உணவு உடை உறையுள் ஒரு மனிதனுக்கு அத்யாவசியம் என்பார்கள். அத்தோடு சுகாதாரமான கழிப்பறையும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு பெண்ணிற்குமான அடிப்படைத் தேவை என்று சொல்வேன். 2019 நவம்பர் 12 இல் என் வலைத்தளத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில் சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில் சாலையில் செம்மொழி நூலகம் ஒன்று திறக்கப்படக் காத்திருக்க அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மனிதர்கள் திறந்த வெளியில் மலசலம் கழிப்பதைப் பற்றியும் நூலகத்தோடு கழிப்பிடத் தேவையின் அத்யாவசியம் பற்றியும் எழுதி இருந்தேன். அனைவருக்குமான கழிப்பறையின் தேவைகள் இப்போது நனவாகி வருவது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறது.
வீட்டிற்குள் கழிவறை இல்லாத காரணத்தால் நகரமோ, கிராமமோ, முள்ளும் கல்லும் நிறைந்த காட்டுப்பகுதிகளில், திறந்த வெளிகளில், வயல்வெளிகளில், ரயில்வே தண்டவாளங்களுக்கருகில் , கண்மாய்க் கரைகளில் காலைக் கடன் கழிக்கும் மக்களை முன்பு பெருவாரியாகப் பார்க்க முடியும்.
இந்தியன் ரயில்வே தண்டவாளங்கள்தான் உலகத்திலேயே நீண்ட திறந்தவெளிக் கழிவறைகள். இந்தத் திறந்தவெளிக் கழிவறைகளில் இருந்து மக்களை விடுவித்து கிராமப்புறங்களை மேம்படுத்தக் கொண்டு வந்த திட்டம்தான் ஸ்வச்சபாரத் மிஷன் கிராமின் திட்டம். சில கிராமங்களில் இன்றும் சுகாதாரமான கழிப்பறைகள் கொண்ட வீடுகள் இல்லை. நிர்மல் பாரத் அப்யான் திட்டம் கழிவறை கட்ட நிதி உதவி செய்கிறது.
ஸ்வச்ச பாரத் மிஷன் கிராமின் ( எஸ் பி எம் ஜி ) – தூய்மையான இந்திய கிராமங்கள் – என்ற திட்டத்தின் படி 27 மாநிலங்கள், 601 மாவட்டங்கள், ஐந்தரை லட்சம் கிராமங்களில் ஒன்பது கோடியே பதினாறு லட்சம் கழிவறைகள் கட்டவேண்டும் என 2014 – அக்டோபர் 2 இல் திட்டமிடப்பட்டுக் கட்டப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 98 சதவிகிதத்தை எட்டவேண்டும் என்பது இவர்கள் குறிக்கோள். 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி காந்தியடிகளின் 150 ஆவது பிறந்தநாளுக்குள் தூய்மையான இந்தியா திட்டத்தை நிறைவேற்றுவதுதான் அவருக்குச் செய்யும் மிகப் பெரும் அஞ்சலியாக இருக்கும் என பாரதப் பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டப்படி ஃபிப்ரவரி 5, 2019 இல் நிறைவேற்றியுள்ளார்கள். இது பாராட்டப்பட வேண்டிய ஒரு அசுர சாதனை.
இவ்வாறு கட்டப்படும் ஒவ்வொரு கழிவறைக்கும் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகம் மூலம் அரசாங்கம் சுமார் 12, 000 ரூபாயை மானியமாக அளித்துள்ளது. மதுரை சக்கிமங்கலம் பகுதியைச் சேர்ந்த செல்வி இத்திட்டத்தை மக்களிடம் எடுத்துச் சென்று கிட்டத்தட்ட 5000 கழிப்பறைகள் கட்ட உதவி செய்து மத்திய அரசின் விருது பெற்றுள்ளார். அச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 90 வயது தம்பதிகள் ( அலகு அம்பலமும் அவர் மனைவி அங்கம்மாளும் ) தங்களது கிராமத்தைத் தங்களது ஸ்வச்ச பாரத் திட்டப் பிரச்சாரத்தின் மூலம் திறந்தவெளிக் கழிப்பறை இல்லாத கிராமமாக மாற்றி இருக்கிறார்கள் என்பது வியத்தகு செய்தி.
வீட்டின் பக்கம் கழிவறை இருந்தால் வீட்டின் தூய்மை கெட்டுவிடும் என்றும் மூடியிருக்கும் கழிவறையில் சென்றால் மூச்சுத் திணறலாக இருப்பதாகவும் கூறிய மக்களைத் திருத்தி சுகாதாரம் பயிற்றுவித்து இச்செயலை நிறைவேற்றி இருப்பது என்பது பிரம்மப்பிரயத்தனமே.
திறந்தவெளிக்கழிவறை மூலம் 10 லட்சம் பாக்டீரியாக்கள் ஒரு கோடி வைரஸ்கள் பரவி வந்துள்ளது இத்திட்டத்தால் தடுக்கப்பட்டுள்ளது. சென்ற நூற்றாண்டுகளில் ஏற்பட்ட ஆட்கொல்லி நோய்களான காலரா டயோரியா போன்றவை திறந்தவெளியைக் கழிவறையாகப் பயன்படுத்துவதால் பரவியுள்ளன.
பஸ்ஸ்டாண்ட், மோட்டல் பெட்ரோல்பங்க், நூலகங்கள், திரையரங்குகள், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸுகள் ஆகியவற்றில் உள்ள கழிவறைகளின் சுகாதாரம் ஒரு நேரம் போல் சீராக இருப்பதில்லை. முற்காலத்தில் எடு கக்கூஸ், எனப்படும் கழிவறைகளில் தலையில் கூடை அல்லது அலுமினிய சட்டிகள் சுமந்து தோட்டி எனப்படும் பணியாளர் மனித மலத்தை சுமந்து சென்று கொட்டும் அவலமும் நிகழ்ந்துள்ளது பதைப்புக்குரியது.
தஞ்சை மாவட்டப் பகுதிகளில் வீட்டின் பின்புறக் கொல்லைகளை ஒட்டி நாராசம் எனப்படும் கழிவுப் பாதைகள் உண்டு. அங்கேயே அவர்கள் கழிவறைகள் அமைத்திருப்பார்கள். எல்லா இரண்டு தெருக்களிலும் வீடுகள் கிழக்கு மேற்கு பார்த்தோ அல்லது வடக்கு தெற்குப் பார்த்தோ இருந்தால் இவற்றின் கொல்லைகளுக்கு நடுவில் நடுவில் நாராசம் எனப்படும் கழிவுநீர் செல்லும் பாதை கட்டாயம் இருக்கும்.
பெய்ட் டாய்லெட் எனப்படும் கட்டணக் கழிவறைகளைக் கோவை கக்கன் நகரில் பொதுமக்கள் சுகாதாரத்திற்காக அமைத்திருந்தார்கள். இதைப் பயன்படுத்துபவர்கள் பராமரிப்புக்கட்டணம் செலுத்தவேண்டும். சில கழிவறைகள் பொதுமக்களுக்காக இலவசமாகவே அரசாங்கத்தால் கட்டி விடப்பட்டு இருக்கின்றன.
கம்போஸிட் டாய்லெட் இது மனிதக் கழிவை திட, திரவமாகப் பிரித்து உரமாக்கும் கழிவறை. இந்த திடக் கழிவு மேலாண்மை சூழலியலுக்கு நன்மை செய்கிறது. பொது இடங்களில் உள்ள கழிவுத் தொட்டியோ அல்லது இல்லங்கள், அலுவலகங்களில் உள்ள கழிவறைத் தொட்டி நிரம்பியதும் அதற்கென உள்ள வண்டிகளில் பெரிய குழாய்கள் கொண்டு எடுத்துச் சென்று புறம்போக்கு நிலங்களில் கொட்டும் வழக்கம் இருக்கிறது. கண்காட்சி, பொருட்காட்சி, புத்தக் கண்காட்சி போன்ற இடங்களில் போர்டபிள் பயோ டீக்ரேடபிள் டாய்லெட் என்ற கழிப்பறைகள் அமைக்கிறார்கள்.
ஜெர்மனியில் ஆங்காங்கே சாலை சுத்தம் செய்வோர், பொதுப்பணியாளர்கள், சாலை அமைப்போர், கட்டிடப் பணியாளர்கள் ஆகியோர் வசதிக்காக டாய் எனப்படும் கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. இவை பூட்டியே இருக்கும் என்பதும் அந்தந்தத் தொழிலாளர்கள் வசம் மட்டுமே இதன் திறப்புச் சாவிகள் இருக்கும் என்பதும் விசேஷம்.
ஈரம் கொஞ்சமும் இல்லாத மிக சுத்தமான டாய்லெட்டுகளை யூரோப் முழுவதும் பார்க்கலாம். ஒன்றிலிருந்து மூன்று யூரோவுக்குள் கட்டணம் செலுத்திப் போகவேண்டும். அதிகமில்லை மக்களே நம்மூரில் ஒன்றுக்குப் போக ஐந்து ரூபாய் பத்து ரூபாய் கட்டணம் என்றால் இங்கே எண்பதில் இருந்து இருநூற்று நாற்பது ரூபாய் வரை ஆகும். எனவே ஷாப்பிங் மால், மோட்டல் போன்றவற்றில் சுற்றுலாப் பயணியர் பேருந்து நிற்கும் போதெல்லாம் ஷாப்பிங் செய்துவிட்டு அங்கேயே பேஸ்மெண்டில் இருக்கும் கழிவறைகளில் கழிவறைக் கடன்களை இலவசமாக முடித்துக் கொள்வார்கள்.
யூரோப் போன்ற வெளிநாடுகளிலும் விமானப் பயணத்திலும் நளதமயந்தி படத்தில் காட்டுவது போல் டிஷ்யூ பேப்பர் கொண்டுதான் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். நீரில்லா டாய்லெட்டுகள். 4 மாதம் மட்டுமே மித வெய்யில் மிச்ச நாட்களில் குளிரும் பனியுமாக இருப்பதால் குழாயில் நீர் வரத்து இல்லாமல் ஐஸ்கட்டிபோல் உறைந்துவிடும். எனவே அங்கே வெட் டிஷ்யூஸ் எனப்படும் காகிதங்கள் கொண்டு சுத்தம் செய்து கொள்கிறார்கள்.
யூரோப்பியன்/வெஸ்டர்ன் டாய்லெட், இந்தியன் டாய்லெட், இதிலும் ஃப்ளெஷ் டாய்லெட்( நீர் கொண்டு சுத்தம் செய்வது ) , பிட் டாய்லெட் ( PIT TOILET – மிகப் பெரும் குழி தோண்டி கழிவை சேமிப்பது ) வாக்யூம் டாய்லெட் ( VACUUM விமானங்களில் பயன்படுவது ) ), ஹைடெக் டாய்லெட் ( ஜப்பான் - ரத்தம் சிறுநீர் பரிசோதிக்கும் வசதி, வீடியோ கேம் விளையாடும் வசதி ) , போர்டபிள் டாய்லெட் ( ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்லும் வசதி ) , கெமிக்கல் டாய்லெட் , அஸ்ஸசிபிள் டாய்லெட் ( முதியோர் மற்றும் உடற்குறைபாடு உள்ளோர் உபயோகிப்பது ) ஃப்ளையிங் டாய்லெட் ( ப்ளாஸ்டிக் பைகள் ) , ஃப்ளோட்டிங் டாய்லெட் ( கம்போடியாவின் வெள்ளம் வந்த பகுதிகளில் உபயோகிப்பது ) , விண்வெளி வீரர்கள் உபயோகிக்கும் ஸ்பேஸ் டாய்லெட். பக்கெட் டாய்லெட் இவை போக கம்மோடு எனப்படும் ஸ்டூல்கள் இங்கே இந்தியாவில் மருத்துவமனைகளிலும் முதியோர் வசிக்கும் இல்லங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.
டாய்லெட் ,ரெஸ்ட்ரூம், ரெஃப்ரெஷிங் ரூம், வாஷ் ரூம், பாத்ரூம், கக்கூஸ் , வெஸ்டர்ன் க்ளோஸட், கிராப்பர், தி ஜாக்ஸ், லூ . லெட்ரின் ஆகியன கழிப்பறையின் வேறு பெயர்கள். பைப், ஹேண்ட் ஹோஸ் ஆகியன இந்தியாவின் நீர்க் கழிவறையிலும், வெட் டிஷ்யூஸ், டிஷ்யூ பேப்பர்கள், ஹாண்ட் வாஷ் லிக்விட், ரூம் ஃப்ரெஷ்னர் ஆகியன ஐரோப்பாவின் உலர் கழிவறைகளிலும் உண்டு. இத்தாலியில் ஒவ்வொரு டாய்லெட்டிலும் இரண்டு க்ளோஸட்டுகள் உண்டு. ஒன்று உபாதையைக் கழிக்க இன்னொன்று நீர் விட்டுச் சுத்தம் செய்து கொள்ள.
ஹரப்பா மொஹஞ்சதாரோ என்று சிந்து சமவெளி நாகரிக காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் கழிவறையைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். சாப்பிடும் நேரத்தில் ஹார்ப்பிக்குடன் நடிகர் அப்பாஸ் டிவியில் வந்து டாய்லெட் க்ளீனருக்கு விளம்பரம் அளிப்பதுதான் உணவுண்ண விடாமல் நெளிய வைக்கும் கொடுஞ்செயல்.
இந்தியத் தலைநகரத்தில் 1992இல் இருந்து கழிவறைகளுக்கான ஒரு மியூசியம் இருக்கிறது எனச் சொன்னால் வியப்பாய் இருக்கும். இதில் கிட்டத்தட்ட 50 நாடுகளில் கி மு 3000 இல் இருந்து இருபதாம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்த/இருக்கும், கழிவறை அமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் பள்ளிகளில் இன்னும் போதிய கழிவறை வசதிகள் இல்லாததால் பருவமடைந்த பெண்குழந்தைகளின் படிப்பு பாதியிலேயே நின்று போய்விடுகிறது. சரியான சுகாதாரமான கழிப்பறைகள் இல்லாமல் இன்றைக்கும் பல அலுவலகங்கள் இயங்கி வருவதைப் பார்க்கிறேன். இந்தக் கழிவறைகளில் செல்ல சங்கடப்பட்டுக்கொண்டு இன்றும் பல பெண்கள் சிறுநீர் கழிப்பதில்லை. அதன் மூலம் கர்ப்பப்பை, சிறுநீரகக் கோளாறுகள் பலவற்றுக்கு ஆளாகிறார்கள். நவம்பர் 19 உலக கழிப்பறை தினம். 2001 நவம்பர் 19 சிங்கப்பூரில் ஆரம்பிக்கப்பட்டதுதான் உலக டாய்லெட் கழகம். எனினும் இந்த ஆண்டுக்குள் இத்தனை கழிப்பறைகள் கட்டப்பட்டு தூய்மையான இந்தியாவில் அக்கனவுகள் நனவானது குறித்து மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.
அருமை
பதிலளிநீக்குநல்ல வழிகாட்டல் பதிவு
பதிலளிநீக்குஅரசாங்கம் எவ்வளவு உதவி செய்தாலும் இன்னும் பல மனித மிருகங்கள் திறந்தவெளியை தான் செல்கின்றன.
பதிலளிநீக்குகட்டுரை அருமை...
எழுத்தை மெருகேற்றி எதார்த்தத்தை மறைக்கும் எழுத்தாளர்கள் மத்தியில் இதுதான் எதார்த்தம் என வெளிப்படையாக எழுதியது அருமை...
பதிலளிநீக்குஅவசியமான பதிவு
பதிலளிநீக்குநன்றி ஜோசப் சார்
பதிலளிநீக்குநன்றி யாழ்பாவண்ணன் சகோ
நன்றி மகேந்திரன் சார்
நன்றி ராஜேஷ் சார்
நன்றி சந்திரகௌரி சிவபாலன் தோழி
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!