ஜெர்மனியில் வூபர்டால் வோஹ்விங்கல் சஸ்பென்ஷன் மோனோரயிலில் பிரயாணம் செய்துக்கிட்டு இருந்தோம். இது வூபர் நதியின் மேல் பயணிக்குது. அங்கேயே உங்களை விட்டுட்டுப் போயிட்டேன். வாங்க தொடருவோம்.
கார்ல் யூஜின் லாங்கன் என்ற பொறியாளர் வடிவமைச்சாலும் அரசாங்கப் பொறியாளரான வில்ஹெல்ம் ஃபெல்ட்மென் என்பவரின் மேற்பார்வையில்தான் இந்தத் தொங்கு ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கு.
இந்தப் பாதையும் ரயிலும் தயாரானதும் சோதனை ஓட்டம் 1900 அக்டோபர் 24 இல் நடைபெற்றபோது வில்ஹெல்ம் 2 என்ற ( ஜெர்மனியின் கடைசிச்) சக்கரவர்த்திதான் இதில் பயணம் செய்தாராம்.!
சக்கரவர்த்தி பயணம் செய்த பெட்டிக்குப் பேரு கைஸர்வேகன் ( எம்பரர்ஸ் கார் ) இது சிவப்பு நிறத்தில் இருக்கும்.
சக்கரவர்த்தி வில்ஹெல்ம் ll பயணித்தபாதையில் நாமும் போய் வருவோம் வாங்க.
இந்த ட்ரெயினுக்கும் சிக்னல்கள் உண்டு. சிவப்பு, பச்சை, மஞ்சள் என்று. மஞ்சள் ஒளிர்ந்தால் அங்கே கன்ஸ்ட்ரக்ஷன் வேலை என்றும், சிவப்பு ஒளிர்ந்தால் அங்கே ஏதோ அபாயம் என்றும் புரிந்துகொண்டு ட்ரெயின் ட்ரைவர்கள் இதைப் பார்த்து ஓட்டுவார்கள்.
முதலில் 24 கார்கள் ( ட்ரெயின்கள் ) இருந்தது நீக்கப்பட்டு ( ஜிடிடபிள்யூ 75 ஃப்ளீட் ) 31 புதுக்கார்கள் ( ட்ரெயின்கள்) இயக்கப்படுது. இதுக்கு 4 கதவு உண்டு. எல்லாம் ட்ரெயினின் ஒரே பக்கம் அமைக்கப்பட்டிருக்கும். 48 பேர் அமர்ந்தும் 130 பேர் நின்றும் பயணிக்கலாமாம்.அதன்பின் பொதுமக்கள் பயணிக்க 1901 இல் திறந்துவிடப்பட்டிருக்கு. முதலில் க்ளூஸ் என்ற ஸ்டேஷனும் அதன் பின் வோஹ்விங்கலும் கடைசியா ஓபர்பார்மனும் செயல்பாட்டுக்கு வந்திருக்கு.
இரும்பு குவிந்து கிடக்கும் தேசம் என்பதால் அந்தக்காலத்திலேயே 19,200 டன் இரும்பை இந்த ரயில்வே ட்ராக் செய்ய உபயோகிச்சிருக்காங்க. சுமாரா 16 மில்லியன் கோல்ட் மார்க் செலவாகி இருக்கு. ( அந்தக்கால கட்டத்துல சில்வர் , கோல்ட் காயின்களை புழங்கத் தடை இருந்ததால இது தங்கத்தின் தரத்தை நிர்ணயிக்கும் கரன்ஸி. ( பேப்பர் கோல்ட்)
2004 இல் இதை சீரமைக்கும்போது ( ரீகன்ஸ்ட்ரக்ஷன் ) 480 மில்லியன் பணம் செலவாகி இருக்கு. 2009 - 2010 களிலும் ஒரு முறை சீரமைச்சிருக்காங்க. 2012, 2013 களிலும் இதன் சப்போர்ட்டிங் பில்லர்ஸை சீர்படுத்தி இருக்காங்க.
2011 இல் ஜெனெரேஷன் - ஜிடிடபிள்யூ 15 என்ற புது ட்ரெயின் மாற்றப்பட்டிருக்கு ( பழசு ஜிடி டபிள்யூ 75 ஃப்ளீட்)
486 பில்லர் & ப்ரிட்ஜ் வொர்க் ஸ்டேஷன் இருக்கு.
இதற்கான திட்டங்கள் 1824 களிலேயே ஆரம்பிக்கப்பட்டு இருக்கு. ஆனா செயல்படுத்த முடியல. ஹென்ரி ராபின்ஸன் பால்மர்ங்கிறவர் ஒரு சிறப்பு ரயிலை அறிமுகப்படுத்தினார். குதிரைகள் தொங்கும் கேரியேஜ்களை இழுத்துக் கொண்டு ஓடுவதுதான் அந்த சிறப்பு ரயிலின் அம்சம்.
1826 இல் இதே பால்மரின் ரயில் ஐடியாவை ஃப்ரெடரிக் கார்கோட் என்பவர் வூபர் பள்ளத்தாக்கில் செயல்படுத்த விரும்பி அது பலதரப்பிலும், (பொதுமக்கள், நிலச்சுவாந்தாரகள்) எதிர்ப்பைச் சம்பாதித்ததால் கைவிட்டார்.
அதன்பின் 1894 இல் கோலோனைச் சேர்ந்த இஞ்சினியர் யூஜின் லாங்கனின் மூலமா இந்தத் தொங்கு ரயில் திட்டத்தை வடிவமைச்சு டுசில்டார்ஃப் நகராட்சிகிட்ட அனுமதி வாங்கினாங்க.
1850 களில் இவர்கள் தொங்கு ரயிலுக்கான திட்டங்களில் இருந்தபோது இங்கே போர்பந்தரில் இருந்து தானே வரை முதல் புகைவண்டி இருப்புப்பாதையில் ஓடி சாதனை படைத்தது. ( 32 கிலோமீட்டரை 57 நிமிடங்களில் கடந்ததாம் முதல் ரயில் !)
இந்தத் தொங்கும் ரயில் பாதை அமைக்கப்பட்டு 120 வருடம் ஆகியிருக்கு. இதன் 75 ஆம் ஆண்டில் இதைச் சிறப்பிக்கும் விதமாத் தபால் தலை எல்லாம் வெளியிட்டுக் கௌரவிச்சிருக்காங்க.
இலக்கியத்திலும் சினிமாவிலும் இடம் பெற்றிருக்கு இந்த ட்ரெயின்.
தியோடர் ஹெர்ஸல் என்பவர் எழுதிய யுடோபியன் நாவலிலும் ( தெ ஓல்ட் நியூ லாண்ட் ) , ஒரு டச்சுப் படத்திலும் ( தெ சண்டே சைல்ட் ) , ஆலிஸ் இன் தெ சிட்டீஸ், தெ பிரின்ஸஸ் & தெ வாரியர் இந்தத் தொங்கும் ரயிலை வைச்சுக் கதையமைப்பும் , சில காட்சிகள் இதனுள்ளேயும் எடுக்கப்பட்டிருக்கு.
டர்னர் ப்ரைஸுக்காக முன்மொழியப்பட்ட டாரன் ஆல்மாண்டின் ட்ரெயின் ட்ரையாலஜியும் இதை மையமா வைச்சு எடுக்கப்பட்ட வீடியோதான் .
இன்னும் சில டிவி சீரிஸிலும், ஸ்டாம்புகளிலும் இந்தத் தொங்கும் ரயில் இடம் பெற்றிருக்கு.
வில்ஹெல்ம் ll பயணித்த பாதையில் பயணிச்சுட்டோம். கைஸர்வேகனில் கூட்டிப் போகலையா.. ஆமாம். அது விசேஷ நாட்களில் மட்டும்தான் ப்ரத்யேகமா டிக்கட் வாங்கிப் போகமுடியுமாம். அதுனால சாதாரண வேகனிலேயே சக்கரவர்த்தி பயணித்த பாதையில் நாமளும் போய் வந்துட்டோம்.:) சரி ( அவரவர்) வீட்டுக்குப் போவோம். !:)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!