மகாகாலேஷ்வர்,ஓம்காரேஷ்வர்,சோம்நாத்,நாகேஷ்வர் ஜோதிர்லிங்க தரிசனம்.
மஹாகாலேஷ்வர், ஓம்காரேஷ்வரர்/மமலேஷ்வரர், சோம்நாத், நாகேஷ்வர் ஆகிய நான்கு ஜோதிர்லிங்கத்தையும் துவாரகை கிருஷ்ணன், உஜ்ஜயினி மஹாகாளியையும் தரிசனம் செய்து நாளாகிவிட்டது ஆனால் இப்போதுதான் பதிவு செய்கிறேன். குஜராத், & மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள கோயில்கள் இவை.
மகாகாலேஷ்வர். மிகவும் பந்தோபஸ்துடன் அமைந்த கோவில் இது. முதல்நாளே ரேஷன்கார்டு, பான்கார்டு , வோட்டர் ஐடி ,ஆதார் போன்ற அடையாள அட்டைகளில் ஏதோ ஒன்றைக் காண்பித்துப் பதிவு செய்துகொள்ளவேண்டும். மறுநாள் விடியற்காலையில் உள்ள ஸ்பெஷல் பஸ்மாஹாரத்தி எனப்படும் மயானபூஜையைப் பார்க்கவே இது.
இங்கே காமிராவுக்கோ செல்போனுக்கோ வேலையேயில்லை. கப்சிப். எல்லாவற்றையும் அணைத்து ரூமிலேயே வைத்துவிட்டுச் சென்றுவிடவேண்டும். என் அன்பிற்குரிய சின்னத்தம்பியும் அவனது மனைவியும் துபாயிலிருந்து குடும்பத்தோடு வந்திருந்து தரிசனம் செய்தபோது என்னையும் அழைத்துச் சென்று தரிசனம் செய்வித்தார்கள். அவர்கள் சென்னை டு மும்பை பிளைட்டில் வர எனக்கும் ஹைதை டு மும்பை பிளைட் டிக்கெட் எடுத்திருந்தார்கள். நன்றி இருவருக்கும். :)
சவுத் மும்பையில் அமைந்திருந்த தம்பி மனைவியின் உறவினர் இல்லத்துக்குச் சென்று ( மாபெரும் நிறுவனம் ஒன்றில் தலைமைப் பொறுப்பில் இருப்பதால் லட்சக்கணக்கில் வாடகை உள்ள வீட்டில் இரு தளங்கள் அவர்களுடையது. காரில் அழைத்துச் சென்று திடீரென்று பிசகிவிட்ட என் கால் வலிக்கு ஜஸ்லோக் ஹாஸ்பிட்டலில் உடனடி வைத்தியம் செய்வித்தார்கள். மிக அருமையான விருந்தோம்பலும் கொடுத்த அவர்களுக்கு நன்றி ) அதன் பின் ஒவ்வொரு இடமாகப் பார்த்துவந்தோம்.
அங்கிருந்து புறப்பட்டு உஜ்ஜயின் வந்து சேர்ந்தோம். அன்று டோக்கன் வாங்கினால் மறுநாள்தான் தரிசனம்.
விடியற்காலையில் குளித்துவிட்டுக் கியூவில் சென்று நின்று இங்கே கொடுக்கப்படும் சின்ன வெங்கலச் செம்புகளில் நீரை நிரப்பி மகாகாலேஷ்வரை அபிஷேகம் செய்த அனுபவம் மறக்கவியலாதது. முக்கிய விஷயம் இங்கே பெண்குழந்தைகள் தாவணி அல்லது புடவை உடுத்தினால்தான் கருவறைக்குள் இறைவனுக்கு அருகில் செல்ல அனுமதி. பெண்களும் சுடிதார், பாண்ட், சூட் எல்லாம் உடுத்தினால் செல்ல இயலாது. கட்டாயம் புடவை அணிய வேண்டும். குறிப்பிட்ட நேரம் மட்டுமே அனுமதி என்பதால் சீக்கிரம் சென்றால் முன் இடத்தில் அமரலாம். லாப்டாப்பில் புகைப்படம் பார்த்து பேர் கேட்டு ஐடிகார்டு பார்த்துத்தான் அனுமதிப்பார்கள் என்பதால் எல்லாவற்றையும் பர்பெக்ட்டாக செய்யவும்.
அதிகாலையில் நான்குமணிக்கு க்யூவில் சென்று சாமியைத் தொட்டு அபிஷேகம் செய்த அனுபவம் மறக்கவே இயலாதது. படிப்படியாக இருக்கும் கேலரியில் சென்று அதன் பின் அனைவரும் அமர்ந்துகொள்ள வேண்டும். அன்று இரவில் இறைவனடி சேர்ந்தவர்களின் பஸ்மம் லிங்கத்தின் மேல் துணி கொண்டு தூவப்பட்டு (அல்லது இறந்தவர்களின் உறவினர்களால் இந்த பூஜைக்காக முன்பே புக் செய்யப்பட்டவர்களின் பஸ்மம் துணியில் எடுத்து வரப்பட்டு லிங்கத்தின்மேல் தூவப்படுகிறது. ) தீபஹாரத்தி காண்பிக்கப்பட்டபின் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு தீபம் காண்பிக்கப்படுகிறது. அத்துடன் தர்ஷன் முடிந்தது. இங்கே இருப்பவர்கள் , ஹோட்டல் வைத்திருப்பவர்கள் ,24 மணி நேரமும் சரியாகத் தூங்க முடியாது என்று தோன்றுகிறது. அடுத்தடுத்து மற்ற தர்ஷன்கள். கூட்டம்.
இது முக்கியமான ஜோதிர்லிங்க ஸ்தலம். மாபெரும் மதில்களுடன் இந்த மூன்றடுக்கு சிவன் கோயில் சிப்ரா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பிறப்பறுக்கும் பெருமானின் சக்திஓட்டம் உள்ள கோயில் இது. நம்மை அந்த அதிர்வுகள் தாக்குகின்றன. இங்கே இருக்கும் காலபைரவர் கோயிலும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று.
முதல்நாள் டோக்கன் பதிவு என்பதால் மதியமே ஓம்காரேஷ்வரை வணங்கப் புறப்பட்டோம். இந்த டோக்கன் வாங்கவும் ஏதோ பணம் கட்டவேண்டும் என நினைக்கிறேன். சென்ற எல்லா இடமும் ஏசி கார், ட்ரெயின், ரூம் வசதிகள் செய்து அருமையான உணவுகளும் வாங்கிக் கொடுத்து அற்புதமாகக் கவனித்துக் கொண்டார்கள் தம்பியும் தம்பிமனைவியும்.
சிவனை மமலேஷ்வர் & ஓம்காரேஷ்வர் என்ற இரு வடிவங்களில் நர்மதையின் இருகரைகளிலும் இரு கோயில்களில் அமைத்துள்ளார்கள். அங்கே இரு கரைகளிலும் அமைத்திருக்கும் இரு கோயில்களையும் பாலம் மூலமும் படகு மூலமும் சென்று தரிசிக்க முடியும்.
சிவபுரி /மாண்டாதா என்னும் தீவில் அமைந்திருக்கிறதாம் இக்கோயில்கள். இத்தீவின் வடிவம் இந்துக்கள் புனிதமாகக் கருதும் ஓம் என்ற வடிவத்தில் அமைந்திருக்கிறதாம்.
உஜ்ஜயினியிலிருந்து 133 கிமீ தூரம். சிவன் இரு பாகங்களாக இங்கே கோயில் கொண்டுள்ளார். இதற்கு மூன்று விதமான ஸ்தல புராணக் கதைகள் கூறப்படுகின்றன.மேருமலையுடன் விந்திய பர்வதம் போட்டி போட்டு அங்கே ஸ்தாபிக்கப்பட்ட சிவலிங்கத்துடன் வளர ஆரம்பிக்க அதை சிவன் அகஸ்தியர் மூலம் ஆற்றுப்படுத்துதல் ஒரு கதை. இன்னொரு கதையில் இஷுவாகு வம்ச அரசன் மாந்தாதா மற்றும் அவனது புதல்வர்கள் அம்பரீஷ் , முசுகுந்த சக்கரவர்த்திகள் இங்கே சிவனை நினைத்துத் தவம் செய்து சுயம்பு ஜோதிர்லிங்கம் தோன்ற வேண்டினார்களாம். மூன்றாவது கதையில் தேவாசுர யுத்தத்தில் தேவர்கள் பிரார்த்தனைக்குச் செவிசாய்த்து ஈசன் இங்கே ஜோதிர்லிங்கமாகத் தோன்றினாராம்.
இங்கே மமலேஷ்வர் கோயிலில் சிறு லிங்க வடிவில் நர்மதையின் அக்கரையில் தமிழக கோயில்கள் போல அமைந்து கோயில் கொண்டுள்ளார். . வரிசையாகக் கடைகள். எங்கு பார்த்தாலும் மழை காரணமாக ஈரம் வேறு. ஓம்காரேஸ்வரர் கோயிலில் ஸ்பெஷல் தர்ஷன் செய்ய தனிக்கட்டணம். மமலேஷ்வரை/அமரேஷ்வரை வணங்கிவிட்டுத் தொங்குபாலம் வழியாக வந்து பாறையை ஒட்டிய நடைபாதையில் மாபெரும் நதியைப் பார்த்து நடப்பது பரவச அனுபவம்.
பூஜை செய்ய பண்டாக்கள் போட்டிபோடுகிறார்கள். குடும்பத்துக்கு பூஜை செய்ய இவ்வளவு என்று சொல்லி ( நான் என் குடும்பத்துக்குத் தனியாகத் தரவேண்டும். அது தம்பி குடும்பம் என்கிறார் பண்டா ! தம்பி நிறைய கொடுத்தான். நான் 750 ரூ கொடுத்தேன். ) ஒரு தட்டில் பூ ,விளக்கு, திரி, தீப்பெட்டி, சிவப்புக் கயிறுகள் பூஜை சாமான்களோடு ஆஜராகி காயத்ரி மந்திரம் எல்லாம் சொல்லச் சொல்லி விரல்களில் சின்முத்திரை பிடிக்கச் சொன்னார் பண்டா. அதன்பின் பூஜை செய்து சிவப்புக் கயிறு அணிவித்து சாமி தரிசனமும் செய்வித்தார். எல் போலத் திரும்பும் ஒரு சின்ன இடத்தில் கோயில் கொண்டுள்ளார் ஓம்காரேஷ்வர். இருவரையும் நன்கு தரிசனம் செய்து காலேஷ்வர் திரும்பினோம்.
அடுத்து சென்ற இடம் சோம்நாத் குஜராத், சவுராஷ்ட்டிர தேசம் , வேராவலில் அமைந்திருக்கும் இக்கோயில் மிகச் சிறப்பு வாய்ந்தது. பிரபாஸ் பட்டணம் என்று அழைக்கப்படுகிறது. சாளுக்கியபாணியில் கட்டப்பட்ட கோயில் இது. இக்கோயிலை நாம் இன்று முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். சர்தார் வல்லபாய் பட்டேல் கே எம் முன்ஷி என்ற கோயில் ட்ரஸ்ட்டி மூலம் சிறப்பாக இக்கோயிலைக் கட்டுவித்துள்ளார் அவ்வளவு அழகு சுற்றிலும் கம்பி வேலி தடுப்புகள். மிக நீண்ட காலி மைதானம். அதன் பின்னணியில் கோயில். மணிப்புறாக்களும் மாடப்புறாக்களும் கொஞ்சித் தவழ்கின்றன.
இங்கே மாலை ஹாரத்தி பார்த்தோம். இங்கே கெஸ்ட் ஹவுசில் தங்கினோம். இவ்வூரில் இந்தக் கடற்கரையிலும், நீர்நிலைகளிகளிலும் நிறைய இறப்புகளும் தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளதால் கடற்கரைக்கும் கூட கம்பி வேலிகள் போட்டிருக்கின்றார்கள். இங்கே நீங்கள் கடற்கரையில் கடலாட முடியாது. !
இரவில் நான் தங்கியிருந்த ரூமில் கொஞ்சம் அமானுஷ்ய உணர்வுகள் ஏற்பட்டன. சோமநாத ஈஸா என்று கனவிலும் உரக்க அழைத்தபின் அடுத்த ரூமில் படுத்திருந்த தம்பி மனைவியை இண்டர்காம் மூலம் அழைத்து துணைக்குப் படுக்க வரச்சொன்னேன். கடற்கரையைப் பார்த்த அறைகள் அனைத்துமே. மிக வசதியாக மிகப் பெரிதாக இருந்தும் கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது இரவில்.
மாலையில் மாபெரும் கூட்டத்தில் குஜராத்தின் சவுந்தர்ய மக்களுடன் அந்த புதிய சோம்நாத் மந்திரில் ஈசனைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தோம். கோயிலில் சிற்ப வேலைப்பாடுகள் அற்புதம். எதைப் பார்க்க எதை விட. ஆனால் புகைப்படம்தான் எடுக்க முடியவில்லை.
சந்திரன் தன் சாபம் நீங்க இங்கே சரஸ்வதி ஆற்றில் குளித்து இந்த சோம்நாத் ஈசனை வணங்கினாராம். கபிலா ஹிரண் சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகளின் சங்கமம் கொண்ட முக்கிய திரிவேணி கூடல் ஸ்தலம் இது.
மரத்தால் முன்பு அமைக்கப்பட்டிருந்த இக்கோயில் பல்வேறு படையெடுப்புகள் ஆக்கிரமிப்புகளுக்குப் பின் திரும்பப் புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலில் லிங்கத்தின் பாண அமைப்பு ராமேஸ்வரம், வாரணாசி, துவாரகாவில் உள்ள லிங்கத்தின் பாண அமைப்புப் போல ஆதியந்தம் அற்றது.
மறுநாள் காலையில் பூர்வ கோயிலுக்குச் சென்று சோம்நாத் லிங்கத்திற்கு அனைத்து அபிஷேகங்களும் எங்கள் கையாலே திருப்தியாகச் செய்தோம் . எல்லாம் 3000, 4000 என்று செலவு. பண்டிட்களே அனைத்து பூஜை திரவியங்களையும் கொண்டுவந்துவிடுகிறார்கள். ஆனால் என்ன, எல்லாரும் பான் கறைபடிந்த வாயுடன்தான் இருக்கிறார்கள்.
வேராவலில் அந்தக் காலத்தில் ரேயான் கம்பெனிக்கு பணிபுரியச் சென்ற(சகோதரர் பாலா என்று நாங்கள் அழைக்கும் ) பாலசுப்ரமணியம் தம் பெற்றோருடன் வசிக்கிறார். அவர்கள் உணவளித்து அங்கே இருக்கும் முருகன் கோயிலில் தரிசனமும் செய்வித்தார்கள். இக்கோயிலுக்கு முருக பக்தரான என் தம்பி தினப்படி சேவைக்கு முடிந்த உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு நன்றி கூறி அங்கிருந்து நல்ல தரிசனம் செய்துவிட்டு நாகேஷ்வர் புறப்பட்டோம்.
நாகேஷ்வர் கோயிலை மதியம் சென்று அடைந்தோம். கீழே பள்ளத்தில்தான் பெரும்பான்மை லிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கும் அப்படியே. கிட்டே சென்று தரிசிக்கவும் பூஜை செய்யவும் தனிப்படி டிக்கெட். இங்கேயும் பல்க் அமௌன்ட் கொடுத்து உள்ளே சென்று பூஜை செய்தோம்.
இங்கே எல்லா சிவன் கோயில்களிலும் மகாசிவராத்திரி முக்கிய பண்டிகை
இக்கோயில் பற்றிய புராணம். சுப்ரியா என்னும் சிவபக்தையை தாருகா என்ற நாகநாட்டு அரசன் பிடித்து வைக்க அவர் சிவனைக் குறித்து மந்திரங்கள் சொல்லி வேண்டுகிறார். சிவன் தோன்றி தாருகாவை அழித்துத் தனது பக்தர்களைக் காப்பாற்றுகிறார். தாருகா என்னும் நாக அரசன் இறக்குமுன் சிவனிடம் இவ்வூர் தன பெயரில் அழைக்கப்படவேண்டும் என வேண்டிக்கொண்டதற்காகவே இவ்வூர் நாகேஷ்வர் என்று அழைக்கப்படுகிறது.
மும்பையில் இருந்து உஜ்ஜயினி 638 கி. மீ. தூரம் ட்ரெயினில் சென்றோம். அங்கிருந்து ஓம்காரேஸ்வரர் கோயில் 138 கி. மீ. காரில் இந்தூர் வழியாகச் சென்றோம்.
உஜ்ஜயினில் இருந்து நாகேஷ்வர் ஜோதிர்லிங்கக் கோயில் 821 கி. மீ. அஹமதாபாத் வழியாக ட்ரெயினில் சென்றோம்.
எல்லா இடங்களிலும் குறைவற சாமிக்கு உள்ள அந்நேரத்துக் கட்டளைகளைப் பின்பற்றி தம்பி அழைத்துச் சென்று பூஜைகள் செய்து ஒரு குறைவும் இல்லாமல் தரிசனம் செய்வித்தார். இத்தனை கோயில்களுக்கும் அழைத்துச் சென்று தரிசனம் செய்வித்த என் சின்னத்தம்பி சபாரெத்தினம் மெய்யப்பனுக்கு நன்றி. எல்லாப் புகழும் எல்லாப் புண்ணியமும் அவருக்கே. :)
திருச்சிற்றம்பலம்.
எதைப் பார்க்க, எதை விட? அருமையான அனுபவங்கள். சிலருக்கு மட்டுமே கிடைக்கும். அவற்றைப் பதிந்து எங்களையும் அவ்விடத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டீர்கள். நன்றி.
பதிலளிநீக்குநன்றி ஜம்பு சார் !!!
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!