எனது பதிநான்கு நூல்கள்

சனி, 6 பிப்ரவரி, 2021

பசுக்கள் மேய்த்து ஞானம் பெற்ற சுவேதகேது.

 பசுக்கள் மேய்த்து ஞானம் பெற்ற சுவேதகேது.


பள்ளிக்கூடத்தில் சரியாகப் படிக்காத மாணவர்களை ஆசிரியர்கள் நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு எனத் திட்டுவார்கள். மாடு மேய்ப்பது அவ்வளவு சுலபமா என்ன ? நன்கு படித்திருந்தும் தன் ஆசிரியர் மாடு மேய்க்கச் சொன்னதற்காகக் கோபப்படாமல் பசுக்களை மேய்த்து அவற்றின் மூலம் ஞானம் பெற்ற சுவேதகேது என்பவன் கதையைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
உத்தாலக ஆருணி என்றொரு முனிவர் இருந்தார். அவருடைய மகன்தான் சுவேதகேது. அறிவும் ஆற்றலும் நிரம்பப் பெற்றவன். உத்தாலக முனிவரே சுவேதகேதுவுக்குக் கற்பித்து வந்தார் . ஆனாலும் அவனுக்கு உரிய வயது வந்ததும் அவனைக் கல்வி கற்க வேறொரு குருவிடம் அனுப்பினார்.
அவன் அக்குருவிடம் சென்று வேதங்கள், உபநிஷதங்கள், பிரம்மசூத்திரங்கள் பற்றிக் கற்றுக் கொண்டான். அதன் பின் தன் தந்தையிடம் திரும்பி வந்தான். அப்போது அவனது தாயை வேறொரு முனிவர் தானமாகப் பெற்றுச் செல்ல முயல அதைத் தடுத்து நிறுத்தினான். மேலும் “ஒரு பெண் பிறந்ததும் முதலில் தந்தை, திருமணத்துக்குப்பின் கணவன், முதுமையில் மகன் ஆகியோர் மட்டுமே கவனித்துக்கொள்ள உரிமை பெற்றவர் , மற்றையோருக்கு  தானமளிக்க பெண் ஒன்றும் பொருள் அல்ல” என்பதை உரக்கச் சொல்லி நிலைநாட்டினான்.


கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய மகனைக் கண்டு பெருமைப்படுவதற்குப் பதில் உத்தாலக முனிவர் கோபப்பட்டு “ நீ இன்னும் உலக அறிவு பெறவில்லை. உன் கல்வி முழுமை அடையவில்லை. உனக்கு ஞானம் கிட்டவில்லை. திரும்பிப் போய் முழுமையாகக் கற்றுவா “ என அனுப்பினார்.
தான் கற்க வேண்டிய அனைத்தையும் கற்றும் தந்தை ஏன் அப்படிச் சொன்னார் என யோசித்துக் கொண்டே தன் குருவிடம் திரும்பி வந்தான் சுவேதகேது. “ குருவே நான் கற்றது போதாது என என் தந்தை புகல்கிறார். நான் இதற்கு மேலும் ஞானம் பெற இனி என்ன கற்பது எனச் சொல்லுங்கள் குருவே “ எனக் கேட்கிறான்.
உடனே குரு ”ஓ ! அப்படியா சொன்னார் உன் தந்தை. அப்படியானால் இதோ இங்கே இருக்கும் நானூறு பசுக்களையும் ஓட்டிச் சென்று மேய்த்து அவை ஆயிரமாகப் பெருகியதும் திரும்பி வா “ எனச் சொன்னார்.
இதைக் கேட்டு கோபமோ வருத்தமோ அடையவில்லை சுவேதகேது. ’நான் எவ்வளவு கற்றிருக்கிறேன். என்னைப் போய் பசுக்களை மேய்க்கச் சொல்கிறீர்களே. ’ என கிஞ்சித்தும் எண்ணாமல் அந்தப் பசுக்களை ஓட்டிச் சென்றான். அவைகளை முதலில் ஓட்டிச் செல்வது கடினமாகத்தான் இருந்தது.
ஒவ்வொன்றும் அக்கம் பக்கம் புல்லைப் பார்த்தால் மேயத் தொடங்கிவிடும். அதற்குள் முன்னே போகும் பசுக்கள் ஒரு காத தூரம்போயிருக்கும். நடுவில் குளம் குட்டையைப் பார்த்தால் சிலது இறங்கிவிடும். கானகத்துக்குள் அனைத்தையும் ஓட்டிச் சென்று ஒழுங்குபடுத்துவதற்குள் அவனுக்குப் போதும் போதுமென்றாகிவிட்டது.


நிறையப் புற்களும் நீர் நிலைகளும் நிரம்பிய இடத்துக்கு அவைகளை ஒருவழியாக ஓட்டிச் சென்றான். மாடுகளை எப்படிப் பராமரிப்பது என்பதன் அரிச்சுவடி கூட அறியாததாகவே இருக்கிறதே தான் கற்ற கல்வி என யோசிக்கத் தொடங்கினான். எத்தனையோ சூத்திரங்கள் கற்றும், கற்பது ஒன்றும் வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டியது ஒன்றுமாக இருப்பது அவனுக்கு வியப்பளித்தது. கல்விக்கும் இயல் வாழ்க்கைக்கும் சம்பந்தமேயில்லை.
மாடுகள் ஏகப்பட்டது இருந்ததால் அவனால் அவற்றை ஒழுங்குபடுத்துவதைத் தவிர வேறெதையும் சிந்திக்கவே முடியவில்லை. அனைத்துக்கும் உணவு கிடைக்கிறதா எனப் பார்ப்பதும் புல், தழைகளைப் பிடுங்கிப் போடுவதும்., அவற்றைக் குளிப்பிப்பதும், அவை குட்டிபோடும்போது பாதுகாப்பதும், மழை வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களின்போது சம்ரட்சணை செய்வதுமாகப் பொழுது போயிற்று.


ஒன்ற இரண்டா ? நானூறு பசுக்களாயிற்றே. அவை குட்டி போட்டுப் போட்டுப் பெருகிக் கொண்டே இருந்தன. நாளாக நாளாக அவன் உண்பதைக் கூட மறந்தான். பசுக்களோடு பசுக்களாகவே வாழத் தொடங்கினான். அவற்றின் ஒவ்வொரு அசைவும் அவனுக்கு அத்துப்படியாகத் தொடங்கியது. அவற்றின் கண்களைப் பார்த்தே அவைகளின் உணர்வுகள் அவனுக்குப் புரிபட ஆரம்பித்தன.
கானகம் என்பதால் அங்கே மனித நடமாட்டமே இல்லை. அதனால் அவன் ஆதி மனிதர்கள் போல பேசுவதை மறந்தான். மொழி மறந்தது. நாள் கிழமை, வாரம், மாதம் எல்லாம் அவனுக்குத் தெரியவில்லை. எந்நேரமும் பசுக்களுடன் புழங்கிப் புழங்கி அவை தமக்குள் பேசிக்கொள்வது கூட அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது.
தன்னுடைய கர்மத்தை ( வேலையை ) கர்மமே கண்ணாயினனாகக் கொண்ட அவனுக்கு ஞானம் சித்திக்கக் தொடங்கியது. பசுவைப் போல மென்மையானவனாக மொழியற்றவனாக அவன் மாறினான். ஒரு நாள் ஒரு பசு முன்வந்து “சுவேதகேது. நாம் குருவிடம் திரும்பிப் போவோம். அந்த நாள் வந்துவிட்டது “ எனக் கூறியது.
சுவேதகேது ஒன்றும் சொல்லவில்லை. பசுக்கள் தாமே குருவின் இருப்பிடம் நோக்கி முன்னே செல்ல அவன் அவற்றைப் பின் தொடர்ந்தான். ஆசிரமத்தில் பசுக்கூட்டம் திரும்பி வந்திருப்பது கண்டு சிஷ்யர்கள் ஓடிவந்து எண்ணிப் பார்த்தார்கள். “ குருவே. நானூறாகச் சென்ற பசுக்கள் மொத்தம் ஆயிரம் பசுக்கள் ஆகித் திரும்பி வந்திருக்கின்றன “ என்று சொல்லி ஆச்சர்யப்பட்டார்கள்.
குருவின் வாக்கை நிறைவேற்றிய சுவேதகேதுவைப் பார்த்து குரு சொன்னார் .” சுவேதகேது நீ உன் கர்மத்தை நிறைவேற்றி ஞானம் பெற்றுவிட்டாய். ஆழ்ந்த ஈடுபாட்டோடு நீ இச்செயலைச் செய்து அதாகவே மாறியதால் நீயே பிரம்மமாகிவிட்டாய். உன் கல்வி பூர்த்தியாகிவிட்டது. நீ சென்று வா “ என்று அனுப்பினார். சுவேதகேது தன் தந்தையிடம் திரும்பி வர அவரும் “ நீ உன்னத நிலையை அடைந்தாய் சுவேதகேது “ எனச் சொல்லிக் கட்டியணைத்துக் கொண்டார்.
நாமும் சுவேதகேதுபோல் நாம் செய்யும் செயல்களை ஈடுபாட்டோடு செய்து அதில் வெற்றி காண்போம் குழந்தைகளே.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...