எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 11 மார்ச், 2024

கஜேந்திரனைக் காத்த கருடவாகனன்

 கஜேந்திரனைக் காத்த கருடவாகனன்


முனிவர்களின் சாபம் மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் எனத் தெரியாமல் ஒரு மன்னனும், ஒருகந்தர்வனும் விளையாட்டாக நடந்துகொண்டார்கள். அதன் கொடுமையான விளைவுகளையும் அனுபவித்தார்கள். ஆனால் தன் பூரண சரணாகதியின் மூலம் மோட்சம் பெற்றான் அம்மன்னன்.

பாண்டிநாட்டை ஆண்டுவந்தான் இந்திரத்துய்மன் என்னும் மன்னன். மிகச் சிறந்த பெருமாள் பக்தன். பெருமாளுக்குப் பூசை செய்யாமல் அன்னம் தண்ணீர் அருந்தமாட்டான். அப்பேர்ப்பட்ட பக்தனுக்கும் ஒரு முனிவர் மூலமாக சோதனை வந்தது. ஒருநாள் அவன் விஷ்ணு பூசை செய்து கொண்டிருந்தபோது அகஸ்திய முனிவர் அங்கே வந்தார். இந்திரத்துய்மனின் பூசையோ முடிவதாயில்லை. தொடர்ந்து கொண்டேயிருந்தது. பார்த்தார் அகஸ்திய முனிவர். வேண்டுமென்றே மதியாமல் நடக்கிறானோ மன்னன் என்ற கோபம் உண்டானது அவருக்கு.

ஒருவழியாகக் கடைசியில் பூசையை முடித்துவிட்டு நடந்து வந்தான் மன்னன் முனிவரை வரவேற்க. பார்த்துக் கொண்டிருந்த முனிவருக்கோ அவன் மதர்த்த யானைபோல் அமர்த்தலாக வந்து கொண்டிருப்பதுபோல் தோன்றியது. உடனே தன் கமண்டலத்திலிருந்து நீரை எடுத்து வீசினார் ”பிடிசாபம்! மதிக்காமல் மதங்கொண்ட நீ யானையாகக் கடவது” விதிர்த்து வணங்கினான் மன்னன்.

“முனிசிரேஷ்டரே, பெருமாளின் மேல் கொண்ட பிரேமையால் பூசை தாமதமானது. மன்னித்தருள்க. எப்பிறப்பு எடுத்தாலும் நான் பெருமாளின் மேல் கொண்ட பக்தி தொடர வேண்டும்.” சற்று மனம் தணிந்த அகஸ்தியர்”அப்படியே ஆகட்டும். பெருமாள் மூலமே உனக்கு விமோசனமும் கிடைக்கும்” என்று வரமருளினார்.

திரிகூடம் என்னும் மலைக்காட்டில் யானைக்கூட்டம் ஒன்று வசித்து வந்தது.  அதன் தலைவனாக கஜேந்திரன் என்னும் கம்பீர யானை திகழ்ந்து வந்தது. அந்த மலைக்காட்டில் ருதுமத் என்றொரு அழகிய தோட்டமிருந்தது. காய் கனிகளுக்குக் குறைவில்லை. அதன் அருகிலேயே ஒரு வாவி. அதன் நீரோ கற்கண்டுச் சுவை. கஜேந்திரனின் வழிகாட்டலில்தான் அத்தனை யானைகளும் கனிகளைப் புசிக்கும், நீரருந்தும். இந்தப்படி ஒருநாள் அந்த யானைகள் பின் தொடர கஜேந்திரன் கனிகளைக் புசித்துவிட்டு நீரருந்த வாவியுள் இறங்கியது, அங்கே ஒரு அபாயம் காத்திருந்தது அறியாமல்.


ஹூஹூ என்னும் கந்தர்வன் ஒருவன் விளையாட்டுத்தனம் மிகுந்தவன். அவன் ஒருமுறை ஒரு பொய்கையில் நீந்திக் களித்துக் கொண்டிருந்தான். அப்பொய்கைக் கரையோரம் ஒற்றைக்காலில் நின்று சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருந்தார் தேவலர் என்னும் முனிவர். இதைப் பார்த்த அவன் தன் விளையாட்டுத்தனம் குறையாமல் நீருக்குள்ளிருந்து கையை மட்டும் நீட்டி அவர் காலைப் பற்றி இழுத்தான். திடுக்கிட்டு அவர் கண் திறந்ததும் மறைந்தான். அடுத்தமுறை அவன் அவர் காலைப் பற்றியபோது கண்திறந்து பார்த்துவிட்டதால் வெகுண்டார் தேவலர்.

“நீரில் மூழ்கி இழுக்கும் நீ நீரிலேயே மூழ்கித் தவிக்கும் முதலையாகக் கடவது” எனச் சாபமிட்டார். தவித்துப் போனான் ஹூஹூ. முனிவரே மன்னியுங்கள் என்றெல்லாம் கெஞ்சினான். ”மகாவிஷ்ணுவின் சக்ராயுதத்தால் உனக்குச் சாபவிமோசனம் ஏற்படும்” என்று கூறினார் தேவலர். அவன் கஜேந்திரன் நெருங்கி வரும் அந்த வாவியில் முதலையாக மூழ்கிக் கிடந்தான்.

வாவி எங்கும் தாமரை மலர்கள், அல்லிகள் பூத்துச் சிரித்தன. அதன் கீழே முதலை மூழ்கிக் கிடப்பது தெரியாமல் காலை வைத்தான் கஜேந்திரன். அவற்றில் சில பூக்களையாவது கொய்து பெருமாளுக்குச் சாத்த வேண்டும் என நினைத்தான். ஐயகோ என்ன விபரீதம். நீருக்குள்ளிருந்து கோரைப்பற்களுடன் ஒரு முதலை அவன் காலைக் கவ்வுகிறதே. ரம்பங்களைப் போன்ற கூர்ப்பற்கள் கஜேந்திரனின் பாதங்களைப் பதம்பார்க்க அவனோ நிலை தடுமாறுகிறான்.

துதிக்கையில் ஒரே ஒரு தாமரை மலர் அகப்படுகிறது. அதை லாவகமாகப் பற்றி இழுத்துப் போராடுகிறான். ஜீவமரணப் போராட்டம். முதலைக்கோ கொண்டாட்டம். கஜேந்திரனுக்கோ திண்டாட்டம். கஜேந்திரனோ போராடிப் போராடி ஓய்கிறான். தன் பின்னே வந்த நண்பர்களைத் துணைக்கழைக்கிறான். மற்ற யானைகளோ ஒன்றும் புரியாமல் பின்வாங்குகின்றன. முதலையின் வாய்க்குள் சிக்கிய காலோடு தவித்த கஜேந்திரனுக்கு ஒரு கட்டத்தில் அந்தப் பெருமாளைத் தவிரத் தன்னை யாராலும் காக்க முடியாது என்கிற ஞானத் தெளிவு பிறக்கிறது.

உடனே தான் பறித்த தாமரையை ஆகாயத்தில் வீசி எறிந்து “ஆதி மூலமே காப்பாற்று” என்று பிளிறுகிறான். எப்போது அழைப்பான் என்று காத்திருந்தது போல் காற்றினும் கடுகித் தன் கருட வாகனத்தில் பறந்துவந்து சக்ராயுதத்தை வீசுகிறார் பக்தவத்சலனான பெருமாள். துண்டாகிறது முதலை. விண்டு வெளிப்படுகிறான் ஹூஹூ என்னும் கந்தர்வன். விடுபட்டான் கஜேந்திரனும். தன் பக்தனான கஜேந்திரனை இன்னும் சோதிக்காமல் அவனுக்கு மோட்சம் அளித்தார் விஷ்ணுபகவான்.

முடிவில் நல்லதே நடந்தது என்றாலும் முனிவர்களிடம் எக்காலத்திலும் விளையாட்டாக நடந்து கொள்ளக் கூடாது என்பதும் அவர்களை உரியமுறைப்படி நடத்த வேண்டுமென்பதும் புலப்படுகிறது.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...