பஞ்சு மிட்டாய்
”பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பட்டு வண்ண ரவிக்கை போட்டு”. ’ஜிங்கு ஜக்கு சக்குச் சக்கு ஜிங்கு ஜக்கு சக்குச் சக்கு’ என்று கரகத்தை சுற்றிக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். தலையில் கிளி வைத்த கரகமும் பஞ்சவர்ணக்கிளிபோலச் சிவந்திருந்த அவளும் கை விரித்து ஆடுகையில் மொத்தக் கல்லூரிக் கூட்டமும் ஆ வென்று பார்த்துக் கொண்டிருந்தது.
அவளின் நீலக்கலர் சராய் போன்ற கீழுடுப்பும் அதன் மேல் மிட்டாய் ரோஸில் கவுன் போன்ற மேலுடுப்பும் முகத்தில் கொஞ்சம் அதிகப்படியான மேக்கப்பும் கரகாட்டத்துக்கான கலாசார உருவத்தை ஒரு நவநாகரீக யுவதியின் மேல் தீட்டி இருந்தது. தமிழனின் தொன்மக்கலையை ஒரு கல்லூரியில் அவளின் கம்பீரம் தன்னம்பிக்கையாக நிகழ்த்திக் கொண்டிருந்தது.
ஹூய் ஹோய் என்று அவள் ஸ்டேஜில் வந்தபோது கத்தியது மாணவர் கூட்டம். ரெக்கார்டரை விடச் சத்தமாகக் கத்தினாலும் அவள் நெஞ்சு நிமிர்த்திக் கரங்குவித்து ஒரு அழகான கும்பிடோடு நாட்டியக்காரியின் லாவகத்துடன் ஸ்டேஜுக்கு நடுவில் வந்து நின்றதும் அசந்தது சபை.
இசை முடிந்து குரல் ஆரம்பித்ததும் அந்தக் கரக மஹா ராணியின் ஆட்டத்தில் கட்டுண்டு கிடந்தது மொத்தக் கூட்டமும். இன்னும் இன்னும் என ஆச்சர்யத்தை விளைவித்துக் கொண்டேயிருந்தாள் அவள்.
கரகத்தை வைத்தபடியே ஸ்டேஜில் விரித்த புடவையின் மேல் படுத்து உருண்டு இடுப்புச் சுருக்கம் வைத்து முந்தானையை மேலே மடிப்பு வைத்து அழகாய் உடுத்தி எழுந்தாள். இமைகளின் மடிப்பின் மேல் நூலில் கோர்த்த ஊசியை ஏந்தி எழுந்தாள். பண நோட்டுக்களை இமைகளால் எடுத்தாள். அதை மாட்டியபடியே ஆடினாள்.
ஒவ்வொன்றாக லாவகமாகக் கரகம் விழாமல் அவள் செய்யச் செய்யப் பிரமிப்புக் கூடிக்கொண்டே போய் அப்ளாஸ் அள்ளியது. வழக்கம்போல ஸ்டேஜுக்கு மாணவிகள் செல்லும் பாதையில் நின்று நெருக்கடி கொடுத்து அவர்களைச் செல்லவிடாமல் இடிக்கும் மாணவர் பட்டாளம் கூட ஓடி வந்து பார்த்தது.
ஆட ஆட அனைவர் முகத்திலும் ஒரு பிரமிப்பை வரைந்து கொண்டேயிருந்தாள் அவள். அந்தக் கரகம் மீனாட்சி கிளியைப் போலத் தோன்ற அவள் கம்பீர மீனாட்சியாயிருந்தாள். கூட்டம் பக்த சபையாய் மாறி இருந்தது.
பக்கவாட்டுகளில் கை வைத்து ஆடியவள் கையில் ஒரு வாள் முளைக்க இன்னொருவரை அமர வைத்தும் படுக்க வைத்தும் வாழைக்காயை அவர்கள் தலையிலும் உடலிலும் வைத்து டக் டக் என்று வெட்டினாள். வாளோடு அவள் சுழன்று சுழன்று ஆட போருக்குப் புறப்படும் நாச்சியாளைப் போலவும் தோன்றினாள். அவள் வெட்ட வெட்ட அதிர்ச்சியில் ஹோ ஹோ என்று கத்தியது கூட்டம்.
ஒட்டு மூக்குத்தியும் தொங்கட்டானும் சுழன்று ஆட சாட்டைச் சடைப் பின்னலும் சுழன்று ஆடியது. கிறங்கிக் கிடந்த கூட்டம் அவளின் ஆட்டம் முடிந்து கூட்டத்தை விநயமாய் வணங்கியதும் வாயில் இரண்டு விரலைக் கொடுத்து பலத்த விசில் சத்தத்தில் அந்த மடோனா ஹாலையே இரண்டாக்கியது.
கொத்துச் சலங்கைகள் ஒலிக்க அவள் ஸ்டேஜை விட்டு இறங்கியதும் அந்தப் போட்டியின் முடிவு அறிவிக்கப்பட்டது. கல்லூரிகளுக்கிடையேயான கல்சுரல் போட்டியில் அவளது கல்லூரிக்குத்தான் முதல் பரிசு. அதிலும் அவளே மூன்று வகையான நாட்டியங்களில் முதல் பரிசு வாங்கி இருந்தாள். ஃபோ(ல்)க் டான்ஸ் சோலோ, க்ளாசிக்கல் சோலோ, வெஸ்டர்ன் சோலோ . முடிவு அறிவிக்கப்பட்டதும்தான் ஸாமுக்குத் தெரிந்தது.
* * * * *
”ஓ பஞ்சு மிட்டாய் ! ”என்றான்.
”மிஸ்டர் மைண்ட் யுவர் வேர்ட்ஸ் ” என்றாள் மிரட்டலாக. தாவணி கட்டிப் பார்த்த பெண்களே கல்லூரியில் அநேகம். இவள் பாண்ட், மினி ஸ்கர்ட்டில் வந்து கலக்குவாள். அவ்வப்போது பார்த்தாலும் அறிமுகம் இல்லாமலே இருந்தது.
அன்று ஒரு சனிக்கிழமை. பிச்சாவரத்தில் போட்டிங் சென்றபோது எதிர் எதிர் போட்கள் கடந்தன. அப்போதுதான் அந்தப் பிங்க் தேவதை கண்ணில் பட அவள் பெயர் மறந்து போய் அப்படிச் சொல்லிவிட்டான்.
சொல்லியபின் என்ன செய்வது என யோசித்தான். டக்கென்று பேச்சை மாற்ற “ஸாம் “ என்றான்
”சாரின்னீங்களா”
“இல்ல ஸாம் நு சொன்னேன், என் பேர் “
“ ரொம்ப முக்கியம் , கேட்டனா “ என்றாள். அவள் அணிந்திருந்த மாக்ஸியில் கழுத்திலும் கையிலும் ஃப்ரில்கள் காற்றில் அலைபோல அசைந்தன. அவள் கைகள் வீசிப் பேசும்போது மகாராணி ஏவலாளுக்கு ஆணையிடுவது போல இருந்தது.
தன்னை மறந்து ரசித்தவன் சொன்னான். ”ராணி மஹாராணியோ ”
”ஆமாம் அதுதான் என் பேரு. ஞாபகம் இருக்கட்டும். பஞ்சு மிட்டாய் இல்ல. ”
”நான் தேர்ட் கெமிஸ்ட்ரி நீங்க ”
”நான் ஃபர்ஸ்ட் இயர் ஹிஸ்டரி. ரெண்டுக்கும் ஸ்நானப் ப்ராப்தியே இல்லை “ என்றாள்.
’என்னது பர்ஸ்ட் இயரா.’ ராகிங்க் செய்தபோதெல்லாம் இவள் கண்ணில் படவேயில்லையே. ராங்கிக்காரி.
’இருக்கட்டும் இருக்கட்டும்.’ மனதுள் சொல்லிக் கொண்டான்.
பச்சைமிளகாயைக் கடித்தது போலிருந்தாலும் ஒரு இனந்தெரியாத போதை உள்ளூர ஊடாடியது. படகுகள் அட்ஜஸ்ட் செய்து திரும்பிக் கடந்து சென்று விட்டன.
கல்லூரியின் காதல் தேவதையின் அறிமுகம் கிடைத்துவிட்டது. அதன் மந்திரக் கோலால் தானும் முயல்குட்டியாய் மாறும் யோகம் கிட்டுமா என ஒரு கூட்டமே காத்துக் கிடந்தது.
’ஆப்ரா கா டாப்ரா’ எனச் சொல்லாமலே அவள் அவனை முயல் குட்டியாய் இல்லை. புலிக்குட்டியாய்ப் பிரகடனம் செய்ய வைத்திருந்தாள்.
அந்தச் சம்பவம் பற்றி யோசித்தபடி அவன் காரைத் திருப்பியபோது எஸ்டேட் வந்திருந்தது. அதன் முன்னே முருகன் கைப்பக்குவத்தில் கோழிக்கறியின் மணம் கெஸ்ட் ஹவுஸ் முழுவதும் விரவி இருந்தது.
பாதை எங்கும் டேலியாக்களும், கினியா , ரோஜாப்பூக்களும் தலையாட்டி அவர்களை வாசனையாய் வரவேற்றுக் கொண்டிருந்தன. கண்ணாடி மாளிகையாய் அமைந்திருந்த கெஸ்ட் ஹவுஸில் நுழைந்தவன் கைகளில் அந்தப் பஞ்சு மிட்டாய் வண்ண ரோஸ் இருந்தது. தன்னையும் அறியாமல் அங்கே தொட்டியில் பூத்திருந்த அதைப் பறித்துக் கையில் வைத்திருந்தான்.
அது ராணி மஹாராணியின் முகத்தைப் போலக் கம்பீரமாக இருந்தது. அவளின் பிங்க் நிற இதழ்களைப் போல அதன் இதழ்களும் மலர்ச்சியாக இருந்தன.
அவரின் கையிலிருந்து தேவி அதை வாங்கி அங்கே இருந்த ஃப்ளவர் வாஸில் வைக்க அவன் சுயநினைவுக்கு வந்து தேவியைப் பார்த்துப் புன்னகைத்தான்.
அப்போது தேவி கேட்ட கேள்வியில் அவன் இதயம் துள்ளியது. .
சூப்பர். தேவி பெயர் பார்த்ததும் எங்கேயோ வாசித்தது போல உணர்வு...ஓ காதல்வனம் பகுதியா? முன்னர் வந்து கொண்டிருந்ததே...தொடருமோ? அல்லது ஒரு பகுதி மட்டும் போட்டிருக்கீங்களா
பதிலளிநீக்குகீதா
இதை முழுதுமா இங்கே போடலாம் என்று எண்ணம்பா. கரெக்டா கண்டு பிடிச்சிட்டீங்களே :)
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்!!