சமர்ப்பணம் :- அன்பிற்கினிய பாட்டி ஆயாக்கள்.
சோகி சிவா நாவலில் என்னுரை. :-
சமர்ப்பணம் :- அன்பிற்கினிய பாட்டி ஆயாக்கள்.
என்னுரை:- வெக்கையும் கரம்பையும் நிரம்பிய செட்டிநாட்டு மண்ணில் செம்புறாங்கற்களின் மேல் கம்பீரமாய் நிற்பவை வலசை வந்த நகரத்தார்களின் இல்லங்கள். அங்கே இந்த நூற்றாண்டு வரை கொண்டு விக்கச் சென்ற கணவர்களை எதிர்நோக்கி வாழ்ந்து வரும் ஆச்சிகள் ஏராளம். சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 72 ஊர்களில் வாழ்ந்து வரும் ஆச்சிகள், ஆயாக்கள், அப்பத்தாக்கள், பாட்டி ஆயாக்களில் அனைவரிலும் நாம் வாழ்வரசிகளையே அநேகம் காவிய நாயகிகளாகப் பார்த்திருப்போம். ஆனால் அந்தக் கோட்டை வீடுகளில் கணவனைப் பிரிந்த வெள்ளைச்சீலைக்கார ஆச் சிகளின் தனிமைத் துயர் அவர்களால் மட்டுமல்ல. வேறு எவர்களாலும் வரைந்து காட்டப்படவே இல்லை, இன்றுவரை.
பணங்காசு, உறவுமுறை, வாழ்க்கைநெறி ஆகியவற்றில் கட்டுக்கோப்புடன் வாழ்ந்து வரும் ஒவ்வொரு வெள்ளைச்சீலைக்கார ஆச்சியின் துறவும் ஞானியரின் தவத்திற்கு ஒப்பானது. அவர்களின் கோபம் மற்றும் அனைவரையும் தூரத்தில் வைக்கும் அவர்களது செயல்களை வெறுக்கும் நாம் அவர்களுக்குள்ளும் ஒவ்வொரு நொடியிலும் துடிக்கும் வாழ்விற்கான ஆசைகளைப் பற்றித் தெரிந்து உணர்ந்துகொள்ளவே சிவகாமி என்ற ஆச்சியை இக்கதையின் நாயகியாகப் படைத்துள்ளேன்.
படாடோபம், ஆடம்பரம், பகட்டு, செல்வச்செழிப்பு, சாதி, இனம், மதம் எல்லாம் தாண்டி எல்லா மனித உயிரும் ஏங்குவது சராசரியான வாழ்வியல் இன்பங்களைப் பெறுவதற்குத்தான். அவை ஏதும் வாய்க்கப் பெறாவிட்டாலும் வீடு, சொத்து, காசு பணம், நகை நட்டு இவை அள்ள அள்ளக் குறையாமல் எவ்வளவு இருந்தாலும் அனைத்தையும் தான் துளிக்கூட அனுபவிக்காமல் பிறர்க்குச் சேர்த்து வைத்துச் செல்வதே இத்தகைய ஆச்சிகளின் பணி.
வெள்ளை உடை என்பது அக்காலத்தில் விதிக்கப்பட்டது. அந்த வெள்ளைச்சீலைக்கார ஆச்சிகளின் வாழ்க்கையையும் அவர்களின் முதுமையின் தனிமைத் துயரையும் அருகில் இருந்து பார்த்துப் பரிதவித்ததின் விளைவே இக்கதை. சில நூற்றாண்டுகளாக இவ்வாறு தனிமையில் தவித்து வாழும் பெண்களின் - நம் ஆயாக்கள், அப்பத்தாக்கள், பாட்டி ஆயாக்களின் - துயரை இக்கதை மூலம் இறக்கி வைத்துள்ளேன்.
காலம் மாறிவிட்டது. கோட்டை வீடுகள் இடிந்து விட்டன. கலப்புத்திருமணங்கள் பெருகி விட்டன. இன்று பெண்களுக்கான வெளி பிரபஞ்சத்தின் எல்லைவரை நீண்டுவிட்டது. இது ஒரு சமூகத்தின், வாழ்வியலின் ஆவண மிச்சம்.
இதற்கு அட்டைப்படம் வரைந்த ஓவியர் திரு பிரபாகரன் அவர்களுக்கும், முன்னுரை கொடுத்த திரு துரை. அறிவழகன் அவர்களுக்கும், இந்நூலைப் பதிப்பிக்கும் டிஸ்கவரி நிலையத்திற்கும் சகோதரர் வேடியப்பன் அவர்க்ளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
தேனம்மைலெக்ஷ்மணன்.
காரைக்குடி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)