நோபல் பரிசு பெற உழைக்கும் டாக்டர். தி. தெய்வசாந்தி (நானோடெக்னாலஜி ஆராய்ச்சியாளர்)
நானோ டைஜஸ்ட் என்ற உலகளாவிய விஞ்ஞான இதழின் முதல் பக்கத்தில் தனது நான்கு சிறந்த நானோ கண்டுபிடிப்புக்களுக்காகக் கொண்டாடப்பட்டிருக்கிறார் தெய்வசாந்தி. இந்தியாவின் குக்கிராமம் ஒன்றில் வாழ்ந்து கொண்டு பல்லாயிரம் ரூபாய்கள் பெறுமானமுள்ள காப்பர், சில்வர் நானோ துகள்கள், கிராஃபைன் ஆகியவற்றைத் தயாரித்து ஆராய்ச்சிகளுக்குத் தேவைப்பட்டோர்களுக்கு இலவசமாகவே வழங்கி உள்ளார்.
தனது அறிவியல் கண்டுபிடிப்புக்களுக்கான சோதனையில் நோபல் பரிசு பெற விழையும் பேராசிரியை தெய்வசாந்தி இராஜபாளையத்துக்கு அருகில் உள்ள சத்திரப்பட்டி என்ற கிராமத்தில் 1978 ஆம் வருடம் பிறந்தவர். எங்கே பிறந்தாலும் சாதனை புரியலாம் என்பதற்கு இவர் ஒரு வாழும் எடுத்துக்காட்டு. கணவர் திரு. சங்கர். இயற்பிலில் முனைவர் பட்டம் பெற்ற தெய்வசாந்தி முதலில் பாலிடெக்னிக்கிலும் பின்னர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். ஒரே நேரத்தில் நான்கு ப்ராஜெக்ட் கொடுத்துத் தனது மாணவர்களையும் நானோ ஆராய்ச்சியில் ஈடுபடுத்தி வருகிறார். நிறையப் பொறியியல் கல்லூரிகளுக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் சிக்ரி போன்ற விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகத்துக்கும் கூட கெஸ்ட் லெக்சரராகச் சென்றுள்ளார். 200 க்கும் மேற்பட்ட கருத்தரங்கக் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் பல்வேறு சர்வதேச நாடுகளில் உரையாற்றிய பெருமையும் இவருக்குண்டு.