காட்சி – 7.
[ பனகல் பார்க்கில் ஒரு பூவரசமரத்தின் பின்புறம்.]
செந்தில்நாதன் :- வள்ளிநாயகி ! என்னைக் காதலிக்கின்றேனென்று
நீ சொன்னாயே ? அது உண்மையா ?
வள்ளிநாயகி :- ஆமாம். ! நீங்கள் காம்பவுண்டுச் சுவரில் ஏறிய
வீரத்தனத்தைப் பார்த்ததும் என் மனம் உங்கள்பால் நாடிவிட்டது. அந்த ஆசிரியரை நீங்கள்
படுத்திய பாடு. ! அவர் உங்களை எவ்வளவு பணிவுடன் வணங்கினார் என்பதை நினைத்துப் பார்த்தாலே
உங்களின் மதிப்பு புரிந்தது. மேலும் இரண்டு காலும் வீங்கிய நிலையில் நீங்கள் என் அப்பாவிடமும்,
அவர் திட்டிய போதிலும் மரியாதையாகப் பதிலளித்த உங்கள் குணம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. ( என்கின்ற பாணியிலேயே வள்ளி பேசிக்கொண்டே போக இனிமேலும்
கேட்டுக் கொண்டிருந்தால் தான் தலைமயிரைப் பிய்த்துக் கொள்ளப் போய்விடுவோம் என்று பயந்து
போனான். )
செந்தில் நாதன். : - ஆமாம் .. ஆமாம். ( எனப் பதற்றத்தில்
கூற )
[ பக்கத்தில் இருந்த புதரிலிருந்து அருணாசலம் வெளிப்பட்டு
]
அருணாசலம் :- ( கோபாசலமாக ) ஏண்டா டேய் ! என்ன ஆலுமா ஆலுமான்னு ஆமாஞ்சாமி போடறே
!. கால் வீக்கம் கொறையறதுக்குள்ள என்ன காதல் வசனம் வேண்டிக்கிடக்குங்குறேன். உன்னை
உதைச்சா..
[ என்று கூறி அவனைப் பிடிப்பதற்குள் அவன் விம்மிப் புடைத்த
வீரக்கால்களுடன் பாக்கின் சுவரைத் தாண்டுகின்றான்.
அருணாசலம் :- ( கருணாசலமாக ). ஏம்மா, இவனைப் போய்க் காதலிக்கிறியே
! சரியான கோழைப்பய ! அன்னக் காவடிம்மா இவன் ! ( என்க )
வள்ளிநாயகி :- ( நாணத்துடன் ) போங்கப்பா ! பெரிய வீரராக்கும்
அவர் ! அவரைப் போல இந்தக் காம்பவுண்டுச் சுவரைத் தாண்டுங்களேன் பார்ப்போம். !. அவர்
நீங்க பெரியவர்னு ரொம்ப மரியாதை குடுக்கிறார்பா. !
டாக்டர் :- கர்மம்.. ! கர்மம்.. !. எல்லாம் எந்தலைவிதி.
! ஹூம். ! எம்மகளுக்கு இவந்தானா கிடைக்கணும் காதலிக்க ? சரி வாம்மா போகலாம்.!
[ திரை விழுகின்றது ]
காட்சி – 8.
[ பனகல் பார்க்கின் வெளிப்புறம் ]
செந்தில்நாதன் :- ஐயய்யோ !. அம்மாடி ! வலி உயிர் போகுதே
! அகா. ! அந்தா நம்ம சத்துணவு சார் நிக்குறாரே ! சார். ! சார் !.
ஜான் அமல் கென்னடி :- ( மளிகைக் கடையில். ஒரு தூக்கு வாளியைக்
குடுத்துவிட்டு ஒரு பாட்டிலை வாங்கி மறைத்துக் கொண்டு கிளம்ப எத்தனித்தவர் இவன் குரலைக்
கேட்டதும் நாலு கால் பாய்ச்சலில் ஓடிக்கொண்டே ) ஐயய்யோ ! பார்த்துட்டானே ! நம்ம வேலைக்கு
வேட்டுத்தான். !
( எனக் கத்திக் கொண்டே பக்கத்தில் இருந்த பங்களாவிற்குள்
நுழைந்து வாசற்கதவைத் திறந்து புகுந்து கொள்ள )
செந்தில்நாதன் :- விட்டேனா பார் ( என்று கூறிவிட்டு ) நாலுகால்
பிராணியாட்டம் கைகளையும் கால்களாக்கி ஓட பார்ப்பவர்கள் பரிதாபப்பட்டு சில்லறை எறிந்துவிட்டுப் போனார்கள்.
( பங்களாவின் காம்பவுண்டு சுவரை அனாயாசமாகத் தாண்டி உள்ளே
நுழைய மாடிப் பால்கனியில் இவனைப் பார்த்த ஒரு மாது தடதடவென்று கீழே ஓடி வந்து சோபாவில் உட்கார வைத்து )
மாது :- மகனே செந்தி !. அப்பா எப்பிடிப்பா இருக்குற ! இந்த
அம்மாவைத் தவிக்க விட்டுட்டு ஐந்து வயசிலேயே காணமப் போயிட்டியே ! ( அவனை அணைத்துக்
கொண்டு ) பார் உன்னைக் காம்பவுண்டுச் சுவரைத் தாண்டி விளையாடாதேன்னு சொன்னதுக்கு இப்பிடிச்
செய்யலாமா ? உனக்கு பசிச்சாக் கூடச் சொல்லத் தெரியாதே ! உன்னை யாருப்பா இவ்வளவு வருஷம்
கவனிச்சுச் சோறு போட்டாங்க. !
( என்று மேலே பேசிக்கொண்டே போக செந்திநாதனும், ஜான் அமல்
கென்னடியும் திரு திரு என்று விழித்துக் கொண்டார்கள். அப்போது முனியம்மா அந்தப் பக்கம்
வர )
செந்தில்நாதன் :- அக்கா
! எக்கா ! ( என அழைக்க )
முனியம்மா : - ஏண்டா தம்பி ! இங்க எப்பிடி வந்த !. நாலு நாலா
வூட்டுப் பக்கட்டு வரவேயில்லை. சோறு போடலைன்னு எம்மேல கோபமா. !
( என்றவளின் பார்வையில் ஜான் அமல் கென்னடி எதையோ இடுப்பில்
தொட்டுத் தொட்டுப் பார்த்துக் கொள்வது தெரிகிறது. )
முனியம்மா :_ இந்தா அதை இப்பிடிக் குடு.
ஜான் அமல் கென்னடி :- வேண்டாம் முனியம்மா. விடுன்னா அட விடு ( என்று இவர் பறிக்க முனியம்மாவும்
பறிக்க, பாட்டில் கீழே விழுந்து உடைய பாட்டிலிலிருந்து கள் வழிந்தோட )
முனியம்மா :_ எனக்குத் தெரியும் நீ இப்பிடி இந்தக் கள்ளைக்
குடிப்பேன்னு. !
( இடையில் செந்தில்நாதனுடன் அம்மாது உரையாடிக் கொண்டிருக்கின்றார்
)
ஜான் அமல் கென்னடி :_ ஐயோ அது கள் இல்லை பதநீர். ! சொன்னாக்
கேளு ! எம்பெண்டாட்டி என்னைத் திட்டுவா !. அவளுக்குப் பதநீர் பிடிக்காது. ! நான் அந்தக்
கடையில் சத்து மாவைக் கொடுத்துட்டுத்தான் வாங்கினேன். இனிமே அப்பிடிச் செய்ய மாட்டேன்.
அந்தக் கடைக்காரனுக்குச் சத்துமாவுண்ணா உயிரு அதுனாலதான். தயவுசெய்து மானேஜர் கிட்ட
சொல்லிடாத. ! எம் பொண்டாட்டிக்கிட்டயும் சொல்லிடாதே !
( அந்தச் சமயம் நடந்து வந்த ஹெட்மாஸ்டர் தம் பங்களாவின் தோட்டத்துக்குப்
பக்கத்தில் இரண்டு உருவங்கள் பதுங்குவதைக் கண்டு சத்தம் போட வெளியே வந்தவர்கள் டாக்டர்
அருணாசலமும் அவர் மகள் வள்ளியும் )
ஹெட்மாஸ்டர் :_ அடடா ! உள்ளே போயே பார்க்கலாமே ! இங்க ஏன்
இப்டி ?
( உள்ளே வந்த ஹெட்மாஸ்டர் வேணுகோபாலாச்சாரியார் இந்தக் கூட்டத்தைப்
பார்த்துவிட்டு )
ஹெட்மாஸ்டர் :- ( தம்மனைவியிடம் ) பாகீரதி. ! இந்தப் பையனைப்
பார்த்தால் நம்ம செந்தி மாதிரி இருக்குல்ல. ! ( என்று கூற ஆல்பத்தைப் புரட்டி செந்திலிடம்
காண்பித்துக் கொண்டிருந்த மகா கனம் பொருந்திய பாகீரதி அம்மாள் )
பாகீரதி அம்மா :- ( பாசத்துடன் ) ஆமாங்க ! இவன் நம்ம செந்தியேதான்
! பதினைந்து வருஷம் கழிச்சுப் பார்த்தாலும் இவனை எனக்கு அடையாளம் தெரியுதுங்க. !. பதினாலு
வருஷமா அவன் ஒரு அனாதை விடுதில திருச்சில இருந்தானாங்க. ! யாரோ ரயில்ல இருந்த இவனைக்
கொண்டுபோய் விட்டிருக்காங்க. ! போன வருடம் இவன் இங்க வந்திருக்கான். ! நாம எங்கன்னு
இவனுக்குத் தெரியலயாம். பசியால மயங்கிக் கிடந்த இவனை நம்ம முனியம்மாதான் தம்பியா வளர்த்திருக்கா
!. முனியம்மாவுக்கும் அவள் மகன் சங்கரனுக்கும் நாம நன்றியைத் தெரிவிக்கணும்ங்க.
( இடையில் வள்ளிநாயகி தன் அப்பா அருணாசலத்திடம் )
வள்ளிநாயகி :_ பாருங்கப்பா ! இவரைப் போய் அன்னக் காவடின்னீங்களே
! இவ்வளவு பெரிய பங்களாவுக்குச் சொந்தக்காரர் .! பார்த்துக்குங்க. !
பாகீரதி அம்மா :- என்னங்க கதை வேற மாதிரிப் போகுது. !
அருணாசலம் :- இல்லீங்க !. நல்லாத்தான் நடக்குது எல்லாம்.
! வாங்க சம்பந்தி போகலாம். ! இனிமே ஜான் இப்பிடி திருட்டுத்தனம் பண்ண மாட்டார். அதுக்கு
நான் கியாரண்டி. !
முனியம்மார் :- ( கண்ணீருடன் ) தம்பி நீ பெரிய வூட்டுப் புள்ளையாயிட்டே.
! என்னை இனிமே எங்க கவனிக்கப் போறே நீ ! ஹூம் !
செந்தில்நாதன் :- அப்டில்லால் விட்டுடுவனாக்கா ! ( என்று
கூறிக்கொண்டே செந்தில்நாதன் வள்ளியின் கையைப் பிடித்து ) எல்லாம் சத்துணவினால்தான்.
அதற்கு நான் ஆலாய்ப் பறக்கப் போய்த்தானே என் அப்பா அம்மாவைக் கண்டுபிடிக்க முடிந்தது.
உன்னையும் காதலிக்க. ( என்று கூறிக்கொண்டே இடுப்பில் கிள்ள )
முனியம்மா :- தம்பி விளையாட்டெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்.
உன் கால் வீக்கம் குறையட்டும். வர்ற தை மாசம் முடிச்சிடலாம். கல்யாணத்துல ஸ்பெஷல் ஐட்டம்
சத்துமாவு.
( வள்ளி கண்களைக் கைகளால் பொத்திக் கொண்டு ஓட, அனைவரும் வாய்விட்டுச்
சிரிக்க.. )
( விழுகின்றது திரை. ).
டிஸ்கி
:- 1984 கல்லூரி டைரியில் எழுதியது. ஃபாத்திமா அம்மா கொடுத்த
அசைன்மெண்டுக்காக எழுதப்பட்டது. மிச்ச பகுதிகளும் பின்னர் வெளியாகும்.
இதையும் பாருங்க.
நாடகக் காட்சிகளும், டயலாக்ஸும் அருமை. பாராட்டுகள். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாவ்!!செம காமெடி போலருக்கே!! நகைச்சுவை, நாடகம் எழுதுவதிலும் கலக்கல்தான் போங்க! சகோ நீங்க நிச்சயமா ஆல்ரவுண்டரே!! மிச்சப்பகுதிகளைத் தயவாய் வெளியிடுங்கள் சகோ!
பதிலளிநீக்குநன்றி விஜிகே சார்
பதிலளிநீக்குநன்றி துளசி சகோ @ கீத்ஸ் :)
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
நாங்கள்லாம் நாடகம் எழுதி இயக்கி நடித்து இருக்கிறோமாக்கும்
பதிலளிநீக்குஅஹா. வாழ்த்துகள் பாலா சார் !
பதிலளிநீக்கு