எனது பதிநான்கு நூல்கள்

சனி, 20 பிப்ரவரி, 2021

பொங்கல் - சில குறிப்புகள்.

 நுழைபுலம் குழுமத்துக்காகப் பொங்கலும் நாங்களும்  என்ற தலைப்பில் உரையாற்ற எடுத்த குறிப்புகள் சிலவற்றை இங்கே பகிர்ந்துள்ளேன். 

அரக்கர்களை சம்ஹாரம் செய்யும் பண்டிகைகள் சிலவுண்டு. ஆனால் பூமியின் செழிப்பத்தை, வளர்ச்சியை நல்வாழ்வைக்கொண்டாடும் பண்டிகை பொங்கல். நமக்கு உணவுபடைக்கும் பூமியைச் சாமியாய் வணங்குதல், இது நன்றி தெரிவிக்கும் திருவிழா, அறுவடைத் திருநாள், தமிழர் திருநாள், பானைகளின் கழுத்தில் மங்கல மஞ்சள் திருப்பூட்டும் நாளாம் நாளாம் திருநாளாம். 

சூரியனை, நிலத்தைப் பயிர் பச்சைகளைக் கால்நடைகளை, அவற்றுக்காகப் பாடுபடுபவர்களை வணங்கிச் சிறப்பிக்கும் விழா. நாங்கள் சேற்றில் கால் வைத்தால்தான் நீங்கள் சோற்றில் கை வைக்க முடியும் என்பது ஒரு கவிதை. 

வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயரக்குடி உயரும் குடிஉயரக் கோன் உயர்வான். ஆனல் இன்றோ மழை பெய்து நெற்பயிர் சாய்ந்து கிடக்கிறது. விளை பொருட்களுக்கு உரிய தொகை கிடைப்பதில்லை. இந்தச் சூழலில்தான் நாம் இந்த நன்றி தெரிவிக்கும் விழாப் பற்றிப் பேசக் குழுமி இருக்கிறோம். 

பாவைநோன்பு, தை நீராடல் முடிந்து  வருவது பொங்கல். Solstice sun move - சூரியனின் நகர்வு. 

எங்க வீட்டுப் பொங்கலில்ல் இரும்பு அடுப்பில் கோலம் போடுதல் உண்டு. முறித்தவலை, விளக்கிடும் சட்டியிலும் கோலமிடுவோம். சங்கு ஊதுதலும் உண்டு. சங்கு ஊதிப் படைப்போம். பால் பொங்கியவுடன் கரும்பு வெட்டுவோம். 

கொடியில் சில, செடியில் சில கிழங்கில் சில, காய்கள் பயன்படுத்துவோம்.  பலாக்காய் கூட்டு.  நாலு பொரியல் மூன்று குழம்பு, கூட்டு, ரசம் பருப்பு அப்பளம் உண்டு.

மாட்டுப் பொங்கல் என்றால் மாட்டுக்கு பூஜை செய்து மஞ்சள் குங்குமம் தீபம், பொங்கலிட்டு ஊட்டுதல். 

தஞ்சாவூரில் எங்கள் தாத்தாவுக்கு வயல் இருந்தது. சாலியமங்கலம்.  இப்போது இல்லை. விற்றுவிட்டோம். 

மூன்றாவது வருடத்தில் மேஜர் சேலை கட்டிக் கல்லூரியில் குழுவாகப் பொங்கலிட்டது மறக்கமுடியாத அனுபவம். கேண்டில் லைட் செரிமனி என்று ஒன்று உண்டு. இந்தப் பொங்கல்பற்றி சுசீலாம்மாவின் புது நாவலான தடங்கள் தடம் பதித்துள்ளது. 

நமக்குப் பொங்கல் என்றால் ஒரு பொங்கல் மட்டுமில்லை. அதாவது தைப்பொங்கல் போல சித்திரைப் பொங்கல் உண்டு. ஆடி மாதம் அம்மன்கோவில்களில் பொங்கல் வைப்பதுண்டு. ( கத்தோலிக்கக் கிறித்துவர்கள் லூர்து அன்னை ஆலயத்தில் பொங்கல் வைப்பார்கள். ). சித்திரைப் பொங்கல், தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், கணுப்பொங்கல்,  குலதெய்வம் கோவிலில் பொங்கல். 

மேலும் திருமணமானதும் மணவறைப் பொங்கல் உண்டு. அதை பெண்ணின் &மாப்பிள்ளையின் மாமன் மனவி ( அம்மான்பெண்டிர் ) வைப்பார்கள்.  அதன்பின் திருமணம் ஆனதும் முனியையா கோவிலில் முதல் பொங்கல், அப்புறம் வீடுகளில் கார்த்திகைப் பூசை என்றால் முருகனுக்குப் பொங்கல் வைப்பதுண்டு. பள்ளயம் போடுவதுண்டு. 

வருடாவருடம் ஒரு கூடையில் மஞ்சட்டி அகப்பை, சிராட்டைத்தூள், அரிசி, பருப்பு, வெல்லம் எல்லாம் கொண்டுபோய் பிள்ளையார் கோவிலில் பொங்கல் இடுவார்கள். சாமிவீட்டில்/ படைப்பு வீட்டில் பொங்கல், அதன்பின் வீட்டில் பொங்கல் வைப்பார்கள் அம்மா வீட்டில்.  பால் பொங்கிருச்சா எனக் கேட்பதும் உண்டு. பொங்கல் சீர், பொங்கப்பானை, கொப்பி கொட்டுதல், பொங்கல் காசு என்பதெல்லாம் இங்கத்திய நடைமுறைகள். 

குடிபுகுதல், திருமணம் அகியவற்றின்போதும் பொங்கலிடுவோம்.

புறநானூற்றில் 22 ஆம் பாடல் ‘அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம்போல’ என்று குறுங்கோழியூர் கிழார் எனும் புலவர் அறுவடை விழாவைச் சாறு கண்ட களம் என வர்ணிக்கிறார். 

கி.பி. 9-ம் நூற்றாண்டை சேர்ந்த சீவகசிந்தாமணி பொங்கல் பற்றி “மதுக்குலாம் அலங்கல் மாலை மங்கையர் வளர்த்த செந்நீப் புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்” என பொங்கலைக் குறிப்பிடுவதில் இருந்தே அதன் தொன்மையை அறியலாம்.

“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை

“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை

“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு

“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு

“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையும் கூறுகின்றன.

  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இடைக்கால சோழர் காலத்தில் பொங்கல் கொண்டாடப்பட்டுள்ளது. மணிமேகலையில் இந்திரவிழாவாக 28 நாள் கொண்டாடப்பட்டதாகக் குறிப்பு உள்ளது. கிராமங்களில்  மாமன்மார் தமது முறைப்பெண்களுடன் ஆவாரம்பூ பறிக்கச் செல்வார்கள். 

பொங்கலுக்கு அடுத்த நாள் ஆநிரைகளின் விழா அதாவது மாட்டுப் பொங்கல். பால் பொருட்கள், உரங்கள் தந்து விவசாயத்துக்கும் உழைத்து தம்மைச் செழிப்பாக வைத்திருக்கும் கால்நடைகளை கௌரவிக்கும் தினம். கட்டுத்துறையில் நிற்கும் மாடுகளின் ( எருதுகள், பசுக்கள் ) கொம்புகளில் வர்ணம் தீட்டி, குளிப்பாட்டித் திலகமிட்டு துண்டு மாலை போட்டுப் பூஜை செய்து தீபம் காட்டிப் பொங்கல் படைப்பார்கள். இன்று கொம்பில் அல்லது மாலையில் பரிசப்பணம் கட்டி ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு ஆகியனவும் நடைபெறும். 

ஊனையூர், சிராவயல் அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் மஞ்சுவிரட்டு, ஜட்கா ரேஸ், கோழிச்சண்டை, கிடாச்சண்டை உண்டு.

 நப்பின்னையைத் திருமணம் செய்ய கிருஷ்ணரே ஏழு எருதுகளை அடக்கியதாகப் புராணம் சொல்கிறது. உறியடித்தல் போன்ற விழாக்களும் நடைபெறும். தென்னை ஓலையில் தீப்பிடித்து மாடுகளை மூன்று முறை சுற்றி திருஷ்டி கழித்து ஊரெல்லையில் கொண்டுபோய்ப் போடுவார்கள். ஸ்பானிஷ் போன்ற நாடுகளில் கூட எருது அடக்கும் திருவிழா புல் ஃபைட் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

கொங்கு நாட்டில் பட்டி நோம்பி பிரசித்தம்.  கட்டுத்துறையில் மாடுகள் வளர்த்து வருதல் இங்கே காரைக்குடியில் அக்கால நடைமுறை. தழுவு சோறு கொடுத்தல், கொல்லேறு தழுவுதல், கணுப்பிடி, முன்னோருக்குப் படைத்து வழிபாடு, குலவையிடுதல், கும்மியடித்தல், கோலாட்டம், ஜல்லிக்கட்டு/மஞ்சுவிரட்டு/ஏறுதழுவுதல், உரியடித்தல், வழுக்குமரம் ஏறுதல், ஆவாரம்பூ பறித்தல், இளவட்டக்கல் தூக்குதல்ஆகியன பொங்கல் கொண்டாட்டங்களைச் சேர்ந்தவை. பொங்கல் ஒருநாள் பண்டிகை அல்ல. அது ஒரு தொடர் கொண்டாட்டம்.

கலித்தொகை, ஆய்ச்சியர் குரவை- சிலப்பதிகாரம், மலைபடுகடாம் ஆகியவற்றில் ஏறுதழுவுதல் பற்றிக்குறிப்பிடப்படுகிறது. 

கிருஷ்ண அவதாரத்தில் இன்னொரு சமயத்திலும் சூரிய வழிபாடு சூழ்வினை போக்கும் என சுட்டிக்காட்டியிருக்கிறான் கோவிந்தன். தன் ப்ரியத்துக்கு உரிய நாரதரை, தன் மகன் சாம்பன் (ஜாம்பவதிக்கும் கிருஷ்ணருக்கும் பிறந்தவன்) கேலி செய்ததால் கோபம் கொண்டு, பெருநோய் பீடிக்க சாபமிட்டான் சக்ரதாரி. மகன் தவறுணர்ந்து சாபவிமோசனம் வேண்டும்போது மக்கள் நதிக்கரையில் பொங்கல் இடும்போது அந்த அடுப்பின் புகைபட்டால் நோய் நீங்கும் என்றார்.

காணும் பொங்கலன்று ”காக்கபிடி கணுபிடி” என கலர்கலரான சித்திரான்னம், காய், வாழைப்பழம், மஞ்சள் இலை, இஞ்சி கலந்து கணுபிடி எனப் பிடித்துப் பெண்கள் தங்கள் சகோதரனின் நீண்ட ஆயுளுக்காக வேண்டிக் கொண்டு பறவைகளுக்கு உணவளிப்பார்கள். அன்று மாக்கனுமா என்று ஆந்திராவில் அசைவம் உண்பதும் உண்டு. இன்று கூட்டாஞ்சோறு ஆக்கி நதிக்கரைகளுக்கு குடும்பத்தோடு எடுத்துச்சென்று உண்பதும் உண்டு. 

காணும் பொங்கலன்று உறவினர்களைக் காணச் செல்வார்கள். சிதம்பரம் போன்ற ஊர்களில் கோயில்களில் பெண்கள் குழுமி கூடை வைத்துச் சுற்றிக் கும்மி, கோலாட்டம் அடித்துக் கொண்டாடுவார்கள். ஏனைய பெண்கள் இக்கூடைகளில் காய்கறிகளைப் போடுவார்கள். 

சூரிய வழிபாடு இதிகாச புராணங்களான மகாபாரதம் , இராமாயணம் , காப்பியங்களான சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி , மணிமேகலை(யில் 28 நாட்கள் இப்பொங்கல் விழா ) ஆகியவற்றில்  கொண்டாடப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

அடுத்துத் திருவள்ளுவர் தினம்

தை முதல்நாள்தான் நமக்கு உத்தராயணம் தொடங்குகிறது. சொல்லப்போனால் அதுதான் நமக்குப் புத்தாண்டு ஆரம்பம். 

1031. திருக்குறள் சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை,

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர், 

எனவே நமக்கு உணவு படைக்கும் அவர்களைத் தெய்வமாகத் தொழுது நாம் பின் செல்ல வேண்டும். 

எனவே வேளாண் பெருமக்கள் காப்பீடு செய்திருந்தால் பொதுப் பேரிடர் நேரும்போது அவர்களுக்கு அந்தக் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்பதை வேளாண் மையங்கள் அறிவுறுத்த வேண்டும். எனவே இந்த உழவர்கள் வாழ்வை மட்டுமல்ல நமது வாழ்வையும் புதுப்பிக்கும் இந்தத் தைப்பொங்கலைக் கொண்டாடி மகிழ்வோம். 

இதையும் பாருங்க. 


மரபும் அறிவியலும். பொங்கல். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...