வரமே சாபமானது
தன் வினை தன்னைச்
சுடும், தலைக்கு மேலேயும் சுடும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் ஒரு அரக்கன் இருந்தான்.
அவனுக்கு நல்வரம் கொடுத்துவிட்டு முப்பெரும் தேவர்களில் ஒருவரான ஈசனே அவதிப்பட்டார்.
அவரை விஷ்ணு காப்பாற்றினார். அந்தக் கதை என்னவென்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
அரக்கர் குலத் தலைவன் பத்மாசுரன். அவன் மாபெரும் கோட்டை கட்டி ஆண்டு வந்தான். சிவனின் மேல் மிகுந்த பக்தி கொண்டவன். அல்லும் பகலும் சிவநாமத்தை ஓதி ஓதி சிவபூஜை செய்து கொண்டிருந்தான். இவ்வாறாகப் பல்லாண்டுகாலம் கடந்தது. அகமும் புறமும் மறந்து இறைத் தியானத்திலேயே ஆழ்ந்துவிட்டான்.
அரக்க சிந்தனை அற்று இரக்க சிந்தனை கொண்டு அல்லும் பகலும் தன்னையே தியானிப்பது அறிந்து சிவனே மகிழ்ந்து போனார். அவன் கோரிய வரத்தைத் தர விரும்பினார். அவன் முன்னே தோன்றி “ பத்மாசுரா! உன் தவத்தைக் கண்டு மெச்சினேன். என்ன வரம் வேண்டும் கேள்!. எது கேட்டாலும் தருகிறேன் “. இங்கேதான் ஈசனுக்கும் அடி சறுக்கியது.
அவனின் இரக்கசிந்தனை
எல்லாம் தவம் முடிந்தவுடன் முடிவுக்கு வந்து அரக்க குணம் மேலெழும்பி விட்டதை அறியாமல்
ஈசன் வரம்கொடுக்கத் தயாரானார்.” ஈசனே, நான் யார் தலையில் கைவைத்தாலும் அவர்கள் பஸ்பமாகிவிடவேண்டும்.”
பத்மாசுரன் இப்படி ஒரு வரத்தைக் கேட்பான் என்று ஈசனே எதிர்பார்க்கவில்லை.
என்ன செய்வது,
வாக்குக் கொடுத்தாயிற்று. எனவே வரத்தையும் கொடுக்கவேண்டியதுதான். “அப்படியே ஆகட்டும்
பஸ்மாசுரா. நீ கோரிய வரம் தந்தேன்”. என இறைவன் வாயிலிருந்து இவ்வார்த்தைகள் உதிர்ந்தன.
அளித்த மறுகணமே
அவர் கொடுத்த வரத்தைப் பரிசோதிக்க எண்ணினான் பத்மாசுரன். யாரிடம் பரிசோதிப்பது ? ஏன்
தனக்கு வரம் கொடுத்த சாமியே எதிரில் இருக்கிறாரே. அவரிடமே பரிசோதித்து விடுவோம் என
முன்னே வந்தான் பத்மாசுரன்.
அகந்தை தலைக்கேற
இறுமாப்புடன் தன் முன்னே வரும் பத்மாசுரனைப் பார்த்தார் ஈசன். தான் கொடுத்த வரத்தால்
தனக்கே ஆபத்தா. இப்படி ஒரு திருப்பத்தை அவர் எதிர்பார்க்கவில்லை. எனவே அருகே இருந்த
அரளிச்செடியின் பூ ஒன்றில் மறைந்தார்.
திடீரெனெ அவர்
கண்ணிலிருந்து மாயமானதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற பத்மாசுரன் எதிரில் கண்ட
யாரையும் விட்டு வைக்கவில்லை. அனைவரையும் துரத்திச் சென்று அவர்களின் தலையின் மேல்
கைவைத்துப் பஸ்பமாக்கினான்.
தேவர்களும் முனிவர்களும் அஞ்சி ஓடினர். விஷ்ணுவிடம் முறையிட்டனர். இந்த இக்கட்டான நேரத்தில் தான் ஏதேனும் செய்தாக வேண்டும். அவனோ தாறுமாறான வரத்தின் பலத்தோடு திரியும் அரக்கன். எனவே அவர் ஒரு அழகான மோகினிப் பெண்ணின் உருவம் எடுத்தார்.
யாரைக் கண்டாலும்
துரத்தித் துரத்தி ஓடவைத்து மகிழ்ந்து கொண்டிருந்த பத்மாசுரன் முன்னே அந்த அழகான மோகினிப்
பெண் சென்றாள். எல்லாரையும் அழிப்பதற்காகத் துரத்தியவன் அந்த மோகினிப் பெண்மேல் மையல்
கொண்டு ஆள்வதற்காகத் துரத்தினான்.
மோகினியோ அவனைத்
தன் அழகால் பித்துப் பிடித்து அலைய வைத்தாள்.மேலோகம், பூலோகம் என ஈரேழு பதினாலு லோகத்திலும்
அவன் மனக்கண் முன் அவளே காட்சி தந்து ஆட்சி செய்தாள்.
ஒரு கட்டத்தில் அவன் நிலையைப் பார்த்துப் பரிதாபப்பட்ட மோகினி தன்னுடன் நடனமாடிப் போட்டியில் வென்றால் அவனை மணந்து கொள்வதாக வாக்குக் கொடுக்கிறாள். பத்மாசுரன் மிகுந்த மகிழ்ச்சியோடு அதற்கு ஒத்துக் கொள்கின்றான்.
அதிரடியாக ஆரம்பமாகிறது
மோகினிக்கும் பத்மாசுரனுக்குமான நடனம். மெல்ல ஆரம்பித்த நடனம் ஒரு கட்டத்தில் வேகம்
பிடிக்கிறது. மோகினியின் அழகில் மட்டுமல்ல நாட்டியத் திறமையிலும் மயங்கிய பத்மாசுரன்
மோகினியின் ஒவ்வொரு அடவையும் பிரதிபலிக்கிறான்.
மோகினியும் முகத்தில்
வியப்புக் காட்டியவாறு ஆடிச் செல்கிறாள். அவளைப் பின் தொடர்ந்து ஆடிச் செல்லும் பத்மாசுரனும்
தன் வயமிழக்கின்றான். இதோ வந்துவிட்டது உச்சக்கட்ட ஆட்டம்.
மோகினி சுற்றிச்
சுழன்று ஆட பத்மாசுரனும் சுற்றிச் சுழன்று ஆடுகிறான். மோகினி வலது கையைக் குவித்துத்
தன் சிரசின் மீது வைத்து அபிநயம் பிடித்து அவனைக் கூர்ந்து நோக்குறாள். இதென்ன பிரமாதம்
என நினைத்தபடி பத்மாசுரனும் தன் வலது கையைக் குவித்துத் தன் தலைமேல் வைத்து அபிநயம்
பிடித்தபடி அவளைப் பார்க்க முயல்கிறான்.
அஹோ! இதென்ன அவன்
தன் தலையின் மீது கையை வைத்ததும் அவனே பஸ்பமாகிக் கரைந்து விட்டானே. ஒரு கணத்தில் நிகழ்ந்து
விட்டது பத்மாசுரன் தான் பெற்ற வரத்தால் பஸ்மாசுரனாகிப் பஸ்பமாகிப் போனது.
மோகினியாய் நகைத்தபடியே
தன் சுய உருவத்துக்கு மாறினார் விஷ்ணு. அப்பாடா பத்மாசுரன் பஸ்பமாகி விட்டான். இனி
அவன் தொல்லை இல்லை என மகிழ்ந்து அதன் பின் தான் ஈசன் அந்த அரளி மலரிலிருந்து வெளியே
வந்தார்.
பக்தனின் தராதரம்
அறியாமல் இனி கேட்ட வரம் கொடுக்கிறேன் என வாக்குக் கொடுக்கக் கூடாது என நினைத்தார்.
வரம் என நினைத்துப் பத்மாசுரன் கேட்ட வினை அவன் தலையிலேயே விடிந்தது. அவனைப் பஸ்பமாக்கி
அவனுக்கே முடிவைத் தந்தது.
எனவே எப்போதும்
நல்லதையே சிந்திப்போம். நல்லதையே கேட்போம். நல்லதே நடக்கும் என்பதை நம்புவோம் குழந்தைகளே.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!