அப்பாக்களுக்குத் தங்கள் பெண்கள் என்றுமே தேவதைகள். ஒவ்வொரு மனிதனும் அப்பாவாகும்போது ஆசீர்வதிக்கப்படுகிறான். அதிலும் பெண்குழந்தைகளின் அப்பாவுக்கு தாய், தாரம் மகள் என மூன்று தாய்கள். தாயிடமும் மனைவியிடமும் கடுமையாகக் கோபிக்கும் ஆண்கள் தங்கள் மகளின் கிள்ளை மொழியின் முன் குழந்தையாகிவிடுவார்கள். தந்தைக்கு வாய்த்த குட்டி சிநேகிதியாகிறாள் மகள்.
தான் தன் மனைவிக்குச் சுதந்திரம் கொடுக்கிறோமா என்று நினைத்துப் பார்க்காத ஆண்கள் கூட தன் மகள் வேலைக்குச் செல்லவேண்டும். சொந்தக் காலில் சுதந்திரமாய் நிற்க வேண்டும். அவள் மனங்கவர்ந்த ஆணை மணக்க வேண்டும் என நினைப்பதுண்டு. மகள் செய்யும் சின்னஞ்சிறு தவறுகள் கூட கண்ணில் படுவதில்லை. J மனைவியின் முன் கடுமைக்காரக் கணவன்கள் கூட மகளின் முன் விரும்பியே வெகுளித் தகப்பன்களாகிறார்கள்.
