எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 29 நவம்பர், 2019

வியாழன், 28 நவம்பர், 2019

லோஜா டி இலான்ஸி சிற்பங்கள் - ரோம்.

ஃப்ளாரன்ஸில் நெப்டியூன் ஃபவுண்டனுக்கு அருகில் பல்லாஸோ வெக்கியோ ( டவுன் ஹால் ) வுக்கு எதிரில் இருக்கிறது இந்த ஸ்கொயர், இதற்குப் பியாஸா டெல்லா சின்யோரா என்று பெயர். அதன் அருகில் சிற்பங்கள் நிறைந்த இந்தக்கூடத்துக்கு லோஜா டி இலான்ஸி என்று பெயர்.

ஃப்ளாரன்ஸ் கதீட்ரலில் இருந்து இங்கே வந்து அதன் பின்  உஃபிஸி கேலரிக்கும் வஸாரி கேரிடாருக்கும் இங்கிருந்தான் சென்றோம். இங்கே இருக்கும் சிற்பத் தொகுப்பைக் காணக் கண்கோடி வேண்டும். இதன் ஒவ்வொன்றின் பின்னணியிலும் நெடிய சரித்திரக் கதைகள் பொதிந்துள்ளன.

சிதறிக் கிடக்கும் ரோமின் ஒவ்வொரு கல்லிலும் சரித்திரம் கொட்டிக் கிடப்பதாக எங்கள் டூர் மேனேஜர் ராகவனும், கைட் மைக்கேலும் சொன்னார்கள்.

கைட் மைக்கேல் சொன்னவற்றில் அனைத்தையும் அப்போது உள்வாங்க முடியவில்லை. ஆனால் இந்தச் சிற்பங்களைத் திரும்பப் பார்க்கும்போது அவற்றின் வீரியமும் வலிமையும்  தெரிகிறது.


பல்லாஸோ வெக்கியோ என்ற இந்த டவுன்ஹால் பதிமூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாம். ! ”வீரர்களை வரிசைப்படுத்தும் வெளிவிதான நிலை ”என்பதுதான் லோஜா டி இலான்ஸி என்பதன் அர்த்தமாக இருக்கக்கூடும்.

புதன், 27 நவம்பர், 2019

உஃபிஸி காலரியும் வஸாரி காரிடாரும்.

ரோமின் டஸ்கனியில்தான் ( ஃப்ளாரன்ஸ் , இத்தாலி ) அமைந்துள்ளது இந்த உஃபிஸி காலரி. பலாஸ்ஸோ வெக்கியொவிலிருந்து உஃபிஸி காலரிக்குச் செல்ல முடியும். இது சரித்திரப் பிரசித்திபெற்ற சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் அடங்கிய இடம்.

ஓபன் கேலரியான இது வஸாரி காரிடாரில் இருந்து ஆர்னோ நதி தாண்டி பிட்டி பேலஸ் வரை நீள்கிறது. இந்த உஃபிஸி தாழ்வாரம் மற்றும் சிலைகளை மெடிசி குடும்பத்தினர் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் நிறுவிப் பாதுகாத்து வருகிறார்கள்.

பலாஸ்ஸோ வெக்கி என்ற டவுன்ஹாலையும் அரசாங்க அலுவலகங்களையும் ( உஃபிஸி = ஆஃபீஸ் ) இணைக்கும் இந்த காலரி மெடிஸி என்ற குடும்பத்தினருக்குச் சொந்தமான  தனியார் இடத்தில் அமைந்துள்ளது வித்யாசம்.

லோரேய்ன் ஹப்ஸ்பர்க் பிரியடின் போது தனியாருக்கு மட்டுமான பாதையாகப் பயன்பட்டது தற்போது பொதுமக்கள் பார்வைக்காகவும் திறந்துவிடப்படுகிறது . ஆனால் அவ்வப்போது கேட்டை இழுத்து மூடிவிடுவார்கள். அதாவது பார்க்கத் தடா விதித்து விடுவார்கள்.

மேலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரு நேரத்தில் ( அதாவது  குறிப்பிட்ட முக்கால்மணி நேரம் - 9. 30 - 10.15, 11 - 11. 45 இதுபோல்  ) 25 பேர்தான் அதிகபட்சம் செல்லமுடியும்

இது கேலரியா டெக்லி உஃபிஸி என்றும் அழைக்கப்படுகிறது. இதில் 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கலைஞர்களின் சிலைகள் லாகியேட்டோ எனப்படும் குவிமாடத்திற்குள் செதுக்கி நிறுத்தப்பட்டுள்ளன. இவை காலரியின் வெளிப்புறத்தில் காணப்படுபவை.

பின்வரும் கிரானைட் சிலைகள் அனைத்தும் ரோமின் ஒரு வீதியில் அமைந்துள்ளன. சாக்ரடீஸ், ப்ளேட்டோ , அரிஸ்டாட்டில் ஆகிய சிலைகள் காணப்பட்டன.


தத்துவ அறிஞர்களைக் கலைப்படைப்பில் முன்னிலைப்படுத்துவதில் முதலிடம் வகிக்கிறது ரோம்.

செவ்வாய், 26 நவம்பர், 2019

மீனாக்ஷி முதியோர் இல்லத்தில் ஒரு நாள்.

காரைக்குடியில் வனா யினா வீதியில் ( ஆலங்குடியார் வீதிக்குப் பாரலல், சந்தைப்பேட்டைக்குச் செல்லும் வழி/சந்தைப்பேட்டைக்கு அருகில் ) இருக்கிறது. மீனாக்ஷி முதியோர் இல்லம். இதை காந்திமதி அறக்கட்டளையைச் சேர்ந்த திரு கணேசனும் அவரது மனைவி திருமதி தனலெக்ஷ்மியும் நடத்தி வருகிறார்கள்.

இங்கே முதியவர்கள் மாதம் ரூபாய் 5,000/- வீதம் பணம் கொடுத்துத் தங்குகிறார்கள். இவர்களை திரு. கணேசன் அவர்களும் அவரது மனைவி திருமதி. தனலெக்ஷ்மி அவர்களும் தொண்டுள்ளத்துடன் கவனித்துப் பராமரித்து வருகிறார்கள். மூன்று வேளையும் சுடச்சுட உணவளித்துத் தங்கும் வசதியுடன் கூடியது இந்த இல்லம் ( தண்ணீர், மின்சாரம், படுக்கை, கழிவறை வசதிகள் உள்ளன )


நாள் கிழமைகளில் நம்மைப் போன்ற சிலர் உணவளிக்க விரும்பினால் அதையும் ஏற்றுக் கொள்கிறார்கள். இங்கே கிட்டத்தட்டப் பதினைந்து முதியவர்கள் தங்கி இருக்கிறார்கள்.

திங்கள், 25 நவம்பர், 2019

ஃப்ளாரன்ஸில் தாவீதும் மைக்கலாஞ்சலோவும்.

யூரோப் டூரில் ஒரு நாள் இத்தாலிக்குச் சென்றபோது வாடிகனுக்கும் சென்றோம். வாடிகன் சர்ச்சிலும் மாபெரும் ஓவியங்களும் சிற்பங்களும் காட்சி அளித்தன.

ரோமில் பெயர் பெற்ற ஓவியர் மற்றும் சிற்பியான ( கட்டிடக் கலைஞர் & கவிஞர் ) மைக்கலாஞ்சலோவின் கலைப் படைப்புக்களைக் கண்டு களிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இவரது படைப்புகள் சிருஷ்டியின் உன்னதத்தை விளக்கும் வகையில் ஆன்மநிர்வாணத்தோடு காட்சி அளிப்பவை.இவர் பதினான்காம் நூற்றாண்டில் பிறந்தவர். 1475 இல் டஸ்கனியில் பிறந்து 89 ஆண்டுகள் வாழ்ந்து 1564 இல் மறைந்தார். இவரது படைப்புகளில் பியட்டா ( ஏசுவைத் தாங்கி நிற்கும் மரியன்னை ) , தாவீது ஆகிய சிலைகள் சிறப்பானவை என்று போற்றப்படுகின்றன. சிஸ்டைன் தேவாலயத்தில் உள்ள கடைசித் தீர்ப்பு என்னும் ஓவியம் இவருக்குப் பேர் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது இன்னமும்.

நிர்வாணச் சிற்பங்கள் இவரது ஸ்பெஷல். கோலியாத்தும் தாவீதும் பற்றி அறிந்திருப்போம். அதில் கோலியாத்தைத் தோற்கடித்த தாவீதை  மிக அழகான சிற்பமாக்கி இருக்கிறார் இவர். வலிமையான கைகள், கூர்மையான பார்வை, கால்களை முன்னெடுத்து நிற்கும் நிலையில் தாவீதின் சிற்பம் ஃப்ளோரன்ஸில் உள்ள கேலேரியா டெல் அகாடமியா என்ற அரங்கில் 1873 இல் வடித்து வைக்கப்பட்டுள்ளது.



இவரது படைப்புகள் 13 ஆம் நூற்றாண்டுக்கும் 17 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட மறுமலர்ச்சிக் காலத்தைச் சேர்ந்தவை.