யூரோப் டூரின் ஆறாம் நாள் இத்தாலியின் ரோம் நகருக்கு வந்தோம். ரோம் நகரம் ஒரே நாளில் கட்டப்படவில்லை என்ற வார்த்தைக்கு ஏற்ப வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களினால் கட்டப்பட்ட ரோம் நகரைச் சுற்றிப் பார்த்தோம். நடந்து நடந்து சலித்தோம். பார்த்துப் பார்த்து அசந்தோம். இறப்பதற்கு முன் ரோமைப் பார்க்கவேண்டும் என்ற வாக்கியத்தை மெய்ப்பித்து விட்டோம்.:)
கொலோசியத்துக்குப் போய்வந்த பின் பொடிநடையாக இங்கே வந்தோம். இது ரோம் ஃபாரம் என்னும் இடத்துக்குச் செல்லு வழியில் உள்ளது என நினைக்கிறேன். ரோம் நகரத்தின் ஒவ்வொரு துணுக்கிலும் வரலாறு புதைந்துள்ளது.
விக்டர் இரண்டாம் இம்மானுவேலுக்கான நினைவுச் சின்னம் இது. குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர். தனித்தனியாய் இருந்த இத்தாலியை ஒருங்கிணைத்து ஆட்சி புரிந்தவர். எனவே மிகப்பெரிய நினைவுச் சின்னமாக அமைத்திருக்கின்றார்கள்.
தூண்களுடன் மாபெரும் அரங்குகளை அமைப்பது அப்போதைய கட்டிடக் கலையாக இருக்கும் போல. இதற்குப் பல்வேறு பாணிகளும் அவற்றிற்கான தனித்தனிப் பேரும் சொல்கிறார்கள். பொதுவாக க்ளாசிக்கல் க்ரீக் ஆர்க்கிடெக்ஸர் பயன்பாட்டில் உள்ளது.
இது புனிதபேதுரு ஆலயத்தின் குவிமாடம்.இது ட்ராஜன் என்னும் மன்னர் அடைந்த வெற்றியைக் குறிக்க அமைக்கப்பட்டுள்ள தூண். ட்ராஜன்ஸ் காலம்ன் என்று அழைக்கப்படும் வெற்றித்தூண்.
இதில் இருபத்தி மூன்று படிவச் சுற்றுக்கள் உள்ளன. கர்ராரா என்னும் மலையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட மார்பிள் கற்களால் அமைக்கப்பட்ட இந்தத் தூணின் உட்புறம் டவருக்கு மேலேறிச் செல்ல 185 படிகள் உள்ளன. முன்பு ஈகிள் போன்ற உருவங்கள் பதிக்கப்பட்ட இதில் இப்போது புனிதத் தந்தை பீட்டர் அப்போஸ்தலரின் புனித உருவம் வைக்கப்பட்டுள்ளது.
பார்க்கப் பார்க்கச் சலிக்காதவை இவை இரண்டும்.
இது பேதுரு தேவாலயத்தின் பின்புறத் தோற்றம். குவிமாடம் காட்சி அளிக்கிறது.ரோம் ஃபாரம் என்னும் இடத்தில் உள்ள பழுதடைந்த வரலாற்றுச் சின்னங்கள்.
இங்கே தெரியும் ஒவ்வொரு கல்லின் மேலும் ஒரு வரலாறு அடங்கி உள்ளதாக எங்கள் டூர் கைட் ராகவன் சொன்னார்.
எதிரே தெரியும் ஏழு தூண்களும் அப்படியானவை. மாபெரும் மண்டபத்தைத்தைத் தாங்கிய அவை இன்று வெறுமே நிற்கின்றன.
கொலோசியம் போல் மினி கொலோசியம் என்ற ஒன்றும் உண்டு.
ட்ராஜன்ஸ் தூணுக்குப் பக்கத்திலேயே இன்னும் பல சிதைந்த தூண்கள்.
சில தூண்களின் மேலே ஏதேதோ உருவங்கள்.
இவருக்குத்தான் வெனிஸிலும் ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது.
வெனிஸும் விக்டர் இம்மானுவேலும்.
ஜூலியஸ் சீஸரும் நானும்.. ஒபிலிக்ஸ் காமிஸில் படித்த சீஸரை இங்கே சிற்பமாகக் காண்பேன் எனக் கனவிலும் நினைக்க வில்லை.
சீஸருடன் ஒரு செல்ஃபி.
வீனஸ் ஆலயத்தின் முன்னும் இவ்வாறு தூண்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்கள். இது கொலோசியம் போன்றதொரு சிதைவின் பக்கம் அமைந்த தூண்கள். ரோமன் ஃபாரமா எனத் தெரியவில்லை.
ரோமின் எங்கெங்கிலும் கோட்டை அமைப்புக்கள்தான். பழமையோடு இணைந்து புதுமையும் கலந்த கட்டிடங்கள் காட்சி அளிக்கின்றன.
ரியா சில்வியா என்ற பெண் பெற்ற இரட்டையர்கள் ரோமுலஸ், ரேமஸ் ஆகியோர் ஒரு ஓநாயின் பாலைக் குடித்து வளர்ந்ததால் எங்கெங்கும் ஓநாய் பாலூட்டும் இரட்டையர்கள் சிலை காணப்படுகிறது. இதை பைசா கோபுரத்தின் அருகிலும் பார்த்தோம். மேலும் கிமு 753 இல் இந்நகரை உருவாக்கி ரோமுலஸ் ஆண்டதால் இது ரோம் எனப் பெயர் பெற்றது.
கி மு 508 இலேயே குடியரசாக இருந்த நாடு. இங்கே பேசப்பட்ட லத்தீன் மொழியே உலகில் அதிகளவு பேசப்பட்ட ஆதி மொழியாயிருந்தது. விக்டர் இம்மானுவேல் நினைவகம், ட்ரிவி ஃபவுண்டன், புனித வாடிகன் சர்ச், ( நாட்டிற்குள்ளேயே இன்னொரு தேசம் - இத்தாலியின் ரோமுக்குள்ளே வாடிகன் தனி தேச அந்தஸ்து பெற்றது ), கொலோசியம், ட்ராஜன் தூண், ஜூலியஸ் சீஸரின் சிலை, புனித பேதுரு ஆலயம் போக இன்னும் பலவற்றைப் பார்த்தோம். மொத்தத்தில் ரோமாபுரியில் மிகச் சிறந்த உலாவாக அது அமைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)