எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 28 ஜூலை, 2024

சிங்கை சௌந்தர்யநாயகி வைரவன்

 சிங்கை சௌந்தர்யநாயகி வைரவன்

திருமதி செளந்தர நாயகி வயிரவன் 1972 ஆம் ஆண்டு, நவம்பர் திங்கள், 23ஆம் தேதி, திரு: சுப்ரமணியன் செட்டியார் மற்றும் திருமதி: மீனாட்சி ஆச்சிக்கு, நான்கு குழந்தைகளில், கடைசிக் குழந்தையாகப் பிறந்தார்.  

இளமையிலேயே, இவருக்கு வெளி உலகத்தில் நடப்பவற்றை அறிந்துக் கொள்ளும் அதீத ஆர்வம், காலை எழுந்தவுடன் முதலில் நாளிதழ் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. மேலும்,  கூட்டுக்குடும்பச்சூழல்,  பல வயதினர் மற்றும் பல தரப்பு மக்களோடு பழகும் வாய்ப்பு மட்டுமல்லாது, உலகில் நடக்கும் அநேகச் செய்திகளைப் பகிர்ந்துக் கொள்ளும் அரிய வாய்ப்பையும் இவருக்குப் பெற்றுத் தந்திருந்தது.  

இளமையிலேயே சரளமாக மேடையில் பேசும் , தெளிவான சிந்தனையுடன் எழுதும், இனிமையான குரலில் பாடும் திறமைகள் இவரிடம் இருந்தன. இத்திறமைகள் பல கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் வாய்ப்பை இவருக்குப் பெற்றுத் தந்திருந்தன.  

காரைக்குடியில் பள்ளிப் படிப்பையும், சென்னை எத்திராஜ் மகளிர் கலைக் கல்லூரியில் வரலாற்றில் பட்டப்படிப்பையும் முடித்த இவர், 1993 ஆம் ஆண்டு, சிங்கப்பூர்க் குடியுரிமைவாசியான திரு: வயி: வயிரவனைத் திருமணம் முடித்து, ஒரு வருட காலம் லண்டனிலும், அதைத் தொடர்ந்து, 29 ஆண்டு காலமாக சிங்கப்பூரிலும்,  கணவன், மகன் திரு: வயிரவன் சண்முக கண்ணன் (26) மகள் செல்வி: நாச்சம்மை சிவசந்தோசி வயிரவன் (18)ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார்.

இவர் குடும்பம்,  சிங்கப்பூரில் பாரம்பரியம் மிக்க ஒன்று.  இவருடைய மாமனார் திரு: ச. வயிரவன் செட்டியார், 40 ஆண்டு காலம், சிங்கப்பூரின் லிட்டில் இந்தியாப் பகுதியில் 'ஸ்டார்லைட் கிளினிக்' என்ற புகழ் மிக்க மருத்துவமனையை நடத்தி வந்தார்.  இவர் மாமனாரின் தந்தை திரு: வயி: சண்முகம் செட்டியார், மக்களுக்குச் சேவையாற்றியதால், ஆங்கில அரசாங்கம் அவருக்கு, 'அமைதியின் நீதிபதி' என்ற பட்டம் வழங்கியது.  இவருடைய கணவர் தற்பொழுது, கணினி சம்பந்தப் பட்ட ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

திருமதி செளந்தர நாயகி வயிரவன், 2000 ஆம் ஆண்டு இங்கிலந்து பள்ளியில் ;இதழியலில் டிப்ளமோ பட்டமும், 2007 ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தில், தகவல் மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

இதழியழிலில் அதிக ஆர்வம் உடைய இவருக்குப் பத்திரிகைகளுக்கு எழுதவேண்டும் என்ற ஆவல் இருந்தது.  கணினி அதற்குக் கைக்கொடுத்தது.  ஆக 2000ஆம் ஆண்டு,  இவர் இந்திய வம்சாவழியினருக்காக ஒரு இணையப் பத்திரிக்கையைத் தொடங்கினார். (http://www.singindvoice.info) அப்பத்திரிக்கை இவருக்குப் பல கதவுகளைத் திறந்தது.

அதற்காகத் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர்: கலைஞர் கருணாநிதி, இந்திய நிதி அமைச்சர் திரு: ப. சிதம்பரம், ஆந்திர முன்னாள் முதல்வர் திரு: சந்திரபாபு நாயுடு, சிங்கப்பூர் முன்னாள் அதிபர்:  திரு:  எஸ் ஆர் நாதன், சிங்கப்பூர் அமைச்சர்கள் திரு: எஸ். ஈஸ்வரன், செல்வி: இந்திராணி ராஜா மேலும் பல பிரமுகர்களை நேர்காணல் எடுத்து உள்ளார்.  மேலும் இப்பத்திரிக்கையின் வழி பல கருத்துகளை மக்களுடன் பகிர்ந்து கொள்ளவும், பலவற்றை அறிந்து கொள்ளவும், பலரைச் சந்திக்கும் வாய்ப்பையும் இவருக்குப் பெற்றுத்தந்தது.  

சிங்கை நகரத்தார் மலரின் ஆசிரியராக 2003, 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு ஆசிரியராக இருந்திருக்கிறார். தமிழ் முரசு நாளிதழில் பகுதி நேர வேலை, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் வேலை போன்றவற்றின் மூலம் மேலும் இவரின் இதழியல் அனுபவம் கூடியது.  

இவர் இதுவரை, தமிழில் ஐந்து புத்தகங்களையும் ஆங்கிலத்தில் மூன்று புத்தகங்களையும் எழுதியுள்ளார்.  அவற்றின் விவரம்

1.  2008 -  சிங்கப்பூர் ஒரு முழுமையான பார்வை

2.  2010 – Nagarathars in Singapore co-authored with Dr SP Thinnappan

3.  2012 - சிங்கப்பூரில் தமிழ் தமிழர்

4.  2015 -பெண்களே உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்ளுங்கள்

5.  2017 - தமிழ் இசை - ஒர் கண்ணோட்டம் (திருமதி: கெளரி கோகுலுடன் இணைந்து எழுதிய புத்தகம்)

6.  2016 – Tamil Community and the Making of Modern Singapore – co-authored with Mr AP Raman  

7.  2020 - நீங்களும் எழுத்தாளராகலாம்

8.  2021 - A harvest of inspiring Tales

நகரத்தார் மலர், ஆச்சி வந்தாச்சு, நமது நகர மலர், தினமணி கதிர், குமுதம் சிநேகிதி, குமுதம் தீராநதி தி ஹிந்து தமிழ் The Hindu, One India One People போன்ற பத்திரிக்கைகளில் இவருடைய எழுத்துக்கள் பிரசுரமாகியுள்ளன.  மேலும், அமெரிக்கா, கனடா, ஸ்ரீலங்கா, காங்கோ, ஆஸ்திரேலியா, ஹாங்காங் போன்ற நாட்டில் வெளிவரும் பத்திரிக்கைகளில் இவருடைய கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன.  

பத்திரிக்கைத் துறையின் மீது இவருக்கு எவ்வளவு ஆர்வமோ, அதே போல், இவருக்கு இசையின் மீதும் அதிக ஆர்வம்.  சிங்கப்பூர், மலேசியா, இந்தியா போன்ற நாடுகளில் இவர் கர்நாடக சங்கீதக் கச்சேரிகள் நிகழ்த்தியுள்ளார்.  சிங்கப்பூரின் அநேகக் கோயில்கள், சமூக நிகழ்ச்சிகள், இந்திய மரபுடைமை நிலையம் போன்றவற்றில் பாடியுள்ளார். கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பாட்டுப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியிருக்கிறார்.

இவர் 5 குறுந்தட்டுகளை வெளியிட்டுள்ளார்

1.  2014 – Vocal Songs Six

2. 2017 -  சிங்கப்பூரில் தமிழ், தமிழர்

3. 2018 - திருக்குறள் - கடவுள் வாழ்த்து

4.  2020 - நன்னெறித் தங்கம் பாட்டு

5.  2021 - காரைக்கால் அம்மையார் திருவிரட்டை மணிமாலை

இவர் 2018ஆம் ஆண்டு, 'கலாமஞ்சரி' என்ற நிறுவனத்தைத் 'தமிழிசையை' வளர்க்கும் நோக்கில் சிங்கப்பூரில் தொடங்கியுள்ளார்.  கலை நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்கள், போட்டிகள், வகுப்புகள் மூலம் தமிழிசையை வளர்ப்பது இதன் நோக்கம்.  கலாமஞ்சரி இதுவரை திருக்குறள், பாரதியார், பாரதிதாசனார், ஆத்திச்சூடி, நாட்டுப்புற இசை, முக்கூடற்பள்ளு, கடையேழு வள்ளல்கள் இவற்றை மையமாகக் கொண்டு நிகழ்ச்சிகள் படைத்திருக்கிறது.

இவர் தமிழ்ப் பேச்சாளர் மன்றங்களில் 'சிறப்புப் பேச்சாளராக' அழைக்கப்பட்டுக் கலந்து கொண்டிருக்கிறார். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், Global Organisation for the People of Indian Origin போன்ற அமைப்புகளில் செயலவை உறுப்பினராக இருந்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...