எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 9 ஜூலை, 2024

தர்மரை தர்மசங்கடத்தில் ஆழ்த்திய புருஷா மிருகம்

 தர்மரை தர்மசங்கடத்தில் ஆழ்த்திய புருஷா மிருகம்


அரியும் சிவனும் ஒண்ணு. அறியாதவர் வாயிலே மண்ணு என்றெல்லாம் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் சிவனைத் தவிர வேறு கடவுள்களை சிந்தையாலும் தொடாதவர் புருஷா மிருகம். மற்ற கடவுள்களின் பெயரைக் காதில் கேட்டால் கூட கோபம் கொண்டு சொன்னவரின் மேல் பாய்ந்து தாக்கிவிடுவார். அப்பேற்பட்டவரும் அரியும் அரனும் ஒன்று என்று அறியும் சந்தர்ப்பம் வந்தது.

இந்திரப் ப்ரஸ்த்தம் என்னும் நகரை தேவ தச்சன் மயன் மூலம் தேவலோகம் போல் நிர்மாணித்தார்கள் பாண்டவர்கள். அந்நகரைப் பார்த்த நாரதர் தர்மரிடம் ராஜசூய யாகம் செய்யும்படிக் கூறினார். யாகத்துக்குப் பெரும்பொருள் நிதியம் தேவைப்படும் என்பதால் அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன் ஆகியோர் நாலாபுறமும் சென்று பல்வேறு மன்னர்களிடம் போரிட்டு போதிய செல்வத்தைக் கொணர வேண்டும் என முடிவெடுத்தார்கள்.

 

கிருஷ்ணர் இவர்களை ஆளுக்கொரு திசையில் செல்லுமாறு கூற பீமன் வடதிசையைத் தேர்ந்தெடுத்தான். அங்கேதான் இருந்தது குபேரப் பட்டணம். வடதிசை நோக்கிக் கிளம்பிய பீமனை அழைத்த கிருஷ்ணர் அவனிடம் 12 ருத்ராட்சங்களைக் கொடுத்தார். “பீமா! நீ செல்லும் திசையில் குபேர உலகுக்குக் காவலாக புருஷா மிருகம் உள்ளது. அதன் முகம் மனித முகமாவும் உடல் மிருக உடலாகவும் இருக்கும். அதனை அழைத்து வந்தால் இந்த யாகம் நிறைவேறும். ஆனால் அது அவ்வளவு சுலபமல்ல” என்று நிறுத்தினார்.

“அதை அழைத்து வர என்ன செய்ய வேண்டும். சொல் கிருஷ்ணா. அப்படியே நடக்கிறேன்””என்றான் பீமன். “சிவனைத் தவிர வேறு தெய்வப் பெயர்களைக் கேட்டால் அம்மிருகம் பாய்ந்து குதறிவிடும். அப்படி உன்னைப் பாய்ந்து தாக்க அது வரும்போது அதன் முன் இந்த ருத்ராட்சத்தைப் போட்டால் அதை சிவனின் ரூபமாக எண்ணி பூஜை செய்ய நின்று விடும். அப்பூஜையை முடித்தபிறகுதான் அதற்கு உன் ஞாபகமே வரும். அப்படி அது திரும்ப வரும்போது இன்னொரு ருத்ராட்சத்தைப் போடு. முடிந்தவரை அது வரும் முன் அங்கிருந்து ஓடி இங்கே வரப் பார். ஜாக்கிரதை” என்று சொல்லி அனுப்பினார்.


பீமன்தான் பலசாலி ஆயிற்றே. அவன் வடக்குத் திசை சென்றான். குபேரனை வென்றான். குபேரன் யாகம் என்றதும் ஏராளமான பொருட் செல்வங்களை வழங்கினான். ஆனால் புருஷா மிருகத்தின் கதை அப்படி அல்லவே. பீமனின் பராக்கிரமம் எல்லாம் அதன் முன் செல்லுமா என்ன? அப்படி ஒரு விசித்திரமான உருவத்தை எங்கே பார்க்கலாம் என எண்ணி குபேரனின் பூங்காவுக்குச் சென்றான்.

அங்கே தாடி வைத்த மனிதமுகமும் சிங்க உடலுமாக விசித்திர கம்பீரத்துடன் உலாவிக் கொண்டிருந்தது புருஷா மிருகம். என்னதான் பீமன் வீரன் என்றாலும் அதை நேரில் கண்டதும் சிறிது பயப்படவே செய்தான். எனவே தயங்கியபடியே அதன் அருகில் சென்று ”எங்கள் இந்திரப் பிரஸ்தத்தில் ராஜ சூய யாகம் நடைபெறப் போகிறது. அதற்கு உங்கள் உதவி இருந்தால் சிறப்பாக முடியும். வர முடியுமா “எனக் கேட்டான். அவன் தன்னிடம் பேசியதைக் கேட்டு வியந்த புருஷா மிருகம் ஒப்புக் கொண்டது. ஆனால் ”நான் ஓடிவரும் வேகத்துக்கு இணையாக உன்னால் ஓட முடிந்தால் வருகிறேன். நீ எங்காவது நின்றுவிட்டால் உன்னைக் கொன்று விடுவேன், இதற்குச் சம்மதமா” என்றது

பீமன் சம்மதிக்க இந்திரப் பிரஸ்தம் நோக்கி ஓட்டம் தொடங்கியது. அதன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாத பீமன் திடீரெனக் ”கோவிந்தா கோபாலா” என்றானே பார்க்கலாம். அரியின் பெயரைக் கேட்டு வெகுண்ட புருஷா மிருகம் ஓடுவதைத் திசை திருப்பி அவனைத் துரத்தத் தொடங்கியது. பின்னங்கால் பிடரி படாத குறையாக ஓடத் தொடங்கினான் பீமன்.


பாய்ந்து வரும் சிங்கத்தின் முன் மனிதஓட்டம் எம்மாத்திரம். கிட்டே நெருங்கி விட்டது புருஷா மிருகம். விதிர்த்த பீமன் முதல் ருத்ராட்சத்தை அங்கேயே போட்டான். அது சிவலிங்கமாக மாற அதைக் கண்ட புருஷா மிருகம் அங்கேயே அமர்ந்து சிவ பூஜை செய்யத் தொடங்கியது. புருஷா மிருகம் தன்னைத் தொடாத தொலைவுக்குப் போய் மூச்சு வாங்க நின்றான் பீமன். பின்னர் அவன் திரும்ப ஓட ஆரம்பிக்க பார்த்தால் பக்கத்தில் ஓடிவந்து கொண்டிருந்தது புருஷா மிருகம். அங்கேயும் அது அவனைப் பிடிக்க வர அடுத்த ருத்ராட்சத்தைப் போட்டான். அங்கேயும் அமர்ந்து பூஜை செய்துவிட்டு வந்தது புருஷா மிருகம்.

இப்படியாகப் பன்னிரெண்டு ருத்ராட்சங்களையும் பன்னிரெண்டு இடங்களில் போட்டு ஓடி இந்திரப் பிரஸ்தத்தை எட்டினான் பீமன். அந்தோ என்ன பரிதாபம். அவன் தன் ஒரு காலால் இந்திரப் பிரஸ்த எல்லையைத் தொட்டதுதான் தாமதம் இன்னொரு காலைப் பின்னாலிலிருந்து பிடித்துக் கொண்டது புருஷா மிருகம். அப்போது அங்கே தர்மர் வர இருவரும் தத்தமது பக்க நியாயத்தைக் கூறினார்கள்.

பீமனோ எல்லையைத் தொட்டுவிட்டேன் என்கிறான். புருஷா மிருகமோ எல்லையில் படாத இன்னொரு காலைப் பிடித்துவிட்டேன் என்கிறது. என்ன செய்வார் தர்மர். இந்திரப் பிரஸ்தத்துக்காகப் போன தம்பியை இழக்க முடியுமா. ஆனாலும் தர்மத்தை மீற முடியாதே. தர்ம சங்கடத்தில் ஆழ்ந்தார். எனவே எல்லையில் பட்ட கால் பீமனுடையது. படாத கால் புருஷா மிருகத்திற்குத்தான் சொந்தம் எனத் தீர்ப்பளித்தார்.

இதைக் கேட்டு மகிழ்ந்த புருஷா மிருகம்,”தர்மரே உம்முடைய தர்ம சிந்தைக்காக மகிழ்கிறேன். பீமன் பன்னிரெண்டு இடங்களில் சிவ பூஜை செய்யும் வாய்ப்பை எனக்கு வழங்கினான். அதனால் அவனை மன்னிக்கிறேன். அரியும் சிவனும் ஒன்று என உணர்ந்தேன்” எனக் கூறியது. மேலும் ராஜ சூய யாகம் சிறப்பாக நடைபெறத் தன் பங்களிப்பையும் வழங்கியது.

எனவே தர்மத்தின் மேல் எப்போதும் நம்பிக்கை வைப்போம். அரியும் சிவனும் ஒன்று என்றும் உணர்வோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...