19.மெனோபாஸ் மற்றும் ஆஸ்டியோபோராஸிஸ்
கருப்பை என்பது தலைகீழான பேரிக்காய் வடிவத்தில் சித்தரிக்கப்படுகின்றது. இதன் மேற்புறம் இருக்கும் இரு கொம்பு போன்ற குழாய்கள் பிரசவத்தின் போது விரிவடைந்து கருப்பை வாயுடன் இணைகின்றன. ஃபண்டஸ், கார்ப்பஸ், இஸ்த்மஸ், கருப்பை வாய் ஆகிய பிரிவுகள் கருப்பையில் உள்ளன. இடுப்பு மற்றும் கீழ்முதுகின் தசை நார்கள் கருப்பையைச் சரியான இடத்தில் வைத்திருக்க உதவுகின்றன. பெரிமெட்ரியம், மயோமெட்ரியம், எண்டோமெட்ரியம் ஆகிய மூன்று அடுக்குகளால் ஆனது கருப்பை.
சிலருக்கு ஒழுங்கற்ற வடிவக் கருப்பை இருக்கலாம். நார்த்திசுக் கட்டி, பாலிப்கள், புற்றுநோய், இனப்பெருக்க உறுப்புகளின் தொற்றால் இடுப்பு அழற்சி நோய், கருப்பைச் சரிவு, கர்ப்பம் தரிக்க இயலாமை, அதீதவலி ஆகியனவும் ஏற்படலாம். மெனோபாஸ் சமயத்திலும் அதீத ரத்தப் போக்கு ஏற்படலாம். கருப்பைக் குழாய்களின் நீண்டகால அழற்சி கருவுறாமைக்கு வழிவகுக்கும். இரண்டு முல்லேரியன் குழாய்கள் இணைந்து கருப்பைக் குழியை உருவாக்குகின்றன. சிலருக்கு இது சரியாக இணையாததால் ஒழுங்கற்ற வடிவ கருப்பை உருவாகின்றது. பைகார்னுவேட் கருப்பை (இதய வடிவம்), ஆர்குவேட் கருப்பை, செப்டேட் கருப்பை ( ஒரு சவ்வு மூலம் இரண்டாகப் பிரிக்கப்படுதல்), யுனிகார்னுவேட் கருப்பை, டிடெல்ஃபிஸ் கருப்பை ( இரண்டு கருப்பைகள் கொண்டது) ஆகியன இதன் வகைகள்.
ஆண்டிவெர்ட்டட் கருப்பை எனப்படும் முன்புறக் கருப்பை, பின்னோக்கிய கருப்பை அல்லது முனை சாய்ந்த கருப்பை, வளைந்த கருப்பை, பின்னோக்கி வளைந்த கருப்பை ஆகியன கருப்பையின் நிலைகள். எக்டோபிக் கர்ப்பம் எனப்படும் குழாய் கர்ப்பம் கருப்பைக்கு வெளியே உண்டாகும். இக்கர்ப்பத்தினால் ஏற்படும் கடுமையான விரிவாக்கத்தால் கருப்பைக் குழாய் இரத்தப் போக்குடன் சிதைந்துவிடும்.
கர்ப்பிணிகளை அச்சுறுத்தும் இன்னொரு நோய் எச் ஐ வி. எச் ஐ வி தாய்ப்பால் மூலம் பரவுவதால் எச் ஐ வி உள்ள தாய்மார்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கக் கூடாது. ஆனால் தொற்று பாதித்த தாய் தனது எச் ஐ வியை சரியான மருத்துவ சிகிச்சை மூலம் கட்டுப்படுத்தலாம். இந்த நோய் எதிர்ப்புக் குறைபாடு அதிகரித்தால் அது முடிவில் எய்ட்ஸ் நோய்க்கு வழிவகுக்கும். இத்தொற்று எச் ஐ வி பாதிக்கப்பட்ட ஆணுடன் உடலுறவு கொள்வதால் அல்லது அவர்கள் பயன்படுத்திய ஊசியைப் பெறுவதால் மற்றும் இரத்தம் பெறுவதன் மூலம் பெறப்படுகிறது. வைரஸ் மற்றும் ஒட்டுண்ணிகளால் பாலியல் ரீதியாகப் பரவும் தொற்று நோய்கள் 20 க்கும் மேற்பட்டவை உள்ளன. ஆனால் ஆணுறைப் பயன்பாட்டின் மூலம் இவற்றைத் தவிர்க்கலாம். கொனோரியா தொற்று பாதித்த தாய்க்குப் பிறக்கும் குழந்தையின் கண்கள் பாதிக்கப்படும்.
எல்லா வயதுப் பெண்களையும் பாதிக்கும் நோய் இடைநிலை சிஸ்டிஸ் எனப்படும் நாள்பட்ட சிறுநீர்ப்பையின் நிலை ஆகும். இது சிறுநீர்ப்பையில் வடு ஏற்படுத்துகிறது. இதனால் கடுமையான இடுப்பு மற்றும் வயிற்று வலி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், வயிற்றில் அசௌகரிய உணர்வு ஏற்படும். சிறுநீரக, இடுப்பு அழற்சிகள் முல்லேனியம் கருப்பை, சிறுநீரகக் கல், சிறுநீரக எரிச்சல், சிறுநீர்ப்பை சதை வளர்ச்சி, சிறுநீர்ப்பைக் கட்டி, சிறுநீரில் இரத்தம் வருதல், சிறுநீர்ப்பைப் புற்றுநோய், மற்ற பால்வினை நோய்களால் யோனியில் வரும் புண்கள் என்று இன்னும் சில பெண்களைப் பாதிக்கும் நோய்கள்.
புடெண்டல் நரம்புத் தடுப்பு எனப்படுவது இடுப்புப் பகுதியில் ஒரு ஊசி மூலம் இடுப்பு அழற்சி நோய்க்கு வலி நிவாரணம் வழங்குவது. பல பாலின பங்குதாரர்கள், கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்தாமை, IUCD பயன்பாடு, பாலியல் ரீதியாகப் பரவும் நோய்கள் ஆகியன இடுப்பு அழற்சி ஏற்படக் காரணிகள். இவற்றை இடுப்புப் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட், ஹிஸ்டரோஸ்கோபி, எம்.ஆர்.ஐ ஸ்கேன் ஆகியவற்றின் மூலம் கண்டறிந்து சிகிச்சை அளிப்பார்கள்.
மெனோபாஸ்
மெனோபாஸ் என்பது கருப்பை தன் செயல்பாட்டைக் குறைத்துக் கொள்வது. இனப்பெருக்கத்துக்கான மாதவிடாய் செயல்பாடு, ரத்தப் போக்கு முற்றிலும் நின்று போகும். பொதுவாக 45 வயதிலிருந்து 55 வயதிற்குள் பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்படுகிறது. இரண்டு மாதம், நான்கு மாதம், ஆறு மாதம், ஒருவருடம் என இடைவெளி விட்டுச் சிறிது சிறிதாக மாதவிடாய் நின்றுவிட்டால் பிரச்சனை இல்லை. அதிகப் போக்கு இருந்தால் மருந்துவரிடம் காண்பிக்க வேண்டும். இதன் பின் இனப்பெருக்க உறுப்புகள் சுருங்குகின்றன. எலும்பின் நிறையிலும் இழப்பு ஏற்படுகிறது.
மெனோபாஸுக்குப் பின் ஆர்த்தரைடீஸ், ஆஸ்டியோபோராஸிஸ் போன்றவை ஏற்படலாம் இது ஆண்களை விடப் பெண்களை அதிகம் பாதிக்கிறது. இதனால் எலும்புகள் உடையக் கூடியவையாக மாறுகின்றன. இதனால் உயரம் குறைதல் எலும்பு அடர்த்தி குறைதல் ஏற்படும். ஆண்டுக்கு சுமார் 3-5% எலும்பு அடர்த்தி குறையும். பால் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதய நோய் தாக்கும் அபாயமும் அதிகம். மெனோபாஸ் பருவத்தில் பெண்களுக்கு உடலில் திடீரென வெப்ப உணர்வு தோன்றும். உடல் உஷ்ணமும் அதிக வியர்வையும் ஏற்படும். கவலை, தலைவலி, தூக்கமின்மை, மனச்சோர்வு, எரிச்சல் போன்றவை ஏற்படலாம். டிஸ்ரூபேனியா எனப்படும் பாலியல் செயலிழப்பும் ஏற்படும்.
வலி மிகுந்த உடலுறவு, உடலுறவு இல்லாமை, பிறப்புறுப்பு நோய்த் தொற்றுகள், வரட்சி, சிறுநீர்க் கசிவு, மன அழுத்தம், சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று ஆகியன மாதவிடாய் நின்றபிறகு ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டால் ஏற்படுபவை. வாசோமோட்டர் எனப்படும் உடல் உஷ்ண அறிகுறிகளுக்கு சிஸ்டமிக் எச்டி தேவைப்படலாம். இரத்தம் உறைதல் மற்றும் மார்பகப் புற்றுநோய் போன்ற பக்க விளைவுகள் ஏற்படாமலிருக்க குறுகிய காலத்தில் சிகிச்சை அளிப்பது நல்லது.
முதுமையில் ஏற்படும் இன்னொரு நோய் பிறப்புறுப்பு வறட்சி அல்லது வீக்கம். இது ஈஸ்ட்ரோஜென் குறைவதால், யோனியின் மசகு திரவம் சுரக்காததால், பிறப்புறுப்பின் திசுக்கள் சுருங்கி மெலிந்து விடுவதால், மாதவிடாய் நின்று போவதால், பெண்ணுறைகள், ஆணுறைகள் பயன்பாட்டால, சில சமயம் புற்று நோய் மேலும் டெஸ்குமேடிவ் வஜினிடிஸ் மற்றும் லிச்சென் பிளானஸ் எனப்படும் தோல் நிலைகளால் ஏற்படலாம். பிறப்புறுப்பு அறிகுறிகள் மேற்பூச்சு ஹார்மோன் சிகிச்சை மூலம் குணமாக்கப்படுகின்றன
வீழ்ந்த கருப்பை அல்லது கருப்பைச் சரிவு என்பது கருப்பை இடுப்பிற்குள் அதன் இயல்பு நிலையில் இருந்து கீழே இறங்கும்போது அல்லது நழுவி யோனி வழியாகக் கீழே வெளிப்படும்போது ஏற்படும் நிலை. இது எல்லா வயதினருக்கும் ஏற்படும். இவை ஐந்து நிலைகளாக உள்ளன. சராசரி நிலை, லேசான சரிவு, மிதமான வீழ்ச்சி, கடுமையான வீழ்ச்சி, முழுமையான சரிவு. இதனால் யோனியின் வழியாக ஏதோ தசை வெளிவருவது போல் வீக்கம் மற்றும் அழுத்தம் இருக்கும், இதனால் அசௌரியம், சிறுநீர் வெளியேற்றம், இடுப்பு, முதுகு வலி, மலச்சிக்கல், இரத்தப் போக்கு, வெளியே நீண்டு தொங்கும் கருப்பை -புரொட்ரஷன் போன்றவை ஏற்படும். இப்படி இருந்தால் மகளிர் மருத்துவரைப் பார்த்து சிகிச்சை எடுப்பது அவசியம்.
வயதாவதால், உடல் பருமனால், பிரசவத்தினால், பலவீனமான இடுப்புத் தசைகளால், கருப்பை நீக்கத்தால், நாள்பட்ட இருமலால், மலச்சிக்கலால், மரபணுக் காரணிகளால், அதிகபளு தூக்குதலால், புகைப்பதால் இவை ஏற்படலாம். இதற்கு உடல் பரிசோதனை, இடுப்பு உறுப்பு ப்ரோலாப்ஸ் குவாண்டிஃபிகேஷன் (POP-Q) தேர்வு, யூரோடைனமிக் சோதனை, இமேஜிங் ஆகிய சோதனைகள் செய்யப்படுகின்றன. இவற்றுக்கு இடுப்புப் பயிற்சிகள் ( கெகல் பயிற்சிகள்) வழங்கப்படுகின்றன. மேலும் பெஸரி பயன்பாடு, ஈஸ்ட்ரோஜன் சிகிச்சை, அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
பொதுவாக விட்டமின் டி அளவு ஆரோக்கியமான அளவில் இருந்தால் அது கருப்பைக்கு நல்லது. பால், தயிர், தானியங்கள், மீன் எண்ணெய், பச்சைக் காய்கறிகள், ஆகியவற்றை எடுத்துக் கொள்வதன்மூலம் விட்டமின் டியின் அளவை அதிகரிக்கலாம். பேரீச்சை போன்ற இரும்புச்சத்து உள்ள உணவுகள் எடுத்துக் கொள்வதன் மூலம் இரத்த சோகையைப் போக்கலாம். வாரம் ஒரு முறை எண்ணெய்க் குளியல் மேற்கொள்வதன் மூலம் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். பெண்களின் கருப்பை என்பது அவர்களின் கருச்சுமக்கும் உயிர்ப்பை. எனவே கருப்பை நோய்களை இனம் கண்டறிந்து பெண்மணிகளைக் கண்மணிகள் போல் காக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் அத்யாவசியக் கடமையுமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)