ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும்:- 4
பாரி, அதியன் போன்ற ராஜா கதைகள் கேட்ட அன்று இரவு
ஆதித்யாவுக்கும் ஆராதனாவுக்கும் தூக்கம் வரவில்லை. தாத்தாவின் இருபக்கமும் யார்
படுப்பது என்று வழக்கம்போல் போட்டி போட்டுவிட்டு ஆளுக்கொரு பக்கம்
படுத்துக்கொண்டார்கள். ”விட்டுக்கொடுத்துப் போகணும் என்று தாத்தா சொல்லி
இருக்கிறாரே. அப்புறம் கதை சொல்ல மாட்டாரே ” என்று கவலை வேறு.
”தாத்தா அம்மா இன்னிக்கு என் பழைய புக்கு,நோட்புக்கை எல்லாம் மஞ்சும்மா
பையனுக்குக் கொடுத்துட்டாங்க.”
”அதுனால என்ன உனக்குத்தான் புது நோட்டு, புக்கு எல்லாம் வந்திருச்சில்ல”
என்றார் ஆராவமுதன்.
”இல்ல தாத்தா நான் எல்லா நோட்லயும் புக்லயும் பாப்பாய், ஃப்ளிண்ட்ஸ்டோன், ஸ்கூபி டூபிடூ, ஹீமேன், போகேமான், ஆஸ்ட்ரிக்ஸ், டெக்ஸ்டர், டின் டின்னு எனக்குப் பிடிச்ச எல்லா கார்ட்டூன் கேரக்டர் ஸ்டிக்கரும் ஒட்டி இருந்தேன் தாத்தா”. என்று குறைப்பட்டான் ஆதித்யா.
”என்னடா கண்ணு இதுக்குப் போய் வருத்தப்படுறே. இந்த வருஷம் புதுசா ஸ்டிக்கர்
வாங்கித் தரேன் அத நோட்டுல ஒட்டிக்க” என்றார்.
”சரி தாத்தா. இருந்தாலும் பழைசு எல்லாமே கிடைக்குமா” என்று ஆதங்கப்பட்டான்
ஆதித்யா.
”எல்லாம் கிடைக்கும் கவலைப்படாதே.” என்று அவன் கால்களைப் பிடித்துவிட்டார்
தாத்தா.
”தாத்தா ..தாத்தா வள்ளல் ராஜா கதைகள் நல்லா
இருக்கு இன்னும் ராஜா கதைகள் இருந்தா சொல்லுங்க ” என்றான் ஆதித்யா.
தாத்தா தலையைக் கோதிவிட சுகமான தூக்கத்தில் ஆழத் துவங்கி இருந்த ஆராதனா
விழித்துக் கொண்டாள். ’தாத்தா ராஜா கதை ராஜா கதை’ என்றாள்.
“இருங்க சொல்றேன்”. என்றபடி எழுந்து வேகமாக ஓடிய ஃபேனைக் குறைத்து வைத்து
இருவருக்கும் போர்வையைப் போர்த்திவிட்டபடி நடுவில் படுத்துக் கதகதப்பாய்க்
கட்டிப்பிடித்துக் கதை சொல்ல ஆரம்பித்தார் ஆராவமுதன்.
“வள்ளல் ராஜான்னாலே மொதல்ல ஞாபகம் வரவேண்டியது இவர் பேருதான். ஏன்னா இவர்
கொடை வள்ளல். யார் சொல்லுங்க பார்ப்போம்” என்றார்.
”தெரில தாத்தா நீங்க சொல்லுங்க” என்றாள் ஆராதனா. ”தாத்தா கர்ண மஹாராஜாவா”
என்று கேட்டான் ஆதித்யா. ”வெரி குட் கரெக்டா சொன்னே . தானப் பிரபு. கொடையளிப்பதில்
இவரை விஞ்ச யாருமே கிடையாது.”
”இவர் அங்கதேசத்து ராஜா. தன்னோட அங்கத்தைச் சுத்தியிருந்த கவசத்தையே பிச்சு
இந்திரன் கேட்டப்ப தானமா கொடுத்திருக்காரு. ”
”இவர் ஏன் தாத்தா கவசத்தைக் கொடுத்தாரு மாட்டேன்னு சொல்லி இருக்கலாம்ல.”
என்று கவலைப்பட்டான் ஆதித்யா. ’கவசத்தைப் பிச்சா வலிக்குமே’ என்று ஆராதனாவுக்கும்
கவலை.
”அப்ப சூரியபகவான் வந்து தடுத்தாரு. ஆனாலும் இவர் தானம் கொடுத்துட்டாரு ”
”சூரியபகவான் ஏன் வந்து தடுத்தாரு தாத்தா” என்றாள் ஆராதனா
தாத்தாவின் மார்பின்மேல் கைவைத்து சாய்ந்து பார்த்தாள். அவள் தலையைக்
கோதியபடி ”கர்ணன் கதையை முதல்ல சொல்றேன். அப்புறம் அவர் தானம் பத்தி சொல்றேன்”
என்றார்.
“துர்வாச முனிவருக்கு குந்திதேவி பணிவிடை
செய்ததால் அவர் மனமகிழ்ந்து குந்திக்கு ஒரு வரம் அளித்தார். அந்த வரத்தை சோதிக்க
எண்ணி குந்தி மந்திரம் சொல்ல அவர் முன் சூரிய பகவான் தோன்றினார். அப்ப
சூரியபகவானுக்கும் குந்தி தேவிக்கும் பிறந்தவர்தான் கர்ணன். சூரியபகவானைப்போல
கர்ணன் பிரகாசமா தேஜசா இருந்தார். மேலும் கவசத்தோடயும் காதுகளில் ( கர்ண குண்டலம்
) குண்டலத்தோடயும் பிறந்ததால கர்ணன் அப்பிடின்னு அழைக்கப்பட்டார்.
அதிரதன் அப்பிடிங்கிற தேரோட்டியால் வளர்க்கப்பட்ட கர்ணனுக்கு ராஜா துரியோதனின்
நட்பு கிடைத்தது. ஒரு போட்டியில் கலந்துக்கப் போனப்ப இவர் ராஜா இல்லைன்னு
பாண்டவர்கள் அவமானப்படுத்த துரியோதனன் உடனடியாக இவரை அங்கதேச அரசனாக்கினார்.
அரசனானதும் கர்ணன் காலை வேளையில் சூரியபகவானை வணங்கி வந்தார். அந்த
வேளையில் இவர்கிட்ட யார் எது கேட்டாலும் இல்லைன்னு சொல்லாமல் கொடுக்கணும்கிற
கொள்கை வைத்திருந்தார்.
குருஷேத்திரப் போரில் துரியோதனன் பக்கம் போரிடப்போகும் இவர் கவசத்தோட
இருந்தா இவரைப் பாண்டவர்களால் ஜெயிக்க முடியாதுன்னு அர்ஜுனரின் தந்தையான
இந்திரனுக்குத் தெரிஞ்சிருந்துச்சு. அது இருக்கவரைக்கும் கர்ணனுக்கு இறப்பு
கிடையாதுங்கிறதால அத தானமா வாங்கிட்டா போர்ல அர்ஜுனன் ஜெயிச்சிருவான்னு நினைச்சு
ஏழை அந்தணனா வேஷம் போட்டு வந்து கர்ணன் சூரியனைக் கும்பிடும் மதிய வேளையில வந்து
தானம் கேக்குறாரு இந்திரன்.
உடனே கர்ணனின் தந்தை சூரியனுக்குப் பொறுக்குமா. தன்னோட பிள்ளைகிட்ட
இருக்குற கவசத்தைச் சூதின் மூலம் கேக்க வந்திருக்கிறது இந்திரன்தான்னு
தடுக்குறாரு. ஆனா விதி யாரை விட்டுது. இது இதுதான் நடக்கணும்னு இருந்திருக்கு.
கொடுத்துச் சிவந்த கரங்களை உடைய கர்ணமஹாராஜா தன்னுடன் பிறந்ததில் இருந்து
சுற்றியிருந்த கவசத்தைப் பிய்த்துக் கொடுக்குறார். இது இவர் வள்ளல்தன்மையின்
உச்சகட்டம் இல்லையா. கொடுத்த வாக்குக்காக தன்னையும் இழப்பது எவ்ளோ பெரிசு. அதீதமான
பெருந்தன்மை குணம். அதுனால எவ்ளோதான் துன்பம் வரும்னாலும் கொடுப்பதை
விலக்கக்கூடாது.
ஆதித்யா நினைத்துக் கொண்டான்., ‘நோட்புக்
கொடுத்ததுக்கே கோபப்பட்டோமே, இங்கே தன்னோட கவசத்தைக் கொடுத்த கர்ணன் எவ்ளோ பெரிய
ஆளு ‘என்று கர்ணன் மேல் மதிப்பும் மரியாதையும் பெருகியது அவனுக்கு.
”கர்ணன் உண்மைலேயே வள்ளல் மகாராஜாதான் “ என்று கண்களை விரித்துச் சொன்னபடி
தலையணையில் சாய்கிறாள் ஆராதனா.
மூவரும் நெருங்கிப் படுத்தபடி கர்ணனின் வள்ளல்தன்மையை நினைத்துக்கொண்டே
தூங்கத் தொடங்குகிறார்கள்.
4. ஈவது விலக்கேல்
ஒருவர் மற்றொருவர்க்குக் கொடுப்பதைக் கொடுக்க வேண்டாமென்று தடுக்காதே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)