என்னுடைய பத்தொன்பதாவது நூல் நீலகேசி. இதையும் புதினமாக எழுதி உள்ளேன். நான் மிகவும் ரசித்து எழுதிய நூல். பிரபஞ்சத் தத்துவங்களை, பொருண்மைகளை எளிமையாக விளக்கும் நூல்.
நீலகேசி என்ற இந்த நூலுக்கு உரை எழுதியவர் சமய திவாகர வாமன மாமுனிவர். இது ஒரு தருக்க நூல். குண்டலகேசிக்கு மறுப்பாக எழுந்தது என்றும் ஒரு கூற்று உண்டு. பிறர் மதத்தை விளக்கி மறுத்துத் தன் சமண மதத்தை நீலகேசி நிறுவுவதைச் சிறப்பிப்பதே இந்நூல்.
அன்றைக்கு அதிகமாகப் பரவி இருந்த புத்த மதம் , ஆசீவக மதம், சாங்கிய மதம், வைசேடிக மதம், வேத மதம், பூத மதம் ஆகியவற்றின் கோட்பாடுகளைச் சமண மதத்தின் நெறியோடு ஒப்புமைப்படுத்தி நீலகேசி மற்ற சமயங்களின் கோட்பாடுகளின் குறைகளைப் பற்றி எடுத்துக் கூறி வாதப்போர் செய்தாள். அதுவே இந்நூலாக ஆக்கம் பெற்றுள்ளது.
பலாலயத்தில் ஆரம்பிக்கும் நீலகேசியின் வரவு பிசாசகரோடு வாதத்தில் பொருது வெல்வதுடன் முடிகிறது. முதலில் முனி சந்திரர் மூலம் சமணத்தை அறியும் நீலி, அருகக் கடவுளின் அருள் பெற்றபின் நீலகேசியாகித் தான் பெற்ற மும்மணிகளையும் ( நற்காட்சி, நல்லறிவு , நல்லொழுக்கம்) உலகம் முழுக்கப் பரப்பவேண்டும் என்ற எண்ணம்கொண்டாள். அப்படி அவள் பயணித்தபோது சந்தித்த வேற்றுமத ஆசிரியர்களுடன் அவள் புரிந்த அர்த்தம் செறிந்த வாதங்களின் தொகுப்பு இந்நூல்.
தீர்க்கமான சிந்தனைகளுடனும், தெளிவுடனும் அவள் பிரபஞ்சத்தின், உயிரின் இயல்புகளை எடுத்து வைக்கும்போது நாமும் அவற்றின் உண்மைப் பொருளைப் புரிந்து கொள்கிறோம். உயிர், ஆன்மா, உணர்வு, ஐம்பூதங்கள், பொறிகள், புலன்கள் பற்றியும், உயிர்க்கொலை தவிர்த்தல், ஊன் மறுத்தல், நல்வினை, தீவினை பற்றியும் நீலகேசி வாதம் செய்யும்போது நமக்குள்ளும் அவள் புகுந்து நம்மையும் அவளாக்கி விடுகிறாள். நீலகேசியின் மூலமாக ஞானத்தின் வாசல் நமக்கும் திறக்கிறது.
ஐஞ்சிறு காப்பியங்களில் நீலகேசி எல்லா மதங்களைப் பற்றியும் அவற்றின் நிறை குறைகளையும் சாமானிய மக்களும் அறியத்தரும் அரிய கையேடு என்பேன். நீங்களும் நீலகேசியோடு பயணம் செய்ய ஆரம்பித்தால் அவள் உங்களுக்கு ஏற்படும் ஐயங்களை எல்லாம் நீக்கி உண்மைப் பொருளை நோக்கித் தெளிந்த ஞான நிலைக்கு இட்டுச் செல்வாள் என்பது திண்ணம்.
விலை ரூ. 210/-
கிடைக்குமிடம்:- பாரதி பதிப்பகம்,
புதிய எண் 4, பழைய எண் 37,
சி.ஆர்.ஆர்.புரம், முதல் தெரு,
L&T காலனி, விருகம்பாக்கம்,
சென்னை - 600092.
செல்: 93839 82930,
போன்: 044 2434 0205,
E-mail ID: bharathipathippagam@gmail.com
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!