கூடையிலே என்ன பூ குஷ்பு
”நீ எங்கே என் அன்பே நீ இன்றி இனி நான் எங்கே.” என்று உருகிப் ”போவோமா ஊர்கோலம்” என்று திருமணம் முடித்த காதலர்களுக்குத் தேசிய கீதமாக விளங்கியது 92 இல் வெளிவந்த சின்னத்தம்பி படம். இதற்கு முன்னே ”சைனீஸ் பட்லர்” என்று தான் கலாய்த்த குஷ்பூவையே ”யாரு அந்த ராதிகா கண்ணனோட கோபிகா” என்று தன் நண்பர்கள் கலாய்க்கும் விதம் கார்த்திக் காதலிக்கும் படம்தான் வருஷம் 16.
மெழுகு பொம்மை போன்ற தோற்றம், லேசான சரிதா சாயலும், ஜீனத் அமன் சாயலும், மெல்லிய உருவமும் மீடியமான உயரமும் கொண்டவர் குஷ்பூ. பெண்மை விகசிக்கும் உடல், பெரிதான கண்கள், கொழு கொழு கன்னங்கள், கான்வெண்ட் பெண் தோற்றம், அழகிய பல்வரிசை, கால்கேட் புன்னகை, அபாரத் துணிச்சல், அசாத்தியத் தன்னம்பிக்கை, ரோஜா நிறம் இதுதான் குஷ்பூ. பின்னர் அவர் இரட்டை ரோஜாவாகிவிட்டார்!
முக்கால்வாசிப் படங்கள் கவர்ச்சி நாயகித் தோற்றம் என்றாலும் சில படங்களில் தன் உணர்ச்சி மிகு நடிப்பால் நெகிழச் செய்திருக்கிறார். சின்னத் தம்பி, வருஷம் 16, அலைபாயுதே ஆகியவற்றின் கிளைமாக்ஸ் சீன்ஸ், கிழக்கு வாசலில் கார்த்திக் பாடும் பாடிப் பறந்தகிளி பாடல் காட்சி ஆகியவற்றில் அவரின் உணர்ச்சி மிகுந்த நடிப்பு சிறப்பு.
”ஆண்பிள்ளை முடிபோடும் பொன் தாலிக் கயிறு என்னான்னு தெரியாது எனக்கு” என்று தாலி கட்டுவது பற்றித் தெரியாது எனக் கூறும் கிராமத்துப் பிரபு ஊரையும் உலகத்தையும் பற்றிப் பாடுவதையும் அதை ரசிகர்கள் ஏற்றுக் கேள்வி ஏதும் எழுப்பாததையும் வாசுவின் வசியம் என்பதா அல்லது குஷ்பூவின் ப்யூட்டி மேஜிக் என்பதா!
திருமணத்துக்கு முன்னான பாலியல் உறவுகள் பற்றிய கருத்து, மேடையில் கடவுள்களின் புகைப்படத்துக்கு முன் கால்மேல் கால் போட்டு செருப்பு அணிந்து அமர்ந்திருந்தது, கடவுள் உருவங்கள் வரைந்த சேலையை அணிந்தது, திமுக, காங்கிரஸ், பிஜேபி என்று 2010 இலிருந்து கட்சிகள் மாறியது, ஒரு காலத்தில் தான் ஒருமையில் ஏசித் தீர்த்த தேசியக் கட்சியிலேயே திரும்ப ஐக்கியமானது, தி கேரளா ஸ்டோரிஸ் பற்றிய விமர்சனம் என்று குஷ்பூ பற்றிய சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. ஆனாலும் பத்திரிக்கையாளர்களுக்கு கட்ஸ் இல்லை என்று அதிரடியாகக் கூறி சர்ச்சைகளில் முக்குளித்தவர் அவர்.
கொண்டையில் தாழம்பூ, நெஞ்சிலே வாழைப்பூ, கூடையிலே என்ன பூ குஷ்பூ என்று பாட்டிலும், குஷ்பூ இட்லி என்று ஹோட்டல்களிலும், புகழ்பெற்றவர் அவர். சொல்லப் போனால் ஒரு காலகட்டத்தில் அவருக்குக் கோவில் கட்டுவோம் என்று கூட சில பக்த ரசிகசிகாமணிகள் கூறி இருந்தார்கள். ஒருவழியாக அவர் குஷ்பூ சுந்தர் ஆனாரோ இல்லையோ தப்பித்தது தமிழகம்.
”உனக்கெனப் பிறந்தவ ரெக்கை கட்டிப் பறந்தவ இவதான், ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா, ஆசை மாமன் இவந்தான்னு பாட்டுப் படிச்சா. அண்ணாமலை அண்ணாமலை ஆசை வச்சேன் உண்ணாமலே, வச்சாலும் வைக்காமப் போனாலும் மல்லி வாசம், ரம்பம்பம் ஆரம்பம், எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசை கேட்டுக் கண்விழித்தேன், வருது வருது இளங்காற்று” என்று முன்னணி நடிகர்களுடன் குஷ்பூவின் பாடல்கள் அனைத்துமே இனிமையான மெலோடிஸ். பல்வேறு பாடல்களிலும் தன் பூசிய உடம்பை வைத்துக் கொண்டு ஜாலி பால் போல் குஷ்பூ துள்ளி ஆடுவது வசீகரம்.
”எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று அது ஏதோ உன்னிடம் இருக்கிறது” என்ற பாடலில் இவர் நடித்த போது எப்போதும் டப்பிங்கில் கேட்டு பழகிய இவரின் நிஜக்குரலைக் கேட்டதால் தமிழகத்தின் முன்னணிப் பத்திரிக்கை ஒன்று “எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று.. அது இவரின் குரல்தான் ””என்று கிண்டலடித்திருந்தது.
தர்மத்தின் தலைவன், வருஷம் 16, வெற்றி விழா,கிழக்கு வாசல் , மை டியர் மார்த்தாண்டன், மைக்கேல் மதன காமராஜன், நடிகன், சின்னத்தம்பி, கிழக்குக் கரை, பிரம்மா, மன்னன், சிங்கார வேலன், அண்ணாமலை, பாண்டியன், புருஷலட்சணம், இரட்டை ரோஜா, ஜாதி மல்லி, இந்து, நாட்டாமை, கோபாலா கோபாலா, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், உள்ளத்தைக் கிள்ளாதே, சுயம்வரம், விரலுக்கேத்த வீக்கம், அலைபாயுதே, அரண்மனை 2. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம்தமிழ் என 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 90ஸ் கிட்ஸின் கனவுக்கன்னி
பம்பாயில் 29,செப்டம்பர்,1970 இல் பிறந்தார். இவரது ரியல் பெயர் நகத்கான்.2000 ஆம் ஆண்டு இயக்குநர் & நடிகர் சுந்தர் சியுடன் திருமணம். அவந்திகா, அனந்திதா என்று இரு மகள்கள்.1980 இல் அறிமுகமாகி 20 வருடங்கள் திரையுலகில் கோலோச்சினார். அதன்பின் சின்னத்திரையிலும் நடித்தும் தொகுத்தும் நிகழ்ச்சிகள் தயாரித்தும் வருகிறார். இவர் மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், ஒரு கேரள மாநில திரைப்பட விருது மற்றும் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர். தற்போது தங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு அவ்னி சினிமாக்ஸ் என்று பெயரிட்டுள்ளனர்.
முதலில் ஹிந்தியில் 1982 இல் அவர் நடித்த தர்த் கா ரிஷ்தாவின் ”மைன் பரியோன் கி ஷெஹ்ஸாதி” என்ற தேவதைப் பாடல்தான் இன்றைக்கும் பள்ளிக் குழந்தைகளின் ஆண்டுவிழாப் பாடல்களில் முதல் தேர்வாக இருக்கிறது. பிரபுவுடன் 10 படங்கள் நடித்திருக்கிறார். தர்மத்தின் தலைவன், சின்னத்தம்பி போன்றவை மெகா ஹிட். அப்போதைய சூப்பர் ஸ்டார்கள் அனைவருடன் நடித்திருக்கிறார். எத்தனை ஹீரோக்களுடன் இவர் நடித்தாலும் கமலுடனும், ரஜனியுடனும் நடித்த அத்தனை படங்களும் நன்றாக இருக்கும். தமிழகப் பொதுஜனமோ சிவாஜி பத்மினி ஜோடியைப் போல பிரபு குஷ்பு ஜோடியையும் கொண்டாடித் தீர்த்தது.
மைக்கேல் மதன காமராஜன் ஷாலினி சிவராமன், சின்னத்தம்பி நந்தினி, மன்னன் மீனா, சிங்கார வேலன் சுமதி, இரட்டை ரோஜா பிரியா என உயர் மத்தியதரக் குடும்பப் பாங்கான பெண்கள் பாத்திரங்களை சிறப்பாகச் செய்துள்ளார். விரலுக்கேத்த வீக்கம் சுகுணா மத்தியதர குடும்பத்தலைவி. லிவிங்ஸ்டன் மனைவியாக மிக யதார்த்தமாக இவர் நடித்த படம் இது என்பதால் எனக்கு மிகப் பிடித்தது. அதே போல் ஜாதிமல்லியில் இவர் நடித்த பாத்திரமும் எனக்குப் பிடித்திருந்தது. முகேஷும் குஷ்பூவும் நடித்த மத்திம வயதுக் காதலைச் சொன்ன வித்யாசமான படம். அரண்மனை 2 வில் சிறப்புத் தோற்றம்.
1991 சின்னதம்பி நந்தினிக்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது கிடைத்தது, இப்படத்திற்காகச் சிறந்த நடிகைக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது மேலும் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருது பரிந்துரைக்கப்பட்டது. ரிக்ஷா மாமா, நாட்டாமை, கோலங்கள் மற்றும் ஜாதிமல்லிப் படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.
தெலுங்கில் 20 படம் , மலையாளத்தில் 15 படம், கன்னடத்தில் 20 படம், ஹிந்தியில் 18 படம், தமிழில் நூற்றிப் பதினைந்து படங்கள் நடித்துள்ளார். நிறையப் பாடல்களிலும் படங்களிலும் சிறப்புத் தோற்றம் கொடுத்துள்ளார். தொலைக்காட்சியில் ஜாக்பாட் நிகழ்ச்சி, கல்கி, ஜனனி,குங்குமம், நந்தினி, லெக்ஷ்மி ஸ்டோர்ஸ் என இன்னும் பல தொடர்கள், ரியாலிட்டி ஷோக்கள்.மானாட மயிலாட, அழகிய தமிழ் மகன், மற்றும் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸில் நடுவர் என சின்னத்திரையில் இன்னும் தொடர்கிறது இவரது பங்களிப்பு.
குஷ்பூ இட்லி, குஷ்பூ ஜிமிக்கி, குஷ்பூ புடவை, குஷ்பூ ஷர்பத், குஷ்பூ காஃபி, குஷ்பூ காக்டெயில் எனத் தமிழகமே நதியாவை ஃபேஷன் ட்ரெண்ட் செட்டராகக் கொண்டாடியதுபோல் குஷ்பூவை மார்கெட்டிங் டார்கெட்டாகக் கொண்டாடியது. மார்ஃபிங் செய்யப்பட்ட தனது புகைப்படத்தை மாக்ஸிம் இதழில் வெளியிட்டதற்காக வழக்குத் தொடுத்து வென்றவர் இவர். தென்னிந்திய சினிமா மற்றும் ஹிந்தி அல்லாத இந்திய சினிமாக்களுக்கு உலக அரங்கிலும், திரைப்பட விழாக்களிலும் அங்கீகாரம் தரவேண்டும் எனக் குரல் கொடுத்து வருகிறார். தேசிய மகளிர் ஆணையத்திலும் உறுப்பினராக உள்ளார். எந்தத் தடைகளையும்உடைத்துத்தொடர்ந்து செயல்பட்டுவரும் குஷ்பூவுக்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப். !
டிஸ்கி:- என் வாசகர் கடிதம். !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)