வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

குற்றங்களே நடைமுறைகளாய் – ஒரு பார்வை.
குற்றங்களே நடைமுறைகளாய் – ஒரு பார்வை.

பிரபல பத்ரிக்கையாளர் ப திருமலை அவர்களின் மிகவும் காத்திரமான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. பல்லாண்டுகளாய் இதுதான் நடைமுறை என்று சுதந்திரத்துக்குப் பின்னும் சிலவற்றை வரட்டுப் பிடிவாதத்தோடு பிடித்துக்கொண்டு யதார்த்த உலகத்துக்குப் பொருந்தாதவற்றைக் கல்வி என்று கற்பித்துக் கொண்டிருப்பவற்றையும் இன்ன பிற சமூக, அரசியல், சுற்றுச்சூழல் கடைமட்டத்தனங்களையும் காட்டமாய்ச் சுட்டுகின்றன இவை.  

மூடத்தனமாய் நாம் தொடர்ந்துகொண்டிருப்பதைத் தெளிய வைக்கின்றன கட்டுரைகள். நம்மைச் சுற்றி நடக்கும் அக்கிரமங்களை சராசரிக் குடிமகளாக இருந்தும் தட்டிக் கேட்கவில்லையே என்று ரத்தக் கொதிப்பை ஏற்படுத்துகிறது இவரது எழுத்து. நிறைய விஷயங்கள் தெரிந்தும் அவை அப்படித்தான் என்று கடந்துவிடும் நம் பொறுப்பற்றதனங்கள்தான் இவை நீடிக்கக் காரணம் என்று புள்ளி விபரங்களோடு அடுக்குகிறார் கட்டுரையாளர்.

மொத்தம் 24 கட்டுரைகள். கல்வி, குழந்தை, பெண்கள், சமூகம், வேளாண்மை, நீர், சுற்றுச்சூழல் என்று அனைத்துமே படித்து சீர் செய்யப்படவேண்டிய விஷயங்கள். 
 
ஆட்சி யந்திரத்தின் காதுகளில் இக்கட்டுரைகள் போய்ச்சேரவேண்டியது காலத்தின் அவசியம். அது மட்டுமல்ல. நம்மைப் போன்ற சாதாரணர்களும் தம் கடமைகளையும் பொறுப்பையும் உணர்ந்து செயலாற்ற வேண்டிய காலகட்டம்.


தாய்மொழிக் கல்வியின் அவசியம் அதை இழந்ததால் குழந்தைகளின் மனோபாவத்தில் நம் பாரம்பர்யம் சார்ந்த அனைத்தின் மீதும் ஏற்பட்டுவிட்ட எள்ளல் விளக்கப்படுகிறது.

மாப்பிள்ளை பெஞ்ச் என்றொரு கட்டுரையில் கல்வித்தரம் அலசப்படுகிறது. இந்தக் கட்டுரையில் சிபிஎஸ்சி பள்ளிகளில் படிப்பதால் நம் பாரம்பரிய விஷயங்கள் மற்றும் தமிழர் வாழ்வு பண்பாடு இலக்கியம் கலாச்சாரம் ஆகியன அதிசீக்கிரம் அழிவுக்குச் சென்றுகொண்டிருக்கின்றன என்பதைப் படித்து அதிர்ந்தேன். உண்மையிலேயே பாடத்திட்டங்களில் என்னவெல்லாம் சேர்க்கலாம் என்பதை டில்லிக் கல்விக் குழு தமிழகக் கல்விக் குழுவிடமிருந்தும் கேட்டுச் சேர்ப்பது அவசியம். 

பொதுப்பள்ளி முறைமை மூலம் கட்டாயக் கல்வி வழங்குவது பற்றி பிரின்ஸ் கஜேந்திரபாபுவின் கருத்து சிறந்த ஒன்று. அரசுப் பள்ளிகளின் ஆசிரியர் பற்றாக்குறை, கட்டமைப்பு வசதிக்குறைவு, போதிய மாணவர் இன்மை, ஆசிரியர்களின் தாமதமான வருகை மற்றும் மாணவர்களின் மேல் அக்கறை இன்மை, கழிவறை போன்ற சுகாதார வசதிகள் இன்மை, புதிய கல்விக் கொள்கையின் சீர்கேடுகள் சுட்டப்படுகின்றன.

குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தைகள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்முறை, குழந்தைத் திருமணங்கள், பெண்கள் பாதுகாப்பு, ஆகியவை பற்றி எச்சரிக்கையும் செய்யப்படுகிறது. ஆட்சியிலும் வாக்களிப்பதிலும் பெண்களுக்கு உள்ள உரிமைகள் விலாவாரியாக விளக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் ஊழல், சிறைகளிலும் லஞ்சம், கூர்நோக்கு இல்லங்கள், அவற்றின் போதிய வசதி இன்மை இன்னும் அதிக வன்முறைக்குக் குழந்தைகளைத் தூண்டுவது, உணர்வு வயப்பட்டுச் சிறு குற்றம் செய்த குழந்தைகளும் பெருங்குற்றம் செய்த குழந்தைகளும் ஒன்றாக வைக்கப்படுவதன் ஆபத்துகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பெற்றோர் தரும் அழுத்தத்தால் பெருகும் மாணவர்களின் தற்கொலைகள், நாய்க்கடிகளும் அரசின் கோடிகளும், மனித நேயமா அப்பிடின்னா, ஆகியன பெரிதும் சிந்திக்க வைத்தன. 

சிறைவாசிகளின் பின்னாலும் குடும்பம் இருக்கிறது என்ற கட்டுரை மனிதநேயத்தோடு எழுதப்பட்டிருக்கிறது . ஒரு மாற்றுப்பார்வைச் சிந்தனை என்றே கொள்ள வேண்டும். வேளாண்மையையும் நீராதாரங்களையும் சுற்றுச் சூழலையும் காப்பாற்ற வேண்டியதன் அவசியம் வந்துவிட்டது. 

அகதிகளின் நிலை, விவசாயிகளின் இறப்பு மற்றும் தற்கொலைகள், விவசாயக் கடன், வீணாகும் விளைபொருள், விளை நிலங்கள் அழிப்பு, நீர் பிடிப்புத் தலங்கள் அழிப்பு,  இவை சார்ந்த அரசின் கடமைகள் சுட்டப்பட்டுள்ளன. இவை அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கையாகக் கருதி காலாகாலத்தில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். 

யானைகள் ஏன் தேவை என்ற கட்டுரை வனக்காடுகளின் பெருக்கத்தையும் சுற்றுச்சூழல் காப்பாற்றப்படுவதையும் சொல்கிறது. எல்லாவற்றையும் சீர்தூக்கி மிகவும் யோசிக்கவும் தகுந்தபடி செயலாற்றவும் வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். 

பதின்பருவத்தினரும் கல்லூரிப் பருவத்தினரும் கட்டாயம் படித்து அறிந்துகொள்ள வேண்டிய விபரங்கள் அடங்கிய நூல் இது. எல்லா வயதினருமே வாசித்து பொது வாழ்வில் பொதுஜனமாக நாம் என்னென்ன தவறுகள் செய்ததால் இன்றைய நிலைக்கு வந்திருக்கிறோம் எனத் தெரிந்து நம் தவறுகளைத் திருத்திக் கொள்ள உதவும் நூலும் இது. 

நூல் :- குற்றங்களே நடைமுறைகளாய்
ஆசிரியர் :- ப. திருமலை.
பதிப்பகம் :- வாசன் பதிப்பகம்
பக்கம் :- 224
விலை :- ரூ 150/-

4 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதோர் நூலறிமுகம். நன்றி.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தகவலுக்கு நன்றி சகோதரி...

Thenammai Lakshmanan சொன்னது…

nandri Venkat sago

nandri DD sago


வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

G.M Balasubramaniam சொன்னது…

என்னதான் எழுதினாலும் நமக்கு எல்லாம் தெரியும் என்னும் மெத்தனம் நம்மிடையே

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...