எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 22 டிசம்பர், 2022

கானகத்தில் கிருஷ்ணர் நிகழ்த்திய அதிசய யுத்தம்

 கானகத்தில் கிருஷ்ணர் நிகழ்த்திய அதிசய யுத்தம்


ஒரு பிரச்சனையை எதிர்கொள்ள நேரும்போது அதைச் சமாளிக்கமுடியாவிட்டால் யாருக்குமே கோபம் வருவது இயல்பு. அப்படி ஒருவருக்குக் கோபம் அதிகரிக்க அதிகரிக்கப் பிரச்சனைகளும் பூதாகாரமாகும். அதேபோல் சிந்தித்துக் கையாண்டால் அதே பிரச்சனைகளே புழுப்போலச் சிறுத்துப் போய்விடும் என்பதற்கு உதாரணமாக கிருஷ்ணர் நிகழ்த்திய அதிசய யுத்தம் பற்றிப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

ஒருமுறை கிருஷ்ணர், பலராமர், அர்ஜுனன் மூவரும் ஒரு கானகத்தைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது. மாலை முடிந்து இரவும் தொடங்கியது. சில்வண்டுகளின் கீச் கீச் சத்தங்களும் விஷப் பூச்சிகளின் ரீங்காரங்களும் கொடிய வனவிலங்குகளின் உறுமல்களும் பிளிறல்களும் வனத்தை அதிரடித்துக் கொண்டிருந்தன.

நாலாபக்கமும் பார்த்தபடி சென்ற அவர்கள் இரவு சூழ்ந்ததும் அக்கானகத்திலேயே உறங்கி மறுநாள் காலை பயணத்தைத் தொடர நினைத்தனர். இத்தனை விலங்குகளுக்கும், பூச்சிகளுக்கும் மத்தியில் மூவரும் எப்படி நிம்மதியாக உறங்க முடியும். அதனால் மூன்று ஜாமங்களிலும் மூவரில் ஒருவர் விழித்திருந்து மற்ற இருவரைக் காவல் காக்க முடிவு செய்தனர்.

முதல் ஜாமத்தில் அர்ஜுனன் காவல் காக்க கிருஷ்ணரும் பலராமரும் உறங்கத் துவங்கினர். சிறிது நாழிகைதான் கடந்திருக்கும். ஒரே புகை மூட்டமாக இருந்தது. பனி அதிகமாகிவிட்டதோ என அர்ஜுனன் நினைக்க அது ஒரு பூதமாக உருக்கொண்டு உறங்கியவர்களை நோக்கிச் சென்றது. அதிர்ந்து போய் வாளை உருவியபடி அதன் முன்னே சென்ற அர்ஜுனன் ‘ நில் அங்கேயே’ என்று கூறி வாளை நீட்டித் தடுத்தான்.


” இந்த இருவரையும் நான் கொல்லப் போகிறேன். நீ விலகிச் சென்றால் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்” என்றது. ’என்ன பைத்தியக்காரத்தனம் இது. எனக்குப் பிரியமான கிருஷ்ணனையும் பலராமனையும் கொல்வதா. இதை நான் தடுக்கக்கூடாதா, என்ன ஆணவம் ?’ என்று ஆக்ரோஷப்பட்ட அர்ஜுனன் அந்தப் பூதத்தைத் தாக்கத் தொடங்கினான். அவன் கோபத்துடன் வாள் வீசிச் சுழன்று சுழன்று போரிட அந்தப் பூதம் இன்னும் பூதாகாரமாகிக் கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் அர்ஜுனன் களைத்துப் போய்விட இரண்டாம் ஜாமம் ஆரம்பமாகும் நேரம் அந்தப் பூதம் அர்ஜுனனை நன்றாகத் தாக்கிவிட்டு மறைந்தது.

பலராமன் விழிந்து எழுந்து இரண்டாம் ஜாமத்தில் காவலைத் தொடர அயர்ச்சியால் களைத்த அர்ஜுனன் கிருஷ்ணருடன் தூங்கத் தொடங்கினான். இந்த முறையும் பூதம் புகை உருவில் தோன்றி உறங்கும் இருவரையும் நெருங்கியது. பலராமரும் தடுத்து நிறுத்த உறங்கும் இருவரையும் கொல்லத் தனக்கு உதவினால் அவரை ஒன்றும் செய்யாமல் போய்விடுவதாகக் கூறியது.

இதைக் கேட்டுக் கோபம் பெருக பலராமரும் தன் ஆயுதத்தால் அந்தப் பூதத்தைத் தாக்கக் தொடங்கினார். ஆக்ரோஷத்துடன் போரிடப் போரிட அவர் கண்ணெதிரேயே அந்தப் பூதம் பிரம்மாண்டமாகிக் கொண்டே போனது. அவர் கோபம் பெருகப் பெருக பூதமும் விசுவரூபம் எடுத்து நின்றது. இப்படியே சில நாழிகைகள் சென்று மூன்றாம் ஜாமம் ஆரம்பிக்கும் சமயம் அப்பூதம் அவரைப் பலமாகத் தாக்கிவிட்டு மறைந்தது.


மூன்றாம் ஜாமத்தில் கிருஷ்ணர் எழுந்து காவல் புரிய ஆரம்பித்தார். பலராமரும் ஒன்றும் சொல்லாமல் படுத்து உறங்கத் தொடங்க அங்கே மூன்றாம் முறையும் புகைமூட்டமாக அப்பூதம் தோன்றியது. இம்முறையும் உறங்கும் இருவரையும் நோக்கி அது செல்ல கிருஷ்ணர் அதைத் தடுத்தார்.

அவரிடமும் தான் உறங்கும் இருவரையும் கொல்லப் போவதாகவும் கிருஷ்ணர் தடுக்காமல் இருந்தால் அவரைக் கொல்லாமல் விடுவதாகவும் பேரம் பேசியது. இதைக் கேட்டு அடக்கமுடியாமல் சிரித்தார் கிருஷ்ணர். தன்னைத் தடுத்தவர்களையும் தாக்கியவர்களையுமே பார்த்த பூதத்துக்குக் கிருஷ்ணரின் சிரிப்பு கோபத்தை உண்டு செய்தது.

’” என் உருவத்தைக் கண்டு சிரிக்கிறாயா? என் தூக்கிய பற்களையும் முட்டைக் கண்களையும், அகன்ற மூக்கையும் பார்த்துப் பயப்பட்டோரைத்தான் இதுவரை பார்த்திருக்கிறேன். சிரிப்பவனை இப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறேன். அவ்வளவு தைரியசாலியா நீ ” என்று கோபத்துடன் கத்திக் கொண்டே அவரைத் தாக்கத் தொடங்கியது.


இதைக் கண்டு கிருஷ்ணருக்கு இன்னும் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது. வாய்விட்டுச் சிரித்துக் கொண்டே தன்னைத் தாக்கும் அதைத் தடுத்துப் போரிட்டார். அவர் சிரிக்கச் சிரிக்க அந்தப் பூதத்தின் பலம் குறைந்தது. உருவில் சிறுத்துக்கொண்டே வந்தது. முடிவில் ஒரு புழுவாகச் சுருண்டு விழுந்தது. அதை எடுத்து ஒரு துண்டில் முடிந்து வைத்தார் கிருஷ்ணர்.

விடிந்தது. அர்ஜுனனும் பலராமனும் இரவில் வந்து மிரட்டிய பூதத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது கிருஷ்ணர் அவர்களிடம் ”இரவில் உங்களை மிரட்டி விரட்டிய பூதம் இதுதான்” என்றார்.

“ என்ன கிருஷ்ணா இது. இந்தப் புழுவைப் போய் பூதமாக இருந்தது என்கிறாய்” என இருவருமே கேட்டனர். அதற்குக் கிருஷ்ணர் ”இந்தப் புழுவேதான் பூதமாக வந்தது. அதனுடன் நீங்கள் இருவரும் கோபத்துடன் சண்டையிட்டதால் உங்கள் கோபம் பெருகப் பெருக அது பூதாகாரமானது. நான் புன்னகையுடன் சண்டையிட்டதால் அது புழுப்போல் சுருண்டு விழுந்தது. இதுதான் உண்மை “ என்றார்.

இதிலிருந்து நாம் நமக்கு நேரும் எல்லாப் பிரச்சனைகளையும் கோபத்துடன் கையாண்டால் அவை பூதாகாரமாகிவிடும். ஆனால் புன்னகையுடன் கையாளத் தெரிந்தால் அதை எல்லாம் புழுப்போலத் தூக்கி வீசிவிட்டு வென்று விடலாம் என்பதைக் கானகத்தில் கிருஷ்ணர் நிகழ்த்திய இந்த அதிசயப் போர் மூலம் தெரிந்து கொண்டோம்தானே குழந்தைகளே.   

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...