எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 11 ஜூலை, 2023

காட்டுத்தீயும் காதல் நோயும்

காட்டுத்தீயும் காதல் நோயும்

 

“ஐயையோ ஓடியாங்க ஓடியாங்க” என்ற மாண்பனின் குரல் கேட்டு மொத்த பங்களாவும் விழித்துக் கொண்டது. அவன் மனைவி பொம்மியும் இன்னுமுள்ள எஸ்டேட் பணியாளர்களும் சத்தமிட்டபடி அங்கே இங்கே ஓடிக்கொண்டிருந்தார்கள்.

 

கைபேசியை சார்ஜரில் இருந்து எடுத்துப் பார்த்த சாம் வேகமாக எழுந்தான். ஜன்னல் திரைச்சீலை விலக்கிக் கண்ணாடியின் மூலம் பார்த்தான். செக்கச் செவேலென இது என்ன எரிமலைக் குழம்பு வழிந்து ஓடிவருகிறதா. ஆங்கிலப் படங்களைப் பார்ப்பது போல ஜன்னல் எல்லாம் ஒரே செங்காவி நிறம், புகை. வெக்கை அனலடிக்கத் துவங்கி இருந்தது. படபடவென மாடியிலிருந்து கீழிறங்கத் துவங்கினான். உடன் விழித்த தேவியும் எழுந்து ஓடினாள்.

 

ஓங்கி உயர்ந்திருந்த தேவதாரு மரங்களும், யூகலிப்டஸ் மரங்களும் மூங்கில் மரங்களும் தீப்பிடித்துச் செவ்வண்ணமாய் எரிந்துகொண்டிருக்க காஃபிக்கொட்டைச் செடிகளும், ஏலச்செடிகளும் பக்கத்திலிருந்த வெள்ளை மிளகாய்ச் செடிகளும் காய்ந்து கருகிக் கொண்டிருந்தன

 

சர்வெண்ட் குவார்டர்ஸில் அன்று வாரக் கடைசி நாளாதலால் வீட்டுக்கு வெளியில் தீமூட்டிக் குளிர்காய்ந்துவிட்டு உள்ளே சென்றபின் அடித்த காற்றில் பற்றிய தீப்பொறி அது. ..ரோஜாக்களும் கினியாக்களும் டேலியாக்களும் கூட அனலலையில் வாடி விழுந்துகொண்டிருந்தன.

 

மாண்பனும் பொம்மியும் தாங்கள்தான் காரணகர்த்தாக்கள் என்று தெரிந்தபின்னும் யாரெனத் தெரியவில்லை என்று பம்மிப் பயந்த குரலில் கூறினார்கள்.

 

 

காஸ் , கெய்சர், ரூம் ஹீட்டர் எனப் பல மாற்றங்கள் ஸ்கந்தபுரி எஸ்டேட் பங்களாவில் புழக்கத்துக்கு வந்தாலும் அதிக விருந்தினர் வரும்போது சமையல் விறகு அடுப்பிலேயே நடந்துகொண்டிருந்தது. இப்போது ஹீட்டருக்கு மாறினாலும் ஆதிகாலத்தில் கட்டப்பட்ட கணப்பே ஹாலின் பெரும்பகுதியும் உபயோகத்தில் இருந்தது.தாத்தா காலத்தில் வாங்கி அடுக்கிவைக்கப்பட்ட கலைப்பொருட்களின் கூடமாக அந்த ஹால் திகழ்ந்து கொண்டிருந்தது. இன்னும் அடுத்து அடுத்து வெளிநாடுகள் சென்ற இளையதலைமுறையினர் கொண்டுவந்த அலங்காரப் பொருட்களாலும் நிரம்பி இருந்தது மர ஷோகேஸ்கள்.

 

அம்மா அணிவிக்கும் ஸ்வெட்டருடன் அமர்ந்து கணப்பில் குச்சியைப் போட்டபடி அதில் சுழலும் தணலை வேடிக்கை பார்ப்பதே சிறுபிராயப் பொழுது போக்கு சாமுக்கு. வேலை செய்பவர் வீடுகளில் இன்னும் மரக்கட்டைகளைப் போட்டு எரித்தே சமையலும் நடந்து கொண்டிருந்தது.

 

பொங்கிப் பெருகும் நெருப்பு வெள்ளம் போல எஸ்டேட்டில் தீ வழிந்து பரவிக் கொண்டிருந்தது. ஒரு பக்கத்து ஜன்னல் கண்ணாடிகள் படபடவெனச் சிதறின. ஏதோ ஒரு மரத்திலிருந்து தேனீக்கள் சடசடவெனப் பறந்துவிழத் துவங்கின.

 

எஸ்டேட்டே ஒரு தீ ஊழிக்குள் சிக்கிக்கொண்டமாதிரி இருந்தது.. தீயணைப்புத் துறைக்கு ஃபோன் செய்தான் சாம் . அவர்கள் வந்து சேர முயன்ற அரை மணி நேரத்துக்குள் ஊழித்தீயில் சிக்கிச் சுருண்ட ஆலிலை போல ஆகியிருந்தது ஸ்கந்தபுரி எஸ்டேட்.

 

தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை அடித்து நெருப்பை அணைத்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் இன்னும் கொழுந்துவிட்டெரியும் தீப்போல சாமின் உள்ளத்தில் இந்த எஸ்டேட்டின் சரித்திரம் கொழுந்துவிட்டெரியத்துவங்கியது. தாத்தா ஞானசம்பந்தம் முதன் முதலில் வாங்கிய சொத்து இது. அடுத்த அடுத்த தலைமுறைகள் உத்யோகங்களுக்குப் போனாலும் முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாகக் குடும்பச் சொத்தாக மிச்சமிருப்பது.

 

எத்தனை பங்குதாரர்கள், எத்தனை நஷ்டங்கள், எத்தனை சூழ்ச்சிகள் தாண்டி இது தப்பிப் பிழைத்திருக்கிறது. எத்தனை முறை இதை விற்க முயற்சித்திருக்கிறார் தாத்தா. பங்குச்சந்தையில் வாங்கிய பங்குகள் விலை அதலபாதாளத்தில் இறங்கியபோது, கண்டெயினர்களில் வந்த வியாபாரப் பொருட்கள் கடலில் மூழ்கியபோது, விவசாயத்தில் பெருத்த நஷ்டமேற்பட்டபோது எல்லாம் மூழ்கிப் போக வேண்டிய இந்த எஸ்டேட் எல்லாவற்றையும் மீறித் தப்பித்துக் கைவசம் தங்கி விட்டது.

 

அம்மாவும் பாட்டியும் எவ்வளவு காஃபிக் கொட்டை, சீயக்காய், மிளகு, ஏலம், வெள்ளை மிளகாய் கொண்டுவந்து உறவினர்களுக்கும் அறிந்தவர் தெரிந்தவருக்கும் வழங்கி இருப்பார்கள்.

 

தாத்தா தஞ்சை மண்ணில் நிலம் வாங்கி, புத்தகங்கள் எல்லாம் வாங்கிப் படித்துச் செய்த விவசாயம்தான் காலை வாரி விட்டது. பங்குதாரர்கள் மட்டுமல்ல, இயற்கையும் பேரிடர் செய்து விளைந்திருந்த வயல் வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. இன்சூரன்ஸும் சரிவரக் கிடைக்காதபோது வயலா, எஸ்டேட்டா என்னும் பரமபத விளையாட்டில் வயல் பாம்புக்கடிபட்டுக் கீழிறங்க. எஸ்டேட் தப்பித்துக் கொண்டு தாத்தாவையும் காவு கொண்டது.

 

தாத்தா வைத்திருந்த மிச்சப் பங்குகளை மிகப் பெரும் பங்கு நிறுவனத்தின் ஃப்ரான்ஸைசை வைத்திருந்த செந்தில்நாதனிடம் விற்பதற்காகத் தந்தையுடன் சென்றிருந்தான் ஒரு முறை.

 

முத்தழகியை ஞாபகம் இருக்காஇதுதான் தேவி மதியம் கேட்ட கேள்வி.

 

சாமின் கண்கள் செவ்வண்ணமாய் ஜொலித்துக் கொண்டிருந்தன. மறுக்க மறுக்க அந்தக் காதல் தீ மூண்டெழுந்துகொண்டிருந்தது. முதல் காதல் பதின்பருவக் காதல். பத்தொன்பது வயதில் தான் பார்த்த பதினைந்து வயதுப் பருவப்பெண்ணின் மேல் எழுந்த காதல். அது இன்பாக்ஷுவேஷனோ , கிரஷாகவோ இருக்கக்கூடும் என்ற நினைப்பில் தேவியின் முகத்தைப்பார்த்தான். அங்கே.. 

 

ரோஸ்நிற கார்டன் வரேலி சாரியில் ஃப்ரில்ஸ் இணைத்து முத்து வைத்துத் தைக்கப்பட்டு நடக்கும்போது அங்கங்கே டைமண்ட் ஷேப்பில் ரோஜாக்கள் விரிந்து ரோஜாத் தோட்டமே உலாவந்தது போல நடந்துவந்த முத்தழகியைப் பார்த்த மயக்கம் வந்தது.

 

அவளையும் இவளையும் ஒருசேரச் சந்தித்த அந்தக் கணம் அவன் நினைவில் நிழலாடியது. கருகிய ரோஜாத்தோட்டமும் ஸ்கந்தபுரி எஸ்டேட்டும் அவன் கண்களுக்குள் புகைமயமாய்த் தோன்றியது. காதல் நோய் பீடித்ததுபோல சோபாவில் சரிந்து அமர்ந்தான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...