எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 5 ஏப்ரல், 2012

சிவப்புப் பட்டுக் கயிறு. ( தினமணி-காரைக்குடி புத்தகத் திருவிழா இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் ஊக்கப்பரிசு பெற்ற கதை)

சிவப்புப் பட்டுக் கயிறு:-
*************************

 பட்டியக்கல்லில் இருந்து கீழ் வாசலுக்குள் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. காசாணி அண்டாவில் தண்ணீர் நிரம்பி வழிந்தபடி இருந்தது. இதுதான் இன்னும் சிலநாட்களுக்குக் குடிக்கவும் சமைக்கவும். நல்லவேளை தண்ணீர் தூக்க குடி தண்ணி ஊரணிக்கு பித்தளைக்குடமும் புளியுமாகப் போகவேண்டாம்.அங்கே செம்மண்ணில் தேய்த்து அதிலேயே கழுவி அப்புறம் கொஞ்சம் ஊரணிக்கு உள்ளே போய் தெளிந்த தண்ணீர் மோந்துகிட்டு வரணும். இப்ப கொஞ்ச நாளைக்கு அந்த அவஸ்தையில்லை என்ற நினைப்பே அவளுக்கு போதுமானதாய் இருந்தது.

 வெய்யில் நாளில் வரும் மழை குளுமையை மட்டுமல்ல., கொஞ்சம் வெக்கையையும்தான் கிளப்பிக் கொண்டு வருகிறது. ஐயா பட்டாலையில் குறிச்சியில் உக்கார்ந்து சுருட்டைப் புகைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்கள். யார் யாரோ பீடி ., சிகரெட் குடிக்கும் போதெல்லாம் வரும் கோபம் ஐயாவின் சுருட்டைப் பார்த்தால் வருவதில்லை. பிறந்ததில் இருந்து அவர்களை சுருட்டும் கையுமாகப் பார்த்துவிட்டதாலோ என்னவோ. அல்லது சிறுபிள்ளையில் படித்த வெளிநாட்டுக் காமிக்ஸ் கதைகளில் வரும் பணக்கார ஹீரோக்கள் -- ரிப்கெர்பி-- ஸ்டைலாக சுருட்டு பிடிப்பதும் ஒரு காரணமாயிருக்கலாம்.


காஃபி போடவேண்டும். இந்த மழைக்காலத்தில்தான் காஃபி., டீ எல்லாம் அவ்வளவு ருசிக்கும். கருப்பட்டிக் காப்பி., சுக்குக் காப்பியும் கூட. திருமணம் ஆகியும் கூட ஆத்தா வீட்டின் ருசி என்பது எவ்வளவு பிடித்தமானதாய் இருக்கிறது. திருமணம் ஆகி சென்றபின் சென்ற அந்த வீட்டின் எல்லாவற்றோடும் பிடித்தமானதை விட வீடுதான் முதலில் ஒட்டும் இடமாக இருக்கிறது. தாய் வீடு என்பது சொந்த சுவாசம் போலவும். மாமியார் வீடு என்பது கொஞ்ச காலத்துக்கு ஆக்ஸிஜன் சிலிண்டரில் சுவாசிப்பது போலும் இருக்கிறது. வீட்டின் கதவுகள்., ரூம்கள்., அலமாரிகள்., பொருட்களுடனான பரிச்சயம் அதிகமான பின் அதுவும் இன்னொரு சுவாசமாய் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது

நெல் பயிரை இரண்டு முறை நடவு செய்வது போல். ஒரு இடத்திலிருந்து மறு நடவு செய்தபின்தான் அது செழிக்குமென்றால் அதுதானே செய்ய வேண்டும். என்ன சொன்னாலும் வேரோடிய இடத்திலிருந்து பிடுங்குவது வலிக்கத்தானே செய்கிறது மண்ணுக்கும் பயிருக்கும்.

மாசமான பின் பேறுக்காக ஆத்தா வீடு வந்த பின் அந்த வீடு பழக்கப்பட்டதாய் இருந்தாலும் லேசாக அந்நியமான ஒரு உணர்வு இருந்தது. வீடு ஜகஜ்ஜோதியாக இருந்தாலும் தன் வீடு அது இல்லை என படிந்து விட்டது. காஃபியை டிக்காக்‌ஷன் விட்டு நுரை பொங்க ஆற்றியபடி ஐயா அருகே அமர்ந்தாள் அவள். இருவரும் மழையையும் காஃபியையும் ருசித்தபடி இருந்தார்கள். மழை சொட்டுச் சொட்டாய் வடியத்துவங்கியது. இந்தப் பட்டாலையில் இந்தப் பத்தி., வளவுகளில்தானே கல்லா மண்ணா விளையாடியது. இந்த ஆல்வீட்டில்தானே ஐஸ்பால் டப்பா விளையாடியது. திடீரென்று தான் பெரிய பெண்ணாக ஆகியதும் விருந்து விஷேஷமும்., கல்யாணமும் ஆகி வயிற்றில் குழந்தையும் ஆகிவிட்டது. குழந்தை லேசாக முண்டியது. வயிறே அசைவது போல த்ரில்லிங்காக இருந்தது. குட்டிக் கையாலோ., காலாலோ வயிற்றில் சுரண்டியது. லேசான புன்சிரிப்போடு வயிற்றைப் பிடித்தபடி ஐயாவைப் பார்த்தாள். ஐயாவும் ., ”என்னாத்தா பேரப்பய முண்டுறானா”., என சிரித்தார்கள் சிரிப்பு என்பதை ஐயாவின் கண்கள் வழிதான் பார்க்கவேண்டும். அந்தக்கால பாலிவுட் நடிகர்களைப் போல மிக கம்பீரமான பர்சனாலிட்டியும் ஆகிருதியுமாக இருப்பார்கள் ஐயா. கருணை பொங்கும் கண்கள் வழி காந்தம் வழிவது போல ஈர்க்கும் சிரிப்பு.இத்தனையையும் ரசிக்கக் கொடுத்து வைக்காமல் இரண்டு அப்பதாக்களும் போய் வி்ட்டார்கள்., ரெண்டு சின்னச் சித்தப்பாக்களை விட்டுவிட்டு.

தம்பிகளும் சித்தப்பாக்களும் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார்கள். அப்பாவும் அம்மாவும் வெளியே சென்றவர்கள் திரும்பி இருந்தார்கள். ரெண்டாங்கட்டில் சலசலப்பு கேட்டது. யாரென்று பேர் தெரியாத ஒருவர் ஐயாவைப் பார்க்க வந்திருந்தார். அவரை வரவேற்றுவிட்டு எழுந்து உள்ளே காஃபி கலக்கச் சென்றபோது வந்தவர் ஐயாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பச்சி உங்க நடு மகனுக்கு சுவீகார ஜாதகம். அவுகளுக்குப் பொருந்திப் போகுதாம். ஆத்தா இல்லை அங்கேயும் அப்பச்சி மட்டும்தான். நம்மளப் பிள்ள வரப்போகப் பார்க்க முடியும். என்ன சொல்றீக என்றார்.

யார் யார் வீட்டிலோ சுவீகாரம் என கேள்விப்படும் போதெல்லாம் அது ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. தன் வீட்டிலேயே அதற்கான பேச்சு வந்தபோது கவலையாய் இருந்தது. ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆனால் மாமியார் வீடு போகணும். பையன்கள் என்றால் ஜாலி . பிறந்த வீட்டிலேயே இருக்கலாம் என்று நினைத்திருந்தாள்.

டுப்படியில் மழையால் ஈரம் கசிந்து கொண்டிருந்தது சுவர்களில். மரப்ப்ளாச்சுகள் லேசாய் பூசரம் பூத்திருந்தன. வீடு ரிப்பேர் பார்க்கமுடியாலும் பராமரிக்க முடியாமலும் வெளியூரில் வேலைக்காக வலசை சென்ற சிலர் வீடுகளையும் மேங்கோப்புக்களையும் இடித்து கலைப்பொருட்களை விற்கும் போதும் அவஸ்தையாய் இருக்கும். அவர்கள் பொருளாதாரத் தேவை அது. வீடு இடித்தபின் இடத்தையும் விற்று விடுவார்கள் பல அறைகள் கொண்டதாக இருக்கும் வீடுகளில் மிஞ்சிப் போகும் சாவிகளை என்ன செய்வார்கள். போகும் ஊரிலெல்லாம் அதையும் கொண்டு செல்வார்களா. எங்கே வைப்பார்கள். அவர்கள் சந்ததியினரிடம் வாழ்ந்த வாழ்வின் பெருமையை காண்பிக்கவா. எடைக்காவது எடுப்பார்களா அந்தச் சாவிகளையும்., பழைய இரும்புப்பெட்டகங்களையும்.

முன்னோர்கள் வெளிநாட்டுக்குக் கொண்டுவிக்கப் போய் சம்பாதித்துக் கொண்டுவந்து தேக்கும் பித்தளையும் காரையுமாய்க் கட்டிய கல்லுக் கட்டிடங்கள் அவை. அவற்றின் வாழ்நாள் என்பது அவ்வளவுதானோ என்னவோ.

காஃபி கொண்டுவந்து கொடுத்தபோது அந்த சுவீகார இடம் முடிவானது போலத் தோன்றியது. லீவுக்கு பிள்ளைகள் வரும்போது முடித்துக் கொள்ளலாம் என பேசிக் கொண்டார்கள். இன்னும் சில நாட்களே விடுமுறைக்கு இருந்தன. அவ்வளவுதானா எல்லாம். ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அனுப்புவது போல ஒரு பிள்ளையை அனுப்பிவிட முடியுமா. வயிற்றில் ஏதோ கனமானது போல இருந்தது. வீடு என்பது எல்லாருக்கும் நிலையற்றதுதானா..

ஐயா முகத்தை பார்க்கவே முடியவில்லை. ஏதோ இது நம் கடமை. ஜாதகத்தில் அப்படி இருப்பதால் சுவீகாரம் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பது புரிந்தது. ஐயா முகத்தில் இருந்த துயரம் எல்லாம் அவள் முகத்துக்கு இடம் மாறியது. குறிச்சியில் ஐயாவின் பக்கம் அமர்ந்தபோது . சூழ்நிலை இறுக்கமாய் இருந்தது. அதை மாற்ற விரும்பிய ஐயா தலையை கோதி விடத் துவங்கினார்கள். எத்தனை இரவுகள் எல்லாரும் ஐயா என் தலையை கோதுங்க என்று சொல்லி மடியில் படுத்துக் கிடப்போம். கண்களில் துளிர்த்த நீரை ஐயா பார்க்காமல் கண்ணுக்குள்ளேயே சிமிட்டி சிமிட்டி அடக்கினாள்.

பிள்ளைகளுக்கென்று தனியான எண்ணங்கள் இருக்க முடியுமா என்ன. பெற்றவர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும். அனைவரும் சூழ்நிலைக்கைதிகள்தான்.அப்பா., அத்தைகளின் .சுப்புடி., திருவாதிரைப் புதுமைகள் செய்த ஃபோட்டோக்கள் வரிசையாக சாமி வீட்டு நிலையில் சாய்வாக மாட்டி இருந்தன. அதில் ஒரு ஃபோட்டோவாகத் தன் திருமணமும் இடம்பெற்றது போல தன் சித்தப்பாவின் சுவீகாரமும் இடம் பெறும் என நினைத்தாள்.

குறிக்கப்பட்ட நாளும் வந்தது. அதற்கு முன்பே அவர்கள் பிள்ளைக்கு உடைகளும்., பொருட்களும் ., சாமான்களும் கொண்டு சேர்த்திருந்தார்கள். இங்கு இத்தனை பேரோடு இருந்துவிட்டு அங்கு சென்று தனியாக இருக்கவேண்டுமே என இருந்தது. சித்தப்பாக்களும் தம்பிகளும் சிட்டுக் குருவிகளைப் போலத் திரிந்து கொண்டிருந்தார்கள். போஜன் ஹாலில் பலகாரப்பந்தி அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது.

பி்ள்ளையின் பிறந்த இடத்துத் தாய்மாமன் பிள்ளையின் கையைப்பிடித்து பிள்ளை கூட்டிக் கொள்பரின் தாய் மாமன் கையில் கொடுப்பதோடு முடிந்து விடும் சுவீகாரம் என அடுத்த வளவுக்கார ஆயா சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

டுவீட்டில் கோலமிட்டு., பத்தி வளவிலும் கோலமிடப்பட்டிருந்தது. தடுக்கில் நிற்க வைத்தார்கள் சித்தப்பாவை. அதற்கு முன்பே முறி எழுதிக் கொண்டு விட்டார்கள் இன்னார் மகனை இன்னாருக்கு சுவீகார புத்திரனாகக் தத்துக் கொடுப்பதென. கெஜட்டில் பெயர் மாற்றம்., தாய் தந்தை பெயர் மாற்றம் எல்லாம் அனுப்பக் குறிக்கப்பட்டது. பெண்ணுக்குக் கல்யாணம் என்றால் அது ஒரு வீட்டுக்கு மருமகளாக அனுப்பும் சடங்கு மட்டுமே. ஆனால் அதுவரை புழங்கிய பெயரில் ஆணுக்கு அதிகாரமில்லாமல் போவது சுவீகாரத்தில்தான்.

ஒரு புதுப்பெயரில் தன்னை யாராவது அழைத்தால் எப்படி இருக்கும் என தோன்றியது அவளுக்கு. புது உடைகளோடும்., தலையில் தலைப்பாவோடும் சித்தப்பா நின்றிருந்தது. சாமி வீட்டில் விளக்கில் போதுமான எண்ணெய் இருக்கா என பார்த்து ஊத்திக் கொண்டிருந்தார்கள். இரு பக்கமும் தாய் மாமன்கள் இல்லாததால் அதை ஒட்டிய உறவில் உள்ளவர்கள் சித்தப்பாவின் கையைப் பிடிக்கவும் வாங்கவும் தயாராய் இருந்தார்கள். விபூதித் தட்டுடன் சித்தப்பா நின்றிருந்தது. திருமண வீட்டில் தான் போய் வருகிறேன் என சொல்லி அனைவரிடமும் கும்பிட்டுக் கட்டிக் கொண்டது ஞாபகம் வந்தது.

சித்தப்பாவிடம் ஒருவர் ஏதோ சொல்லி பேனாக்கத்தியைக் கொடுக்க அது இடுப்பில் கைவைத்து பாண்டை நகர்த்தி பட்டுக் கயிற்றைப் பிடித்துக் கத்தியால் அறுத்தது. அதற்கு அறுக்க வரவில்லை. கை வலிமை இழந்தது போல தவித்தது. பிறகு கோணல் மாணலாக இழுத்து அறுத்தது. அதன் பின் அதை விபூதித் தட்டில் வைத்து விட்டு போறேன் அப்பச்சி என ஐயாவிடம் சொன்னது. எப்போதும் புன்னகை கோடிழுக்கும் கண்களோடு சிரிக்கும் ஐயா அன்று வெடித்து தலையில் அடித்துக்கொண்டு அழுதார்கள் .,போறேன்கிறானே.. ஆத்தா.. என..சுவற்றில் தலையை முட்டியபடியும். சித்தப்பாவும். அழுதது. .ஐயா அழுதால் தன்னையறியாமல் எல்லார் கண்ணிலும் நீர் வடிகிறதே. இதுதான் தன் தசையாடுவதா.

வயிறு வாய்க்கு வந்தது போல இருந்தது. இறுகி உருண்டு முறுக்கியது வயிறு. பிள்ளையை வயிற்றோடு பிடித்து கொள்ளவேண்டும் போல இருந்தது. தாளமுடியாத துக்கம் தொண்டையிலும் நெஞ்சிலும் பந்தைப் போல அடைத்துக் கொண்டிருந்தது. எல்லாருமே கதறி அழுது கொண்டிருந்தார்கள். ஒரு பெரும்பிரிவு அது. பின்னால் இங்கு வரப்போக முடியும் என்றாலும் அன்றைய கணக்குப்படி அந்த வீட்டோடான வாழ்வு முடிந்து விட்டது. இனி அது வேறொரு வீட்டுப் பிள்ளை. கண்ணீராய்க் கொட்டியபடி இருந்தது வீடு.

ல்லாரும் பிள்ளை கூட்டிக் கொண்ட வீட்டுக்கு கொண்டுவிடச் சென்றிருந்தார்கள் . அது இனி சித்தப்பா வீடு. இந்த வீட்டில் அதுக்கு இனி எந்த உரிமையும் இல்லை. ஒரு செடியை வேரோடு பிடுங்கி நட்டது போல நட்டுவிட்டாச்சு. இனி அது பாடு அந்த நிலம் பாடு. என்ன ஒரு நடைமுறை இது. பிள்ளை இல்லாதவர்க்குப் பிள்ளையாக., அவர்கள் பிள்ளைக் கலி தீர்க்கத்தான் சென்றிருக்கிறது சித்தப்பா என ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று.

இனி அதுக்கு திருமணம் ., பிள்ளை குட்டி., வாழ்க்கை எல்லாம் அங்கேதான். எப்பவாவது தோன்றினால் என் சித்தப்பா எனச் சென்று பார்க்கலாம். வேறொரு சூழலில் வேறொரு வாழ்வில்.

பட்டுக் கயிறு அறுப்பது என்பது தொப்புள்கொடி அறுப்பதற்குச் சமம். இந்தவீட்டில் உன் உறவு முடிந்து விட்டது இனி இன்னொரு ஜென்மம் உனக்கு. இன்னொரு பெயர் உனக்கு. என பிரிப்பது போல.

மாசமான பெண் பிரசுபத்துக்கு வந்தபின் ஊர் விட்டு ஊர் போகக் கூடாது என வீட்டில் ஒரு பெண்ணைத் துணைக்கு வைத்து விட்டு அனைவரும் சென்று விட்டார்கள்.

ஆட்டுக்கல்லில் அந்தப் பெண் இரவு உணவுக்காக மாவு அரைத்துக் கொண்டிருந்தாள். எல்லாரும் சென்றபின் வாசக் கதவு ., நிலைக்கதவுசாத்தி ., சாமி வீட்டின் விளக்கை மலையேத்தியபின் பூட்டும் போது சித்தப்பாவின் நினைவின் மிச்சமாக அறுத்த அந்த சிவப்பு பட்டுக் கயிறு விபூதித் தாம்பாளத்தில் இருந்தது.

டிஸ்கி:- இந்தச் சிறுகதை தினமணி - காரைக்குடி புத்தகத்திருவிழா இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் ஊக்கப் பரிசு பெற்றது. நன்றி தினமணி மற்றும் காரைக்குடி புத்தகத்திருவிழா.:)

17 கருத்துகள்:

  1. அருமையான எழுத்தோட்டம். அருகில் அமர்ந்து நிகழ்வைக் காணுவது போலிருந்தது.
    நிறையு இடங்களில் வார்த்தைகளை ரசித்தேன்...
    உதாரணம்...திருமணம் ஆகியும் கூட ஆத்தா வீட்டின் ருசி என்பது எவ்வளவு பிடித்தமானதாய் இருக்கிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Manasai ululkiedutha Nagarathar kudumba nigazhvugal. Paasathirkum,Parivirkum Martum kulapperumaikkum peyar pettravargal nagarathargal yenbatharku ithu our mikka chandru. Vazhga Nagarathar. Indralavu suverkaram miga kuraivu yenbathu mana niraivukkuriadu. Hats off Thennammai Achi. Keep writing.

      Ganesan Swaminathan (Muscat)

      நீக்கு
  2. மனதை நெகிழ வைத்த அருமையான கதை.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. பட்டுக் கயிறு அறுப்பது என்பது தொப்புள்கொடி அறுப்பதற்குச் சமம். இந்தவீட்டில் உன் உறவு முடிந்து விட்டது இனி இன்னொரு ஜென்மம் உனக்கு. இன்னொரு பெயர் உனக்கு. என பிரிப்பது போல..//

    ஐயா அழுதால் தன்னையறியாமல் எல்லார் கண்ணிலும் நீர் வடிகிறதே. இதுதான் தன் தசையாடுவதா.//

    நெகிழ்வான கதை.

    பிள்ளைகூட்டுவது என்று கேள்வி பட்டு இருக்கிறேன். அதை விவரமாய் சொல்லும் கதை.

    மனது கனத்து போனது உண்மை தேனம்மை.

    ஊக்கப் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான கதை தேனம்மை. வாசிக்கக் காத்திருந்தேன். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    /ஒரு இடத்திலிருந்து மறு நடவு செய்தபின்தான் அது செழிக்குமென்றால் அதுதானே செய்ய வேண்டும். என்ன சொன்னாலும் வேரோடிய இடத்திலிருந்து பிடுங்குவது வலிக்கத்தானே செய்கிறது மண்ணுக்கும் பயிருக்கும்./

    மனதின் ஓட்டங்களை சிறப்பாகப் படம் பிடித்திருக்கிறீர்கள்..

    பதிலளிநீக்கு
  5. கதிரிலேயே படித்தேன்...
    வட்டார வழக்குச் சொல் சரளமாய் வருகிறதே...
    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  6. நன்றி இளங்கோ

    நன்றி கோபால் சார்

    நன்றி ரத்னவேல் சார்

    நன்றி கோமதி

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி குமார்

    நன்றி ஆர் ஆர் ஆர்

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  8. அருமையான நெகிழ்வான கரு, கதை. நிறைய புதுச்சொற்கள் தெரிந்து கொண்டேன் :) பட்டுக் கயிறு அறுப்பது - எந்த வட்டார வழக்கம்?

    பதிலளிநீக்கு
  9. Nenjil sumanthirukkum nerunji mutkalil onru!Vadukkal maraivathillai.Kathai manthar, kathaip pin pulam, kathaik karu arinthiruppavar yarum kanneer thiraikalai agatriye padikka iyalum.Aatru ozhukkenra tamil nadai, vattara vazhakkugal varisai korthirukkum pangu, thoivillatha thuvalatha nerthi paarattukku uriyana! !

    பதிலளிநீக்கு
  10. Nenjil thaithirukkum nerunji mutkalil ondru! Vadukkal maruvathillai. Kathaik karu, pinpulam, kathai manthar arinthavar evarum kanneer thiraigalai kalayamal padikka iyalathu. Aatru ozhukku polum nadai, vattara vazhakkugal cherivu, kathai sollum nerthi kattayam parattap pada vendiyavai! Vaazhthukkal Thenu!

    பதிலளிநீக்கு
  11. ஒரு பெண்ணுக்கு புகுந்த வீடு புகும் செய்கை கட்டாயம் என்றாலும் அதற்கான வலியை பிறந்ததிலிருந்தே மனம் பழகிக்கொள்கிறது. ஆனால் ஒரு ஆணுக்கு என்னும்போது மனம் தவிப்பதைத் தவிர்க்க இயலவில்லை. அதுவும் பிறந்தவீடு என்று பெண் வந்துபோகும் அந்த உரிமையும் அறுக்கப்பட்டுவிடும்போது... மனம் கனத்துப்போகிறது. அருமையான வட்டார வழக்கோடு கதை சொன்ன நேர்த்தியை மிகவும் பாராட்டுகிறேன். ஊக்கப்பரிசு பெற்றதற்குக் கூடுதல் பாராட்டுகள் தோழி.

    பதிலளிநீக்கு
  12. நன்றி அப்பாத்துரை

    நன்றி சிதம்பரம் மாமா

    நன்றி கீதமஞ்சரி

    நன்றி அழகு

    நன்றிகணேஷ்

    நன்றி அழகப்பன்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...