புதன், 28 செப்டம்பர், 2016

சிறுவர் நூல்கள் – 9. பகுதி – 3. புத்திக் கூர்மைக்கான நூல்கள்.சிறுவர் நூல்கள் – 9. பகுதி – 3.

இந்தப் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நூல்கள் சிறார்களுக்குப்புத்திக் கூர்மை கொடுக்கும் நூல்கள். 
7. பஞ்ச தந்திரக் கதைகள் :-

பள்ளி ஆசிரியர்கள் எழுதும் சிறுவர் நூல்கள் சிறப்பானவையாக அமைகின்றன. ருக்மணி சேசஷாயி அம்மா அவர்கள் கூட ஒரு ஆசிரியைதான். அல்லும் பகலும் சிறுவர்களின் இயல்புகளையும் அவர்களின் குடும்ப பொருளாதார கஷ்டங்களையும் பக்கம் இருந்து பார்க்கும் வாய்ப்புப் பெற்றவர் என்பதால் அவர்கள் எழுதும் சிறார் கதைகளும் சிறப்பானவையாகவே இருக்கும். அதே போல் நமக்குத் தெரிந்த பஞ்ச தந்திரக் கதைகளையே ஆசிரியர் கூறும்போது யதார்த்த உலகியல் நடைமுறைகளை எதிர்கொள்வது எப்படி என்பது இன்னும் நமக்குத் தெளிவாக விளங்குகிறது.


மொத்தம் பதினான்கு கதைகள். உலகியல் தந்திரங்களைக் கண்டு ஒதுங்கி செல்லவும் அதை எதிர்கொள்ளவும் விலங்குகளின் நடைமுறை வாயிலாகச் சித்தரிக்கும் கதைகள். சிங்கமும் நரியும் ( சமயோசிதம் ) , கொக்கும் நண்டும் (நயவஞ்சகம் அறிதல் ), சிங்கமும் முயலும் ( புத்திக் கூர்மையால் தப்பித்தல் ) , காகமும் நாகமும் ( வஞ்சகத்தை வஞ்சகத்தால் எதிர்கொள்ளுதல் ), அன்னமும் ஆந்தையும் ( கூடா நட்பு கேடாய் முடியும் ), வேடனும் புறாவும் ( கூடி வாழ்ந்தால் கோடி நன்மை ), யானைகளும் எலிகளும் ( எளியோர் நட்பு ). குரங்கும் முதலையும் ( முன்னெச்சரிக்கை – அற்பர்களின் நட்பு ), சிங்கமும் எருதுகளும் ( ஒற்றுமையின்மையால் அழிவு ), ஆமையும் வாத்துகளும் ( தேவையற்ற பேச்சு ) தந்திரமுள்ள நரி ( சுயநலம் ), நான்கு முட்டாள்கள் ( முட்டாள்தனம் ), பாட்டுப் பாடிய கழுதை ( சமயமறியாமல் தற்பெருமை கொள்வது ), மைனாவும் முயலும் ( விரோதிகளிடம் நியாயம் ), நீலநரி ( வேஷம் கலைதல் ) ஆகியன சிறப்பாக சித்தரிக்கப்படுகின்றன. 

இவற்றில் பல நாம் பள்ளிப் பருவத்தில் படித்தவைதாம். திரும்பவும் கிடைத்தால் படித்துப் பாருங்கள்.

நூல் :- பஞ்ச தந்திரக் கதைகள்
ஆசிரியர் :- குழந்தை எழுத்தாளர் இரா. நாராயணசாமி
பதிப்பகம் :- ஓம் சக்தி பதிப்பகம்
விலை :- ரூ 12.50/- ( 91/93 இல் )

8. துரோணர் கதை :-

நூல் :- துரோணர் கதை
ஆசிரியர் :- சுவாமி ( பதிப்பாசிரியர் வி.கரு. இராமநாதன்)
பதிப்பகம் :-ஸ்ரீ இந்து பப்ளிக்கேஷன்ஸ்.
விலை :- ரூ 8.80/- ( 88/95 இல் )

துரோணர் என்றால் நமக்கு ஏகலைவனும் ஞாபகம் வருவான். இதில் துரோணர் ஏன் ஏகலைவனின் விரலைக் கேட்டார் என்பதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. துரோணர் தநுர் வேதத்தில் சிறந்தவர். அஸ்திர சாஸ்திரங்களில் ஒப்பற்ற வீரர். மகாபாரதத்தில் அவர் பிறப்பிலிருந்து இறப்புவரை காணப்படும் செய்திகளை இந்நூலில் தொகுத்து அளித்திருக்கிறார் ஆசிரியர் ஸ்வாமி. இவர் கௌரவர் பாண்டவருக்கு வில்வித்தைகளைச் சிறப்புறக் கற்பித்ததனால் பீஷ்மருக்கு இணையாக ஆசாரியர் என்று புகழப்பட்டவர். பால்யத் தோழன் துருபதனை தன் சீடன் அர்ஜுனன் மூலம் பழி வாங்குவது முதல் அஸ்வத்தாமா இறந்துபட்டான் எனக் கேட்டு மரணமடைவது வரை விவரிக்கப்பட்டுள்ளது. துரோணர் கும்பத்திலிருந்து பிறந்தார் என்பதும் க்ஷத்ரிய சக்தியும் பிராமணப் பொலிவும் ஒருங்கே கொண்டவர் என்பதும் இந்நூலின் மூலம் அறிந்த புதுச் செய்து.

9. முல்லாவின் வேடிக்கைக் கதைகள் :-

முல்லாவின் நாடோடிக் கதைகள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கக் கூடியவை. இவர் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர். அங்கே எஸ்கி ஷஹர் என்ற ஊரில் பிறந்தார். முல்லா என்றால் கல்விமான். நுஸ்ரதீ என இணைத்து முல்லா நஸ்ருத்தீன் என அழைக்கப்பட்டார். பிஜப்பூர் அரசர் அலி ஆதில் ஷாவுடைய அரசவையில் புலவராக இருந்தார். இவருடைய கதைகளில் ஆழ்ந்த ஆன்மீக அறிவு மறைந்திருப்பதாகச் சொல்கின்றார்கள். இவர் சூபி முறையைச் சார்ந்த பேரறிஞர். முதலாளித்துவத்தை விமர்சிப்பவை இவரது கதைகள்.

மிஸ்டர் பீன் என்று தற்போது கார்ட்டூனிலும் சினிமாவிலும் பார்க்கும்போதெல்லாம் எனக்கு முல்லாவின் கதைகள் நினைவுக்கு வரும். அநேக கதைகள் படித்திருக்கிறோம். இதில் 130 கதைகள் உள்ளன.

மக்களையும் மன்னனையும் ஒருங்கே துணிவோடு கிண்டல் செய்வது, பிறரது அறியாமையை ஏகடியம் செய்வது, தன்னைத்தானே எள்ளல் செய்து கொள்வது, என இவரது கதைகளில் சர்காஸ்டிக் தன்மை நிரம்பி இருக்கும். இவரது செயல்கள் முட்டாள்தனமாகத் தோன்றினாலும் அதே செயல்களைத் தொடர்ந்து செய்யும் மனிதர்களுக்கான படிப்பினையாகவும் இருக்கும்.

அறிவுரை கூற வேண்டாம், சூரியனை விட சந்திரனே மேல், விளக்கு கையில் எதற்கு, இலக்கணமும் நீச்சலும், பானை குட்டி போடுமா, தவறு யாருடையது, அழுகையின் காரணம், அரசரிடம் வாதாடலாமா, நிலத்துக்கு மேலும் கீழும், கடிதம் எழுதினால் கால் வலிக்கும், ஞானியால் புகழப்பட்டவர் ஆகியன மிகச் சிறந்த கதைகள். இன்னும் பலவுண்டு.

ஒருகதையில் “ஒருவன் செய்யும் செயலின் பயனை அவனே அனுபவிக்க வேண்டும் என்னும் நம்பிக்கை தவறானது. ஒருவனுடைய செயலின் பய அடுத்தவனைப் பாதிக்கிறது என்பதே மெய்யாகும் “ என்ற வரிகள் சிந்திக்க வைத்தன

நூல்:- முல்லாவின் வேடிக்கைக் கதைகள்
ஆசிரியர் :- முல்லை பி எல் முத்தையா
பதிப்பகம் :- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை:- ரூ 40 /- ( 86/97 இல் )7 கருத்துகள் :

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நன்றி சகோதரியாரே

Dr B Jambulingam சொன்னது…

குழந்தைகளுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே இந்நூல்கள் பயன்படும்.

பரிவை சே.குமார் சொன்னது…

நல்ல பகிர்வு அக்கா...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்ல புத்தகங்களின் பகிர்வு...என் மகனுக்குச் சிறுவயதில் வாங்கிய அனுபவம் நினைவுக்கு வந்தது. இப்போது நானும் கூட வாசிப்பதுண்டு...
கீதா

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி ஜம்பு சார்

நன்றி குமார் சகோ

நன்றி வெங்கட் சகோ

நன்றி துளசி சகோ & கீத்ஸ். :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...