சத்துணவு கல்யாண வைபோகமே !
காட்சி – 1.
[அனந்த ராம விலாஸ் தொடக்கப் பள்ளியின் சத்துணவுக் கூடம்.
திருமதி முனியம்மா சத்துணவுக் கூடத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றாள். முனியம்மாவின்
‘பற்களை விடக் கூரானது நாக்கா அல்லது நாக்கை விடக் கூரானது பற்களா’ என்கின்ற ஆராய்ச்சி
செய்து கொண்டு இருப்பவர் சத்துணவு அமைப்பாளர் ஜான் அமல் கென்னடி ]
ஜான் அமல் கென்னடி : அம்மா, முனியம்மா கொஞ்சம் அந்த இடத்தை
நல்லாப் பெருக்கேன். குழந்தைகள் உக்கார்ந்து சாப்பிடற இடம்.
[ஹூங்காரம் செய்துகொண்டு கையில் விளக்குமாற்றுடன் திருமதி
முனியம்மா தன் திருமுகத்தைக் காட்டியதுதான் தாமதம் ஜான் அமல் கென்னடியின் தாத்தா முதல்
பிறக்கப்போகும் பேரன் வரை அனைவரும் அவளின் திருவாயால் வாழ்த்தப்பட்டார்கள். ]. பிறகு
முனியம்மா : ஏன்யா ! பெருக்குறது கண் தெரியல. இது நொள்ளை
அது நொட்டைங்கிறியே ! உன் ரகசியத்தை அம்பலப்படுத்திடுவேன். நேராய்ப் போய்ச் சொன்னேன்னா
அப்புறம் நீ படும் பாடு. என்னய நீ அதிகாரம் பண்றியா ? உன்னய எப்பிடிப் பார்க்கணுமோ,
எங்க பார்க்கணுமோ, அங்க பார்த்துக்கறேன். அறிவுகெட்ட மூதி , சோமாறி .
[இப்படியாக முனியம்மா பல சில சொல்லக்கூசும் வார்த்தைகளை வீரபாண்டிய
கட்டபொம்மன் பாணியில் அடுக்கு மொழியில் இரைச்சலிட ,’டங், டங்’ என்ற பள்ளியின் மணீ ஒலிக்கிறது.
]
முனியம்மா : ( கோபமாக ) ஹூம். ! இப்ப பெல்லடிச்சிடுச்சு.
மீதியை அப்புறம் திட்டறேன். (வறட் வறட் என்று பெருக்கிக் குப்பையை ஜான் அ. கென்னடியின்
முகத்தில் வீசுவதுபோல் தள்ளிவிட்டுச் செல்கிறாள். )
{திரை விழுகிறது.}
காட்சி – 2.
பிள்ளைகள் கசமுசவென்று சத்தம்போட்டுக் கொண்டே அமர்கின்றனர்.
மாணவன் – 1. இன்னிக்கு என்னோட பிளேட் கொண்டு வரலை.
சங்கரன் :- ஐயோ எங்க மாமா இங்க வந்துடுமே !.அதுக்குள்ள சாப்பிட்டுடணுமே
! லபக் லபக் என்று விழுங்குகிறான்.
{திரை }.
காட்சி – 3.
[பள்ளிக்கூடக் காம்பவுண்டின் பின்புறத்தில் செந்தில்நாதன்
]
செந்தில்நாதன் ; [ அவசர அவசரமாக காம்பவுண்டின் சுவரில் ஏறிக்கொண்டே
] ஐய்யய்யோ ! முன்பக்கம் போய் நுழையறதுக்குள்ல சாப்பாட்டு ராமன் சங்கரன் அத்தனையும்
விழுங்கிடுவானே !
[ பதற்றத்தில் காலில் வியர்வை ஊறி கசகசக்க, காம்பவுண்டுச்
சுவர் வழுக்கிவிட, பொதகடீர் என்று புளிமூட்டையாட்டம் விழுந்தான். ]
செந்தில்நாதன் : அடப்பாவி செந்தில் நாதா ! உன் கதி இப்படியா
ஆகணும் !. உள்ளே சத்துணவு உன்னை வா, வான்னு வாய் வலிக்க அழைக்குதே !
[பெண் ஒருத்தி இடை நலிய சடை மெலிய அருகே வந்து ]
பெண் : ஐயா ! தாங்கள் இங்கு வரக் காரணமென்னவோ ? தங்களைக்
காண்கையில் தேவலோகத்து யுவன் மாதிரித் தோன்றுகின்றீர்கள்
. பறந்து செல்லும் வழியிலே சத்துணவின் மணத்தை நுகர்ந்ததும் இறங்கி விட்டீர்களா ?
செந்தில்நாதன் :
( எரிச்சலுடன் ) ஆமாம் அம்மையே ! ( மெதுவாக எழுந்துகொண்டே ) சற்று என்னை அந்தக்
கூடத்திற்கு அழைத்துச் செல்கின்றீர்களா ? என் சிறகு பறந்து அங்கு விழுந்து விட்டது.
அதைப்.. பொறுக்கிக் கொள்ளணும்.
பெண் : என் பெயர் ஒன்றும் அம்மையில்லை. வள்ளிநாயகி. அம்மையாம்
அம்மை. மூஞ்சியைப் பார் மூஞ்சியை. !
செந்தில்நாதன் : அம்மா ஸாரி ஸாரி வள்ளி நாயகி. ஐய்யய்யோ பெயரைச்
சொன்னாலும் முறைக்கிறியே. ! என்னைத் தூக்கி விடறியா ? ( அவள் பலமாகாவன் கைகளைப் பிடித்துத்
தூக்க, காலில் பெரிதாய் ‘புஸ்’ஸென்று பேல்பூரிபோல்
(!) விம்மியிருந்த வீக்கத்தைப் பார்த்ததும் )
செந்தில்நாதன் : ஐயய்யோ, ஐயய்யோ ( என்று கத்த, வள்ளி நாயகி
பயந்து போய் அவன் கைகளை விட்டுவிட இரண்டாவது முறையாகவும் ‘தொபுகடீர்’ என்று விழுந்துவிட
இரண்டாவது காலிலும் எலும்பு உடைபட்டு யானைக்கால்கள் போல் ஆகிவிட்டது. ).
செந்தில்நாதன் :- (உடனே சோகக் காட்சி சிவாஜி மாதிரி ) ஐயகோ
! கண்ணுக்குக் கண்ணாக, மூக்குக்கு மூக்காக, நாக்குக்கு நாக்காக, அப்பிடீங்கிற மாதிரி காலுக்குக் காலாக வளர்த்தேனே ! பட்ட காலிலே படும்பாங்க!
ஆனா எனக்கு ரெண்டு காலும்ல பட்டுப் போய்க்கிடக்கு !. அம்மா ளவ்வி யாநகி இல்ல இல்ல நள்ளி வாயகி ஐயகோ பேரென்ன. ம்ம் வள்ளி நாயகி , என்
காலை இப்டி உடைக்கணும்னு எத்தனை நாளாத் திட்டம் போட்டீங்க. !
[சங்கரன் அங்கு கை கழுவ வர ]
செந்தில்நாதன் :- அடேய் சங்கரா ! எனக்கு எங்கடா ! பாருடா
பாவி மாமா நான் ! நல்ல வேளை கையக் உடைக்காம வுட்டானே கடவுள் ! இதோ இந்தப் பொண்ணுதாண்டா
என்னை இப்பிடிக் காலு வீங்க வைச்சவ. !
வள்ளிநாயகி :- (எரிச்சலுடன் ) ஐயோ பாவம்னா அதுக்கும் பாவம்
வந்திடும் போலிருக்கு ! சரியான நன்றி கெட்ட பிறவி ..!
[ இவர்கள் இருவரும் டக் அப் வாரில் ஈடுபட்டிருக்க கை கழுவ
வந்த பையன்கள் அனைவரும் கழைக்கூத்துப் பார்ப்பதுபோல் சூழ்ந்து கொள்ள, பையன்களுக்கு
இங்கென்ன அவ்வளவு சுவாரஸ்யம் தட்டியிருக்கின்றதென்று எட்டிப் பார்த்த ஜான் அமல் கென்னடி
‘ஙே’ என்று விழித்து விட்டுத் தனக்குள்ளே ]
ஜான் அமல் கென்னடி :- இங்க வந்திட்டானே இந்தப் பய ! நம்மள
இங்கன வச்சே மிரட்டிட்டான்னா, பயலுகளுக்கெல்லாம் துளிர் விட்டுப் போயிடும். ஊஹூம்.
இதற்கொரு முடிவு கட்டணும்.
[ இடையில் சங்கரன் நழுவ, செந்தில்நாதன் ரஜனி ஸ்டைலில் எழுந்திருக்க
முயற்சிக்க, கால்களில் இரண்டு பிள்ளையார்களை உட்கார வைத்ததுபோல் ‘சுரீர்’ என வலிக்க
கைகளை உதைத்துக் கொண்டு ஸாரி கைகளைத் தட்டிக் கொண்டு உச்சஸ்தாயியில் கத்தவாரம்பித்தான்
. ]
செந்தில்நாதன் :- ஏண்டா டேய் ! படுவா என்னை ஏய்க்கவா பார்க்கிறே
! எல்லாம் எனக்குத் தெரியும். உன்னை.. இரு இரு என்ன செய்கிறேன் பார் !
[கேட்டுக் கொண்டிருந்த ஜான் அமல் கென்னடி நடுநடுங்கிப் போய்
பையன்களைக் கூப்பிட்டு ]
ஜான் அமல் கென்னடி :- டேய் இவரைத் தூக்கிட்டு வந்து சத்துணவுக்
கூடத்துக்குள்ள படுக்க வையுங்கடா !
[ அவர் போய் மேசைகளை வரிசையாக அடுக்கி, செந்தில்நாதனைப் படுக்க
வைக்க வசதி செய்து கொண்டிருக்க, இங்கு பையன்கள் செந்தில்நாதனைப் பந்தாடிக்கொண்டு இருந்தார்கள்.
கால் மணியாகியும் பையன்கள் கொண்டு வராததைக் கண்டு அவர் வெளியே போய்ப் பார்க்க, அப்போதுதான்
அவரைக் கவனித்த செந்தில்நாதன் ]
செந்தில்நாதன் :- ஆ.. ! நீங்களா.? என்னை ஏன் இப்பிடி எல்லாரும்
சித்ரவதை பண்றீங்க. ? நான் உங்களுக்கு என்ன கெடுதல் பண்ணேன். ( என்ற புலம்பலைத் தொடர்ந்து
) எனக்கு உன்னய எங்க பார்க்கணும் , எப்படிப் பார்க்கணும்னு தெரியும். அங்க பார்த்…
[என்றவனை மறித்து அவசர அவசரமாக அவன் வாயைத் தன் கைகளால் பொத்த
..]
செந்தில்நாதன் :- ஆகா மாவு வாசனை. சாப்பாடு, சத்து மாவு..
( என்றலற சந்தர்ப்பத்தைச் செம்மையாகப் பயன்படுத்தி அவன் தலைமாட்டில் நின்று கைகளைப்
பிடித்துத் தூக்கிக்கொண்டு வள்ளிநாயகியைக் கால்பக்கம் பிடிக்கச் சொல்ல அவளும் பிடித்துத்
தூக்க ]
செந்தில்நாதன் :- அடடா ! என்ன இனிமையான நிகழ்ச்சி இது. !
ஒரு பெண் தூக்கிவிடுவாள் எனத் தெரிந்தால், இரண்டு கைகளையும் சேர்த்து உடைத்துக் கொண்டிருப்பேனே
!
வள்ளிநாயகி:- வழியிலேயே தூக்கிப் போட்டுடுவேன். ஆமாம் . ஆபத்துக்குப்
பாபமில்லைன்னு பார்த்தா.. ( எனக்கூறி முறைக்க செ. நாதன் அடங்குகிறான் )
டிஸ்கி :- 1984 கல்லூரி டைரியில் எழுதியது. ஃபாத்திமா அம்மா கொடுத்த அசைன்மெண்டுக்காக எழுதப்பட்டது. மிச்ச பகுதிகளும் பின்னர் வெளியாகும்.
முதல் பகுதி மற்ற பகுதிகளையும் படிக்கத் தூண்டுகிறது. காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஅஹா நன்றி வெங்கட் சகோ :)
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!