எஸ் பி எம்.. சகாப்தங்களை உருவாக்கிய சகாப்தம்
”ஹத்தியக்கு சுக்காவா ஸ்லாலுவக்கு ஜிந்த்தாவா
சயாபாண்டாங் டெரிமு சயா பர் ஹரி ஹரி டோக்கா
பர்தஸ் ஓராங் ஹத்தி படா மு” இந்தமாதிரி டிடெக்டிவ் ரஜனி மலாய்ப் பெண்ணுடன் பிரியா படத்தில் பாடுவதைப் போலச் சிலகாலம் மொழி புரியாமலே சிறுவயதில் சந்தோஷமாய்ப் பாடித் திரிந்திருக்கிறோம்.
”என்னை நீ டைரக்ஷன் பண்ணாதே..” என்று என் உறவினர் தன் மனைவியிடம் கூறும்போது டைரக்ஷன் என்றால் எல்லாரையும் ஆட்டுவிப்பது என அந்த வயதில் நினைத்துக் கொண்டிருந்தேன். டைரக்டரை மற்றவர்களும் கால்ஷீட் குளறுபடிகளால் ஆட்டி வைப்பார்கள் என்று பின்னாளில் புரிந்தது.
ஏவிஎம்மின் பாசறையில் இருந்து வந்தவர். கடின உழைப்பாளி. கல்லைக் கொடுத்தாலும் கனியாக்கிக் காட்டும் திறமையாளர். விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டு திரு எஸ் பி எம் அவர்கள். மக்களின் ரசனையை நாடி பிடிக்காமலே அறிந்த சினிமா டாக்டர் இவர் என்றால் தகும். போட்டிகள் பொறாமைகள், குழிபறித்தல்கள் நிறைந்த சினிமா உலகில் எதிரிகளே இல்லாத வெற்றிகரமான மனிதர். ஆம் வெற்றி என்பது மூன்றெழுத்து. எஸ் பி எம் என்பதும் மூன்றெழுத்து
பதின்பருவத்தில் சென்னைக்கு ஒரு முழுப்பரிட்சை விடுமுறைக்குச் சென்றபோது எல் ஐ சி, கிண்டி பூங்கா, ஏர்போர்ட் , கபாலீஸ்வரர் கோயில் எல்லாம் கூட்டிச் சென்றார்கள் உறவினர்கள். விருகம்பாக்கத்தில் இருந்த ஒரு உறவினர் வீட்டுக்குச் சென்றபோது முதல்நாள்தான் அவர்கள் எல்லாரும் கடவுள் அமைத்த மேடை என்ற படத்தின் ஷூட்டிங்கைப் பார்த்துவிட்டு வந்திருந்தார்கள். அதில் சிவகுமார், சுமித்ரா ஜோடி. அதில் இளைய உறவினர் ஒருவர் ஷூட்டிங் பார்த்ததைப் பெருமையாகப் பேசினார் பேசினார் பேசிக்கொண்டே இருந்தார். அடுத்த நாளே நாங்கள் திரும்ப ஷூட்டிங்க் பார்க்கப் போக முடியாது என்பதால் எங்கள் காதெல்லாம் பொறாமைப் புகை.
தென்மண்டல ஃபிலிம்ஃபேர் விருதுகள், தமிழக அரசின் சிறப்பு விருதுகளும் பெற்றவர். காரைக்குடியில் பிறந்தவர் என்பதால் கூடுதலாகப் பிடிக்கும். இனமானப் போராளி திரு சுபவீயின் தமையன், பல்கலை வித்தகி திருமதி கனகு ஆச்சியின் சகோதரர் என்பதைப் பின்னாளில் அறிந்தேன்.
1973 இல் கனிமுத்துப் பாப்பாவில் தொடங்கிய இவரது சினிமா கிராஃப் தொட்டில் குழந்தை படம்வரை இறங்கவே இல்லை. 95வரை 23 வருடங்களில் 75 க்கு மேற்பட்ட படங்கள். தயாரிப்பாளரை எவ்விதத்திலும் கஷ்டப்படுத்தாத, நஷ்டப்படுத்தாத வியாபார ரீதியாக வெற்றி பெற்ற படங்கள். மினிமம் கியாரண்டி ரிடர்ன் இயக்குநர் எனக் குறிப்பிடுவார்கள் இவரை.
பஞ்ச் டயலாக், மாஸ் ஓபனிங் என ரஜனிக்கென தனித்துவத்தை உருவாக்கியவர். பஞ்சு அருணாசலம் இவருக்காக முதலில் பஞ்ச் டயலாக்குகளை உருவாக்கினாராம். எஸ் பி எம்மின் திரைக்கதை வசனம் இயக்கத்தில் நல்ல கட்டுக்கோப்பு நிலவும். 75 படங்களில் 25 ரஜனி படங்கள். ரஜனியை சூப்பர்ஸ்டாராக அடையாளம் காட்டியது முரட்டுக் காளை என்றால் அதை உறுதி செய்தது பிரியா படம். கமலை வைத்துப் பத்துப் படங்கள்
வில்லன் ஹீரோவானது புவனா ஒரு கேள்விக்குறியில். அவன் அப்பாவியாக பிழைக்கத் தெரியாதவனாக வாழ்ந்தது ஆறிலிருந்து அறுபதுவரையில். பக்கா குடுமியுடன் கிராமத்தானாக முரட்டுக் காளையிலும், நகைச்சுவையோடு கூடிய காதலனாக குரு சிஷ்யனிலும், ப்ளேபாயாக நெற்றிக்கண்ணிலும் முத்திரை பதித்திருப்பார் ரஜனி. பாலசந்தர் ஒருமுறை நான் கண்டெடுத்த வைரம் ரஜனி. அதைப் பட்டை தீட்டியது எஸ்பி முத்துராமன்தான் எனப் பாராட்டினாராம்.
வாழ்ந்து காட்டுகிறேனில் சுஜாதாவை வைத்து சிலப்பதிகார மாதவி கண்ணகியைப் பாடலில்கொண்டு வந்த திறம் சிறப்பு. அதேபோல் “ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே அனுமான் உன்னைக் காக்க சிறையில் உன்னை மீட்க கடல்தாண்டி வந்தானம்மா’ என்று இராமாயணத்தையே பிரியாவில் கொண்டு வந்திருப்பார். இவர் தமிழ் சினிமா வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர்.
எங்கம்மா சபதத்தில் ”அன்பு மேகமே இங்கு ஓடிவா.” மயங்குகிறாள் ஒரு மாதுவில் ’சம்சாரம் என்பது வீணை… மனம் குணம் ஒன்றான முல்லை.” ”வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம் அது தரவேண்டும் வளர் காதலின்பம். உனக்கென நானும் எனக்கென நீயும் இல்லறம் தொடரட்டும் இனிதாக இன்பம்.” நல்லவனுக்கு நல்லவனில் ”உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் மானே.உயிர்ப்பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்.” என ரஜனியும் ராதிகாவும் உருகும் பாடல், ”வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ளே என ரிதமிக்கான பாடல், மிஸ்டர் பாரத்தில் ’என்னம்மா கண்ணு” என்று எள்ளலும் துள்ளலுமான பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும்.
இப்படிப் பஞ்சு அருணாசலம், கண்ணதாசன் ஆகியோர் இவரது படப்பாடல்களைக் கருவாக்கினர் என்றால் ஜேசுதாஸ், ஜென்ஸி, சுசீலா, ஜானகி, எஸ்பிபி, எல் ஆர் ஈஸ்வரி ஆகியோர் அதற்கு அழகாக உருக்கொடுத்தனர். இவரது கதாபாத்திரங்கள் மனிதநேயமிக்க மனிதர்கள். நியாயத்திற்கும் நேர்மைக்கும் கட்டுப்பட்டவர்கள். பாசத்தையும் நேசத்தையும் கொள்கையாகக் கொண்டவர்கள். ஒரு சில விதி விலக்குகளும் உண்டு. ஹீரோ வில்லனாவதும் வில்லன் ஹீரோவாவதும் போல.
ரிஷிமூலம், குடும்பம் ஒரு கதம்பம், கழுகு, அடுத்த வாரிசு, புதுக்கவிதை, நான் மகான் அல்ல, பாண்டியன், அதிசய பிறவி, ராஜா சின்ன ரோஜா, வேலைக்காரன், ஆடு புலி ஆட்டம், தர்மத்தின் தலைவன், தூங்காதே தம்பி தூங்காதே, பேர் சொல்லும் பிள்ளை, போக்கிரி ராஜா, ராணுவ வீரன், ஸ்ரீ ராகவேந்திரா, என எத்தனை ஹிட் படங்கள். சின்னச் சின்ன ட்விஸ்ட், த்ரில், சுவாரசியமான திருப்பங்கள் கொண்டவை. பிரியா, கழுகு போன்றவை டிடெக்டிவ் கதைகள்.
80வயதில் கொரோனாவை வென்ற இயக்குநர் என்கின்றன மீடியா செய்திகள். ரஜனி, கமல், சிவாஜி எனப் பெருந்தலைகளை இயக்கியவர். தொழில் நேர்மை, வித்யாசமான முயற்சிகள், கால்ஷீட் மேனேஜ்மெண்ட், குறித்த நேரத்தில் குறித்த பட்ஜெட்டில் படத்தை முடிப்பது என அயராத உழைப்பால் தயாரிப்பாளர்களின் மனம் கவர்ந்தது போல இனிமையான பாடல்கள், கண்கவரும் லொகேஷன்கள் காமெடி கலந்த சண்டைக் காட்சிகள், கிளாமரான ஹீரோயின்கள், பொதுஜனம் போன்ற நிறை குறை கொண்ட ஹீரோக்கள், கதைதான் ஹீரோ, சப்ஜெக்ட்டுக்காகத்தான் நடிகர்கள் எனப் படைத்து மக்களின் மனம் கவர்ந்தவர்.
சிலரை ஒளிப்பட ஓவியர் என்பார்கள். சிலர் முக்கியமான க்ளைமாக்ஸ் சீன்களின் முடிவில் பெயரைப் போட்டுக் கொள்வார்கள். வித்யாசமான சிந்தனைகள், கோணங்கள், பிரம்மாண்டமாக எடுப்பது, பெரிய பட்ஜெட்டில் எடுப்பது, ஈஸ்ட்மென்கலரில் எடுப்பது என்று டைரக்டர்ஸ் டச் என்று பலரும் பலரை விதந்தோதுவார்கள். ஆனால் எதை எடுத்தாலும் சக்சஸ் ஃபார்முலாவாக மாற்றுவதுதான் எஸ் பி எம்மின் டச். இன்று வரை அவர் எடுத்துச் சோடைபோன படங்கள் என்று குறிப்பிட எதுவுமேயில்லை.
சகலகலா வல்லவனிலிருந்து ”இளமை இதோ இதோ”. என ஒவ்வொரு புத்தாண்டிலும் கேட்கும் குரல் கமலுடையதுதான் ”ஹேய் எவ்ரிபடி விஷ் யூ எ வெரி ஹேப்பி நியூ இயர்..” என எஸ்பிஎம் கமல் கூட்டணியின் வாழ்த்துக்களோடுதான் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக வருடங்கள் புலர்கின்றன.
2010 – 2012 வரை லேடீஸ் ஸ்பெஷல் என்னும் மேகஸீனில் ஃப்ரீலான்சராகப் பணிபுரிந்தேன். 2016இல் அதன் இருபதாவது ஆண்டுவிழாவில் லேடீஸ் ஸ்பெஷல் சார்பாக அதன் ஆசிரியை கிரிஜா ராகவன் எனக்கு ”ஸ்பெஷல் லேடி விருது” வழங்கினார். ரஷ்யன் கல்சுரல் செண்டரில் அவ்விருதை நல்லி குப்புசாமி செட்டியார் கரங்களில் இருந்து பெற்றுக்கொண்ட போது நடிகை குட்டி பத்மினி, வொயிட் அண்ட் வொயிட்டில் டைரக்டர் திரு. எஸ் பி எம், திருமதி லேனா தமிழ்வாணன், திருமதி ரவி தமிழ்வாணன் ஆகியோரும் சிறப்புவிருந்தினராக அரங்கை அணிசெய்தார்கள் என்பதில் எனக்கு மாபெரும் மகிழ்ச்சி உண்டு.
{{{லேடீஸ் ஸ்பெஷலில் ஸ்பெஷல் விருது அங்கீகாரம்.
http://honeylaksh.blogspot.
”ஈதல் இசைபட வாழ்தல்.”. ”உள்ளத்தால் பொய்யாதொழுகின்.” “.கண்ணொடுகண் நோக்கின் வாய்ச்சொற்கள் பயனில.” எனத் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசுவதில் வல்லவர் இவர். எப்போதுமே கமலையும் ரஜனியையும் தன் இரு கண்களாகக் குறிப்பிடுவார். ரஜனி கமல் என்ற இரு சகாப்தங்களை உருவாக்கிய சகாப்தம் எஸ் பி எம் என்றால் சாலப்பொருந்தும். அந்த நல்லமனம் வாழ்க நாடுபோற்ற வாழ்க. தேன்தமிழ் போல் வான் மழை போல் சிறந்து எங்கும் வாழ்க.
டிஸ்கி:- அம்மா என்றால் அன்பு.. அம்மு என்ற என்னுடைய கட்டுரையைப் பாராட்டி எழுதிய குருவிக்கொண்டான் பட்டி வாசகர் திரு .கே. செல்வராஜன் அவர்களுக்கு நன்றிகள். வாசகர் கடிதத்தை வெளியிட்ட தனவணிகனுக்கும் நன்றிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)