எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 3 மார்ச், 2024

காரைக்குடி கொப்புடைய அம்மன் திருக்கோயில்

 காரைக்குடியின் காவல் தெய்வம் கொப்புடையம்மன். கல்லுக்கட்டியில் அமைந்துள்ள இக்கோயிலைச் சுற்றிக் கடைவீதி அமைந்துள்ளது. 

மூன்று நிலை இராஜ கோபுரத்துடன் எடுப்பான அழகிய கோவில் இது. உள்ளே நுழைந்ததுமே தாயின் கருவறைக்குள் இருப்பது போன்ற நிம்மதி ஏற்படும். 

எங்கள் பாட்டிகள் , பாட்டையாக்கள், ஐயாக்கள், ஆயாக்கள், அப்பத்தாக்கள் மற்ற உறவினர்கள் அனைவரின் காலடித்தடங்களும் இங்கே நான் மானசீகமாக உணர்வேன். அவர்களின் சுவாசம் கலந்த கோவில் எனக்கு மிக விசேஷமானது. 

வருடா வருடம்  பழனிக்கு நடைப்பயணமாகவும், காவடி கட்டியும் புறப்படும் நூற்றுக்கணக்கான புனித மக்களின் காலடித் தடங்களும் அவர்களின் வேண்டுதல்களும் கலந்த காற்று நம்மையும் ஆற்றுப்படுத்தும். 

ஒரு சில முறை ஆயாவுடன் இங்கே மார்கழி திருப்பள்ளி எழுச்சிக்கு வந்து வணங்கி சூடாக வெண்பொங்கல் வாங்கிச் சாப்பிட்டது நினைவில் ஆடுகின்றது. ஆறாவயல் பாட்டியுடன் வந்து பூச்சி பொட்டுக் கடிக்காமல் இருக்க அவற்றின் மண் உருவை வாங்கி வேண்டுதல் குதிரைகளின் அருகில் சேர்ப்பித்ததும் கூட.  எங்கள் ஐயா ஆயாவின் சஷ்டியப்த பூர்த்திக்கும் இங்கே வணங்கிவிட்டுத்தான் வீட்டிற்கு வந்தோம்.ஆயா வீட்டில் நடைபெறும் அனைத்துத் திருமணங்களுக்கும் மாப்பிள்ளை அழைப்பு இங்கே இருந்துதான் நடைபெறும்.

முன்பு இக்கோயிலின் நுழைவுப் பகுதியில் வாயிலை ஒட்டி மேற்பக்கத்தில் கல் வளையங்கள் தொங்குவதைப் பார்த்து வியந்திருக்கிறேன். கோயில் முழுவதும் தூண்களில் தாமரை பூத்த கொடுங்கைகள் வெகு அழகு. 

கல் திருப்பணியால் ஆன கோயில் இது. உள்ளே உள்ள தூண்கள் ஒன்றில் பைரவர் காட்சி அளிக்கிறார். 

முதலில் வல்லக் கருப்பர். கோவில் சோபன மண்டபத்தில் உள் வாயிலில் வலப்புறம் சித்தி விநாயகர். அதற்கு முன்பே நமக்கு வலப்பக்கம் ஜெயவீர ஆஞ்சநேய சுவாமி அருள் பாலிக்கிறார். சனிக்கிழமை ரொம்ப விசேஷம். 3 வாரம் தயிர்சாதம் மூட்டை கட்டி வேண்டினால் நினைத்தது நடக்கும். வெண்ணெய் சாத்துதலும் விசேஷம். 
உள் பக்கம் ஸ்ரீ கன்னி மூல கணபதி. 

உள் சுற்றில் தூரத்தே பைரவர் சந்நிதி. 

ஃபோட்டோக்கள் முன் பின்னாக அப்லோட் ஆகி இருப்பதால் வெளிச்சுற்றிலேயே இருக்கிறோம். நவக்ரஹங்கள் ஆஞ்சநேயர் சந்நிதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளன. 

என் சிறு வயதில் இவ்விரு சந்நிதிகளையும் கண்ட ஞாபகமில்லை. பிற்காலத்தில் பிரதிஷ்டை செய்திருக்க வேண்டும். 
சோபன மண்டபத்தில் இடது பக்க வாயிலில் கோயில் கொண்டிருக்கிறார். ஸ்ரீ தண்டாயுதபாணி. முருகர். 
உள் பிரகாரத்தில் இங்கே காமாட்சி அம்மன் இருப்பது சிறப்பு. ஸ்ரீ ஆதிசங்கரர் இங்கே வந்திருப்பதாக வரலாறு. 

உள் சுற்றில் ஸ்ரீ காசி விஸ்வநாதர் சந்நிதி. 
நேரே கொப்புடையாள் சந்நிதி. 
வெளி வாயிலிலிருந்து தரிசனம். கோவிலில் மேலே ஆங்காங்கே இயற்கைச் சாரள முறைப்படிக் காற்று வருகிறது. 
ஸ்ரீ சுப்ரமணியர் சந்நிதி.
சோபன மண்டபத்தில் ஸ்ரீ வல்லக் கருப்பர் எனப்படும் கருப்பண்ண சுவாமி சந்நிதி. இங்கே சாம்பிராணி போடுவது விசேஷம். குதிரையில் கம்பீரமாய் சாட்டையுடன் எழுந்தருளி இருப்பார் கருப்பண்ண சாமி. கீழே குட்டி பூதம் ஒன்றும் அழகுறக் காட்சி தரும். இவர் இக்கோயிலின் காவல் தெய்வம்.
உள் பிரகாரத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியோர் மூன்று புரமும் காட்சி தருகிறார்கள். 
முருகன் சந்நிதிக்கு எதிரே சண்டேசர். சிவன் கோவில் போல இங்கே சண்டேசரும் பைரவரும் இருப்பது விசேஷம். 

ஸ்ரீ விசாலாக்ஷி சந்நிதி
ஸ்ரீ பைரவர்
நவக்ரஹம்

கொப்புடையம்மன் கோவிலில் சித்திரைச் செவ்வாய் எனப்படும் தேர்த்திருவிழா விசேஷம். அன்று சம்பந்தப்புரங்கள் பழம் தேங்காய் எடுத்துக் கொண்டு சாமியைத் தரிசித்து சம்பந்தம் செய்த வீட்டில் விருந்துண்டு செல்வார்கள். 

செவ்வாய்ப் பெருந்திருவிழா என்று காப்புக் கட்டுவார்கள். பெரியவனுக்குத் தண்ணீர் வைத்தல் என்று ஒரு நிகழ்வு நடைபெறும். மூன்றாம் செவ்வாய் அன்று பூச்சொரிதல். ஆடிச் செவ்வாய், மார்கழித் திருப்பள்ளி எழுச்சி விசேஷம். 

இங்கே இருக்கும் மூலவரே உற்சவர். மூலவரும் ஆதிசங்கரர் அமைத்த ஸ்ரீ சக்கரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். கிழக்குப் பார்த்த சந்நிதி. தனி அம்மன் கோயில் கொண்டுள்ள கருவறை. இராஜ கோபுரத்தின் மூன்று நிலைகளிலும் துவார பாலகிகளும், ஐயனார், கருப்பர், பூதகணங்களும், விநாயகர், முருகன், லெக்ஷ்மி, சரஸ்வதி ஆகியோர் காட்சி அளிக்கின்றார்கள். பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்யப்படும் கோவில் இது. கடந்த 2023 செப்டம்பரில் இங்கே கும்பாபிஷேகம் நடந்தது. 

கொப்பு என்றால் சிறப்பு என்றும் அர்த்தம். மேலும் கொப்பு என்றால் கிளை என்றும் பொருள்.. இங்கே தல விருட்சம் வில்வம்.

மகர்நோன்பின் போது குதிரை வாகனத்தில் அம்பு போட்டுக் கம்பீரமாகக் காரைக்குடியை ஆட்சி செய்ய வரும் அம்மனைக் காணக் கண் கோடி வேண்டும். பனை மரத்தால் மற்றும் தையிலான் கொடியினால் இணைத்துக் கட்டப்பட்ட தேரைக் காணவும் கூட்டம் அள்ளும். அடுத்துத் தெப்பத் திருவிழாவும் விசேஷம். 

திருமணம், குழந்தைப் பேறு, ஆரோக்கியம் ஆகியன நல்கும் அம்மன். இங்கே எதிரே உள்ள நகைக்கடைக்காரர்கள் மற்றும் மற்ற கடைக்காரர்களும் அம்மன் சந்நிதியில் சாவியை வைத்து எடுத்துச் சென்றுதான் கடையையே திறப்பார்கள். 
காரை மரங்கள் அடர்ந்த இடத்தைச் சுத்தம் செய்து மக்கள் குடியேறியதால் இது காரைக்குடி எனவும் கல்லுக் கட்டிடங்கள் கட்டப்பட்டதால் இவ்விடம் கல்லுக்கட்டி எனவும் அழைக்கப்படுகிறது. 

காரைக்குடி செஞ்சையில் காட்டம்மன் கோயில் உள்ளது. இந்த அம்மன் கொப்புடைய அம்மனின் அக்கா. இவருக்கு ஏழு பிள்ளைகள் உண்டு. தன் அக்காவின் பிள்ளைகளைத் தேரில் கொழுக்கட்டை கொண்டு கொப்புடையம்மன் பார்க்கச் செல்வதாக ஐதீகம். ஆனால் அக்காவோ பிள்ளையில்லாத தங்கை பார்க்கக் கூடாது என்று ஒளித்து வைத்ததாகவும் அதனால் கோபமுற்ற தங்கை அப்பிள்ளைகளைக் கல்லாக்கிவிட்டுக் காரைக்குடிக்கு வந்து தெய்வமாக அமர்ந்ததாகவும் செவி வழித் தகவல். 

கொப்பு என்றால் பசிய கிளை என்றும் அர்த்தம். நான்கு கரங்கள் கொண்ட இவள் தன் வலக்கரத்தில் அபய முத்திரை தாங்கி இருக்கின்றாள். வலது மேல் கை சூலத்தை ஏந்தியபடி உள்ளது. இடது மேல் கை பாசத்தை ஏந்தியபடியும் இடது கீழ்க்கை கபாலத்தைத் தாங்கியபடியும் உள்ளது. 

இங்கே மக்களின் எல்லா வேண்டுதல்களும் பலிக்கின்றன. சென்று வந்தால் மனதுக்கு நிம்மதியும் ஆன்மீக அதிர்வுகளும் பெருகுகின்றன. ஒரு முறை சென்று வாருங்கள். தொடர்ந்து செல்வீர்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...