பீஷ்மர் பிறந்த கதை
மகாபாரதத்தில் புரூ வம்சத்தில் மூத்த புதல்வனாய்ப் பிறந்து தன் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை இளவரசர்கள் வரை வளர்த்தெடுத்த பீஷ்மர் பிறந்த கதை மட்டுமல்ல. அவர் பிழைத்து வாழ்ந்த கதையும் வித்யாசமானது. அது என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம் வாருங்கள் குழந்தைகளே.
மன்னன் பிரதிபனுக்கு இரு மகன்கள். மூத்தவன் தேவபிக்கு உடற்குறை இருந்ததால் அவனுக்கு இளையவனான சந்தனு முடிசூட்டப்பட்டான். அவனுக்கு முடி சூட்டியதும் மன்னன் பிரதிபன் துறவறம் மேற்கொண்டு காட்டிற்குச் சென்றார். அங்கே ஒரு முறை தன் தந்தையைக் காணச் சென்ற சந்தனு கங்கையை எதிர்பாராத விதமாகச் சந்தித்தார்.
பார்த்ததுமே அவள் ரூபசௌந்தர்யத்தில் மயங்கித் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். ஆனால் கங்கையோ ஒரு நிபந்தனை விதித்தாள். திருமணத்துக்குப் பின் நான் என்ன செய்தாலும் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்கவோ தடுக்கவோ கூடாது. இந்த நிபந்தனையை மீறினால் உங்களை விட்டுப் பிரிந்து போய் விடுவேன்” என எச்சரித்தாள்.
அவள் அழகின் முன் இதெல்லாம் பொருட்டாகத் தெரியாததால் ராஜா சந்தனுவும் அவள் நிபந்தனையை ஒப்புக்கொண்டு அவளை மணம்முடித்தார். ஆயிற்று ஓராண்டு கழித்து அவர்கள் இன்பமாக வாழ்ந்ததன் சாட்சியாக அழகான மகவு ஒன்று பிறந்தது. ஆனால் என்ன கொடுமை. பெற்ற தாயான அவளே அக்குழந்தையைத் தூக்கிச் சென்று கங்கை நதியில் போட்டாள்.
அலறித் துடித்த நெஞ்சை அடக்கியபடி சந்தனு அமைதி காத்தார். நிபந்தனையை மீறினால் நெஞ்சுக்குகந்த மனைவி போய் விடுவாளே.இப்படியே ஒன்றல்ல இரண்டல்ல ஏழு குழந்தைகளை கங்கைக்குத் தாரை வார்த்தாள். எட்டாவதாகவும் அவள் கருவுற்றாள்.
பேரழகு கொண்ட மைந்தன் பிறந்தான். அவன் நிலவொத்த முகம் பார்க்கப் பார்க்கவே இவனுக்கும் அதே கதிதானா என நினைத்து நினைத்துச் சந்தனுவுக்குத் தன் நெஞ்சை அடக்க முடியவில்லை. இம்முறையும் அவள் குழந்தையைத் தூக்கிக்கொண்டு கங்கை நதிதீரம் நோக்கி நடந்தாள். கொந்தளித்த உள்ளத்தோடு அவள் பின் விரைந்த அவர் “ கொல்லாதே என் குழந்தையை.” என அவள் கைப்பிடித்துத் தடுத்தார். நழுவ இருந்த குழந்தையைக் கைப்பற்றி அணைத்தார். பச்சைச் சிசுவின் வாசம் அவரைச் சூழ்ந்தது.
ஆனால் ஐயகோ இதென்ன கொடுமை. அவர் மனைவி கங்கை அவர் தன் நிபந்தனையை மீறியதாகக் கூறிப் பிரிந்து செல்கிறாளே. ” நில் ஏன் இப்படிச் செய்தாய் என்பதை மட்டுமாவது எனக்குக் கூறிவிட்டுச் செல்” என அவளிடம் கேட்டார். அதற்கு அவள் “ ஒரு சாபத்தின் மூலம் எட்டு வசுக்கள் எனக்குக் குழந்தைகளாகப் பிறந்தார்கள். அவர்களில் ஏழுபேரின் சாபம் பிறந்தவுடனே கங்கையில் இறந்ததால் தீர்ந்தது. ஆனால் இவன் எட்டாமவன். இவன் பெயர் பிரபாசன்.
ஒருமுறை வசிட்டரின் பசுவை பிரபாசனின் மனைவி பார்த்துவிட்டு அது தனக்கு வேண்டுமெனக் கேட்டாள். தேவர்களாகிய நமக்குத் தேவைகளே இல்லை. தேவருலகில் அனைத்தும் நிரம்பி இருக்கிறதே என்று பலவாறு பிரபாசன் எடுத்துக் கூறியும் அவள் மனம் மாறவில்லை. மனைவியின் ஆசையைத் தட்ட முடியாத பிரபாசன் அவளுக்காக வசிட்டரிடமிருந்து பசுவைத் திருடிக் கொடுத்தான். அவன் திருடும்போது மற்ற ஏழு வசுக்களும் உதவி செய்தனர்.
தன் ஆசிரமம் திரும்பிய வசிஷ்டர் ஞான திருஷ்டியால் நடந்ததனைத்தும் உணர்ந்தார். இவர்கள் எண்மரும் பூமியில் மனிதர்களாகப் பிறக்கும்படி சாபமிட்டார். இதைக்கேட்டு அவர்கள் சாபவிமோசனம் அளிக்கும்படிப் பதறினர்.
அதற்கு வசிட்டர் “ பசுவைத் திருட உதவி மட்டுமே செய்ததால் நீங்கள் சீக்கிரமே சாபவிமோசனம் எய்தி தேவருலகு அடைவீர்கள். ஆனால் பிரபாசன் பசுவைத் திருடியதால் பலகாலம் பூமியில் உழல்வான். இருந்தும் தர்மத்தின் படி வாழ்வான். அவனை யாராலும் வெல்லவே முடியாது. நீண்டகாலம் வாழ்ந்தபின் அவன் தேவருலகு வருவான். கங்கையின் மூலம் உங்கள் சாபங்கள் நீங்கும். ” எனத் தன் சாபத்துக்கு விமோசனம் தந்தருளினார்.
என் மூலமே இவர்கள் சாபவிமோசனம் பெறவேண்டும் என்பதால் நான் உங்கள் மனைவியாகி இவர்களைப் பெற்றேன். பெற்றதும் கங்கை நதியில் விட்டதால் அவர்கள் விமோசனம் பெற்றுத் தேவருலகு அடைந்தார்கள். இதோ இவனே அந்தப் பிரபாசன். இப்போது இந்தக் கங்கையின் மைந்தன் தேவவிரதன். இவனை ஒப்பாரும் மிக்காரும் இலர். உங்கள் குலத்தைக் காப்பான். “ என அவனை சந்தனுவிடம் ஒப்படைத்துவிட்டு மறைந்தாள் கங்கை.
பிரபாசன் பீஷ்மனாகிப் பிறந்து இறப்புவரை அஸ்தினாபுரத்தின் அரசு வாரிசுகளைக் காப்பாற்ற வெகுபாடுபட்டான். இவ்வாறு அவன் பிறந்தவுடனேயே இறப்பிலிருந்து தப்பித்துத் தன் குலத்தை வளர்ந்த கதை வித்யாசமானதுதானே குழந்தைகளே.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!