எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 23 மார்ச், 2024

வீடு அர்ச்சனா

வீடு அர்ச்சனா


ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா என்ற பாடலில் இரட்டை ஜடையுடன் பெரிய பொட்டோடு எளிமையான அழகுடன் காட்சியளிப்பார் அர்ச்சனா. ஜோடி பானுசந்தர். நடுநடுவே பரதநாட்டிய உடையில் அபிநய முத்திரைகளில் அபாரமான வடிவழகோடு திகழ்வார். அதே பாடலின் முடிவில் பாலுமகேந்திராவின் ஆஸ்தான கதாநாயகிகளின் உடையான டைட் பெல்ஸ், டாப்ஸில் கடற்கரையில் ஆடல் இடம்பெற்றிருக்கும். அலையுடன் போட்டிபோடும் கூந்தலுடன் வெகு ஸ்லிம்மாக அழகாக இருப்பார்.

பானுப்ரியா, சுஜாதா போன்றதொரு தீர்க்கமான பார்வை, தெளிவான நடை, உடை, பாவனை, வெகுளிப் புன்னகை, யதார்த்த சினிமாக்களின் நாயகி, தனித்துவத்துடன் நடிக்கும் நடிகை, எந்த சர்ச்சைகளிலும் சிக்காதவர், சவாலான கதாபாத்திரங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளில் நடிப்பவர் அர்ச்சனா. ஆர்ட் ஃபிலிம் நடிகை என்று கூட முத்திரை குத்தப்பட்டவர். ஒரியா உட்பட ஆறு மொழிகளில் 30 படங்களில் நடித்தவர். அதிலும் பிரபலமான இயக்குநர்களின் படத்தில் நடித்தவர்.

இவரது இயற்பெயர் சுதா. விஜயவாடாக்காரர். குச்சிப்புடி மற்றும் கதக் நடனங்களைக் கற்றவர். 1980 இல் தாய் பொங்கலில் அறிமுகம். இவர் நடித்த படங்கள் துணிவே தோழன், காதல் ஓவியம், வசந்தமே வருக, நீங்கள் கேட்டவை, எங்கிருந்தலும் வாழ்க, ஏமாற்றாதே ஏமாறாதே, புயல் கடந்த பூமி, ரெட்டைவால் குருவி, வீடு, சந்தியா ராகம், வைதேகி வந்தாச்சு, பரட்டை என்கிற அழகுசுந்தரம், ஒன்பது ரூபாய் நோட்டு, கேணி சீதக்காதி நம்மவீட்டுப் பிள்ளை, அழியாத கோலங்கள். இரண்டு முறை தேசிய விருது பெற்றவர். 1987 இல் வீடு என்னும் தமிழ்ப் படத்திற்காகவும், 1988 இல் தாசி என்னும் தெலுங்குப் படத்திற்காகவும்.

பாலுமகேந்திராவின் படங்களில் மட்டுமே நடிப்பார், விருதுப் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பார் என்றெல்லாம் திரையுலகில் நிலவிய பேச்சுக்களால் நிறைய பட வாய்ப்புகளை இழந்தவர். இயக்குநர் பங்களிப்பையும் தாண்டி உன் அர்ப்பணிப்பும் விருது கிடைக்கக் காரணம் என்று டைரக்டர் கேபி தன்னைப் பாராட்டியதாகக் கூறுகிறார். ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் பயின்றவர். ஒரு விஷயத்தை உணர்ந்து பார்த்து நடிக்கின்ற ஸ்டானிஸ்லாவ்ஸ்கி (STANISLAVSKI) முறையை அங்கே கற்றதால் அதைத் தன் சினிமாப் பயணத்துக்குப் பயன்படுத்திச் சிறப்பாக நடித்ததாகச் சொல்லியுள்ளார். தாசி என்றொரு தெலுங்குப் படம். இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் மனதளவில் பதை பதைப்புடன் நடிச்சதா குறிப்பிட்டு இருக்காங்க. வீடு படத்துக்குப் பின்னாடி இந்தப் படத்துக்குத்தான் அவங்களுக்கு இரண்டாவது முறையா தேசிய விருது கிடைச்சது.

இந்தத் தாசி படம் ஹைதராபாத் நிஜாம் ஆட்சியின் கீழ் இருந்த ஜமீந்தார் குடும்பங்களில், 1920 களில் திருமணத்திற்கு வரதட்சணையாக வழங்கப்படும் அடிமைப் பெண்களின் நிலை குறித்தது. அப்படி ஜெயசிம்ம ராவ் என்னும் ஜமீந்தார் குடும்பத்துக்கு திருமண சீதனமாக வரும் காமாட்சி அவருக்கும் அவருடைய இல்லத்துக்கு வரும் விருந்தினர்களுக்குமே விருந்தாவதும், அதன்பின் கர்ப்பமான அவளுக்கு மருத்துவச்சி மூலம் கொடுமையான முறையில் கர்ப்பச் சிதைவு ஏற்படுத்துவதும் அதிர்ச்சி ஏற்படுத்திய காட்சி அமைப்பு.

ரெட்டைவால் குருவி ராதிகா, அர்ச்சனா என்ற இரு பெண்களை மணந்து கொள்ளும் மோகன் படும் பாட்டை நகைச்சுவையுடன் கூறிய படம். இன்று போல் பெண்ணுரிமை என்றெல்லாம் போர்க்கொடி தூக்காமல் முடிவில் அர்ச்சனாவும், ராதிகாவும் ஏகப்பட்ட குழந்தைகள் புடை சூழ மோகனுடன் பார்க்கில் காட்சி அளிப்பார்கள். சந்தியா ராகம் மாமனாராகச் சொக்கலிங்க பாகவதரின் முதுமையின் அனுபவங்கள் மேலும் தங்கள் பொருளாதார நெருக்கடியிலும் அவரைப் பரிவுடன் நடத்த விரும்பும் மருமகளாக அர்ச்சனாவின் பாத்திரம் என்று நெகிழ்வை உண்டாக்கிய கதை.


வீடு படம்தான் அர்ச்சனாவின் மாஸ்டர் பீஸ். ஒரு பாட்டுக் கூட இல்லை. ஆழமான பாதிப்பை உண்டாக்கிய படம். மத்தியதர வர்க்கத்தின் ஒரு வீட்டிற்கான கனவை, அதற்கான நெடிய உழைப்பை, அது கோரும் கடின அர்ப்பணிப்பை தொடர் கண்காணிப்பை வழங்கியும் இது அனைத்தும் வியர்த்தமாக வீணாகப் போய்விடும் போது ஏற்படும் துயரத்தை வீடு கட்டிய, கட்ட விரும்பும், கட்டிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் கடத்திய படம். 22 வயது இளம் பெண்ணாக அர்ச்சனாவும், அவரது தங்கையும் தங்களுக்கான அறைகளை பாதி கட்டும்போதே ரசனையோடு பிரித்துக் கொள்வதும், முடிவில் அந்த வீடு மாநகராட்சியின் நீர் சேகரிப்புக்காக இடிக்கப்படுவதும் தாத்தா சொக்கலிங்க பாகவதருடன் அங்கிருந்து அவர்கள் வெளியேறுவதும் மறக்க இயலாத யதார்த்த சோகம்.

பணம் புகழ் இரண்டையும் தாண்டி நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வமிருப்பதாலேயே அண்ணன் தங்கை பாசத்தைச் சொல்லும் பாசமலர், தந்தை மகள் பாசத்தைச் சொல்லும் பார் மகளே பார் போல அம்மா மகன் உறவுக்கு, பாசத்துக்கு ஆழமான அர்த்தம் சொல்லும் பரட்டை என்கிற அழகுசுந்தரம் படத்தில் நடித்ததாகச் சொல்லி இருக்கிறார். பாலு மகேந்திராவின் முதல் படமான அழியாத கோலங்கள் என்ற தலைப்பில் தற்போது அர்ச்சனா ஒரு படம் நடித்து வருகிறார். இதன் இயக்குநர் பாரதி. பாலு மகேந்திராவுக்கு மரியாதை செய்யும் முகமாகவும் இந்தக் கதை பிடித்திருந்ததாலும் நடிக்க ஒப்புக் கொண்டதாகக் கூறுகிறார்.

இப்போதும் டான்ஸ் பயிற்சி, ஜிம்முக்குப் போவது எனத் தனது உடலைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்கிறார். உடற்பயிற்சி, நடைப்பயிற்சியை ஒருநாளும் செய்யாமல் இருப்பதில்லை. இவரது வயது என்ன, குடும்ப அங்கத்தினர்கள் யார் என்று கூகுளில் நீங்கள் வலைபோட்டுத் தேடினாலும் கிடைக்காது. தனது குடும்பத்தினரின் ப்ரைவஸியை முக்கியமாகக் கருதியே இவ்வாறு இருப்பதாகவும் கருதலாம். தனிமை, இசை, இயற்கை தன்னை இயக்குவதாகக் கூறுகிறார்.

முன்பு பெண்களுக்காகச் சில படங்கள் இருந்தது. இப்போ பெண்களுக்கான படம் இல்லை. பெண்கள் என்றால் நல்ல அம்மா, நல்ல அக்கா, நல்ல தங்கை, நல்ல மாமியார், நல்ல மருமகள், நல்ல காதலி இவர்களுடைய அன்பு, சகிப்பு மட்டும்தான் வருகிறது. உறவுமுறைகளுக்குள் சிக்கித் தவிக்காமல் தனக்கான வாழ்க்கைக்குச் சுயமாக முடிவெடுக்கும் தனி அடையாளத்துடன் இருக்கும் பெண்களை, 'அவள் அப்படித்தான்', 'அரங்கேற்றம்', 'நிழல் நிஜமாகிறது', 'அருவி', 'மொழி' போன்ற சில படங்கள்ல பார்க்க முடிஞ்சது. இதுபோன்ற பெண்ணுக்குள் இருக்கும் தனித்துவமான பெண்ணாக நடிக்கவே நான் அதிகம் ஆசைப்படுவேன். "என்று ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் அர்ச்சனா. அவர் ஆசை நிறைவேறவும் அடுத்து வரும் படங்களிலும் ஊர்வசி அர்ச்சனா இன்னும் தேசிய விருதுகள் பெறவும் வாழ்த்துக்கள்.

டிஸ்கி:


முள்ளும் மலரும் ரஜனிகாந்த என்ற என்னுடைய கட்டுரையைப் பாராட்டிக் கடிதம் எழுதியுள்ள தனவணிகன் வாசகர் விராச்சிலை திரு ஏ என் சிதம்பரம் அவர்களுக்கு நன்றிகள். இக்கடிதத்தை வெளியிட்டுள்ள தனவணிகனுக்கும் நன்றிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...