திங்கள், 25 ஏப்ரல், 2016

நினைவாற்றலின் விந்தைகளும் ரசிகமணி டிகேசி பிள்ளைத் தமிழும் .

இரண்டு நூல்களைப் படித்தேன். சின்ன நூல்கள்தான் என்றாலும் மிக அருமையான நூல்கள். புத்தக தினத்துக்காக நிறைய புத்தகங்களை அரைகுறையாகப் படித்துவிட்டு அங்கங்கே வைத்திருக்கிறேன் என்றாலும் ( கை வைக்கும் இடமெல்லாம் புத்தகம் :) இவற்றை இப்போது பதிவு செய்கிறேன். சம்மரில் குழந்தைகளுக்குப் பயிற்சி மட்டுமல்ல. பெரியவர்களுக்கும் நினைவாற்றல் பயிற்சியைத் தூண்ட உதவுது நினைவாற்றலின் விந்தைகள்.

மனனத் திறமை சிறுவயதில் அதிகமாக இருக்கும். வயதாக ஆக மறந்துவிடும். அந்த நினைவுகளைக் கோர்வையாக சிலவற்றைச் சிந்திப்பதன் மூலமும், சில விதிகள் மூலமும், சில உத்திகள், பயிற்சிகள் மூலமும் புதுப்பிக்க இந்நூல் உதவுகிறது.

இதில் கொடுத்திருக்கும் சில பயிற்சிகளை /சில பரிசோதனைகளை செய்வதன் மூலம் இன்னும் கூர்மையடைகிறது நமது ஞாபக சக்தி. நினைவாற்றலே நேரம் நினைவாற்றலே பணம். அதுவே யானை பலம் என்கிறார் ஆசிரியர்.கற்பனைத் திறனும், மனக்கண்ணில் படமாகப் பார்க்கும் திறனும், நகைச்சுவை உணர்வும் கூட உதவுவதாக சொல்கிறார் ஜான் லூயிஸ். சங்கிலிப் பிணைப்பு முறை, கொக்கி முறை, ( எண்கள் ஒன்று முதல் இருபது வரை ஆதார வார்த்தைகளைக் கொண்டு ஞாபகம் வைத்துக் கொள்ளல் ). ஆகியவற்றை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

ஞாபகப் பிசகைக் (ABSENT MINDEDNESS ), குணப்படுத்துவதற்கும் பயிற்சிகள் கூறியுள்ளார். இம்மூன்று பயிற்சிகளையும் செய்து நினைவாற்றலை மேம்படுத்துவதன் மூலம் சுய மதிப்பீடும் தன்னம்பிக்கையும் அதிகரிப்பதோடு எல்லா விஷயங்களிலும் வெற்றியடையவும் முடியும் என்பதே இதன் சிறப்பு.

வெற்றிக்குத் தேவை தன்னம்பிக்கை என்று கூறும் இவர் மாணவர்கள், தொழில் நிறுவனங்களின் ஊழியர்கள், இல்லத்தரசிகள் போன்றோருக்கும் தனித்தனியான நினைவாற்றல் பயிற்சிப் பாசறைகளும்  நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நூல் :- நினைவாற்றலின் விந்தைகள்.

ஆசிரியர் :- ஜான் லூயிஸ்

பதிப்பகம் :- செலின் , தில்லை நகர், திருச்சி

விலை :- ரூ 50. கோட்டையூரைச் சேர்ந்த வள்ளல் அழகப்பரின் அண்ணன் மகளான திருமதி வள்ளி முத்தையாவைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. கம்பன் விழாவின் போது விருந்தளித்த பெருந்தகை இவர். கம்பனடிசூடி அவர்களின் குடும்ப நண்பர் என்ற முறையில் எனக்கும் நண்பரானார்.

சிறு வயதிலிருந்தே மாபெரும் தமிழ் ஆன்றோர்களுடன் பழகும் வாய்ப்புப் பெற்ற இவர் இயற்றிய டி கேசி பிள்ளைத்தமிழ் மிகச் சிறப்பான தமிழமுதம். காரைக்குடி கம்பன் கழகத்தால் 2015 இல் வெளியிடப்பட்ட நூல் இது.

பிள்ளைத் தமிழில் ரசிகமணி பற்றி நான் ரசித்த சில வரிகள்.

///சிதம்பரநாதச் சக்கரையே - இந்த
சித்தெறும்பின் மேல்கொண்டாய் அக்கறையே
சிந்து தந்த பொதிகைச் சந்தனமே - இந்தச்
சின்னப் பேத்தியின் வந்தனமே. ///

தாலப் பருவத்தில்

// வாணி தன் வீணை மழலையாய் வந்ததே
தாலோ தாலேலோ //

சப்பாணிப் பருவத்தில்

///தயங்காது கம்பரில் இடைச்செருகல் களைந்தவா
சப்பாணி கொட்டியருளே. ///

சிறுபறைப் பருவம்.

///வேல் ஏந்தும் கந்தனைப் போல
வீறுடன் விளையாடையிலே
கோல் கொண்டு கைகளினால்
சிறுபறை முழக்க வாராய்.//

ரசிகமணி திருநெல்வேலியில் 1924 ஆரம்பித்த இலக்கிய அமைப்பு வட்டத் தொட்டி எனப் பெயர் பெற்றது. இவ்வமைப்பு வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார், எஸ். வையாபுரிப் பிள்ளை, ரா. பி. சேதுப்பிள்ளை, வித்வான் அருணாசலக் கவுண்டர், பி. ஸ்ரீ. ஆச்சார்யா, மீ. ப. சோமு, தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான், அ. சீனிவாச ராகவன் ஆகிய அறிஞர்களும், ராஜாஜி, கல்கி, ஜஸ்டிஸ் மகராஜன் ஆகியோரும் கலந்துகொண்ட சிறப்புடையது. நூலில் ரசிகமணி டிகேசி அவர்கள் ,  கே வி ஏ எல் எம் ராமனாதன் செட்டியார் அவர்களுக்குத் தம் கைப்பட எழுதிய கடிதத்தின் நகலும் இணைக்கப்பட்டிருக்கிறது.

இத்தமிழமுதை மாந்திக் களித்து உங்களுக்கும் அளிப்பதில் களிபேருவகை கொள்கிறேன். கடவுளுக்கே உரித்தான பிள்ளைத் தமிழை ரசிகமணிக்கும் சமர்ப்பித்துள்ள புரவலர் . கவிதாயினி வள்ளி முத்தையா அவர்கட்கும் வாழ்த்துகள்.

நூல். :- ரசிகமணி டிகேசி பிள்ளைத்தமிழ்.

ஆசிரியர் :- வள்ளி முத்தையா.

பதிப்பகம் :- உமா

விலை ;- ரூ 20.

9 கருத்துகள் :

R.Umayal Gayathri சொன்னது…

ஆஹா...இரண்டு நூல்களையும் அழகாய் விமர்சித்து இருக்கீங்க.....

நினைவாற்றல்....பெரியவர்கள் ஆக ஆக நிறைய தேவைப்படுகிறது....:)///சிதம்பரநாதச் சக்கரையே - இந்த
சித்தெறும்பின் மேல்கொண்டாய் அக்கறையே
சிந்து தந்த பொதிகைச் சந்தனமே - இந்தச்
சின்னப் பேத்தியின் வந்தனமே. ///

நீங்கள் ரசித்த வரிகளை நாங்களும் ரசித்தோம்...

படிக்கும் ஆவல் வருகிறது...நன்றி

G.M Balasubramaniam சொன்னது…

வயது ஏற ஏற மறதி தவிர்க்க முடியாதது வைத்தபொருளின் இடம் மறந்து தேடுவதுசாதாரணம் ஆனால் எந்தப் பொருளுக்கும் உரிய இடம் கொடுத்து அங்கு வைப்பதையே பயிற்சி செய்தால் ஓரளவு சமாளிக்கலாம் வயதானபின் ஏற்படும் பிரச்சனையை AGE ACTIVATED ATTENTION DEFICIT DISORDER என்று கூறுகின்றனர் இது குறித்து ஒரு பதிவு எழுதி இருந்தேன் சுட்டி கீழே படித்துப் பாருங்களேன்
http://gmbat1649.blogspot.in/2013/05/aaadd.html

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அட! இரு அருமையான நூல்கள் அதுவும் முதல் புத்தகம் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ள நூல்..மறதி பற்றி ஒரு சிறு கதை கூட எழுதப்பட்டுள்ளது இன்னும் பதிவிடவில்லை (கீதா).

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமையான நூல்கள் இரண்டினை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்
நன்றி சகோதரியாரே

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி உமா :)

நன்றி பாலா சார். படிக்கிறேன்

சீக்கிரம் பதிவிடுங்கள் சகோ. நேரம் கிடைக்கும்போது கட்டாயம் வருகிறேன். தொடர்ந்து என் வலைத்தளத்தைப் படித்து ஊக்கமூட்டும் உங்களுக்கும் ( துளசி, கீத்ஸ் ) செந்தில், குமார், ஜெயக்குமார், ஸ்ரீராம், விஜிகே சார், பாலா சார், இன்னுமுள்ள அனைத்து சகோக்களுக்கும் தங்கைகளுக்கும் தோழிகளுக்கும் நன்றி. :)

நன்றி ஜெயக்குமார் சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Thenammai Lakshmanan சொன்னது…

ஜம்பு சார், அப்பாவு சார், ரமணி சார், டிடி சகோ, முத்துநிலவன் ஐயா இன்னுமுள்ள வலையுலக நட்புகளுக்கும் நன்றி.

ஆரூர் பாஸ்கர் சொன்னது…

//வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!//மிகவும் தேவை

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஆரூர் பாஸ்கர் சகோ

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...