு காரணமாக இருப்பது வைட்டமின் பி.வைட்டமின் பி - அரிசி, கோதுமை, முளை கட்டிய தானியங்கள், பீன்ஸ் மற்றும் முட்டை போன்றவற்றில் தேவையான அளவு இருக்கிறது.

* வைட்டமின் சி:  நமது கண்ணில் உள்ள ரத்தக்குழாய்களின் ஆரோக்கியத்திற்க்கு வைட்டமின் சி மிகவும் அவசியம். வைட்டமின் சி ஆரஞ்சு, நெல்லி, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, கொய்யா, எலுமிச்சை மற்றும் தக்காளி போன்றவற்றில் தேவையான அளவு இருக்கிறது.தேர்வு நேரத்தில் கண்ட இடத்தில் சாப்பிட்டு, ஃபுட் பாய்சனிங் ஆகிவிடாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

13. நீங்கள் கண்ணாடி அணிகின்றீர்களா?

அப்படியானால் கண்ணாடியை சுத்தமாகவும், பத்திரமாகவும் வைத்திருங்கள். உங்கள் கண்ணாடி விளையாட்டுப் பொருள் அல்ல. அதனை மற்ற நண்பர்கள் அணிந்து பார்ப்பதற்கு கொடுப்பது தவறு. மேலும் கண்ணாடி உடைந்து போவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே நண்பர்கள் அணிவதற்கு கொடுப்பதை தவிர்க்கவும்.

14. நீங்கள் காண்டாக்ட் லென்ஸ் அணிகின்றீர்களா?

ஆம் என்றால், அதனையும் பத்திரமாக பாதுகாக்கவும். அதனை சுத்தம் செய்வதற்கென்று கொடுக்கப்பட்டிருக்கும் திரவத்தில் அதனை சுத்தம் செய்து பத்திரமாக அணியவும். தேர்வு நேரத்தில் கண்ணாடியும், காண்டாக்ட் லென்ஸும் இல்லையென்றால் மிகவும் சிரமம். தேவை எச்சரிக்கை.

15. கண்களுக்கான முதல் உதவி ஏற்பாடுகள் :

அ) தேர்வுக்கு தயாராகும் நேரத்தில் கண்களில் தூசி போன்ற ஏதேனும் விழுந்துவிட்டால், அவற்றை எடுப்பதற்காக கண்களைக்  கசக்காதீர்கள். கண்களை லேசாக திறந்து மூடினாலே கண்ணீர் பெருக்கெடுத்து அவற்றை தானே  வெளியேற்றிவிடும். உறுத்தல் அதிகமாக இருக்குமேயானால் சுத்தமான தண்ணீரினால் கண்களை சுத்தம் செய்வதன் மூலம் தூசுகளை அகற்றிவிடலாம்.


ஆ) கெமிஸ்ட்ரி லேபில் பரிசோதனைகளின் போது கண்களில் இரசாயன பொருள்களால் காயம் ஏற்பட்டால்,கண்களில் ஏதேனும் ரசாயனப் பொருட்கள் அல்லது ஆசிட் தெறித்துவிட்டால், கண்ணில் சுத்தமான தண்ணீரினால் கண்களின் எரிச்சல் நிற்கும் வரை அலம்ப வேண்டும். பின் உடனடியாக கண் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

இ) நெருப்புக் காயம் ஏற்பட்டால்:

மின்சாரம் இல்லை என்று மெழுகுவர்த்தி மற்றும் மண் எண்ணெய் விளக்கில் படிக்கும் போது ஏதேனும் அசந்தர்ப்பமாக முகத்தில் நெருப்புக் காயம் ஏற்பட்டு கண்ணிலும் காயம் ஏற்பட்டுவிட்டால், முகத்தையும் கண்ணையும் தண்ணீர் விட்டு கழுவவே கூடாது. சுத்தமான துணியைக் கொண்டு முகத்தை லேசாக மூடி உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். மேலும் தீக்காயம் ஏதேனும் கண்ணில் பட்டுவிட்டால் மஞ்சள் தூள், பர்னால், பேனா மை, ஜெர்ஷியன் வைலட், பக்கத்துவீட்டார் சொல்லும் ஆயின்ட்மெண்ட் ஆகியவற்றைப் போடக்கூடாது. இதனால் எந்த அளவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது என்பதை சரியாகத் தெரிந்து கொள்ளமுடியாமல் போய்விடும், மேலும் அவற்றைச் சுத்தம் செய்வதிலும் சிரமம் ஏற்பபடும்.

ஈ) தொழிற்கல்வி மாணவர்களுக்கு - தொழிற்சாலை கண் விபத்துக்கள்: தொழிற்கல்வி பரிசோதனை வகுப்பின் போது ஏதேனும் துரும்புகள் விழுந்துவிட்டால். அவற்றை நாமே எடுக்க முயற்சி செய்யக்கூடாது. கண் மற்றும் கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதிப்பு அதிகமாவதற்க்கு வாய்ப்பு உண்டு. ஈரமான துணி ஒன்றினை கண்ணை அழுத்தாதவாறு வைத்து மூடிக்கொண்டு உடனடியாக கண் மருத்துவரைச் சந்திக்க வேண்டும். அப்போது கண்ணில் விழுந்த பொருளின் மாதிரி இருந்தால் அதனையும் எடுத்துச் செல்ல வேண்டும். கண்ணில் சுற்றுப்பகுதி மரத்துப்போவதற்கு மருந்து போட்டுவிட்டு கண்ணில் விழுந்த பொருளை மிகவும் இலாகவகமாக கண் மருத்துவர் எடுத்துவிடுவார்.

16. நீங்கள் நீண்ட தூரம் பயணம் செய்பவராக இருந்தால் உங்களுக்கு அவசியம் தேவை புற ஊதாக்கதிர்களிடமிருந்து பாதுகாப்பு:தேர்வு வரும் நேரம் கோடை காலம் ஆரம்பித்து விடும். நீங்கள் நீண்ட தூரம் பயணம் செய்பவராக இருந்தால் குறிப்பாக பகல் நேரங்களில் வாகனம் ஓட்டுபவராகவும் இருந்தால் புற ஊதாக்கதிர்களைத் தடுக்கக்கூடிய குளிர் கண்ணாடியை அணிந்து கொள்வது நல்லது. இதன் மூலம் கண் புரை, நீரிழிவு விழித்திரை நோய், பார்வைக்குறைபாடு எனப்படும் ரெஃப்ராக்ட்டிவ் எரர் போன்றவற்றை தாமதிக்கலாம். முக்கியமான விஷயம், ஒரு கண் மருத்துவரிடம் அல்லது கண்ணியலாளரிடம் கண் பரிசோதனை செய்து கொண்டபின் அவர் பரிந்துரைக்கும் புற ஊதாக்கதிர்களைத்தடுக்கக்கூடிய கண்ணாடியை அணிந்து கொள்வது நல்லது.மேலும் புற ஊதாக்கதிர் தடுப்பு கூலிங் கண்ணாடி, உங்கள் கண்களை வெயிலின் தாக்கத்திலிருந்து காத்து விரைவில் களைப்படையச் செய்யாமலிர்க்கும்.

வசதி இல்லாத மாணவக் கண்மணிகள் கவலைப்பட வேண்டாம், வெள்ளை நிற தொப்பி, உங்கள் முன் நெற்றியை மறைக்கும்விதமாக அணிந்து கொள்ளுங்கள்.

17. தாகத்திற்கு பாட்டில் ட்ரிங்க்ஸ் வேண்டாம்..,வீட்டிலிருந்தே ஒரு பாட்டிலில் மோர் எடுத்துச் செல்லுங்கள். உடல் சூட்டினை தடுப்பதோடு, கண்ணுக்கும் இதமாக இருக்கும்.எலுமிச்சை சாறு, சாத்துக்குடி சாறு, நெல்லிக்கனி, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்கள் அவற்றின் சாறு கண்ணுக்கும் குளிர்ச்சியை அளிக்கும்.

18. தண்ணீர் நிறைய குடியுங்கள். நீண்ட நேரம் குளிரூட்டப்பட்ட அறையில் (ஏ/சி அறை) இருப்பதும், கண்களுக்கு நல்லதில்லை.

19. தேர்வுக்கு முதல் நாள் இரவு நீண்ட நேரம் விழித்திருந்து படிப்பதை தவிர்ப்பது நல்லது. தேர்வு ஹாலில் கண்கள் ஓய்வைத்தேடினால், முதலுக்கே ஆபத்து. எனவே தேர்வுக்கு முதல் நாள் கண்களுக்கு தேவை நல்ல ஓய்வு.

20. அருகிலிருந்து செயல்படவேண்டிய வேலைகளுக்காக,உங்கள் கண்கள் அதிக நேரம் பயன்படுகிறது. குறிப்பாக தேர்வு எழுதும் போது சுமார், 3 மணி அருகிலிருந்து செய்யும் வேலையான தேர்வு எழுதுவதை கண்கள் தடையின்றி செய்ய வேண்டும், எனவே தேவையற்ற வேலைகளான, தொலைக்காட்சி, மொபைல் ஃபோன், சமூக ஊடகங்கள் போன்றவற்றிலிருந்து விலகியிருப்பது ஆரோக்கியமானது.

22. நீங்கள் வாகனம் ஓட்டுபவராக இருந்தால், வேகம் விவேகமில்லை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். கண்களில் தூசுகள் மற்றும் சிறு பூச்சிகள் விழுந்து பிரச்சினைகளை ஏற்படுத்தாமல் தவிர்ப்பதற்க்காக கூலிங் கிளாஸ், மற்றும் ஹெல்மெட் போன்றவற்றை அணிந்து வாகனம் ஓட்டுவது மிகவும் சிறந்தது.

23. தேர்வு மையத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே சென்று விடுவதும், கண்களை மூடி மௌனமாக படித்தவற்றை அசை போடுவதும் சிறந்த பயிற்சி.

24. நீங்கள் ஏதேனும் உடல் நல பிரச்சினைகளுக்காக, மருந்து மாத்திரைகள் சாப்பிடுபவராக இருந்தால், உங்கள் மருத்துவரிடம் தேர்வு இருப்பதையும், தேர்வு நேரத்தையும் குறிப்பிட்டு அவரது ஆலோசனையை பெற்று அந்த மருந்து மாத்திரைகளை சாப்பிடுவது, தேர்வு மையத்தில் உங்களை களைப்பாக, மயக்கமாக இருக்கும் நிலையிலிருந்து காப்பாற்றும்.

25. கண்மணிகளே..,ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்காக காத்திருக்கிறது. எனவே தேர்வு நாள் வரை காத்திராமல், தேர்வுக்கு ஒருவாரம் முன்பே தயாராகி விடுங்கள்!

வெற்றி உங்களுக்கே..,வாழ்த்துக்கள்.

- அ போ இருங்கோவேள்,
மருத்துவ சமூகவியலாளர்
மேலாளர் - பயனாளிகள் கல்வி மற்றும் ஆலோசனை,
சங்கர நேத்ராலயா, சென்னை 600 006.
இ-மெயில்: irungovel@gmail.com,


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...