எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 22 அக்டோபர், 2023

ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :– 8.

 ஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் :– 8.

  தித்யா.. ஆதித்யா ” அழைத்தார் ஆராவமுதன். ஆதித்யாவும் ஆராதனாவும் மாடியில் ஆடிக்கொண்டிருந்தார்கள். தாத்தா அழைத்ததும் இருவரும் ஓடி வந்தார்கள்.

  ”தாத்தா வாக் போகப்போறேன். யார் வர்றீங்க.” ரெண்டு பேரும் வர்றோம் என்று அவர் கையைப் பிடித்துக் கொண்டார்கள். “ரம்யா இவங்கள அழைச்சிட்டுப் போயிட்டு வர்றேன். ஏதும் வாங்கிட்டு வரணுமாம்மா” என்று கேட்டார்.

  “இல்ல மாமா நான் நேத்தே வாங்கின காய் கொஞ்சம் மிச்சம் இருக்கு. பூஜைக்கு உள்ளதெல்லாம் வாங்கிட்டேன். வேறு ஏதும்னா நாளைக்கு வாங்கிக்கலாம்” என்று சொன்னாள் ரம்யா.

  “சரிம்மா” என்று சொல்லிவிட்டு வாசலில் செருப்பைப் போட்டுக் குதித்துக் கொண்டிருந்த ஆதித்யாவையும் ஆராதனாவையும் கையைப் பிடித்து அழைத்துச் சென்றார். பஜார் கடைகள் எல்லாம் ஒரே கூட்டமாக இருந்தது. விஜயதசமிக்காக பூக்கடைகள், பொரிக்கடைகள் எல்லாம் வியாபாரம் தூள் பறந்து கொண்டிருந்தது.

  அங்கே நடுத்தர வயதுள்ள ஆள் ஒருவர் ஒவ்வொரு கடையின் முன்பும் நின்று கைநீட்டிக் கொண்டிருந்தார். சில கடைகளில் காசு போட்டார்கள் சில கடைகளில் கை கால் நல்லா இருக்கே ஒழைச்சுத் தின்னா என்ன என்று விரட்டினார்கள்.

  திடீரென மோட்டர் பைக்கில் வந்த ஒரு மனிதன் அந்த மனிதரைத் திட்டி அழைத்தார். அவர் மறுக்க அவரை வலுக்கட்டாயமாக பைக்கில் இழுத்து உட்கார வைத்து அழைத்துச் சென்றார்.

  ”குடிகாரப் பய. பிச்சையெடுத்துக் குடிக்கிறதே வேலை. இந்த சிநேகிதன் மட்டும் இல்லைன்னா இவன் ஆளே இருக்கமாட்டான்” என்று பேசிச் சென்றார்கள் சிலர். ஆதித்யாவும் ஆராதனாவும் அந்தக் காட்சியைப் பார்த்து ஓரிரு கணங்கள் மிரண்டு போனார்கள். தாத்தாவின் கையை இறுக்கப் பிடித்துக் கொண்டார்கள். 

  அதற்குள் அவர்கள் நடைப்பயிற்சி செய்யும் பார்க் வந்துவிட்டது. தாத்தா ஓரிரு நிமிடங்கள் கை காலை அசைத்து எக்ஸர்ஸைஸ் செய்தார். குட்டீஸும் செய்தார்கள். அதன் பின் இரண்டு ரவுண்ட் வாக்கிங் வந்தார்கள்.

  தாத்தாவுடன் வழியில் விற்ற கடலை, கரும்புச்சாறு கேட்காமல் வந்ததால் அவர்கள் மனதில் ஏதோ சிந்தனை ஓடியது புரிந்தது அவருக்கு.  இருவரையும் கைபிடித்துக் கொண்டு சோளத்தைச் சுட்டு விற்பவரிடம் சென்று மூன்று இளஞ் சோளக்கருதுகளைச் சுட்டு வாங்கினார். அதில் கறுப்பு உப்பும் எலுமிச்சைச் சாறும் தடவிக் கொடுத்தார் வியாபாரி.

  மூவரும் அங்கே இருந்த பெஞ்சுகளில் அமர்ந்தார்கள். ஆராவமுதன் சொல்ல ஆரம்பித்தார். ”முன்பே சொல்லி இருக்கேன்ல கண்ணன் குசேலன் பத்தி. நட்புக்கு எடுத்துக்காட்டு அவங்க.”

  ”குருகுலத்தை விட்டு வந்ததும் கண்ணன் துவாரகையின் அரசனா ஆனார். குசேலன் சுசீலையை மணந்து இருபத்தி ஏழு குழந்தைகளுக்கு தகப்பன் ஆயிட்டார். வீட்டிலோ வறுமை. அப்போ சுசீலை உங்க நண்பர் கிருஷ்ணர் இப்போ மகாராஜாவா இருக்கார். நம்மோட ஏழ்மை நீங்க அவர்கிட்ட போய் ஏதும் பொன் பொருள் உதவி பெற்று வாங்கன்னு அனுப்புறாங்க.

  கிருஷ்ணரைப் பார்க்கப் போனா அவரோ மனைவி ருக்மணியோடு வாசல்வரை வந்து பாதபூஜை பண்ணி அழைச்சிட்டுப் போய் குசேலனை ஒரு சிம்மாசனத்தில் அமரவைத்து பட்டும் பீதாம்பரமும் அணிய சொல்லி அறுசுவை உணவைப் பரிமாறுகிறார். அவரோட மனைவி ருக்மணியோ குசேலனுக்கு விசிறி விடுறார்.

  குசேலன் கொண்டு வந்த அவலை முடிச்சிலேருந்து எடுத்து வாயில் போட்டு உண்கிறார். ஆனா குசேலருக்கோ வெட்கமா இருக்கு. நண்பர்கிட்ட என்ன உதவி கேட்கிறது. ஏற்பது இகழ்ச்சியாச்சேன்னு மறுநாள் கிளம்பிடுறார்.

  ஆனா கிருஷ்ணனோ குசேலரின் வறுமை புரிந்து அவர் வீட்டுக்குப் போறதுக்குள்ள வீட்டை மாட மாளிகை ஆக்கிடுறார். அவர் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் ஆடை ஆபரணம் அறுசுவை உண்டி இதெல்லாம் வழங்கிடுறார். ”

  ”இதையே குசேலர் கிருஷ்ணன் கிட்ட கேட்டிருந்தா அது கொஞ்சம் கவுரக்குறைச்சலாத்தான் இருந்திருக்கும். அதுனால ஏற்பது இகழ்ச்சி. ஆனா நண்பன் கேட்காமலே கொடுத்தார் அல்லவா அதுனாலதான் கிருஷ்ணனைப் பரமாத்மா”ன்னு சொல்றோம்.

 குழந்தைகளுக்குப் புரிந்தது. சுட்ட சோளம் தின்றதால் பல்லில் கறுப்பாக இருந்தது மூவருக்கும். ”ஹை உன் பல் கறுப்பு கறுப்பு” என்று கெக்கலித்துக் கை கோர்த்துக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பினார்கள். ”வீட்டுக்குப் போய் பல் தேய்க்கணும் பிள்ளைகளா” என்று தாத்தா சொல்ல ஆமோதிப்பாய்த் தலையாட்டினார்கள்.

        8.    ஏற்பது இகழ்ச்சி
       இரந்துண்டு வாழ்வது பழிப்பாகையால் ஒருவரிடத்தும் சென்று ஒன்றை வேண்டாதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...