எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 30 ஆகஸ்ட், 2023

தென் திருப்பதி அரியக்குடி

தென் திருப்பதி அரியக்குடி









திருப்பதிக்கு நேர்ந்து கொண்டால் கூட அந்தப் ப்ரார்த்தனையை அரியக்குடி பெருமாள் ஏற்றுக் கொள்வதால் நிறைவேற்றி விடலாம். ஆனால் அரியக்குடியில் நேர்ந்துகொண்டால் அந்தப் பிரார்த்தனையை அங்கேயேதான் நிறைவேற்றவேண்டும். அந்தத் திருவேங்கடமுடையான் அவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்பார்கள்.

பெருமாளை வணங்குபவர்கள் அரியக்குடி, திருப்பதி, தென் திருப்பதி, காரமடை , திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், காஞ்சி அத்திவரதர், கோவை பெரிய நாயக்கன் பாளையம் பெருமாள், தில்லி வைகுண்டநாதர், மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி, கும்பகோணம் சாரங்கபாணி, சக்ரபாணி, சிதம்பரம் பெருமாள், ஸ்ரீரங்கம் பெருமாள்  மற்றும் 108 வைணவத் தலங்கள்,  இன்னும் அருகே உள்ள பெருமாள் கோயில்களுக்குச் சென்று தரிசிப்பது வழக்கம்.

அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் உலகச் சிறப்பு வாய்ந்தது. சுயம்பு மூர்த்தி. சேவுகன் செட்டியார் என்பவர் இக்கோயிலைக் கட்டியுள்ளார். ராமானுஜர் காலத்தில் இதன் உற்சவமூர்த்தி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் பள்ளியறைக் கதவும் அதன் இரு பக்கமும் பிரம்மாண்டமாய் காய்கறிச் சாறுகள் கொண்ட இயற்கை வண்ண ஓவியங்களால் வரையப்பட்டுள்ள பெரிய திருவடியும் சிறிய திருவடியும் கண்ணைக் கவர்பவை.

திருப்பதி பெருமாளைச் சேவிக்கச் சென்ற சேவுகன் செட்டியார் அவர்கள் முதுமை அடைந்ததால் மலை ஏற முடியாமல் தவிக்க பெருமாளே அவர் வசிக்கும் இடத்துக்கு அருகில் இருப்பதாக அருள் பாலித்துக் கோயில் கொண்டதால் திருப்பதியை விட அரியக்குடியே அதிகம் சக்தி கொண்டது என்கிறார்கள்.இதைத் தென் திருப்பதி என்றும் சொல்கிறார்கள்.

சேவுகன் செட்டியார் தேடியபோது துளசிச் செடியும் காளாஞ்சியும் குங்குமமும் கண்ட இடத்தில் மூலவர் கிடைத்ததாகச் சொல்வார்கள்.  அங்கேயே பிரம்மாண்டமாகக் கோயில் ( கல் மண்டபங்கள் ) எழுப்பி உள்ளார்கள். வெளிப்பிரகாரத்தில் தசாவதாரச் சிலைகள் உள்ளன. மிகச் சிறப்பான வைணவத்தலம் இது.

வருடா வருடம் புரட்டாசி சனிக்கிழமைகளில் தரிசனம் செய்யக் கூட்டம் அள்ளும். வைகுண்ட ஏகாதசியன்று பெருங்கூட்டம் இருக்கும். வீட்டிலேயே மானஸபூஜை செய்து விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பார்கள். முடிந்தவர்கள் நாலாயிரம் திவ்யப் ப்ரபந்தமும் படிப்பார்கள்.

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் 1
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே. 11

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோ ரமே 1
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே 11

அரியக்குடி கோயில் ஐநூறு ஆண்டுகளுக்கு உட்பட்டதுதான் என்றாலும் அதன் கீர்த்தி அளவிடற்கரியது.திருப்பதிக்கு நிகரான பெருமை உடையது. அதன் கோயிலும் திருச்சுற்று மாளிகையும் பிரம்மாண்டமானது. இயற்கை வண்ணங்களால் வரையப்பட்ட ஓவியங்களுடன் கண்கவர் காட்சி கொண்டது.

இங்கே பெருமாள் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி இருந்தாலும் இதன் உற்சவர் சேவுகன் செட்டியாரால் ஸ்ரீரங்கத்தில் உடையவரிடமிருந்து கேட்டுப் பெற்றுக் கொண்டுவரப்பட்டதாம். திருப்பதியிலிருந்து சடாரியும் திருமயத்திலிருந்து அக்னியும் கொண்டு வரப்பட்டு இக்கோயிலின் திருப்பணி நடைபெற்று உள்ளது. திருப்பதியிலிருந்து சடாரி வந்ததால் இது தென்திருப்பதி என்று வழங்கப்படுகிறது.

ஹரி > அரி குடி கொண்ட ஊர் என்பதால் அரியக்குடி என வழங்கப்படுகிறது. மிக அழகான ஒன்பது நிலைக் கோபுரம். அதன் கருடாழ்வாரின் இருபுறமும் சிங்கங்கள் அமைந்து கவினுறக் காட்சி தருகிறார்கள். இவருக்கு ஒவ்வொரு மாத சுவாதி நட்சத்திரத்தன்றும் சிறப்புப் பூஜை நடைபெறுகிறது. ஆடி சுவாதியன்று ”மகா சுவாதி” பூஜை சிறப்பாக நடக்கும்.



மூலவர் திருவேங்கடமுடையான் ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார். இவரின் ஒவ்வொரு வாகனங்களும் மிகப் பிரம்மாண்டமானவை. அலமேலு மங்கைத் தாயார் சந்நிதி எழில் வாய்ந்தது. இச்சந்நிதியின் வெளிப்புற மண்டபத்தில் இக்கோயிலை ஆக்கம் செய்த, மற்றும் திருப்பணி செய்த நகரத்தார்களின் சிலைகள் தூண்கள்தோறும் நிறுவப்பட்டுள்ளன.

திருச்சுற்று மாளிகைப் பத்தி. மிகப் பெரியது & நீண்டது. மூன்று திருச்சுற்றுக்கள் உள்ளன. அரியக்குடிக் கோயில் தூண் சிற்பங்கள் அழகானவை. கோதண்டராமர், அஞ்சனை மைந்தர், பாண்டுரங்க விட்டலன், பண்டரிநாதன், மேலும் சுற்றுத் தூணில் வைணவத் திருச்சின்னங்கள் மூலவரின் நேர் பின்புறச் சுற்றுப் பத்தியில் வைணவச் சின்னங்களான சங்கு, சக்கரம், திருமண் பொறிக்கப்பட்டுள்ளன. ராமர், ஆண்டாள் ஆகியோருக்குத் தனிச்சந்நிதி உள்ளது.

வைகுண்ட ஏகாதசியில் விரதமிருந்து அரியக்குடிப் பெருமாளைத் தரிசித்து மறுநாள் துளசி தீர்த்தம் அருந்திப் பழ ஆகாரம் கொண்டு முடிப்பார்கள்.  அநேகர்  நெல்லிக்காய் தயிர்ப்பச்சடி, அகத்திக்கீரைப் பொரியல், சுண்டைக்காய்ப் பச்சடி, கருணைக்கிழங்குக் குழம்பு, பாசிப்பருப்பு மசித்து பச்சரிசிச் சோறு, நெய், தயிர் உண்டு விரதம் முடிப்பார்கள். முதல்நாள் தூக்கம் வராமல் இருக்க ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்வதும் பரமபதம், தாயம் விளையாடுவதும் உண்டு.

அரியக்குடியில் பிரகாரத்தில் இருக்கும் அழகு கருடாழ்வார். இதன் புஷ்கரணியின் பெயர் ஆகாச கங்கை. அது இதன் எதிரில் படிகள் வைத்த மிகப் பெரிய சைஸ் கிணறு போல் இருக்கும். ஒன்பது நிலை ராஜ கோபுரம். தெங்கிளங்கீற்றுகளுக்குள் ஒய்யாரக் காட்சி தருகிறது.

உள்ளே புகைப்படம் எடுக்க முடியாது. எனவே வெளியே அழகுக் காட்சி தரும் பெருமாளும் தாயாரும்.உள்ளே தீர்த்தமும், சடாரியும், குங்குமமும் கிடைக்கும் . சேவித்துக் கொண்டு வெளியே வந்தால் மிகப் பிரகாசமான ஒளி முகத்தில் படரும். அவ்வளவு பாசிட்டிவ் எனர்ஜி.




நந்தவனத்தில் இருக்கும் பெரிய மணி. ( நீதி மணி ?!) கீழே ஒரு பசுவின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. கோயிலின் வலது மூலையில் உயரத்தில் அமைந்து இருப்பது மூலக்கருடன் சந்நிதி. வேண்டுதல்கள் நிறைவேற 108, 1008  என்று வேண்டிக்கொண்டு தேங்காயைச் சுவற்றில் வீசி உடைப்பார்கள். மூலைக்கருடனுக்குப் பின்னால் இருப்பது சொர்க்க வாசலில் இருந்து வரும் வழி. கோயிலின் முன் புற நடை மிகவும் நீண்டது. பிரம்மாண்ட கோட்டைக் கதவுகள் போன்ற வாயிற்கதவுகள். முன்புறம் தெரியும் தூண்களில் தசாவதாரச் சிற்பங்கள் இருக்கின்றன. கூர்ந்து பார்த்தால் தெரியும்.

அரியக்குடிக்கோயிலுக்கு எதிரில் அமைந்து இருக்கிறது ஸ்ரீ லெக்ஷ்மி நரசிம்மர் கோயில். சுதர்சன சக்கரத்தாழ்வார் சந்நிதி உள்ளே இருக்கிறது.இங்கே தீர்த்தம் & அட்சதை கொடுப்பார்கள். துஷ்ட கிரகங்களின் வாதை நீங்க இங்கே நெய்விளக்குப் போடுதல் பிரசித்தம். இங்கே ஒரு அழகான நாழிக்கிணறு இருக்கிறது.

இங்கே அனுமார் சந்நிதியும் இருக்கிறது. தனிச்சந்நிதியில் சக்கரத்தாழ்வார் ஒரு புறமும் நரசிம்மர் ஒரு புறமும் அருள் பாலிக்கிறார்கள். முன்புறத்தில் யோக நரசிம்மர் லெக்ஷ்மி சமேதராக அருள் பாலிக்கிறார். சுதர்சன ஹோமம் செய்யப்படுகிறது. திருமணம் நிறைவேற லெக்ஷ்மி நரசிம்மரை ஒன்பது வாரம் தரிசித்து அர்ச்சனை செய்து வேண்டிக் கொள்கிறார்கள்.


அரியக்குடியில் நான்கு சிறப்புகள். முதலாவது மூலவர் சுயம்பு மூர்த்தி மேலும் ராமானுஜர் அளித்த உற்சவர். இரண்டாவது மிக மிக விசேஷமான சக்தி வாய்ந்த மூலைக் கருடன் சன்னதி. மூன்றாவது லெக்ஷ்மி நரசிம்மர் இங்கே சிறப்புப் பெற்றிருப்பதால் தனிக்கோயில் அமைந்துள்ளது. நான்காவதாக இவர் கோயிலுக்கு உள்ளேயே பிரகாரத்தில் யோக நரசிம்மருக்கும்,சக்கரத்தாழ்வாருக்கும் தனிச்சந்நிதி அமைந்துள்ளது.

கோவில் :அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில்.

ஸ்ரீதேவி பூதேவி சமேத திருவேங்கடமுடையான்.

லெக்ஷ்மி நரசிம்மர், மூலைக்கருடன்.

இருக்குமிடம். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து 5 கிலோமீட்டர் தூரம்.

திறந்திருக்கும் நேரம்:-- காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணியிலிருந்து 8 மணி வரை.

திருமணத்தடை நீங்க தாலி செலுத்தித் திருமஞ்சனம் செய்விக்கிறார்கள். குழந்தை பாக்கியம் பெற, கல்வியில் சிறந்து விளங்க வேண்டிக் கொள்கிறார்கள்.  பில்லி சூன்யம் அகல இங்கே பிரார்த்திக் கொள்கிறார்கள்.

ஃபோன் நம்பர் :-- 04565 231299.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...