குறும்பனால் சாபவிமோசனம் பெற்ற குபேரன் மைந்தர்கள்
புராண காலங்களில் தங்கள் துர்நடைத்தையாலும் அகந்தையாலும் முனிவர்களையும் மகரிஷிகளையும் மதிக்காமல் நடந்து சாபம் பெற்றோர் பலர். சாபம் பெற்றபின் தங்கள் தவறுணர்ந்து சாப விமோசனத்துக்காக சாபமிட்டவரிடமே வணங்கி மன்னித்தருளும்படி வேண்டுவார்கள். உடனே சாபமிட்ட மகரிஷிகளும் முனிவர்களும் சாபவிமோசனத்துக்கான வழிமுறைகளைக் கூறி மன்னிப்பார்கள். இப்படி சாபம் பெற்ற இருவர் பற்றியும் அவர்கள் பெற்ற சாபத்திலிருந்து எப்படி விமோசனம் அடைந்தார்கள் என்பது பற்றியும் பார்ப்போம் குழந்தைகளே.
குபேரனின் புதல்வர்களின் பெயர் நளகூபரன், மணிக்ரீவன். அவர்கள் இருவரும் ஒருநாள் மிதமிஞ்சிய களியாட்டத்தில் அரண்மனை வாவியில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். கூடவே பல்வேறு வகையான மங்கையர்களும் அவர்களுடன் ஜலக்ரீடை ஆடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த அரண்மனைக்குக் குபேரனைப் பார்க்க வந்தார் நாரதர். அரசவைக்குச் செல்லும் வழியில் நளகூபனும் மணிக்ரீவனும் நீராடிக் கொண்டிருந்த வாவியைக் கடக்க வேண்டி வந்தது. ஒரு மகரிஷி வருகிறார் என்ற பிரக்ஞை சிறிதுமில்லாமல் கலைந்த உடையுடன் இருவரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். உடலில் ஏறியபோதை மூளையையும் செயலிழக்கச் செய்ததால் மகரிஷிக்கு உரிய மரியாதையை கொடுக்கத் தவறினார்கள்.
இதைக் கண்ட நாரத மகரிஷிக்கு மகா கோபம் வந்தது. மகரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் கோபம் வந்தால் என்ன நடக்கும் உடனே பிடி சாபம்தான்.
“மாமனிதர்களை மதிக்கத் தெரியாமல் மரங்களைப் போல நின்றிருந்த நீங்கள் இருவரும் மரங்களைப் போல ஆகக் கடவது?”
திடீரென பூமியில் விழுந்தார்கள் நளகூபனும் மணிக்ரீவனும். கால்கள் மரமாக வேர்பிடிக்கத் தொடங்கின. தங்கள் அலட்சியத்தினால் நிகழ்ந்த விபரீதத்தை உணர்ந்த அவர்கள் நாரத மகரிஷியிடம் “ஐயனே! தெரியாமல் நிகழ்ந்த தவறு. மன்னியுங்கள் எம்மை. இந்த சாபத்திலிருந்து விடுவியுங்கள் எம்மை”
“இப்போது ஒன்றும் செய்ய முடியாது நளகூபரா, மணிக்ரீவா. திருமாலின் திருஅவதாரம் ஒன்றின் மூலமே உங்கள் சாபம் நீங்கும். அதுவரை நீங்கள் இங்கே மரமாக நிற்க வேண்டியதுதான்”
சாபம் பெற்று மரமானதை விட தங்கள் மோசமான நடத்தையினால் சாபம் பெற்று மரமானதே அவர்களை வாட்டியது. இருவரும் மருதமரமாக அருகருகே நின்றார்கள். அப்படி அவர்கள் பல்லாண்டு காலம் கோகுலத்தில் யசோதையின் வீட்டுத் தோட்டத்தில் காத்திருந்தார்கள்.
யசோதைக்குக் குட்டி மகன் ஒருத்தன் பிறந்திருந்தான். அவன் செய்யாத சேட்டைகள் இல்லை. ஆயர்பாடியில் அனைவருக்கும் செல்லப் பிள்ளையாக இருந்தான். ஆனால் வெண்ணெயையும் உண்பான், மண்ணையும் உண்பான் மலையையும் சுண்டு விரலால் தூக்குவான், கட்டை விரலால் காளிங்கன் மதங்கத்தையும் அடக்குவான், கம்சனைக் கொல்வான் கோபிகைகளின் இதயத்தை வெல்வான் என்பதெல்லாம் தெரியவில்லை அவர்களுக்கு.
காற்றாக வந்த அசுரனையும், தாதி வேடத்தில் வந்த பூதகியையும் அழித்தும் சிறு குழவியாகவே சிரித்துக் கொண்டிருந்தான் அவன். அவன்தான் திருமாலின் அவதாரம் என்றோ அவனால்தான் தங்கள் துர்ப்பாக்கியம் மண்ணுலகில் முடிவுக்கு வரப்போகிறது என்றோ அவர்களுக்குத் தெரியவில்லை.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அங்கே நீலவண்ணன் வளர்ந்து வந்தான். இங்கோ நளகூபரனும் மணிக்ரீவனும் தங்கள் நிலை கண்டு நொந்து கொண்டே இருந்தனர். அவமானம் பிடுங்கித் தின்றது அவர்களை. ஆனாப்பட்ட குபேரன் மகனாய்ப் பிறந்து கோகுலத்தில் மரமாய்க் கிடக்கிறோமே என்று ஆதங்கப் பட்டார்கள்.
திருமால் எப்போது புது அவதாரத்தில் வருவார் எப்போது தாங்கள் தேவருலகம் திரும்புவோம் என்பதே அல்லும் பகலும் அவர்களின் ஏக்கமாய் இருந்தது. மரங்களாகவே இருவரும் கை கோர்த்துத் தங்கள் வருத்தத்தைப் பகிர்ந்து கொள்வார்கள்.
இப்படி இருக்கையில் ஒரு நாள் வீட்டினுள் நீலவண்ணன் குட்டிக் கண்ணனின் குறும்பு பற்றி அங்கே ஆயர்பாடியின் அனைத்துப் பெண்களும் வந்து யசோதையிடம் முறையிட்டார்கள்.
“இப்படிப் பிள்ளையைப் பார்த்ததில்லை. இவனால் தீர்ந்தது எங்கள் உறிப்பானை. எவ்வளவு உயரம் கட்டி வைத்தாலும் மேலேறிக் கைவிட்டு வெண்ணையைத் தின்று விடுகிறான். போதும் போதாதற்கு இவன் நண்பர்கள் பட்டாளத்துடன் வந்து எட்டாத உறியை உடைத்து விடுகிறான். யசோதா இவனைக் கண்டித்து வை. இல்லாவிட்டால் கட்டியாவது வை” என்று பொய்க் கோபத்துடன் மிரட்டிச் சென்றார்கள்.
யசோதைக்குக் கோபத்துடன் அவமானமாகவும் இருந்தது “ டேய் கண்ணா, நம் வீட்டில் இல்லாத வெண்ணையா. இங்கே தின்னாமல் அங்கே எல்லாம் போய் ஏன் என் மானத்தை வாங்குகிறாய்? இரு இரு உன்னைக் கயிற்றால் கட்டுகிறேன்” என்று கோபித்த அவள் ஒரு சிறு தாம்புக் கயிற்றால் கண்ணனின் வயிற்றைக் கட்டப் பார்க்கிறாள். கட்டவே முடியவில்லை. எத்தனையோ கயிறுகளை இணைத்தும் கட்ட முடியவில்லை.
தாயின் அவதியைப் பார்த்த கண்ணன் தன் வயிற்றைச் சுருக்கிக் கொள்ள இப்போது இலகுவாய் அவள் கண்ணனின் வயிற்றில் கயிறைக் கட்டி அங்கே இருக்கும் உரலோடு பிணைத்து விட்டுத் தன் வேலையைப் பார்க்கப் போகிறாள்.
கண்ணனுக்கோ மனமெங்கும் புன்முறுவல். தாய் புழக்கடையில் தன்னை விட்டு விட்டுச் சென்றதும் தன்னைக் கட்டிய உரலுடன் மருதமரங்களை நோக்கித் தவழ்ந்து செல்லத் தொடங்குகிறான். இரு மருதமரங்களுக்கிடையிலும் புகுந்து தவழ்ந்து செல்லப் பார்க்கிறான்.
மருத மரங்களாய் நின்ற நளகூபரனும் மணிக்ரீவனும் திகைத்துப் பார்க்கிறார்கள். குழந்தையோ முன்னேறிச் செல்கிறது. ஆனால் உரலோ இரு மரங்களுக்கிடையிலும் மாட்டிக் கொண்டு விட்டது. குட்டிக் குழந்தைதான் ஆனால் அது இன்னும் சில அடிகள் தவழத் தவழ அந்த உரலால் இடிபட்டுக் கீழே விழுகின்றன இரு மருத மரங்களும். அதிலிருந்து வெளிப்பட்டுத் தமக்கு சாப விமோசனம் தந்தமைக்காகக் கண்ணனை வணங்குகிறார்கள் நளகூபரனும் மணிக்ரீவனும். திரும்பி அமர்ந்து அவர்களைப் பார்த்துப் புன்முறுவல் செய்கிறார் குட்டிக் கண்ணன்.
தூரத்திலிருந்து மருத மரங்கள் விழுந்ததைப் பார்த்த யசோதை மூர்ச்சை போடாத குறையாக ஓடி வந்து கண்ணனைத் தூக்குகிறாள். அவள் கண்ணுக்கு மருத மரங்கள் மட்டுமே தென்படுகின்றன. நல்ல வேளை குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லையே என மகிழ்ந்தபடி கண்ணனை அணைத்துக்கொண்டு உள்ளே போகிறாள் யசோதை. சாபம் நீங்கிய இருவரும் தேவருலகம் அடைகின்றார்கள்.
எனவே முனிவர்கள், மகரிஷிகள் போன்றவர்களையும் கல்வி கேள்வி அறிவில் சிறந்த பெரியவர்களையும் வயதில் மூத்தவர்களையும் என்றும் மதித்து வரவேற்க வேண்டும் என்பதை இந்த நிகழ்வின் மூலம் கற்றுக் கொண்டோம் இல்லையா குழந்தைகளே.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!