வெள்ளி, 25 மே, 2012

புத்தகங்கள் வாசிப்போம். வாழ்வை நேசிப்போம். ( BAPASI)

புத்தகங்கள் வாசிப்போம். வாழ்வை நேசிப்போம்.
 ****************************** ********************

புத்தகம் வாசிப்பது என்பது ஒரு மனிதனைப் புதுப்பித்துக் கொள்ள உதவுகிறது. சென்னையில் நடக்கும் 35 ஆவது புத்தகக் கண்காட்சி தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் புத்தக விரும்பிகளுக்கான ஒரு திருவிழா. இதில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு , ஹிந்தி மற்றும் பிற மொழி நூல்களுக்கான கிட்டத்தட்ட 400 பதிப்பகங்களும் புத்தக விநியோக நிறுவனங்களும் ஸ்டால் போட்டிருக்கிறார்கள். சென்ற வருடங்களை விட இந்த வருடம் இணையதளத்திலும், வலைத்தளங்களிலும் எழுதுவோரும் வாசிப்போரும் அதிகரித்திருக்கிறார்கள்.கேபிள் சங்கர் என்ற வலைப்பதிவர் கிட்டத்தட்ட 5 புத்தகங்களும். யுவகிருஷ்ணா 4 நூல்களும் வெளியிட்டிருக்கிறார்கள். இவர்கள் மற்றும் மற்ற வலைப் பதிவர்கள் வெளியீட்டிலும் புத்தகங்கள் நிறைய வெளிவந்து சக்கைப் போடு போடுகின்றன. இணையதளங்களிலும் நூல்கள் இணைய இதழ்களாக வாங்கப்பட்டு வாசிப்பாளர்கள் அதிகரித்துள்ள சூழ்நிலையில் புத்தகம் வாங்கி வாசிப்பவர்கள் பற்றி  ஒரு தமிழ்ப் பதிப்பாளர், ஒரு ஆங்கிலப் பதிப்பாளர், ஒரு புத்தக நிலைய உரிமையாளர் ஆகியோரிடம் விசாரித்தோம்.

எமரால்டு பதிப்பக உரிமையாளர் திரு . ஒளிவண்ணன் கூறும்போது நிறைய புதுப்புத்தகங்கள் வருடந்தோறும் வெளியிடப்படுவதாக சொன்னார். தன்னுடைய நிறுவனத்தின் மூலம் வருடம் முழுமைக்கும் 25 ஆங்கில புத்தகங்கள் வெளியிடப்படுவதாகவும் , இது போக ஆன்லைனில் இன்னும் அதிக அளவு நூல்களைப் பதிப்பித்து வருவதாகவும் சொன்னார்.

புத்தகக் கண்காட்சியில் ஸ்டால் முதலில் கிடைக்க வேண்டும். பின்பு பதிப்பகங்கள் பேரைப் பொறுத்தும் , அதன் பிரபலத்தைப் பொறுத்தும் புத்தகங்கள் வாங்கப்படுவதாக சொன்னார். கிட்டத்தட்ட 35 வருட பாரம்பர்யம் உள்ள எமரால்டு பப்ளிஷிங் நிறுவனத்தை தன் தந்தை காலத்துக்குப் பின் புத்தக வாசிப்பில் உள்ள நேசத்தாலே தொடர்ந்து நடத்தி வருவதாகவும். உலகளாவிய அளவில் அது நிறைய வாசகர்களைப் பெற்றுள்ளதாகவும் கூறினார்.

குழந்தைகளுக்கான பசில்ஸ்( PUZZLES) புதிர்ப்போட்டிகள், மற்றும் சுய முன்னேற்ற நூல்கள், ஆங்கிலம் பேச கற்பிக்கும் நூல்கள், முதலீட்டு நூல்கள் அதிகம் விற்பதாகவும் . தற்போது E-BOOK எனப்படும் மின்னிதழ் வாசிப்பு அதிகரித்திருப்பதாக சொன்னார். விநியோகஸ்தர்கள் மூலமும் தங்கள் தரமான புத்தகங்களின் தொடர் வெளியீட்டின் முலமும் இந்த வெற்றியை அடைந்திருப்பதாகச் சொன்னார்.

அடுத்து தமிழின் மிக முக்கியமான பதிப்பகமான உயிர்மையின் உரிமையாளர் கவிஞர் திரு மனுஷ்யபுத்திரன் 10 வருடங்களாக உயிர்மை கிட்டத்தட்ட 500 புத்தகங்கள் வெளியிட்டுள்ளதாகவும் அதில் மொழிபெயர்ப்பு நூல்களும் அடக்கம் என சொன்னார். ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் இருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட நூல்கள் 10 இருக்கும் என சொன்னார். இலக்கியம் படிக்கும் இளைஞர்கள் 75 % அதிகரித்திருப்பது நல்ல ஆரோக்கியமான விஷயம் என்றும் அதனால் அவர்கள் எதைப்படிக்கவேண்டும் என்பதை தேர்ந்தெடுத்துப் படிக்கவேண்டும் எனவும் சொன்னார்.

பொது அறிவு, அறிவியல், கணினி இவற்றுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் நல்ல இலக்கியத்தையும் வாழ்வியலுக்கும் மொழி அறிவுக்கும் , மொழி ஆற்றல் பெருகவும் படிக்கவேண்டும் என கூறினார். தங்களுடைய வேர்களை அடையாளம் காட்டும் இலக்கியம், வாசகர்களால் துய்த்துணரப்படவேண்டும் என்ற தீராத தாகத்தாலே இன்னும் உயிர்மை இலக்கிய நூல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கூறினார். கட்டுரைகள் உலகியலை அதிகம் பிரதிபலிப்பதால் நன்கு விற்பதாக கூறினார். கவிதை விரும்பிகளுக்கான அருமையான கவிதைத் தொகுதிகளையும் உயிர்மை வெளியிட்டு வருகிறது. ஆசிரியர்களின் பெயருக்காகவே புத்தகங்கள் விற்பதாக கூறினார். சுஜாதா, எஸ். ரா போன்றவர்களின் நூல்கள் அதிகம் விற்பதாக கூறினார், ஹிக்கின் பாதம்ஸ், லேண்ட் மார்க் போன்றவை தங்கள் புத்தகங்களுக்கு உரிய இடம் கொடுப்பதாக கூறினார்.

ஆன்லைனில் தமிழில் புத்தக வாசிப்பை கொண்டு வந்தது உயிர்மையும் கிழக்குப் பதிப்பகமும்தான் எனவும் அதில் க்ரெடிட் கார்டு மூலமும் பணம் வாங்கிக் கொள்ளப்படுவதான வசதியும் உள்ளதாக சொன்னார். ஒரு எழுத்தாளராகவும் இருப்பதால் உயிர்மையின் மூலம் வருமானம் கருதாது நம் இலக்கியத்தை இளையோரிடம் கொண்டு சேர்ப்பதில் பெருமிதம் கொள்வதாக கூறினார்.

டிஸ்கவரி புத்தக நிலைய உரிமையாளர் திரு வேடியப்பன் அவர்கள் அவர்கள் மின்னிதழ்கள் அதிகரித்து வந்த போதிலும்.புத்தக விற்பனை வருடம்தோறும் கூடி வருவதாக சொன்னார். ஆன்லைனிலும் தங்களுடைய புத்தகங்கள் விற்கப்படுவதாக சொன்னார். 5 ரூபாயில் இருந்து 1,00,000 ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்படுவதாக சொன்னார். எஸ். ராமகிருஷ்ணன் , ஜெயமோகன் சாருநிவேதிதா, யுவகிருஷ்ணா நூல்கள் அதிகம் விற்கிறது. பொதுவாக தமிழில் சுயமுன்னேற்ற நூல்களுக்கு வரவேற்பு அதிகம் என்றும். புதிதாக காமிக்ஸ் ரசிகர்களும் அதிகரித்து வருவதாக சொன்னார். நாம் சின்னப்பிள்ளையில் ரசித்த எல்லா காமிக்ஸ்களும் ( அணில் காமிக்ஸ் , முத்து காமிக்ஸ் ) வந்து ஒரே வாரத்தில் விற்றுத் தீர்ந்து விட்டதாம்.

புத்தகத்திருவிழா நிஜத் திருவிழா போல சக்கைப் போடு போடுகிறது. ஒவ்வொரு ஸ்டாலும் இன்ஷூர் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஸ்டால் உரிமையாளர் 17,500 ரூபாய் கட்டியுள்ளதாகவும் , 3. 00,000 ரூபாய் வரை தன் ஸ்டாலில் புத்தகம் வைத்துள்ளதாகவும், அதில் 20 சதவிகிதம் விற்பனை செய்துள்ளதாகவும் சொன்னார்.எல்லா புத்தகங்களும் 10 சதவிகித தள்ளுபடியில் விற்கப்படுகின்றன. நீண்ட நடைபாதைகள், உணவுக்கடைகள், மேடை என்று எல்லாம் தாண்டி வண்டியை விட்டிறங்கி பொது ஜனம் உள்ளே வர கொஞ்சம் வயதானவர்கள், மற்றும் உடல் நிலை சரியில்லாதவர்கள் சிரமப்படுகிறார்கள். ஊனமுற்றோர் புத்தகம் வாங்க வசதியாக உள்ளே சக்கரநாற்காலிகள் வழங்கப்படுவதாக கேள்வியுற்றேன். வண்டிகளை நிறுத்துமிடம் ஒரு இடமாகவும் வாயில் இன்னொரு இடமாகவும் இருப்பது மட்டுமல்ல சில கடைகளின் எண்கள் வேறொரு இடத்தில் தொடங்குவதால் தேடி வருவோருக்கு சில சிரமங்களும் ஏற்படுகிறது.

அதோடு அதாக நிறைய சொற்பொழிவுகளும், குழந்தைகளுக்கான பேச்சு, கட்டுரைப் போட்டிகளும் நடத்தி, பரிசு வழங்கி தினமும் புத்தகம் என்னும் தெய்வத்தை பபாசி என்னும் தேரில் உலா கொண்டு வந்து சீராட்டும் பபாசி மெம்பர்களும்., புரவலர்களும், புத்தக நிலைய உரிமையாளர்களும் , கடைக்காரர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். நன்கு படித்த ஒரு உயர்ந்த சமூகத்தை, வன்முறைகளற்ற சமுதாயத்தை., புரிந்து கொள்ளல்களுடன் கூடிய ஒரு உலகளாவிய நட்பை புத்தக வாசிப்பால் மட்டுமே கொண்டுவர இயலும் என்பதால் பல்வேறு இடையூறுகளும் கடந்து இதை நடத்துபவர்கள் சிறப்பிக்கப்படவேண்டியவர்கள். .

எங்கே எல்லாரும் கிளம்பிட்டீங்க.. டிவியையே பார்த்துக் கொண்டிருப்பதை விட்டு கொஞ்சம் புத்தக உலகத்தையும் சுவைத்துப் பாருங்கள். நீங்களாகவே சொல்வீர்கள்..புத்தகங்களை வாசிப்போம் வாழ்வை நேசிப்போம் என்று.

டிஸ்கி:- இந்தக் கட்டுரை 15 - 31 ஜனவரி 2012 இன் அண்ட் அவுட் சென்னையில் வெளிவந்தது.


11 கருத்துகள் :

சே. குமார் சொன்னது…

புத்தகங்கள் வாசிப்போம்...
வாழ்வை நேசிப்போம்...

உண்மைதான் அக்கா...
நல்ல பகிர்வு... வாழ்த்துக்கள்.

செய்தாலி சொன்னது…

உண்மைதான் கவிதாயினி

நல்ல
புத்தகம் நம் சிறந்த நண்பன்

வாசிப்போம் நேசிப்போம்

நல்ல கட்டுரை

கணேஷ் சொன்னது…

நல்ல ஒரு புத்தகம் பல நண்பர்களுக்குச் சமம். வாசிப்போம் நேசிப்போம்கறது மிகமிகச் சரி. அருமையான கட்டுரைக்கா.

வரலாற்று சுவடுகள் சொன்னது…

ஒரு மனிதனின் உண்மையான நண்பர்கள் புத்தகங்கள் தான், புத்தகங்கள் தான் ஒரு மனிதனை நல்வழிப்படுத்துகிறது என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை ..!

அருமையான கட்டுரை அக்கா..!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

புத்தகத்திருவிழா நிஜத் திருவிழா போல சக்கைப் போடு போடுகிறது.

வாசிப்பும் நேசிப்புமே வாழ்வை வசந்தமாக்குகிறது !

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

ஆம்... நல்ல புத்தகம் ஒரு சிறந்த நண்பன்..ஏன் நண்பனை விடவும் மேல்!
புத்தகம் பணம் கேட்டு தொந்தரவு பண்ணாது!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

புத்தகங்கள் வாசிப்போம். வாழ்வை நேசிப்போம்.

அழகான தலைப்புடன் அருமையான கட்டுரை. பாராட்டுக்கள்.

lekshy சொன்னது…

அருமையான கட்டுரை.நல்ல பகிர்வு..

lekshy சொன்னது…

அப்பாடா ஒரு வழியா IPL போட்டிகள் முடிந்தன சகோதரி

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி குமார்

நன்றி செய்தாலி

நன்றி கணேஷ்

நன்றி வரலாற்று சுவடுகள்

நன்றி ராஜி

நன்றி ஆர் ஆர் ஆர்

நன்றி கோபால் சார்

நன்றி லெக்ஷி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...