எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 9 ஜனவரி, 2020

புதுவயல் கைலாஸ விநாயகர் கும்பாபிஷேக மலரில் எனது பாடல்.

நேற்று புதுவயல் கைலாஸ விநாயகர் கோயில் கும்பாபிஷேக மலர் வெளியிடப்பட்டது. மலருக்கு பாடல் ஒன்று எழுதிக் கேட்டிருந்தார்கள். மூன்று மாதம் முன்பு அனுப்பியிருந்தேன். நேற்று மலருக்குக் கட்டுரை பாடல் எழுதியவர்களுக்கு மேடையில் சிறப்பு செய்தார்கள்.

கோவிலூர் சீர் வளர் சீர் திரு மெய்யப்ப ஞான தேசிக ஸ்வாமிகள் தலைமையேற்க , திரு சபா அருணாசலம் உரையாற்றினார். இன்னும் பலர் பேசியதும் மலர் வெளியிட்டதும் சீக்கிரமே முடிந்துவிட்டது. நாங்கள் 5 மணிக்குத்தான் புறப்பட்டுச் சென்றோம்.



நான் போடியம் பின்னே நின்றதால் தலைவரால் இருந்த இடத்திலிருந்து புகைப்படம் எடுக்க இயலவில்லை . அதனால் வீடியோ மட்டும். :)








அப்பாடல் இதோ :-

புதுவயல் விநாயகன்
நிதிவயல் விளைத்திடுவான்
அயற்சியற்று முயற்சிசெய்தால்
வெற்றியைத் தந்திடுவான்.

பார்வதி மேனியில் பிறந்திட்ட
பவித்திர புத்திரனவன்
அரசமரங்கள் தோறும்
அரசாட்சி செய்பவனவன்

முழுமுதற் கடவுளவன்
முற்றுமறிந்த ஞானக்கொழுந்தவன்
வெள்ளிஅங்கியில் துள்ளிவருகிறான்
பிள்ளைப் பெருமானவன்.

நம்பிக்கை நாயகனவன்
தும்பிக்கையால் காப்பான்
கொம்பை எழுதுகோலாக்கிப்
பாரதம் எழுதிய புதுமை எழுத்தனவன்

பிறைதனைச்சூடிப் பித்தம் அகற்றியவன்
அங்காரகனையும் அமரன் ஆக்கினவன்
ஆனைமுகம் பெற்ற ஐந்துகரத்தனவன்
பானைவயிற்றனவன் பரம்பொருட் தத்துவமன்

பாம்பை இடைகயிறாய் 
இடுப்பில் சுற்றியவன்
காவிரி நலம்பெருக்க
காக்கையாய்த் தட்டியவன்

ஆமையின் இறுமாப்பு அடக்க
கடலை அருந்திய தொப்பையப்பன்
மாங்கனிக்காக மயில்வாகனன் சுற்ற
அம்மையப்பனே அகிலமெனப் பற்றியவன்

ஓமெனும் உருவாய் நின்றவனவன்
உள்ளொளியாய்த் திகழ்பவனவன்
நெற்றியில் குட்டி உக்கிகள் போட்டால்
ஞானமும் நல்போதமும் அளித்திடுவான்

விடலைக் காய் போட்டால்
வினைகள் எல்லாம் தீர்ப்பவனவன்
அருகம்புல் மாலையிட்டால்
வரும் வம்பு நீக்குபவனவன்

நகரத்தின் கூட்டமும்
நாட்டுமக்கள் தேட்டமும்
சிந்தையில் கொண்டிடுவான்
சிகரம்போல் வாழ்வு தந்திடுவான்


புதுவயலைத் திருவயலாக்கும்
கைலாச விநாயகனவன்
தேரோட்டம் காண ஊரோடி வருகிறது.
குடமுழுக்குக்காண திடசித்தம் பெருகுகிறது.

புத்தகத்தில் வரிகள் இடம் மாறி இடம்பெற்றுள்ளன. அடுத்து பிரசுரமாகும் பிரதிகளில் திருத்திவிடுவதாகக் கூறி இருக்கிறார்கள். 

3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...