நவரசத் திலகம் முத்துராமன்
“சிவப்புக்கல்லு மூக்குத்தி சிரிக்க வந்த மான்குட்டி ஆஹா! தங்க முகத்துல குங்குமப் பொட்டு வைச்சிக்கிட்டு நீ எங்கடி போறே சுங்குடிச் சேலை கட்டிக்கிட்டு” படிக்கும்போதே தெரிஞ்சிருக்குமே இது நம்ம கவியரசரின் வரிகள்னு. இது நடிகர் முத்துராமன் நடித்த எல்லோரும் நல்லவரே என்ற படத்தில் இடம்பெற்ற பாடல்.
பத்தாவது படிக்கும்போது ஒரு படம் வந்தது. தாலியா சலங்கையா என்று. பரிட்சை முடிந்த அன்று ஒரு தோழி கதை சொல்ல எங்களை அழைக்க வந்த மாட்டு வண்டியைத் திருப்பி அனுப்பி விட்டு அந்த சுவாரசியமான கதையைக் கேட்டோம் !. ஏன்னா வீட்ல கூட்டிட்டுப் போக மாட்டாங்க !
படத்தின் தலைப்பும் சரி படமும் சரி எங்கம்மா, எங்க பெரியம்மா இருவரும் பார்த்து அனுமதித்தபின்தான், நாங்கள் படம் பார்க்க அழைத்துச் செல்லப்படுவோம்.
அப்பிடி ஸ்ட்ரிக்ட். அதனால தேவரின் தெய்வம், கண்ணாமூச்சி, கை கொடுக்கும் கை, நத்தையிலே முத்து, அனுபவி ராஜா அனுபவி, பணம் பெண் பாசம், எதிர்நீச்சல் எல்லோரும் நல்லவரே என்ற நல்ல படங்களைப் பார்த்து நல்ல பிள்ளைகளாக வளர்ந்தோம்J அதனால் அநேக முத்துராமன் படங்களைப் பார்த்திருக்கிறோம்.