எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 9 அக்டோபர், 2023

தேசியத்தாய்கள்

தேசியத்தாய்கள்

 

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து

பாவியேன் உடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி

உலப்பு இலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து

புறம் புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே

யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந்தருள்வது இனியே. ”

 

பாடல்கள் பாடித் தீபம் ஏற்றிக் கொண்டிருந்த ராஜராஜேஸ்வரி அம்மா விபூதியையும் குங்குமத்தையும் கொண்டு வந்து தேவிக்குப் பூசி விட்டார். தைராய்டு பிரச்சனையால் அன் ஈவன் மென்ஸஸ்ட்ருவல் ப்ரியடில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த தேவிக்கு தர்மசங்கடமாயிருந்தது.

 

தான் மாசமாக இருப்பதாக நினைத்து ராஜராஜேஸ்வரி அம்மாள் தாங்கு தாங்கென்று தாங்குவது அவளுக்கு பயத்தைக் கூட உண்டு பண்ணியது. உண்மை தெரிந்தால் என்னாகுமோ என்று முன்பே அவரிடம் சில உடல்நலத் தகவல்களைச் சொல்லி இருந்தாள். சிலபேருக்குக் கர்ப்பம் தரிச்ச பின்னாடியும் லேசா ப்ளீடிங்க் ஆகுமாம்மா என்று.

 

”என்னவோ போ இந்தக் காலத்துல எல்லாம் புருஷன் கூடவே போகணும்கிறீங்க. செக்கப்புக்கு, டெலிவரிக்கு எல்லாம் டாக்டர்கிட்ட கூட நாங்க அம்மா, மாமியார் கூடத்தான் போவோம். இப்ப கர்ப்பம் தரிக்கமுன்னேயே டெஸ்ட். தரிச்சபின்னாடி ஆயிரத்தெட்டு ஊசி இதெல்லாம் நாங்க கண்டதேயில்லை.

 

எனக்கு சாமிநாதன் இதோ இந்த சமையற்கட்டு வராண்டாவுல நடந்து வந்துக்கிட்டு இருக்கும்போதே வலி எடுத்துப் பொறந்துட்டான். அப்பவெல்லாம் பாட்டி உலக்கைல அரிசி இடிச்சி மாவாக்கி கொழுக்கட்டை செய்து செவ்வாய் சாமி கும்பிடுவாங்க. நானும் கூட இடிச்சிருக்கேன். அப்பப் பொறந்தவதான் உன் நாத்தனார் மஞ்சு.

 

பாட்டி உளுத்தங்களிதான் செய்து கொடுப்பாங்க. நல்லா ஊட்டமா சாப்பிடுவோம். நல்லா நடப்போம் எல்லா வேலையும் செய்வோம். டக்குப் புக்குன்னு புள்ளை பொறந்து அரைமணி நேரத்துல ஜிங்குன்னு எந்திரிச்சு உக்கார்ந்திருப்போம். இந்தக் காலத்துப் புள்ளக ஒடம்பு என்ன ஒடம்போ”. என்று அலுத்துச் சலித்தபடி கிச்சனுக்குச் சென்றார் ராஜராஜேஸ்வரி.

 

வ்வே உவ்வே என்று வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள் தேவி பாத்ரூமில். ”என்னாச்சுடா கண்ணு” என்று பதற்றத்தோடு ஓடி வந்தான் சாம். அவளின் நெற்றிப் பொட்டை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டான். மயக்கத்தில் சுழலுவது போலிருந்த அவளது தலை ஸாமின் இரும்புக் கரம் பட்டதும் மாயமாய் நின்றது தலை சுற்றல். மனம் தெளிந்தது போல் அவளின் பார்வையும் தெளிவானது.

 

’உண்மையிலேயே இவளுக்கு ப்ரக்னென்ஸி சிண்ட்ரோம் வந்திருச்சோ. ஒருவேளை ப்ரக்னெண்ட் ஆயிட்டாளோ’ என்று அவன் மனதில் சிந்தனை ரேகைகள் ஓடின. ”என்னாச்சுடா என்ன சாப்பிட்டே ஏதும் பிடிக்காததை சாப்பிட்டியா” என்று வினவினான்.

 

”வெளக்கெண்ணையில் போட்ட ஆம்லெட் கொடுத்தாங்க அம்மா” என்றாள். ”என்னது வெளக்கெண்ணையா ஏன்.?” என்று ஜெர்க்கானான். அவனது கையைப் பிடித்து ஆசுவாசப்படுத்தியவள் சொன்னாள். ”அது ப்ரசவம் ஈஸியாக உதவுமாம். டெய்லி ஒண்ணு கட்டாயம் சாப்பிடணுமாம். அம்மா கட்டளை. சோ கனகு அக்கா போட்டுக் குடுக்குறாங்க.” என்றாள்.

 

தான் போட்ட மர்ம முடிச்சில் தானே மாட்டிய சிக்கலை உணர்ந்து நெற்றியைத் தட்டியபடி அமர்ந்தான் சாம். ”இதுக்கு ஒரு வழி பண்றேன். இன்னும் என்னென்ன சொன்னாங்க” என்றான். ”இதோ இந்த ஸ்லோகத்தை தினம் சொன்னா சுகப்பிரசவம் ஆகுமாம்.

 

”எங்கே கொடு” என்று வாங்கிப் பார்த்தான். திருப்பிக் கொடுத்தான் அவளிடம்.

 

ஹே சங்கர ஸ்மரஹர

ப்ரமதாதீ நாத மன்னாத

ஸாம்ப சசிசூட ஹர த்ரிசூரினி

சம்போ ஸூகப்ரஸவக்ருத் பவமே த்யாயோ

ஸ்ரீ மாத்ரு பூத சிவபாலயமாம் நமஸ்தே.

 

யில் கழுத்துக் கலரில் புடவை அணிந்திருந்தாள் ராணி. அவளது பிறந்தநாளை மருத்துவமனை அட்டையில் பார்த்த ஸாம் சர்ப்ரைஸாக அந்தப் பட்டுப்புடவையை அவளுக்குப் பரிசளித்திருந்தான். நளினமும் திருத்தமான முக அமைப்பும் சந்தன நிறமும் கொண்ட அவள் அச்சேலையைக் கட்டி டாப் நாட் போட்டு விசிறி மாதிரி விரிந்த கற்கள் பதித்த க்ளிப் குத்தி இருந்தாள். திரும்பும்போதும் நடக்கும்போதும் ஒரு ஒயிலான மயில் அசைவது போலிருந்தது.

 

இருவர் மட்டுமே கொண்டாடும் ஒரு பேபி ஷவர் நிகழ்ச்சிக்கு உயர்தரமான ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தான். காரை லாவகமாக ஓட்டியபடியே அவளுடன் உரையாடிக்கொண்டிருந்தான் ஸாம்.

 

இப்போதெல்லாம் நிறையப் பொய் சொல்ல ஆரம்பித்துவிட்டான். அலுவலகத்திலும் தேவியிடமும் அம்மாவிடமும். ஏன் அனைவரிடமும். பொய் என்பது சரளமாகிவிட்டது. என்ன ஒன்று சொன்னதை ஞாபகம் வைத்துக்கொள்ளாத பிசகு அங்கங்கே அவனை மாட்டி விட்டது.

 

ராணியிடம் மட்டும்தான் உண்மையாக இருந்தான். எந்நேரமும் அவள் நினைப்புத்தான் அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. காரின் எஃப் எம்மில் ஒரு தொகுப்பாளினி ’ஆண் மயில் உறவு வைத்துக்கொள்ளாது என்று சொன்ன நீதிபதி மகேஷ் சந்திரசர்மாவின் கருத்தை நேயர் நேயராகச் சொல்லிக் கலாய்த்துக்  ’கருத்துக் கேட்டுக் கொண்டிருந்தார். ”இவனுகளுக்கு வேற வேலையே இல்லையா” என்று கிண்டலடித்தபடி ரேடியோவை ஆஃப் செய்தான் ஸாம்.

 

”ஆமா உறவு வைச்சுக்காட்டியும் புள்ளை பெத்துக்கலாம்ல நம்மைப் போல”. என்று சொன்னாள் ராணி. ”பெத்துக்கலாம். அத சொல்லல ஆனா இப்போ இது எதுக்கு?” என்று சொல்லி ஹோட்டலின் போர்டிகோவில் காரை நிறுத்தி இறங்கி சாவியை அங்கே இருந்த ஊழியரிடம் தூக்கிப் போட்டான். காட்ச் பிடித்த அவர் காரைக் கொண்டு போய் பார்க் செய்தார்.

 

ராணியின் தோளில் கைபோட்டவாறு உள்ளே சென்ற ஸாமையும் ராணியையும் வரவேற்க இன்னிசைத்தார்கள் ஹோட்டல்காரர்கள். இது தனி பார்ட்டி. இருவர் மட்டுமே கலந்து கொள்ளும் பேபிஷவர். அவர்கள் இருவருக்கான நேரத்தில் யாரும் குறுக்கிடுவதையோ எந்த அநாவசியப் பேச்சும் பிரிப்பதையோ ஸாம் விரும்புவதில்லை.

 

இரு பெண்கள் வரவேற்று இனிமையான நறுமணம் கொண்ட ஆர்க்கிட்டுகளைப் பரிசளித்து அவர்களை நட்டநடுநாயகமாயிருந்த அலங்காரச் சேர்களில் அமரவைத்தார்கள். பத்துப் பெண்கள் வரிசையாக வந்து சீர்வரிசை போல் குழந்தைகளுக்கான உடைகள், லோஷன்கள், பாடி ஸ்ப்ரேக்கள், பவுடர், சோப், ஆயில்கள், நாப்கின்கள், வாக்கர், குளியல்,நீச்சல் டப், வாட்டர் பெட், பேபி பெட், உயர்தரக் கம்பெனிகளின் விதம் விதமான விளையாட்டுப் பொருட்கள், ஆளுயர பொம்மைகள், ஸ்வெட்டர் ஸ்பன் ஆடைகள், பெடலிங் கார், ஆகியவற்றைக் கொண்டு வந்தர்கள். இவை போகக் கடைசியாக வந்தவை அவனது பணத்தின் பெருமையைப் பறைச்சாற்றின.

 

குழந்தைக்கு மருந்து கொடுக்க வெள்ளிப் பாலாடை, வெள்ளி கப், ஸ்பூன், குட்டி ப்ளேட், டம்ளர், போரிட்ஜ் கரைக்கும் பவுல், பேஸன் இது போக விளையாட்டுச் சாமான்களும் வெள்ளியில் கிலுகிலுப்பை, நீள விசில், டீதிங்க் ராடில், சலங்கை போட்ட வெள்ளிப் பந்து, டமாரம், பவுடர் டப்பா, பொட்டு ஆணிகள், தண்டைகள் என. இந்த லிஸ்டை விடப் பெரிதாயிருந்தது தங்க நகைகள் லிஸ்ட். வைரக்கடுக்கன், தங்கக் காப்புகள், சங்கிலிகள், ப்ரேஸ்லெட்கள்.

 

இதென்ன என்றாள் , இன்னொரு சங்கிலியை எடுத்து. ”இது குண்டிச் சங்கிலி இடுப்பில் போடும் அரணாக்கயிறு டைப் ”என்றான். கொலுசு போல் இருந்த இன்னும் இரு உருளைகளை எடுத்து ”இது என்னது” என்றாள். ”இது அடித்தண்டை, இது மணித்தண்டை. ஐம்பொன்னால் செய்தது” என்றான்.

 

முதல் முறையாக அவனது பணத்தைப் பார்த்துப் பயமாயிருந்தது அவளுக்கு. அவளுக்குப் பிடித்த எல்லா ஐட்டமும் ஆர்டர் செய்யப்பட்டிருந்தும் ஏனோ அவளால் உண்ணமுடியவில்லை. இது எல்லாம் பிள்ளைக்காக. இதோடு நின்றால் பரவாயில்லை என்று ஒரு மனமும் பரவாயில்லையா என்று இன்னொரு மனமும் அவளைக் குடைந்து கொண்டிருந்தது.

 

இவ்வளவு இனிப்பு ஏன். என்னை விட்டுவிடு. போய்த் தொலை என்று கத்தவேண்டும் போலிருந்தது அவளுக்கு. அங்கே வாசிக்கப்பட்ட மெல்லிசை கூட கோபத்தைக் கிளறுவதாக இருந்தது. தன் மகவைச் சுமப்பவளை அசத்திய சந்தோஷத்தில் அவளது உடல் மன மொழிகளைப் படிக்கத் தவறி இருந்தான் சாம்.

 

காரில் பரிசுப் பொருட்கள் பிதுங்கி வழிந்தன. அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த அவள் ஏசியைக் கூட வைப்பதற்காகத் தட்ட அது எஃப் எம்மை உயிர்ப்பித்தது. உலகெங்கும் உள்ளவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள குஜராத்துக்குப் படையெடுப்பது பற்றிய புள்ளி விவரங்களும் பிள்ளை பெறுவது எப்படி கமர்ஷியல் ஆகிவிட்டது எனவும் சொல்லிக் கொண்டிருந்தார் தொகுப்பாளர்.

 

ரேடியோவை பட்டென அமத்தினான் ஸாம். வேளை கெட்ட வேளையில் இது வேறு ஏன் மூடை மாற்ற என்று. ஆனால் ஏற்கனவே மூடு மாறித்தான் இருந்தாள் ராணி. ’தேசியத் தாய்கள். குஜராத்தில் தேசியத் தாய்கள் பெருகிட்டாங்க. நானும் கூட ஒரு தேசியத்தாய்தான். ” சுரீரென்று சூடு பட்டது போலிருந்தது ஸாமுக்கு.

 

”ஏன் இப்பிடி எல்லாம் பேசுறே. உன்னை அப்பிடி எல்லாம் சொல்லாதே. ”

 

”இரு முறை கருமுட்டை தானம் செய்திருக்கேன். இப்போ கர்ப்பப்பை தானம்”..

 

எதைப் பேசக்கூடாது என்று நினைத்தானோ அதையே அவள் திரும்ப ஞாபகமூட்டவும் அவனுள் கோபம் கனன்றெழுந்தது. ”ப்ளீஸ். ப்ளீஸ் ஸ்டாப் இட்”. என்றான் முரட்டுக் குரலில். காரை சர் சரென்னு திருப்பி அவளது அபார்ட்மெண்ட்டில் நிறுத்தினான். லிஃப்டைத் தட்டினான்  வாட்ச்மேனை விட்டுச் சாமான்களை மேலே எடுத்து வைக்கச் சொல்லிவிட்டுக் காரைத் திருப்பி வந்துவிட்டான். மேலே கூடச் சென்று அவளை விடவேண்டும் என்று தோன்றவில்லை..

 

கோபத்தில் வார்த்தைகளை உதிர்த்துவிடுவோமோவென்று அவனுக்கு சிறிது பயமாகத்தான் இருந்தது. கடற்கரையோரச் சாலையில் கார் பறந்து கொண்டிருந்தது. கார்க்கதவைத் திறந்தான். கடல் காற்று உள் புகுந்து அவனை ஆசுவாசப்படுத்தியது. ஏஸியை அணைத்தான் . எல்லாம் செயற்கை. வாழ்வே செயற்கை. கோபம் கோபமாக வந்தது. காரைக் கடற்கரை நடைபாதையில் ஓட்டி நிறுத்தி ஸ்டீரியங்கில் முகம் கவிழ்ந்தான். உள்ளே விழுந்த பால் நிலா அவனது கன்னத்தில் வழிந்த கண்ணீரை வருடியது.

 

ஹாங்க் ஆகிவிட்டது என்று செல்லை ரிப்பேருக்குக் கொடுத்திருந்தான் சாம். அந்தச் செல்லை அவனது ட்ரைவர் அய்யாக்கண்ணு கடையிலிருந்து வாங்கி வந்து தேவியிடம் கொடுத்துச் சென்றார். ஃபோனை வாங்கி வைத்த அவள் ஹாலில் மாட்டியிருந்த கோபியர் கொஞ்சும் ரமணனின் புகைப்படத்தில் ஆழ்ந்து தலை சாய்த்திருந்தாள். இந்நேரம் ஆகிவிட்டதே அவரைக் காணவில்லையே. இப்போதெல்லாம் லேட்தான். என்ன சொல்வது.

 

அப்போது வித்யாசமான இன்னிசை ஒலித்தது. ஸாமின் போனுக்கு ஒரு இன்கமிங்க் கால் வந்தது. போனை எடுத்த தேவி அதில் இருந்த ஸ்க்ரீன் ஸேவரைப் பார்த்து அதிர்ந்தாள்..

 

அதில்..

 

அதில் இருந்தது..

 

ஸாமின் அன்புப் பிடிக்குள் சாய்ந்து சிரிக்கும் ராணி. அதிலும் இசைக்கு நடுவே அவள் உச்சரிக்கும் ஸாமின் செல்லப் பெயர் தேவியின் காதுகளை அறைந்தது.

 

விருட்டென்று நுழைந்தது கார். ஷெட்டில் விடாமல் கார்க்கதவை அறைந்து சாத்திவிட்டு மேலேறி வரும் கணவனைப் பார்க்க தேவிக்குப் பிடிக்கவில்லை. மாய உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...