தமிழ்நாடு அரசுச் சுற்றுலாத்துறையில் உதவிச் சுற்றுலா அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார் திரு. இரவி. மதுரையில் தானம் அறக்கட்டளை எனது நூல்களை வெளியிட்ட நிகழ்வில் இவரைச் சந்தித்துள்ளேன்.
1992 ஆம் வருடம் குடியரசு தினத்தன்று மாவட்ட ஆட்சியரிடம் சிறந்த அரசுப் பணியாளருக்கான விருதைப் பெற்றவர். விழிப்புணர்வுப் பட்டி மன்றங்கள், கவியரங்கங்கள் ஆகியவற்றில் முத்திரை பதித்தவர். மதுரைக் கவிஞர் பேரவையின் செயலர்.
23 நூல்கள் எழுதி உள்ளார். ஹைக்கூ திலகம், கவியருவி, கவிமுரசு கலைமாமணி விக்ரமன், எழுத்தோலை , ஹைக்கூ செம்மல், பாரதி ஆகிய விருதுகள் பெற்றவர். இவரது ஹைக்கூ கவிதைகள் தமிழகத்தின் அநேகப் பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன! இவரது ஹைக்கூ கவிதைகளை மாணவர்கள் க. செல்வகுமார், லெ. சிவசங்கர் , மாணவி ஜானு ஆகியோர் ஆய்வு செய்து ஆய்வேடு வழங்கி உள்ளார்கள். இன்னும் பல்வேறு சிறப்புகளும் விருதுகளும் பெற்றவர். சிறப்பு விருந்தினராகவும் சிறப்புப் பேச்சாளராகவும் அநேக அவைகளை அலங்கரித்தவர்.
இவரிடம் சாட்டர்டே போஸ்டுக்காக எழுதித் தரும்படிக் கேட்டிருந்தேன்
தான் எழுத்துக்கு வரக் காரணமாயிருந்தவரும் தன்னைச் செதுக்கியவருமான முனைவர் திரு. இரா. மோகன் பற்றி எழுதிக் கொடுத்தார். நீங்களும் அவரைச் செதுக்கிய சிற்பியைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்த்தேனீயும் நானும்!
கவிஞர் இரா.இரவி
தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் அவ்ர்கள் நாடறிந்த தமிழ் அறிஞர். அவரது இழப்பு உண்மையிலேயே ஈடுசெய்ய முடியாத இழப்பு. மதுரையில் ஒரு வெற்றிடமானது. நூல் வெளியீட்டு விழாக்களை முன்நின்று நடத்தி தமிழன்னைக்கு அணிகலன்களைப் பூட்டி அழகு பார்த்தவர்.
பட்டிமன்ற நடுவராக இருந்து தனிமுத்திரை பதித்தவர். விழிப்புணர்வு பட்டிமன்றங்களை நடத்தியவர். தமிழுணர்வை விதைத்தவர். அவரது பட்டிமன்றம் கேட்டுவிட்டு, முடிந்ததும் ஐயாவை
கைகொடுத்துப் பாராட்டினேன். மடலாகவும் அனுப்புங்கள் என்றார். அப்படித்தான் தொடங்கியது எனது கட்டுரைப்பணி. மடல் அனுப்பினேன். படித்துவிட்டு உடன் அலைபேசியில் அழைத்துப் பாராட்டினார்.
அவருடைய தனிப்பேச்சு என்றாலும், தவறாமல் சென்று குறிப்பெடுத்து பாராட்டு மடல் அனுப்புவேன். இப்படித்தான் மலர்ந்தது எங்கள் நட்பு. திடீரென ஒருநாள் நீங்களும் பட்டிமன்றத்தில் பேசுங்கள் என்றார். முதலில் தயங்கினேன். ஊக்கம் தந்து, பேச அழைத்தார். முதல் பட்டுமன்றம் வெளியீரில் மகிழுந்தில் அழைத்துச் சென்றார். செல்லும் வழியிலேயே வாந்தி வந்தது எனக்கு. உடன் மனம் சோர்ந்து ஐயா, நான் பேசவில்லை என்றேன். உங்களால் முடியும் பேசுங்கள் என்று பேச வைத்தார். எத்தனை பட்டிமன்றங்கள் பேசினோம் என்று குறித்து வைக்கவில்லை. ஆனால் மோகன் ஐயா ஆவணப்படுத்துவதில் வல்லவர். உங்களுக்கு இத்தனையாவது பட்டிமன்றம் என்று எண் சொல்வார்.