வெள்ளி, 23 செப்டம்பர், 2016

சிறுவர் நூல்கள் – 9. பகுதி – 2. பாரதி பதிப்பகத்தின் நகைச்சுவை நூல்கள்.



சிறுவர் நூல்கள் – 9. பகுதி – 2. பாரதி பதிப்பகத்தின் நகைச்சுவை நூல்கள்.


4. பீர்பாலின் நகைச்சுவைக் கதைகள் :-

அதிகார வர்க்கத்தின் அடக்கு முறையை தனது சாதுர்யப் போக்கால் நாசுக்காகச் சுட்டிக்காட்டி, எளிய மக்களின் துயருக்கு இரங்கி, மாபெரும் சக்கரவர்த்தியும் உணர்ந்து செயல்படும் வண்ணம் அமைந்தவை பீர்பால் கதைகள்.

அக்பர் பாதுஷா, அவரின் அமைச்சர் பீர்பால் இவர்களை நாம் மறக்கவே முடியாது. மகேஷ்தாஸ் என்பது இவரது இயற்பெயர். இவரைப் பற்றிய கதைகள் எல்லாம் சிரிப்பூட்டும் சிந்தனைக் கதைகள். இதை மொழி பெயர்த்தவர் திரு. ஏ. எஸ். வழித்துணை ராமன்.

சிரிப்பாகத் தோன்றும் அதே கணம் சீரிய சிந்தனையையும் மனிதர்களின் அற்ப வழக்கங்களையும் எண்ணங்களையும் கசடுகளையும் சமூக , அரசியல் நடைமுறைகளையும் சிறிய எள்ளலோடு சொல்லும் கதைகள். விகடகவியாக இருந்தவர் அமைச்சராக உயர்ந்து ராஜா பீர்பால் ஆனார்.


கிட்டத்தட்ட 50 கதைகளில் இந்தக் கதைகள் ரொம்பப் பிடித்தன. அந்தரத்தில் அரண்மனை, காக்கைகளின் எண்ணிக்கை, ஏமாந்த சோணகிரிகளின் பட்டியல், உழைப்பின் உயர்வு, கண்ணிருந்தும் குருடர், ஒளியும் நிழலும், குளம் பொரித்த கோழி முட்டை, காவலரும் கம்பளியும், அன்ன சத்திரமா, அரண்மனையா, காளை மாட்டுப் பால், பூவில் சிறந்த பூ ஆகியன.

இவற்றில் ஆறுகளுக்கு அழைப்பை விரும்பி ரசித்துப் படித்தேன். அக்பரைப் பிரிந்து மனவருத்தம் காரணமாகக் காணாமல் போன பீர்பலைக் கண்டுபிடிக்க தங்கள் நாட்டுக் கடலின் திருமணத்துக்காக அக்பர் ஆறுகளை அனுப்பும்படி அக்கம் பக்க நாட்டினருக்கு அழைப்பு அனுப்ப ஒரு நாட்டிலிருந்து மட்டும் பதில் வருகிறது. /// கடலின் திருமணச் செய்தி கேட்டுக் களிப்புற்றோம். ஆயினும் எங்கள் நாட்டு ஆறுகளை வரவேற்க உங்கள் நாட்டுக் கிணறுகள் தகுந்த முறையில் வந்து அரச மரியாதையுடன் அழைத்துச் செல்லுமாறு வேண்டுகிறோம்///

 நூல் :- பீர்பாலின் நகைச்சுவைக் கதைகள்
ஆசிரியர்:- ஏ. எஸ். வழித்துணைராமன்
பதிப்பகம்:- பாரதி பதிப்பகம்
விலை :- 98 இல் 5.75/- ரூ

5. இராயர் அப்பாஜியின் நகைச்சுவைக் கதைகள்

மதியூகமே வெல்லும் என்பதைச் சொன்ன கதைகள். இராயர் அப்பாஜியின் சமயோஜித செயல்பாட்டால் பல்வேறு அரசாங்கப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுகிறார் கிருஷ்ண தேவராயர்., அது அண்டை நாடாக இருந்தாலும் சரி டில்லி பாதுஷாவாக இருந்தாலும் சரி

ஒரு குறுநில மன்னரின் மந்திரியாயிருந்து தனது மதியூக செயல்பாட்டால் மன்னரைத் தப்பிக்க வைக்க அதைக் கண்டு கிருஷ்ணதேவராயர் இராயர் அப்பாஜியைத் தனது மந்திரியாக்கிக் கொள்கிறார். மக்கள் சொற்சிலம்பம் ஆடும் இடங்களில் அவற்றுக்கான உண்மைப் பொருளை இராயர் அப்பாஜி கண்டுபிடித்துச் சொல்லும் இடங்கள் அருமை.

இதில் நான் ரசித்த கதைகள். காமத்திற்கு மூக்கும் இல்லை.,உதைத்த காலுக்கு, அர்த்தமும் அனர்த்தமும், சூழ்நிலைக்கேற்ற சுகம், அர்த்தமுள்ள வேண்டுகோள் , விவேகமுள்ள வெண்கலச் சிலைகள்., அவமானம் யாருக்கு, மனித இயல்பு, படித்த முட்டாள்கள், சிறு துரும்பும், அரசனை மீட்டிய அமைச்சர் என அநேக கதைகள் ரசனையானவை.

சிந்தனையை மிகவும் தூண்டிய அருமையான கதைகள்.

நூல்:- இராயர் அப்பாஜியின் நகைச்சுவைக் கதைகள்
ஆசிரியர் :- ஏ.எஸ். வழித்துணைராமன்
பதிப்பகம் :- பாரதி பதிப்பகம்
விலை :- 89 இல் 4.75/- ரூ

6. தெனாலிராமன் நகைச்சுவைக் கதைகள்

விகடகவிகளின் பங்கு பெரும்பாலும் கோமாளித்தனமாகத் தோன்றினாலும் ஒரு அரசாங்கத்தின் கண்மூடித்தனமான பாமரப் போக்குகளைக் கண்டிப்பதாகவும் மக்கள் நலனை வலியுறுத்துவதாகவும் இருக்கும். தெனாலிராமன் விஷமத்தனமாகச் செய்யும் செயல்கள் அரசின் புரையோடிப்போன சட்ட திட்டங்களைச் சுட்டிக்காட்டுவதாகவும் ஏழை மக்களுக்கு அவை திருப்பிவிடப்படவேண்டிய கலகக் குரலாகவும் ஒலிக்கும்.

கிருஷ்ணதேவராயரின் அரண்மனையின் விகடகவி தெனாலி ராமன். இந்தப் பேரை நாம் மறந்திருக்கவே முடியாது. ஒருவரது பேரைக் கேட்டாலே சிரிப்பு வரும் என்றால் அது இவரது பெயர்தான். மொத்தம் 41 கதைகளைத் தெலுங்கிலிருந்து தமிழுக்கு அருமையாக சரளமாக மொழிபெயர்த்துள்ளார் திரு. ஏ எஸ் வழித்துணை ராமன்.

இதில் விகடகவி, தெனாலிராமனும் பூனையும், ஜாலவித்தைக்காரன், கிடைப்பதில் பாதி, தலை காட்டாதே, மரக்கத்தி, பொல்லாத குதிரை, கூன் நிமிர ஒரு குறுக்கு வழி ,பழிக்குப் பழி, கொட்டாவி, தேக சுகம், முரட்டு மல்லன், திலகாட்ட மகிட பந்தனம், பாபரும் தெனாலிராமனும் ஆகியன சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கதைகள். நம் அனைவரும் முன்பே அறிந்த கதைகளும் கூட J

நூல் :- தெனாலிராமன் நகைச்சுவைக் கதைகள்
ஆசிரியர்:- ஏ. எஸ். வழித்துணைராமன்
பதிப்பகம்:- பாரதி பதிப்பகம்
விலை :- 89 இல் 7.50/-

இவை மூன்றுமே ஏ எஸ் வழித்துணைராமன் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டவை. மிக அற்புதமான சிந்தனையைத் தூண்டும் நகைச்சுவை நூல்கள். சிறார்கள் கட்டாயம் படிக்க வேண்டியவை. ஒவ்வொரு பள்ளி நூலகத்திலும் இருக்க வேண்டியவை.


3 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல தொகுப்பு. தெனாலிராமன் கதைகள், அக்பர் பீர்பால் கதைகள் எனக்கும் பிடிக்கும்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெங்கட் சகோ :) எனக்கும்தான் :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...