எனது பதிநான்கு நூல்கள்

புதன், 24 பிப்ரவரி, 2021

போகணியும் காப்பித்தட்டும் பால்பானைச் செம்பும் கூஜாவும்

 காப்பி ஆற்றும் தட்டு என்று ஒரு பாத்திரத்தை இங்கே குறிப்பிடுவார்கள். அந்தப் பெயர் ஏன் வந்தது என்று தெரியாது. ஆனால் அது எது என்று பின்னே வருது..  பார்ப்போம். 

நண்பர் திரு வைகோ சார் ( வை கோபாலகிருஷ்ணன் சார் )எங்க ஊர் பக்கம் புழங்கும் பாத்திரத்துக்கு எல்லாம் என்ன பேர் என்று குறிப்பிட்டு எழுதும்படி முன்னே ஒரு இடுகையில் சொன்னதாக ஞாபகம். எனவே கிடைத்தவற்றைப் புகைப்படம், பேரோடு போட்டிருக்கிறேன். 

மேலே இருக்கும் டம்ளர்களை இங்கே போகணி என்பார்கள். சில ஊர்களில் காஃபிக் குவளை என்று சொல்வதுபோல். வெள்ளிப் போகணி, வெங்கலப் போகணி, செம்புப் போகணி, மங்குப் போகணி , அலுமினியப் போகணி எல்லாம் உண்டு.இது எவர்சில்வர் போகணி. 
இது ஹார்லிக்ஸ் அடிக்கிற போகணி.. ஹார்லிக்ஸ் 2 ஸ்பூன், சீனி ஒரு ஸ்பூன், கொதிக்கக் கொதிக்க ஒரு டம்ளர் வெந்நீர் ஊற்றி இந்தப் போகணியில் இருக்கும் வளைய ஸ்டாண்டால் அடித்துக் கொடுப்பார்கள். கட்டி தட்டாமல் நன்கு கரைந்து இருக்கும். ஹார்லிக்ஸ் அடிப்பது போலவே இதில் குழந்தைகளுக்குப் பால் பவுடரையும் போட்டு அடித்துக் கொடுப்பார்கள்.

இது அடுக்குச் சட்டி. ஒரு அடுக்கில் 4 அல்லது 5 சட்டிகள் இருக்கும். சீர்முறை கொடுத்த நோட்டில் எழுதும்போது அடுக்குச் சட்டிக்கு நான்கு/ஐந்து உருப்படி சின்னம் பெரிசு என்று எழுதுவார்கள். 


சில்வர் பல்லாங்குழி.  அதை அவரவர் பக்கத்தில் எடுத்துக் கொள்ளலாம். இரண்டிலிருந்து நான்கு பேர் வரை. சோகியோ புளியமுத்தோ போட்டு விளையாடும் விளையாட்டு இது. ஒரு கட்டத்தில் ஐந்து முத்துப் போட்டு விளையாட்டை ஆரம்பிக்க வேண்டும். ஒரு குழியில் இருக்கும் ஐந்து முத்தை ஒவ்வொரு குழியாக எடுத்துப் போட்டுக்கொண்டே வர வேண்டும். இந்த விளையாட்டுக்கு எதிர்ப் பாண்டி என்றும் பெயர். ஒரு குழி காலியானால் அந்தக் குழியைத் தடவி அடுத்தகுழியில் இருக்கும் காயை எடுத்துக் கொள்ளலாம்.இதையே எதிர் எதிர்குழியில் இருக்கும் காய்களையும் எடுத்துக் கொண்டால் அதற்கு எதிர்ப்பாண்டி என்று பெயர்.  நான்கு வந்தால் பசு. அதையும் எடுத்துக் கொள்ளலாம். கடைசியாகக் கஞ்சி காய்ச்சுதல் வரை ( ஒருவர் முழுமையாகத் தோற்கும்வரை )  விளையாடுவார்கள். 
கிண்ணித்தட்டு.சாப்பிடும் தட்டுகள். 
சில்வர் தாம்பாளம். சின்னம். 
இதுதான் காப்பித்தட்டு. சில்வர்/அலுமினிய.மங்கு  பேஸின்களைத்தான் காப்பித்தட்டு அல்லது காப்பி ஆத்தும் தட்டு என்று இங்கேசொல்வது வழக்கம். அது ஏன் என்றுதான் தெரியல. இதில் மாவு சலிப்பது. வத்தவரளி காயப்போடுவது உண்டு. 
குலோப் ஜாமூன் கப்ஸ் - கிண்ணங்களும் சின்ன டப்பாக்களும். 

 மேலே இருப்பது சப்பட்டை அடுக்குச் சட்டி. 
தூர் உருண்டிருப்பதால் உருண்டை அடுக்குச் சட்டி.
இவை உயரச் சட்டிகள். உதிரி. 
சோற்றுத் தவலை. 
சப்பட்டை அடுக்கு ஒண்ணுக்கு உருப்படிகள் 4. சின்னம் பெரிசு சட்டிகள் - 4. 
சில்வர் செம்பு, கூஜா, வெள்ளப் பித்தளை.  பால்பானைச் செம்பு. 

இந்தச் செம்பில் இன்னமும் தண்ணீர் குடிப்பதுண்டு. பால்பானைச் செம்பு திருமணங்களில் ( வெள்ளியில் ) பயன்படும். இந்தக் கூஜாவை நீங்கள் பழைய படங்களில் பார்த்திருக்கலாம். எடுபிடி வேலை செய்பவரையும் கூஜா ( தூக்குபவர் )  எனக் குறிப்பிடும் பழக்கம் உண்டு. அந்தக்கால வாட்டர் ஜக். 

படங்களில் வில்லி அல்லது வில்லன் பாக்குப் போட்டுத் துப்பியதும் இதிலிருந்து அந்தஎடுபிடி தண்ணீர் கொடுக்க அதைக் கொப்பளித்துத் துப்பி விட்டு வில்லன் அல்லது வில்லிகள் புருவத்தை நெரித்தபடி வசனம் பேசுவது ஹைலைட். 

ஆனால் நிஜத்தில் வயதானவர்களின்மற்றும் (பாட்டில்கள் புழக்கமில்லாத் அகாலத்தில் மற்ற எல்லோருடைய)  பயணத் துணைவன் இந்த ஜக் எனப்படும் கூஜா. 

2 கருத்துகள்:

  1. நல்லதொரு பதிவு ,இவற்றில் சில பொருட்களை பார்த்து இருக்கிறேன் .

    பதிலளிநீக்கு
  2. நன்றி கரிகாலன்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...