#பெண்பூக்கள் ..
பூத்துச் சிரிக்கும் மலர்களைப் பார்க்கும்போதெல்லாம் ஏதேனும் ஒரு பெண் ஞாபகச் சுரங்கத்தில் தங்கம் போலோ வைரம் போலோ பளிரிடுவாள். இவை கவிதைகள் என்பதைவிட என் பாசப்பகிர்வு எனலாம். வசீகரித்து வசீகரித்துக் கொண்டிருக்கும் பெண்களை நீங்களும் இந்த கவிதைகளை உணர்ந்தால் அதுவே தனக்கான பரிசு என்று பூக்களின் தேனுரையென தன்னுரை தந்திருந்திருக்கின்றார்.
மொத்தம் 57 பூக்களின் வாயிலாக காதலையும் நேசத்தையும் அன்பையும் வாசம் வீசச்செய்கிறார்.
#ரோஜா....
"நேற்று நீ இட்ட முத்தம்
ரோஜாவும் முட்களுமாய்
கன்னம் வழியே கசிந்து பூத்துக்கொண்டிருக்கிறதோவென்று" என்ற நிறைவு வரிகளால் ரோஜாவினுடைய இதழ்கள் தரும் முத்தம் முட்களோடு சேர்ந்து கன்னம் வழியே கசிந்து பூத்துக்கொண்டு இருக்கிறதென கற்பனை செய்து இருக்கின்றார்.
#சம்மங்கி...
"பிரகாரமெங்கும்
சிதறிக்கிடந்த
சாமந்திப் பூவிதழ்கள் பேசிக்கொண்டன...
தம்மைத் தாமே
சூடியும் சுமந்தும்
அம்மனைச்
சுற்றி வந்ததாக.."
மஞ்சள் நிறம் என்றாலே அம்மன் நினைவுக்கு வந்து விடுவது இயல்பு. பிரகாரத்தில் சிந்திக்கிடக்கின்றன பூக்கள். அதவை நேற்றைய பூக்களாகக் கூட இருக்கலாம். அதை எடுத்து பிரகாரத்தில் வைக்கும் பொழுது அவை உதிர்ந்து காற்றில் அங்கே இங்கேயெனப் போகிறது. அவை அம்மனிடம் இருந்த கதையை பேசிக் கொண்டதாக புனைவு செய்திருப்பது சாமந்திப் பூக்களுக்கு பெருமை சேர்ப்பதாக அமைகிறது.
#சூரியகாந்தி...
"விடிந்ததும் தெரிந்தது
நீ ஆவலாய் ஓடிவந்து
அழுத கண்ணீர்
என் மேல்
பனித்துளியாய்.. உணர்ந்துகொண்டேன்
எனைச் சுற்றும்
சூரியன் நீ..!"
சூரியனுடைய நகர்விற்கேற்ப சூரியகாந்தி பூ தன்னுடைய முகத்தை திருப்பிக் கொண்டே செல்லும். இது இயற்கை நிகழ்வு. ஆனால், இங்கே பூவை மேன்மைப்படுத்த சூரியன் அப்பூவைச் சுற்றுவதாக பாடி இருக்கின்றார். அதனால் தான் சூரிய காந்தியானதாம்.
"தெய்வத்துக்கு மட்டுமே
உரிய பூ நீ..
சித்தாந்தங்களிலும்
செந்நிறமாகவே
பிரசவிக்கப்பட்டவள் நீ. தெய்வத்துக்கும் மனிதகுலத்திற்கும்
ஒப்புக் கொடுத்தேன்.. குமரிமுனையில்
அம்மன் சூடிக்
கடலில் வீசிய செவ்வரளி
கனல் மூடிய
செந்தீயாய்.."
செவ்வரளி என்றாலே அது அம்மனுக்கான பூ என்று அறிவோம். அம்மன் சூடிக் கொள்வதற்காகவே செந்நிறமாக பிரசவிக்கப்பட்டிருக்கிறாய் என்று சிவப்பு வண்ணத்தை பெருமைப்படுத்தி, குமரிமுனையில் அம்மன் சூடிய அந்த செவ்வரளியை கடலில் வீசுவதால் அங்கேயே சூரியன் எழும்போது மறையும் போதும்தும் செந்தீயாகக் காட்சியளிக்கிறது என்று செவ்வரளி பூவிற்கு சிகப்பு கம்பளம் விரித்திருக்கிறார்.
"உருவத்தில் ஆணாகவும் உள்ளத்தில் பெண்ணாகவும்
பருவ வேறுபாடு இல்லாத
பச்சிளம் குழந்தை நீ..
தனித்து தெரிவது
உன் நிறம் மட்டுமல்ல
குரலும்தான்..
சிகண்டியாகவும்
பிருகன்னளையாகவும் பெண்மையிலும் போர்க்குணம் ஆண்மையிலும் நளினம்
யாதுமான இறைவன்
நீயுமாகி நின்றான்.."
வாசம் இல்லாத பூ வாடாமல்லி. திருநங்கையை போல் இருப்பதாக காண்பித்து திருநங்கையினுடைய அருமை பெருமைகளை மகாபாரத பாத்திரங்கள் மூலம் அறிமுகம் செய்து அவர்கள் நளினமா இருந்தாலும் போர்க்குணம் கொண்டவர்கள் என்கிறார். யாதுமான இறைவன் நீயுமாகி நின்றான் என்று ஒருவருக்குள் ஒருவராக இருப்பதை கண்முன்னே காட்சிமைப்படுத்துகின்றார். இது ஒரு அதீத கற்பனை.
"வெட்கத்தோடு ஒதுங்கி நின்னு வெட்டணும்ன்னு சொல்லும்போதெல்லாம்
பூச்சொரிஞ்சு காய்ச்சு நிற்கும் என்று முருங்கை மரத்தை வெட்ட வேண்டும் என எண்ணும்போதெல்லாம் அவை பூத்துக் குலுங்கி காய்த்து நிற்பதாக கண் முன்னே காட்டுகின்றார். முருங்கை வைத்தவன் வெறுங்கையோடு போவதில்லை என்பது செலவாடை இதனோடு பொருந்திப் போகிறது.
"நலுங்கிலும் ஊஞ்சலிலும் இப்போதுதான் அமர்ந்து
அப்பளம் உடைத்து
தேங்காய் உருட்டியது போலிருக்கிறது..
அன்று அணிந்திருந்த அதே போன்ற
சம்பங்கி மாலை அணிந்து நீ..
.
"தாய்மை மூடிய உன் உருவம் என்னை மயக்குகிறது .
நானே உன் குழந்தையாய் உன்னுள் குடி கொண்டிருப்பது போல்.."
திருமண நிகழ்வின் போது முந்தின நாள் மாலையிலோ அல்லது அன்று மாலையிலோ நலங்கு செய்வது வழக்கம். அப்பொழுது தலையில் அப்பளம் உடைத்து, தேங்காய் உருட்டி பூப்பந்து எறிந்து என நலுங்கினை சிறப்பாக அரங்கேற்றுவார்கள். அப்போது மணமக்கள் பன்னீர்ப்பூ மாலை சூடியிருப்பர். அந்த சம்பங்கிப்பூவினுடைய உருவம் ஒரு குழந்தையைப் போல தன்னில் குடி கொண்டிருப்பதாக வாஞ்சையுருகிறார்.
"முறம் நிறைய சலசலத்து
எள்ளை வருடும் போதெல்லாம்.. எள்ளுப்பூ நாசியம்மா
உனக்கு என் அப்பாவும்
ஜப்பான் சுந்தரி என
மூக்கை கிள்ளிய
தாத்தாவும் நினைவினில்..
உன் மூக்கின் அழகோடு
முன்னூறாண்டு என பாடலும் ஏக்கம் விளைவிக்க.."
சொளவு என்று சொல்லப்படும் முறத்தில் எள்ளில் உள்ள தூசுகள் போக புடைப்பார்கள். கற்களை எடுக்க முறத்தில் அளையும் போது சலசலவெற ஓசை தரும். எள்ளுப் பூவைப் போன்ற நாசி என்று அப்பாவும், ஜப்பானிய பெண்களைப் போன்ற மூக்கு என்று தாத்தாவும் சொன்னது நிழலாடுகிறதென்கிகிறார். வைரமுத்துலின் வரிகளான உன் மூக்கின் அழகோடு முன்னூறாண்டு என்ற பாடல் அந்த ஏக்கத்தினைத் தருவதாக மருகுகிறாள்.
"கிணற்றடியில் கந்தக நாற்றம் தொலையுமளவு தேய்த்துக் குளித்தபடி நீ..
சகடைச் சத்தமாய்
தடதடக்கும் இதயத்துடன்
விழித்து இருந்தோம்
பூசணிப்பூக்களும் நானும்"
என்று தீப்பெட்டி தொழிற்சாலையிலன் அருகே ஓரமாக பூத்திருக்கும் பூசணிப்பூவினுடை வாசத்திலும் கந்தக வாசம் வருகிறது. எத்தனைப் பெரிதாக பூத்திருந்தாலும் அதுவும் எங்களைப் போன்றே இருக்கிறதெனக் கூறுகிறார்
"உன் சாயலில்
ஒரு குறிஞ்சியையும் பார்த்தேன் எல்லாத் தாவரங்களும்
என்னைப் பார்த்தவுடனே பூத்தபின்னும்
எப்போதோ ஒரு முறைதான் புன்னகை பூப்பாய்
நதியின் நீர்ச் சுழியினைப் போல் என்னை வாரி விழுங்கும் அது.. அபூர்வமான உன் புன்னகையின் புனலாடி மூழ்கவே
நான் ஆயுளோடும் உன்னோடு.."
என்று குறிஞ்சி பூ பூப்பதைப் பாடி அபூர்வமாக சிந்தும் உன் புன்னகைப் போன்று இருக்கிறது. அந்த அபூர்வமான உன் புன்னகை நான் ஆயுளோடும் உன்னோடும் இருக்க உதவுமென்று நவில்கிறார். குறிஞ்சிப் பூ போல 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புன்னகை சிந்தாமல் எப்போதும் புன்னகையை சிந்திக் கொண்டே இருக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கின்றார்.
"காண்போரை இல்லாமல் பூப்பள்ளத்தாக்கு..
தனிமைக்குப் பயந்து கூட்டமாய் பூக்கும்
ராமனை வேண்டா அகலிகைக்கல்லாய்
வெண்சடை விரித்த வேம்பு.. வேம்பூக்களுக்குள்ளே யாருக்காகவும்
வருத்தமாய் கூவும் குயில்
காயாகி கனியாகி விதையாகி மரமாக வேண்டாமல்
போதுமிந்த ஜென்மமென மரத்திலிருந்து பூவாகவே உதிரும்"
வேப்பம் பூ பூத்திருக்கும் அழகை எத்தனை அழகான சொற்களால் வர்ணிக்கிறார். பூப்பள்ளத்தாக்கு போன்று பரந்து விரிந்து அழகை காண்பிப்பதாகவும், காயாகி, கனியாகி விழுந்து திருப்பி முளைத்து மரமாக விரும்பாமல் போதும் இந்த ஜென்மமென்று மரத்திலிருந்து பூவாகவே உதிர்கிறது. இது தனக்குத்தானே அஞ்சலி செலுத்திக் கொள்வதைப் போன்று இருப்பதாக வர்ணனை செய்கிறார். உச்சமாக வருத்தமாக அதனுள்ளிருந்து கூவும் குயிலைக் கண் முன்னே கொண்டு வந்து அந்த வேப்பம்பூ வீழ்வதற்காக வருந்துவதாக காண்பிக்கிறார்.
சங்க இலக்கியம் காண்பிக்கும் நாம் வாழ்ந்த ஐந்திணைகளில் தாம் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் 99 பூக்களை கபிலர் காண்பிப்பார். அதன் தாக்கம் இருத்திருக்கக் கூடும். அதனாலேயே 57 பூக்களைக் கொய்து அதன் வாசனை தீர்ந்திடாது பூங்கொத்தாக்கி நமக்கு கவிதைப் பரிசளிக்கிறார்.
ஒவ்வொரு பூக்களும் ஒவ்வொரு வகையில் அழகு. அதுமட்டுமில்லாமல் தனித்துவமுமிக்கது. அதன் சாராம்சங்களை சற்றும் குறையாமல் கவிதைகளாக்கி வாசம் வீசச்செய்திருக்கிறார் தேனம்மை லெக்ஷ்மணன்.
வெறும் கவிதைகளென கடந்து விடாமல் பூத்துக் குலுங்கும் செடிகளும் மரங்களும் வைப்போம். பூக்கும் அழகை கவிதையோடு இயைந்து பார்த்துப் பார்த்து ஆனந்தம் கொள்வோம்.
99
2 comments
1 share
Like
Comment
Share
Award
மிக்க நன்றியும் அன்பும் தானப்பன் கதிர் சார் :)
மிக்க நன்றியும் அன்பும் தானப்பன் கதிர் சார் :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!